பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் உந்துதலை ஆதரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் வசதியான நடுத்தர வர்க்கங்களை போர்க் காய்ச்சல் வாட்டி வதைத்துள்ள நிலையில், பிரெஞ்சு பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியும் (NPA) அதன் சர்வதேச துணை அமைப்புகளும் CIA பிரச்சாரத்தில் இருந்து பிரித்தறிய முடியாத வகையில் ரஷ்ய எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிடுகின்றன. அணு ஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு மோதலுக்கு வழிவகுக்கும் போர்க் காய்ச்சலை அவர்கள் பொறுப்பற்ற முறையில் தூண்டிவிடுகிறார்கள்.

செப்டம்பர் 24, 2021 வெள்ளிக்கிழமை, மேற்கு உக்ரேனில் உள்ள லிவிவ் நகருக்கு அருகில் உள்ள யாவோரிவ் இராணுவப் பயிற்சி மைதானத்தில் சிப்பாய்கள் பயிற்சியில் பங்கேற்கின்றனர். (AP Photo/Pavlo Palamarchuk)

சர்வதேச பப்லோவாத வலைத் தளமான International Viewpoint, NPA இன் வாராந்திர L'Anticapitaliste மற்றும் ஸ்பெயினில் பொடேமோஸ் உடன் இணைக்கப்பட்ட Viento Sur தளம் ஆகியவை போர் பற்றிய பேராசிரியர் ஜில்பேர் அஷ்கார் இன் அறிக்கையை வெளியிட்டன. இலண்டனின் ஆபிரிக்க மற்றும் ஓரியண்டல் ஆய்வுப் பள்ளியில் பேராசிரியரான அவர், ஊதியம் பெறும் பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகராவார், அஷ்கார் லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ இராணுவத் தலையீடுகளைப் பாராட்டியுள்ளார். 'உக்ரேனில் போர் தொடர்பான தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டின் பொதுநிலை அறிக்கை' என்ற தலைப்பில் அவரது அறிக்கை, உலக அமைதிக்கு ரஷ்யாவின் இராணுவத் தோல்வி இன்றியமையாதது என்று வாதிடுகிறது. அவர் ஆரம்பிக்கிறார்:

உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் தலைவிதி மற்ற அனைத்து நாடுகளின் ஆக்கிரமிப்பு முனைப்பை தீர்மானிக்கும். அது தோல்வியுற்றால், அனைத்து உலக மற்றும் பிராந்திய சக்திகளின் மீதும் தாக்கம் சக்திவாய்ந்த தடுப்பாக இருக்கும். அது வெற்றியடைந்தால், அதாவது ரஷ்ய சப்பாத்தின் கீழ் உக்ரேனை 'அமைதியாக்க' முடிந்தால், அதன் விளைவு உலகச் சூழ்நிலையின் பெரும் சரிவைக் கட்டுப்பாடற்ற காட்டுச் சட்டத்தை நோக்கிச் சென்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளிகளையும் மீண்டும் தங்கள் சொந்த ஆக்கிரமிப்பு நிலைப்பாடுகளைத் தொடரத் தூண்டும்.

உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உக்ரேன் மீதான படையெடுப்பை எதிர்க்கிறது. இந்த படையெடுப்பு ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை பிரிக்கிறது மற்றும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நேட்டோவினால் ரஷ்யா தோற்கடிக்கப்படுவது, உலக அமைதியின் பொற்காலத்தை தொடக்கி வைக்கும் என்ற அபத்தமான பொய்யை அது நிராகரிக்கிறது.

உலக அரசியலில் இராணுவ ஆக்கிரமிப்பின் முக்கிய ஆதாரம் ரஷ்யா அல்ல மாறாக நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள்தான். 1991 சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பு, நேட்டோ சக்திகளுக்கு எதிரான முக்கிய இராணுவ எதிர்ப்பை நீக்கியதன் மூலம், மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்ற மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த நவ-காலனித்துவப் போர்களின் அலையைத் தொடர அவர்களை விடுவித்தது. கடந்த 30 வருடங்களாக இந்தப் போர்களால் அழிந்த நாடுகளில் ஈராக், சோமாலியா, யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், ஐவரி கோஸ்ட், பாகிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் மாலி ஆகியவை அடங்கும்.

நேட்டோவுடனான மோதலில், ரஷ்யா அதிக சக்தி வாய்ந்ததாகவோ அல்லது அதிக ஆக்ரோஷமான பக்கமாகவோ இல்லை. நேட்டோ நாடுகளின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தோராயமாக 40 டிரில்லியன் டாலர்களாகும். ரஷ்யாவின் மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர்கள் மட்டுமே. நேட்டோவின் மக்கள் தொகை சுமார் 900 மில்லியனாக உள்ளது, அதில் 3.3 மில்லியன் பேர் இராணுவ தயார்நிலையில் உள்ளனர், ரஷ்யாவின் 144 மில்லியனுடன் ஒப்பிடும்போது, ஒரு மில்லியன் சுறுசுறுப்பான பணி துருப்புக்கள் உள்ளன. நேட்டோ நாடுகளின் வங்கிகள்தான் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயை பிடுங்கிக் கொள்கின்றன, மற்றவிதமாக அல்ல.

எவ்வாறாயினும், அஷ்கார், ரஷ்யா மீதான நேட்டோ இராணுவ மற்றும் பிராந்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார், தவிர்க்க முடியாத தார்மீகக் கடமையாக நேட்டோவுக்கு ஆதரவை முன்வைக்கும் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் தனது வாசகரை குழப்ப முயற்சிக்கிறார். 'நியாயமான போரில் போராடுபவர்களுக்கு, மிகவும் சக்திவாய்ந்த ஆக்கிரமிப்பாளருடன் போராடுவதற்கான வழிமுறைகளை வழங்குவது ஒரு அடிப்படை சர்வதேசியக் கடமையாகும்' என்று அஷ்கார் எழுதுகிறார். அவர் மேலும் கூறுகிறார், 'ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்களை நிபந்தனையின்றி வழங்குவதற்கு — இந்த விஷயத்தில் எந்த பந்தங்களும் இணைக்கப்படாமல், உக்ரேனிய அரசுக்கு அதன் பிராந்தியத்தின் மீதான ர ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக போராடுவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.'

அதாவது, உக்ரேனிய ஆட்சிக்கு நேட்டோ பாரிய அளவிலான ஆயுதங்கள், டாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் உயிரியல் போர் ஆய்வகங்களை வழங்குவதற்குப் பின்னால் அஷ்கார் அணிவகுத்து நிற்கிறார். அவர் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் ஆயுதப் படைகளுக்கு ஒரு செயல் திட்டத்தை முன்வைக்கிறார்.

மேலும், நேட்டோ ஆயுதங்கள் உக்ரேனுக்குள் வெள்ளமாய்ப் பாய்ந்ததால், உக்ரேன் ஒரு தற்காப்புப் போரில் ஈடுபடவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மாறாக, ஏகாதிபத்திய சக்திகள், உக்ரேனிய ஆயுதப் படைகள் மற்றும் தீவிர வலதுசாரி தேசியவாத ஆயுதக்குழு அடுக்குகளுடன் இணைந்து செயல்படுகின்றன, ரஷ்யாவிற்கு எதிரான போரை நடத்துவதற்கான களமாக உக்ரேனைத் தேர்ந்தெடுத்துள்ளன. அஷ்கார் இதை நன்கு அறிவார். அவரும் அவர் பேசும் முழு அரசியல் சூழலும் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் என்பதால் அவர் அதை ஆதரிக்கிறார்.

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியும் அதன் துணை அமைப்புகளும், குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்புக்குப் பின்னர் கடந்த 30 ஆண்டுகளில், வலதிற்கு நகர்ந்துள்ள நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பப்லோவாத அமைப்புகளில் உள்ள பேராசிரியர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் தொழில் வல்லுநர்கள் மேலும் செல்வச் செழிப்புடன் வளர்ந்ததால், அவர்கள் அரசு மற்றும் ஏகாதிபத்திய இராணுவங்களுடன் இன்னும் முழுமையாக இணைந்துள்ளனர். பப்லோவாதக் கட்சிகள், இந்த நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் பணியை ஏகாதிபத்திய செயற்பாட்டாளரும் பிரிட்டிஷ் இராணுவத்தின் ஊதியம் பெறும் ஆலோசகருமான அஷ்காருக்கு வழங்குவது, அடிப்படையில் அவர்களின் வலதுசாரித் தன்மைக்கு சாட்சியமளிக்கிறது.

உலகப் போரின் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரு மார்க்சிசக் கட்சியின் பணி, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கம் பொதுக் கருத்தில் மூழ்கடிக்க முயுற்சிக்கும் போர்ப் பிரச்சாரத்திற்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதாகும். போருக்கு ஆதரவாக வாதிடுவதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்தும் வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் மற்றும் அரசியல்பொய்களை அம்பலப்படுத்தி, போரை நிறுத்துவதற்கும் அதை உருவாக்கிய சமூக ஒழுங்கைத் தூக்கி எறியவும் முதலாம் உலகப் போரின்போது ரஷியாவில் போல்ஷேவிக்குகள் 1917 அக்டோபர் புரட்சியைச் செய்ததுபோல், தலையீடு செய்வதற்கு தொழிலாளவர்க்கத்தை ஆயுதபாணியாக்க வேண்டும்.

மறுபுறம், அஷ்கார், ரஷ்யாவிலிருந்து உக்ரேனிய சுதந்திரத்திற்கான உன்னதமான போராட்டமாக போரை அங்கீகரிக்கிறார்:

ஆக்கிரமிப்பை நிறுத்துவது மட்டுமல்லாமல், உக்ரேனில் இருந்து ரஷ்ய துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோர வேண்டும். 2014 இல் ரஷ்யா ஆக்கிரமித்த பிரதேசம் உட்பட, உக்ரேனின் ஒவ்வொரு அங்குல பகுதிக்கும், ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை பொருந்தும். உலகில் எங்கிருந்தும் கிரிமியா அல்லது கிழக்கு உக்ரேனில் உள்ள மாகாணங்கள் போன்றவை எந்தப் பகுதிக்குச் சொந்தமானது என்பதில் சர்ச்சை ஏற்படும் போது, இந்த நிகழ்வில் - இது மிருகத்தனமான சக்தி மற்றும் வலிமையின் சட்டத்தால் தீர்க்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம், ஆனால் ஜனநாயக சுயநிர்ணய உரிமையில் அக்கறையுள்ள மக்களால் எப்போதும் சுதந்திரமாக செயல்படுவதன் மூலம் மட்டுமே தீர்க்கப்படுவதை ஏற்போம்.

உண்மையில், யார் முதல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பதைக் கேட்பதன் மூலம், போருக்கு என்ன காரணம், யார் பொறுப்பு என்பதைத் தீர்மானிக்க முடியாது. அஷ்கார் இந்த மோதலை ரஷ்யாவிற்கு எதிரான ஒரு 'நியாயமான போர்' என ஊக்குவிப்பது, போரை அதன் வரலாற்று மற்றும் சர்வதேச சூழலில் இருந்து அகற்றுவது, ஒரு அரசியல் பொய்மைப்படுத்தல் ஆகும். அவர் தனது கோரிக்கைகள் 'தீவிர சர்வதேசியவாதம்' என்று அவர் கூறினாலும், உண்மையில் அவர் நேட்டோ அதன் தற்போதைய போர்க் கொள்கையை, அதாவது வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகளும் நீண்டகாலமாக தயாரித்துவரும் இரத்தக்களரிப் போரில் ரஷ்யாவை பிணைக்க உக்ரேனுக்குள் பாரிய அளவிலான ஆயுதங்களைப் பாய்ச்ச வேண்டும் என்பதைத் தொடர வேண்டும் என்று மட்டுமே கோருகிறார்.

ரஷ்யா-உக்ரேன் மோதலின் மூலங்களை அஷ்கார் பொய்யாக்குகிறார்

உக்ரேன் போரில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவை ஆதரிப்பதற்கான அஷ்காரின் சுருக்கம் பொய்களின் வலையால் மறைக்கப்பட்டுள்ளது. 2014 இல் தொடங்கிய கிரிமியா மற்றும் கிழக்கு உக்ரேன் மீதான மோதல், அஷ்கார் எழுதுவது போல், ரஷ்ய படையெடுப்பின் விளைவு அல்ல. இது பெப்ரவரி 2014 கியேவில் தீவிர வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பில் இருந்து உருவானது, NPA மற்றும் அதன் சர்வதேச துணை அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டது. அது நேட்டோ சார்பு உக்ரேனிய ஆட்சியை 'ஜனநாயக சுயநிர்ணயம்' மூலம் அல்ல, மாறாக பலத்தால் நிறுவியது.

பேராசிரியர் ஜில்பேர் அஷ்கார் (Credit: Wikipedia)

நேட்டோவும் அஷ்காரும் ரஷ்யா உக்ரேனிடம் திரும்ப கையளிக்க வேண்டும் என்று கோரும் கிரிமியா மற்றும் கிழக்கு உக்ரேன் ஆகியவை, நவம்பர் 2013 – பிப்ரவரி 2014 இல் கியேவின் மைதான் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் பிரிந்தது. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த எதிர்ப்புக்கள் நடத்தப்பட்டன.

மைதான் சதுக்க எதிர்ப்புக்கள், உக்ரேனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையுடன் பின்னிப்பிணைந்தன. யூரேசியா மற்றும் ஐரோப்பாவுக்கான தற்போதைய அமெரிக்க உதவி செயலாளர் விக்டோரியா நூலாண்ட் உட்பட ஜேர்மன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள், கியேவிற்கு சென்று எதிர்ப்புகளை தூண்டினார்கள். பிப்ரவரி 2014 இல் நவ-நாஜி வலது பிரிவு குழுவால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பில் மைதான் எதிர்ப்புக்கள் முடிவடைந்தன, தீவிர வலதுசாரி ஸ்வோபோடா கட்சி, குத்துச்சண்டை வீரர் விட்டலி கிளிட்ச்கோவின் உதார் ('பஞ்ச்') கட்சி மற்றும் வங்கியாளர் ஆர்செனி யட்சென்யுக் ஆகியோரை ஆட்சிக்குக் கொண்டு வந்தது.

உத்தியோகபூர்வ அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் இப்போது மைதான் சதுக்க போராட்டங்களை ஒரு ஜனநாயகப் புரட்சி என்று வாடிக்கையாகப் பாராட்டி, அதில் நவ-நாஜிக்களின் பங்கு பற்றிய அறிக்கைகளை ரஷ்ய பிரச்சாரம் என்று நிராகரித்து வருகின்றன. எனவே, என்ன நடந்தது என்பதை நிறுவுவதற்கு, மைதான் சதுக்க போராட்டங்களை ஆதரித்த மற்றும் இணைந்த NPA மற்றும் அதன் கூட்டாளிகளை மேற்கோள் காட்டுவது பயனுள்ளது மற்றும் அவர்களுக்கு எதிராக ஒரு சார்புடையதாக குற்றம் சாட்ட முடியாது.

மைதான் சதுக்கத்தில் இருந்து, NPA இன் உக்ரேனிய துணை அமைப்புகள், எதிர்ப்புக்கள் தீவிர வலதுசாரிகளால் நடத்தப்பட்டதாக தெரிவித்தன. 'ஜனநாயகத்திற்கான வெகுஜனக் கிளர்ச்சி' என்ற தலைப்பிலான ஜாகர் போபோவிச் எழுதிய அவர்களின் அறிக்கை கூறியது: 'பெர்குட் கலகப் பிரிவு காவல்துறைக்கு எதிரான முதல் தாக்குதல்கள், முக்கியமாக Right Sector இன் நவ-நாஜிக்களால் ஒழுங்கமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர வலதுசாரி ஸ்வோபோடா இயக்கத்தைவிடவும் தீவிரமாக இருந்தனர்.' 'மைதான் சதுக்கத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் மேற்கு உக்ரேனின் கிராமங்களில் இருந்து வந்த உக்ரேனிய மொழி பேசும் மக்கள்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

NPA இன் ரஷ்ய கூட்டாளிகளின் தலைவரான ரஷ்ய சோசலிஸ்ட் இயக்கத்தின் இலியா புட்ரைட்ஸ்கி (Ilya Budraitskis), போபோவிச்சின் நோக்குநிலையை ஆதரித்தார். அவர் எழுதினார்: 'எனது பகுத்தறிவு எவ்வளவு பாதிக்கப்படக்கூடியதாக தோன்றலாம் என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன், ஆனால் இந்த உரையாடல் - எதிர்ப்பில் மேலாதிக்கத்திற்கான ‘Left Sector’ மற்றும் அதன் போராட்டத்திற்கான சாத்தியம் பற்றிய உரையாடல் உக்ரேனிய சூழலில் மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்காகவும் முக்கியமானது என்று நான் உணர்கிறேன். எதிர்காலத்தில் ஒவ்வொரு முறையும் இதே போன்ற (மோசமானதாக இல்லாவிட்டால்) சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிடும்.”

இதேபோல் NPA யும் மைதான் சதுக்க ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரித்து அறிவித்தது: 'இப்போதைக்கு, முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகள் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரிகளாக இருந்தாலும், அந்த இயக்கத்திற்குள் இடது எதிர்ப்பைக் கட்ட முயற்சிக்கும் சமூக மற்றும் அரசியல் சக்திகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.' அதிர்ச்சியூட்டும் சிடுமூஞ்சித்தனத்துடன் NPA இந்த நிலைப்பாட்டை எடுத்தது, இருப்பினும் 'அந்த இயக்கத்திற்கே ஜனநாயக, தேசிய மற்றும் சமூகப் பிரச்சினைகளில் எந்த முற்போக்கான வேலைத்திட்டமும் இல்லை' என்று ஒப்புக் கொண்டது, மேலும் அது 'நாட்டின் சிதைவுக்கு' வழிவகுக்கும் என்றும் கணித்தது.

கியேவ் ஆட்சிக் கவிழ்ப்பு உள்நாட்டுப் போரைத் தூண்டிவிடும் என்ற NPA இன் கணிப்புக்கு, உண்மையில் பெரிய நுண்ணறிவு தேவைப்படவில்லை. புதிய ஆட்சியின் கொள்கைகள் கிட்டத்தட்ட அனைத்தையும் தவிர்க்க முடியாததாக ஆக்கியது. இன வெறுப்பை ஊக்குவிப்பதற்காக 2012 இல் EU பாராளுமன்றம் கண்டனம் செய்த ஸ்வோபோடா கட்சி, கிரிமியா மற்றும் கிழக்கு உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில் இனப்படுகொலைக் கொள்கையை வகுத்தது. அதன் இணைய தளத்தில், ஸ்வோபோடா அறிவித்தது:

கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் உண்மையான உக்ரேனிய உக்ரேனை உருவாக்க … பாராளுமன்றவாதத்தை இரத்து செய்ய வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும், ஒட்டுமொத்த தொழில்துறையையும், அனைத்து ஊடகங்களையும் தேசியமயமாக்க வேண்டும், ரஷ்யாவிலிருந்து உக்ரேனுக்கு எந்த இலக்கியத்தையும் இறக்குமதி செய்வதைத் தடைசெய்ய வேண்டும்… முழுமையாக மாற்ற வேண்டும். அரசு சேவை (civil service), கல்வித் துறை, இராணுவம் (குறிப்பாக கிழக்கில்), அனைத்து ரஷ்ய மொழி பேசும் அறிவுஜீவிகள் மற்றும் அனைத்து உக்ரேனோ பீதியாளர்களை (வேகமாக, சோதனை இல்லாமல் உக்ரேனோ பீதியாளர்களை பதிவு செய்வது ஸ்வோபோடாவின் எந்த உறுப்பினராலும் இங்கே செய்யப்படலாம்), கொல்வதைச் செயல்படுத்தவும் உக்ரேனிய எதிர்ப்பு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் தூக்கிலிடப்படவும் வேண்டும்.

ஆட்சிக்கு வந்ததும், ஸ்வோபோடா மற்றும் பிற ஆட்சிக் கட்சிகள் உண்மையில் கிரிமியா மற்றும் கிழக்கு உக்ரேனில் உள்ள டொன்பாஸைத் தாக்கின. புதிய கியேவ் ஆட்சியானது ரைட் செக்டர், அசோவ் பட்டாலியன் மற்றும் உக்ரேனிய தேசிய காவலர் போன்ற தீவிர வலதுசாரி ஆயுததாரிகளை ஆதரித்தது, இது கிழக்கு உக்ரேனில் தாக்குதல்களை ஏற்பாடு செய்தது மற்றும் ஒடெசா மற்றும் மரியுபோலில் உள்ள கியேவ் எதிர்ப்பு எதிர்ப்பாளர்கள் மீதான வெகுஜன படுகொலைகளை ஏற்பாடு செய்தது. இந்த நிலைமைகளின் கீழ்தான் உக்ரேனின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளான கிரிமியா, மற்றும் டொன்பாஸில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் பிரிந்தன.

ரஷ்ய மொழி பேசும் பகுதியான கிரிமியாவில், ரஷ்யாவுடன் மீண்டும் இணைவதற்கான வாக்கெடுப்பு 83 சதவீத வாக்காளர் பங்கேற்புடன் 97 சதவீத வாக்குகளுடன் நிறைவேறியது. அஷ்கார் எழுதுவது போல ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் இல்லை. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து ரஷ்ய இராணுவம் செவஸ்டோபோலில் உள்ள கடற்படை தளத்தை உக்ரேனிடம் குத்தகைக்கு எடுத்திருந்தது, மேலும் அதன் படைகள் கியேவுக்கு விசுவாசமான சில துருப்புக்களை விரைவாக நிராயுதபாணியாக்கியது. கிரிமியா 1954 இல் உக்ரேனுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது — உக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், இந்த முடிவு பெரிய நடைமுறை முக்கியத்துவம் இல்லாதபோது நடந்தது.

கிழக்கு உக்ரேனின் டொன்பாஸ் பிராந்தியத்தில் சண்டை 2014ல் இருந்து குறுகிய மந்தநிலையுடன் தொடர்கிறது. இந்த ஆண்டு, டொன்பாஸில் சண்டை வெடிப்பு மற்றும் உக்ரேனை நேட்டோ கூட்டணியில் சேர்க்கும் நேட்டோவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் புட்டின் படையெடுக்க முடிவு செய்தார். இந்தக் கூட்டு நேட்டோ ஏவுகணைத் தளங்கள் மற்றும் உயிரியல் மற்றும் அணு ஆயுதங்களை கூட உக்ரேனில் நிலைநிறுத்த வழி அமைக்கும்.

இவை அனைத்தும், நிச்சயமாக, அஷ்கார் மற்றும் NPA மற்றும் அதன் கூட்டாளிகளின் தலைமைகளுக்கு நன்கு தெரியும். நேட்டோவின் கொள்கைகளினால் உலகப் போரின் அபாயம் இருந்தபோதிலும் அதை ஊக்குவிப்பதற்காக, உக்ரேனில் அவர்கள் ஆதரிக்கும் சக்திகளின் இனவெறி கொலைக்கான முறையீடுகள் மற்றும் பாசிச மூலத்தை மறைப்பதற்கான அவர்களின் முடிவு, அவர்களின் முற்றிலும் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை அம்பலப்படுத்துகிறது.

ஸ்ராலினிசமும் சோவியத் ஆட்சியும் பல நூற்றாண்டுகளாக தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமையை வழங்கும் எனக் கூறி, 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) பப்லோவாத அமைப்புகளின் அரசியல் மூதாதையர்கள் பிரிந்து சென்று 69 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொழிலாள வர்க்க அரசியலில் இருந்து முறித்துக் கொண்ட அவர்கள், பல தசாப்தங்களின் பின்னர் குட்டி முதலாளித்துவ குழுக்களாக பரிணமித்துள்ளனர். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அவர்கள் விரைவாக நேட்டோவை நோக்கித் திரும்பினார்கள்: NPA இன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம், 1995 இல் பொஸ்னியாவில் நேட்டோ சார்புப் படைகளுக்கு விநியோகங்களை இயக்க உதவியது.

இன்று, அவர்கள் முதன்மையாக இடதுசாரி இயக்கத்தின் அடித்தளமாக மாறக்கூடிய வாக்காளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அடுக்குகளை குழப்பும் பாத்திரத்தை வகிக்கிறார்கள் மற்றும் தற்போதைய ரஷ்ய எதிர்ப்பு வெறி போன்ற வலதுசாரி பிரச்சாரத்தால் அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். போருக்கு எதிராகவும் அணுசக்தி உலகப் போரின் ஆபத்துக்கு எதிராகவும் ஒரு இயக்கத்தைக் கட்டமைக்கும் பணிக்கு பப்லோவாதத்தின் பிற்போக்கு அரசியலுடன் சமரசம் செய்ய முடியாத எதிர்ப்பு அவசியப்படுகிறது.

Loading