பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர்கள் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் உந்துதலை ஆதரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் நேட்டோவின் இராணுவ அச்சுறுத்தல்கள் ஐரோப்பாவில் ஒரு பொதுவான இராணுவக் கொந்தளிப்பைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ள நிலையில், பிரான்சின் முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மறுக்க முடியாத ஒரு அரசியல் பிளவு காணக்கூடியதாக உள்ளது.

அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாகச் செல்லும் போரை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். CNews க்கான பிப்ரவரி 24 கருத்துக் கணிப்பின்படி, 70 சதவீத பிரெஞ்சு மக்கள் உக்ரேனில் பிரெஞ்சு இராணுவத் தலையீட்டை எதிர்க்கின்றனர். 2015 இல், 77 சதவீத ஜேர்மனியர்கள், 65 சதவீத இத்தாலியர்கள், 66 சதவீத ஸ்பானியர்கள் மற்றும் 59 சதவீத பிரெஞ்சுக்காரர்கள் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனிய ஆட்சியை ஆயுதபாணியாக்கும் கொள்கையை எதிர்த்ததாக கருத்துக் கணிப்புகள் கண்டறிந்தன.

எரிக் செமூர், ஆன் இடால்கோ, வலேரி பெக்ரெஸ், கிறிஸ்டியான் தொபிரா (Images from Wikimedia Commons)

மறுபுறம், பிரான்சில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள், மாஸ்கோவிற்கு எதிராக உக்ரேனிய ஆட்சியை ஆயுதபாணியாக்குவது உட்பட, ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ மற்றும் நிதிய அச்சுறுத்தல்களை நேட்டோ அதிகரிப்பதை ஆதரிக்கின்றனர். வாக்காளர்களில் மிகப் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்களுக்கு எதிராகவும், மூன்றாம் உலகப் போரை கட்டவிழ்த்து விடுவதாக அச்சுறுத்தும் நேட்டோவின் ஏகாதிபத்திய நகர்வுகளுக்குப் பின்னால் அவர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

இன்னும் அறிவிக்கப்படாத பதவியில் இருக்கும் இமானுவல் மக்ரோன், 'உடனடியாக தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்' என புட்டினுக்கு அழைப்பு விடுத்தார்: 'பிரான்ஸ் உக்ரேனுடன் ஒற்றுமையாய் நிற்கிறது. இது உக்ரேனியர்களுக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவர அதன் பங்காளிகள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுகிறது” என்றார். அவரது வெளியுறவு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன், மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் 'இதயத்தில்' தாக்கும் என்று உறுதியளிப்பதற்கு முன், நேட்டோ 'ஒரு அணுசக்தி கூட்டணி' என்பதை ரஷ்யாவிற்கு நினைவூட்டி, மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்.

வலதுசாரி குடியரசுக் கட்சி (Les Républicains - LR) வேட்பாளரான வலேரி பெக்ரெஸ் 'உக்ரேனில் ரஷ்யா தொடங்கிய போரை வலிமையான வார்த்தைகளில் கண்டித்தார்.' அவர் ஒரு ட்வீட்டில், 'பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பதில் தீவிரமானதாகவும், ஒருங்கிணைந்ததாகவும், கடுமையானதாகவும் இருக்க வேண்டும்' என கூறினார்.

பாரம்பரிய ஆளும் கட்சிகளின் மூர்க்கத்தனமான நிலைப்பாடு, தீவிர வலதுசாரிகள் தங்களை விட குறைவான ஆக்கிரமிப்பு கொள்கையின் ஆதரவாளர்களாக தங்களை காட்டிக்கொள்ள அனுமதிக்கிறது. தேசிய பேரணியின் (RN) மரின் லு பென், புட்டினுடனான தொடர்புகளுக்காக அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார், ஆனால் அவரும் உக்ரேன் படையெடுப்பைக் கண்டித்துள்ளார். 'ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ஒரு இராஜதந்திர கூட்டத்திற்கு பிரான்ஸ் முன்முயற்சி எடுக்க வேண்டும்' என அவர் அழைப்பு விடுத்தார்.

விச்சி சார்பு பத்திரிகையாளர் எரிக் செமூர் படையெடுப்பைக் கண்டித்து, போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவிற்கும் கியேவிற்கும் விரைவில் செல்லுமாறு மக்ரோனை அழைத்தார். அமெரிக்காவையும் ரஷ்யாவையும் எதிர்ப்பதாகக் கூறப்படும் பிரெஞ்சு இராணுவ சக்தியை வலுப்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.

ஊடகங்கள் 'இடதுசாரி' என்று பொய்யாகக் கருதும் கட்சிகளிடமிருந்து மிகவும் கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன. சோசலிஸ்ட் கட்சி (PS) வேட்பாளரும் பாரிஸின் மேயருமான ஆன் இடால்கோ, 'விளாடிமிர் புட்டின் கட்டளையிட்ட மிருகத்தனமான தாக்குதலை மிகுந்த ஆற்றலுடன் கண்டித்து' 'இந்த நியாயமற்ற மற்றும் குற்றச் செயலுக்கு உறுதியுடன் எதிர்வினையாற்ற வேண்டும்' என அழைப்பு விடுத்தார்.

முன்னாள் நீதித்துறை அமைச்சரும் தீவிரவாதக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கிறிஸ்டியன் தொபிரா ட்விட்டரில் பதிலளித்தார்: 'இது போர், இதற்கு பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய கவுன்சில், OSCE (ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு), மற்றும் UN ஆகியவை எதிர்வினையாற்ற வேண்டிய உயர்ந்த நிலை.'

இந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்த அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் தொடர்பையோ அல்லது இப்போது ரஷ்ய இராணுவத்துடன் போரிடுவது உட்பட உக்ரேனுக்குள் ஏவுகணைகள் மற்றும் பிற போர் ஆயுதங்களை அனுப்பும் நேட்டோவின் அச்சுறுத்தல்களின் தாக்கத்தை விளக்கவோ அக்கறை காட்டவில்லை.

எவ்வாறாயினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பை அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைத் திணிப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கண்டது என்பதில் சந்தேகமில்லை. இது யூகோஸ்லாவியாவை தகர்ப்பது, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் போர்கள், கிழக்கு ஐரோப்பாவில் வண்ணப் புரட்சிகள் மற்றும் 2014 உக்ரேனில் தீவிர வலதுசாரி சக்திகளின் உதவியுடன் ரஷ்ய-சார்பு ஆட்சியைத் தூக்கி எறிவதற்கான சதிக்கு தலைமை தாங்கினர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அடைந்த தோல்விகள் ஏகாதிபத்திய சக்திகளுக்கும், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பரந்த மோதலுக்கு வழிவகுத்தன.

1991ல் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியில் இருந்து வெளிவந்த முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் நலன்களின் அடிப்படையில், புட்டின் தனது பிற்போக்குத்தனமான படையெடுப்பை ஒரு தேசியவாத மற்றும் கம்யூனிச-எதிர்ப்பு அடிப்படையில் நியாயப்படுத்தினார். ஆனால் இந்த எதிர்ப்புரட்சிக் கொள்கைக்கு தொழிலாளர்களின் ஆரோக்கியமான எதிர்ப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது, வேகமாகப் பெருகும் போரின் ஆபத்தை நிறுத்துவதற்காகவும், எல்லாவற்றிற்கும் மேலாக நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் இரத்தம் தோய்ந்த கொள்கைக்கு எதிராகவும் இயக்கப்பட வேண்டும்.

உண்மையில், அது உக்ரேனை ஆயுதபாணியாக்கும் சாத்தியக்கூறுடன் ரஷ்யாவை அச்சுறுத்தி, நேட்டோ ரஷ்யாவை ஒரு போருக்குள் இழுக்கும் தூண்டிலை திறம்பட பயன்படுத்தியது.

பெரும் முதலாளித்துவ சக்திகளால் தூண்டிவிடப்பட்ட பேரழிவுகரமான போரின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவது அவசியம். இதற்கு ஸ்தாபக அரசியல் கட்சிகள் மற்றும் ஊழல் நிறைந்த தேசிய தொழிற்சங்க அமைப்புகளுடன் ஒரு சமரசமற்ற முறிவு தேவைப்படுகிறது.

எனவே, ஜோன்-லூக் மெலோன்சோன், உக்ரேனைப் பொறுத்தவரை, 'ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் (OSCE) உடனடிக் கூட்டம்' 'உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் உக்ரேனில் இருந்து அனைத்து வெளிநாட்டு துருப்புக்களையும் திரும்பப் பெற' ஒரு செய்திக் குறிப்பில் அழைப்பு விடுக்கிறார். மெலோன்சோன் கூறினார்: 'ரஷ்யா உக்ரைனைத் தாக்குகிறது. அளவில்லாத அதிகார ஆசையை வெளிப்படுத்தும் தூய வன்முறையின் ஒரு முன்முயற்சி. தாங்க முடியாத விரிவாக்கம் தூண்டிவிடப்படுகிறது”.

OSCE இன் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதன் மூலம், தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தில் இருந்து விலகி, அதற்குப் பதிலாக முதலாளித்துவ அரசுகளின் இராஜதந்திரத்திற்கு பின்னால் செயலற்ற நிலையில் இருக்க வேண்டும் என்று மெலன்சோன் முன்மொழிகிறார். போருக்கு எதிராக ரஷ்யா, உக்ரேன் மற்றும் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு அழைப்பு விடுக்க முடியாமல், தேசிய-அரசு அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இராஜதந்திரம், போருக்கான பந்தயத்தை நிறுத்த முடியும் என்ற மாயையை மெலன்சோன் விதைக்கிறார். உண்மையில், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இராணுவ மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்களின் விரிவாக்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இது, போர் அபாயத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் இயக்கத்தில் சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்டும் முயற்சிக்கு எதிரானது. கடந்த 2017 ஜனாதிபதித் தேர்தலில் மெலோன்சோன் 20 சதவீத அல்லது 7 மில்லியன் வாக்குகளைப் பெற்றார் என்பதை ஒருவர் நினைவுகூர வேண்டும். எனினும், அவர் போருக்கு எதிராகவோ, வேலைநிறுத்தங்களிலோ அல்லது போராட்டங்களிலோ தனது வாக்காளர்களை அணிதிரட்டுமாறு அழைப்பு விடுக்கவில்லை, மாறாக அரசுக்கு முன்மொழிவதற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதன் ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாக்க பல்வேறு தந்திரோபாய முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

உக்ரேன் மீதான படையெடுப்பும் எதிர்வினையும், மெலோன்சோன் மற்றும் அவரது கட்சியான அடிபணியா பிரான்ஸ் (LFI) இன் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தி விடுகிறது. அவர்கள் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் நடத்திய போர்களை, குறிப்பாக ஆபிரிக்காவில், லிபியா மற்றும் மாலியில் நடந்த போர்களை பாராட்டியுள்ளனர். மக்ரோனின் ஐந்தாண்டு கால ஜனாதிபதியாக இருந்த போது, மெலோன்சோன் கட்டாய இராணுவ சேவையை ஆதரித்தார் மற்றும் இராணுவத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் அதிகரிப்பைக் கோரினார், அதே நேரத்தில் ரஷ்யாவுடனான ஒரு போரின் ஆபத்தை குறைத்து மதிப்பிட்டுக் காட்டினார்.

இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் விரைவான அதிகரிப்புக்கு அழைப்பு விடுக்கும் அவரது கருத்துக்கள், அவரது இராணுவவாத வர்க்க முன்னோக்கை தெளிவுபடுத்தியுள்ளது. 'இந்த இராணுவத் திட்டமிடல் சட்டத்தை நாம் ஏன் விமர்சிக்கிறோம், அது அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கிறது... மேலும், ஜெனரல் டு வில்லியே [முன்னாள் இராணுவத் தலைவர்] ஜூலை மாதம் பதவி விலகினார் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அவருக்கு இந்த வளங்களில் உடனடி அதிகரிப்பு தேவைப்பட்டது, எனவே இது உடனடியாக உயர்ந்து இறுதியில் நிலைபெறும் ஒன்று.'

2017 இல் மெலோன்சோன் ஐ ஆதரிப்பதற்காக இணைய வழியாக LFI இல் வாக்களித்த அல்லது பங்கு பெற்ற மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு பொறியாக சேவைசெய்ய LFI உருவாக்கப்பட்டது. சோசலிஸ்ட் கட்சியின் (PS), ஐரோப்பாவில் முடிவில்லாத சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏப்ரல் 2017 இல் சிரியா மீது ட்ரம்பின் குண்டுவீச்சு போன்ற ஏகாதிபத்திய குற்றங்கள் பற்றிய LFI இன் சில தந்திரோபாய விமர்சனங்களை அவர்கள் பாராட்டினர். ஆனால் LFI இன் விமர்சனங்கள் தந்திரோபாயமாகவும் மோசடியாகவும் இருந்தன. இந்த விமர்சனங்கள் இருந்தபோதிலும், LFI தலைமையானது, போர் மற்றும் இராணுவத்தின் குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்களாக செயல்படுகிறது.

உண்மையிலேயே அழிவுகரமான போருக்கான போரை நோக்கி விரைவதை நிறுத்வதற்கு, மெலன்சோன் மற்றும் LFI இன் இயலாமை மற்றும் இழிந்த கொள்கைகளுக்கு நனவான எதிர்ப்புடன், ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தில் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும்.

Loading