மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஆயுதங்கள் வழங்கும் ஓர் உலகளாவிய திட்டத்தில், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உட்பட 20 க்கும் அதிகமான நாடுகள், ரஷ்யா உடனான நேட்டோவின் பினாமிப் போரில் பயன்படுத்துவதற்காக உக்ரேனுக்குப் போர் விமானம் மற்றும் ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை அனுப்பி வருகின்றன.
'ஆயிரக்கணக்கான டாங்கி தகர்ப்பு ஆயுதங்கள், நூற்றுக்கணக்கான வான்வழி-பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறிய ஆயுதங்கள் மற்றும் கையிருப்புக்கான வெடிமருந்துகள் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன' என்று நேட்டோ ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையில் சுயபெருமை பீற்றியது.
உக்ரேனுக்கு தாக்கும் ஆயுதங்களை அனுப்புவதில் ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து மற்றும் இங்கிலாந்து, அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மையான நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்துள்ளன.
'பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, எஸ்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், லாத்வியா, லித்துவேனியா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, சுலோவாக்கியா, சுலோவேனியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை ஏற்கனவே உக்ரேனுக்கு குறிப்பிடத்தக்களவில் இராணுவ உபகரணங்களை அனுப்பியுள்ளன அல்லது அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளன.” என்று நேட்டோ கூறியது.
சமீபத்திய தசாப்தங்களில் மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்க பயன்படுத்தப்பட்ட 'இரகசிய பதுங்கு வழிகளுடன்' தற்போதைய நடவடிக்கையை அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாகவே ஒப்பிட்டு வருகின்றனர்.
நேட்டோவுக்கான முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் அமெரிக்கத் தூதருமான டக்ளஸ் லூட் நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: 'பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு வழங்கியது போல, தளவாடங்களைப் போலாந்தில் தேக்கி வைத்து, வினியோகப் பாதைகளை ஒழுங்கமைத்து, உக்ரேனியர்களுக்கு வினியோகித்து' 'நேட்டோ பிரதேசத்தில், நாம் பாக்கிஸ்தானைப் போல செயல்பட வேண்டும்,' என்றார்.
இந்த சமீபத்திய அமெரிக்க தலைமையிலான பினாமி போரின் அதிரடி துருப்புக்கள், ஆப்கானிஸ்தானைப் போல, இஸ்லாமிய அடிப்படைவாத போராளிகளாக இருக்க மாட்டார்கள், மாறாக உக்ரேனின் 2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் முக்கிய பங்கு வகித்த நவ-நாஜி சக்திகளாக இருப்பார்கள்.
'எங்களுக்கு நிறைய ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன… ஏனென்றால் மேற்கு முன்நிறுத்தும் பணிகளை நாங்கள் செய்கிறோம், ஏனென்றால் நாங்கள் சண்டையிட விரும்புகிறோம், நாங்கள் கொல்ல விரும்புகிறோம்' என்று நவ நாஜி பயங்கரவாத அமைப்பான சி-14 இன் தலைவர் யெவ்ஹென் கராஸ் பெப்ரவரி தொடக்கத்தில் இந்த போர் தொடங்குவதற்கு முன்னரே கூறியிருந்தார்.
பிரெஞ்சு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியை மேற்கோளிட்டு, புதன்கிழமை, நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், உக்ரேனுக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்ல ஐரோப்பிய ஒன்றியம் போலாந்தில் ஒரு மையத்தைத் திறந்திருப்பதாக அறிவித்தது.
புதன்கிழமை ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் கூறுகையில், உக்ரேனுக்கு தாக்கும் ஆயுதங்களை அனுப்புவதில் ஸ்பெயின் ஜேர்மனியைப் பின்தொடரும் என்றார், இதன் மூலம் தற்காப்பு உபகரணங்கள் மட்டுமே அனுப்பப்படும் என்ற அவரின் முந்தைய உறுதிமொழியை மீறினார்.
நியூ யோர்க் டைம்ஸின் வார்த்தைகளில், 'பத்து ஆயிரக் கணக்கான குண்டுகள் மற்றும் பீரங்கி வெடிபொருட்கள், விமான தகர்ப்பு ஏவுகணைகள், சிறிய ரக கையேந்தி ஏவுகணைவீசிகள், உளவுபார்ப்பு ட்ரோன்கள் மற்றும் பிற உளவுபார்ப்பு ஆயுதங்களை வழங்க' போலந்து உறுதியளித்துள்ளது.
நியூ யோர்க் டைம்ஸில் ஸ்டீவன் ஏர்லாங்கர் எழுதிய ஒரு கட்டுரை, ஆயுதப் பரிமாற்றங்களின் அளவை வலியுறுத்தியதுடன், 'மாஸ்கோ இதை ஓர் அபாயகரமான தலையீடாகப் பார்க்கக்கூடும்' என்று எச்சரித்தது.
டச்சுக்காரர்கள் வான்வழி பாதுகாப்புக்காக ராக்கெட் ஏவுகளங்களை அனுப்புகிறார்கள். எஸ்தோனியர்கள் ஜவெலின் டாங்கி தகர்ப்பு ஏவுகணைகளை அனுப்புகிறார்கள். போலாந்தும் லாத்வியர்களும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஸ்டிஞ்சர் ஏவுகணைகளை அனுப்புகிறார்கள். செக் மக்கள் இயந்திர துப்பாக்கிகள், குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்புகிறார்கள். ஸ்வீடன், பின்லாந்து போன்ற முந்தைய நடுநிலை நாடுகள் கூட ஆயுதங்களை அனுப்புகின்றன. மோதல் மண்டலங்களுக்கு ஆயுதங்களை அனுப்புவதில் நீண்டகாலமாக விலகி இருந்த ஜேர்மனி, ஸ்டிஞ்சர்கள் மற்றும் தோளில் இருந்து ஏவும் பிற ராக்கெட்டுகளை அனுப்புகிறது. …
நேட்டோவில் உறுப்பு நாடாக இல்லாத சுவீடன், உக்ரேனுக்கு 5,000 டாங்கி தகர்ப்பு ஆயுதங்களும், 5,000 தலைக்கவசங்கள், 5,000 உடல் கவசப் பொருட்கள் மற்றும் 135,000 இராணுவக் களத்திற்கான உணவுப் பொருட்கள், அத்துடன் உக்ரேனிய இராணுவத்திற்கு சுமார் 52 மில்லியன் டாலர்களை அனுப்ப இருப்பதாக அறிவித்தது. இதேபோல பின்லாந்து, 2,500 தாக்கும் துப்பாக்கிகள் மற்றும் 150,000 ரவுண்டு தோட்டாக்கள், 1,500 டாங்கி தகர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 70,000 போர் உணவுப் பொருட்களை வழங்குவதாகக் கூறியுள்ளது.
உக்ரேனுக்குள் இவ்வளவு பெரிய அளவிலான ஆயுதங்களை அவர்கள் பாய்ச்சினாலும், நேட்டோ நாடுகள் ரஷ்யாவின் எல்லைகளில் அவை பொறுப்பேற்றுள்ள படைகளையும் பாரியளவில் அதிகரித்து வருகின்றன. நேட்டோ ஏறக்குறைய இன்னும் 22,000 துருப்புக்களை ரஷ்ய எல்லையிலுள்ள நாடுகளுக்கு நகர்த்தி வருகிறது என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது.
அமெரிக்கா 15,000 கூடுதல் துருப்புக்களை ஐரோப்பாவுக்கு அனுப்பியுள்ளது மற்றும் நேட்டோவின் அதிரடி விடையிறுப்பு படைக்குக் கூடுதலாக 12,000 துருப்புக்களை வழங்கியது. கிழக்கு ஐரோப்பாவுக்குக் கூடுதல் போர் விமானங்கள் மற்றும் தாக்கும் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது.
போலந்து மற்றும் ருமேனியாவுக்குப் போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் துருப்புக்களை அனுப்பி வரும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் அமெரிக்கப் படைகளுடன் இணைந்துள்ளன. இதற்கிடையே, இங்கிலாந்து நூற்றுக்கணக்கான துருப்புக்கள் மற்றும் டாங்கிகளை எஸ்தோனியா மற்றும் போலந்துக்கு அனுப்பியுள்ளது. கனடா 1,200 சிப்பாய்களை லாத்வியாவுக்கு அனுப்பியுள்ளது, அதேநேரத்தில் இத்தாலி 3,400 துருப்புக்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
ரஷ்யாவின் எல்லைகளில் பாரியளவில் துருப்புகளைக் குவிப்பது ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான மோதல் அச்சுறுத்தலுக்கு இட்டுச் செல்கின்றன.
'ரஷ்ய மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயங்கள் உள்ளன, மேலும் சம்பவங்கள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை' என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS புதன்கிழமை துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோவின் வார்த்தைகளை மொழிமாற்றி குறிப்பிட்டது.
'அபாயங்கள் மேலெழுகின்றன. நிச்சயமாக, நாங்கள் ஆயுத விநியோகம் குறித்து கவலைக் கொண்டுள்ளோம். இவை அனைத்தும் மிகவும் ஆபத்தானது,” என்று க்ருஷ்கோ கூறினார். 'சில சம்பவங்கள் நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை,' என்றார்.
நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு எழுதி, அதே தொனியை வெளியிட்டது:
உண்மையில், எந்த நேட்டோ சிப்பாயும் உக்ரேனுக்குள் நுழையா விட்டாலும், சீருடை அணியாத இராணுவத்தினர் அல்லது ஒப்பந்தக்காரர்கள் சாதாரண டிரக்குகளில் சரக்கு வாகனங்களில் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், ஐரோப்பிய ஆயுத விநியோகங்களை நேட்டோவின் மூடிமறைப்பற்ற தலையீடாக மாஸ்கோ பார்க்கலாம்.
… உலகப் போர்கள் சிறிய மோதல்களில் இருந்தே தொடங்கி உள்ளன, நேட்டோ கூட்டு நாடுகள் போரின் அருகாமையில் இருப்பது மற்ற தரப்பினரையும் எதிர்பாராத விதத்தில் ஈர்க்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
… ஆனால் புரூஸ்செல்ஸ் அதன் முயற்சியில் பெருமிதம் கொள்கிறது, இது ஒரு பரந்த போரையும் மற்றும் திரு. புட்டினிடமிருந்து சாத்தியமான பதிலடியையும் ஊக்குவிக்கும் அபாயங்களைக் கொண்ட ஒரு மூலோபாயமாகும். நேட்டோவில் உறுப்பு நாடான போலந்தில் இருந்து அவசர அவசரமாக உக்ரேனுக்கு உயிராபத்தான இராணுவ உதவிகளை வழங்குவது, மொத்தத்தில், ரஷ்ய சிப்பாய்களைக் கொல்வதற்காகவே ஆகும்.
இந்த போர் அதன் எட்டாவது நாளில் நுழைந்துள்ள நிலையில், மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு மத்தியில் இத்தகைய எச்சரிக்கைகள் வருகின்றன. இதுவரை 498 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது, அதேநேரத்தில் பென்டகன் அதிகாரிகள் 2,000 ரஷ்ய வீரர்கள் இறந்திருப்பதாக மதிப்பிடுகிறார்கள், 5,000 க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளதாக உக்ரேன் கூறுகிறது.
இதற்கிடையே, பெப்ரவரி 24 இல் இருந்து மார்ச் வரை 227 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது, இந்த எண்ணிக்கை குறைமதிப்பீடாக இருக்கலாம் என்றும் அது குறிப்பிடுகிறது. ஐ.நா. தகவல்கள்படி, மொத்தம் 44 மில்லியன் மக்கள்தொகையில் கடந்த வாரம் 1 மில்லியன் பேர் போரில் இருந்து தப்பிக்க வெளியேறி உள்ளனர்.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கு எதிரான அவற்றின் பொருளாதாரப் போர்முறையையும் பாரியளவில் தீவிரப்படுத்தியுள்ளன, ரஷ்யாவுக்கு யூரோ வங்கி நோட்டுகளை வழங்குவதை தடை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை அறிவித்தது.
இதற்கு விடையிறுப்பாக, மூடிஸ் நிறுவனம் ரஷ்யாவின் கடன் வாங்கும் அளவீட்டை மதிப்பற்றதாக தரமிறக்கியது, 'இன்று வரை அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் அளவும் மற்றும் தீவிரமும் மூடிஸ் நிறுவனத்தின் ஆரம்ப எதிர்ப்பார்ப்புகளையும் கடந்து விட்டது, இது பொருள் கடன் பெறும் நிலையில் பாதிப்புகளைக் கொண்டிருக்கும்,' என்று அது எழுதியது.
பதற்றம் எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதற்கான அடையாளமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்துவதை அமெரிக்கா தாமதப்படுத்தியுள்ளது.
'தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய அல்லது தவறாகப் பொருள்படுத்தக் கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்பதை நிரூபிக்கும் ஒரு முயற்சியாக, இந்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த எங்களின் கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன்-III ஏவுகணை சோதனை ஏவுதலை ஒத்திவைக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்' என்று பென்டகன் செய்தித் தொடர்புத்துறை செயலர் ஜான் கிர்பி ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில் உக்ரேனிய ஆட்சி, ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து கிடைத்துள்ள ஆயுத வினியோகங்கள் மற்றும் பகிரங்கமான ஆதரவால் கண்கூடாகவே தைரியமடைந்துள்ளது. Kyiv Independent இன் ட்விட்டர் கணக்கு புதன்கிழமை பின்வருமாறு அறிவித்தது, “உக்ரேனிய சிறப்புப் படைகள் இனி சிறுபீரங்களிகளை இயக்கும் ரஷ்ய சிப்பாய்களைச் சிறைபிடிக்காது. அப்பாவி மக்கள் மீதும் நகரங்கள் மீதும் அவர்கள் 'குரூரமாக குண்டுவீசுவதற்கு' விடையிறுப்பாக சிறுபீரங்கிகளை இயங்கும் அந்த ரஷ்ய சிப்பாய்களை விட்டு வைக்கப் போவதில்லை என்று உக்ரேனின் சிறப்பு நடவடிக்கைப் படைகளின் கட்டளையகம் எச்சரித்துள்ளது. அத்தகைய ஒரு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது ஒரு போர்க்குற்றமாகவும், போர்க் கைதிகளை மனிதாபிமானமின்றி நடத்துவதற்காக வெளிப்படையாக ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவதாகவும் இருக்கும்,” என்றது.
மேலும் படிக்க
- பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர்கள் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் உந்துதலை ஆதரிக்கின்றனர்
- போர் உரையில், ஜேர்மன் சான்ஸ்லர் ஷோல்ஸ் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதமயமாக்க பாதுகாப்புத்துறைக்கான செலவுத்திட்டத்தை மூன்று மடங்கு உயர்த்தினார்
- நேட்டோ ரஷ்யாவுக்கு எதிராக போருக்குச் செல்கிறது
- ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவிற்கு எதிராக "நிதிய அணு ஆயுதத்தை" பயன்படுத்துகின்றன
