உக்ரேன் நெருக்கடி தொடர்பாக அமெரிக்கா சீனாவை அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாஷிங்டன் உக்ரேனில் போரைத் தீவிரப்படுத்துகையில், ரஷ்யாவிற்கு உதவுவதற்கு எதிராக பெய்ஜிங்கை எச்சரிக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கும் சீனாவின் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரி யாங் ஜீச்சிக்கும் இடையே நேற்று ரோமில் நடந்த சந்திப்பை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.

யாங் ஜீச்சி 2019 இல் [Source: Wikimedia]

'உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் பற்றி கணிசமான விவாதம்' நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவதைத் தவிர, இரு தரப்பும் பேச்சுவார்த்தையின் எந்த விவரங்களையும் வழங்கவில்லை. எவ்வாறாயினும், சந்திப்பிற்கு முன்னதாக, சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பேச்சு நிகழ்ச்சிகளில் தோன்றி அப்பட்டமான அச்சுறுத்தல்களை வெளியிட்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் CNN இடம், 'இந்த பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷ்யாவிற்கு உயிர்நாடியாக உதவியாக இருப்பதற்கு எந்த நாட்டிலிருந்தும், உலகில் எங்கிருந்தும் அமெரிக்கா அனுமதிக்காது' என்று கூறினார். வாஷிங்டன், 'ரஷ்யாவிற்கு சீனா உண்மையில் எந்த வகையான ஆதரவை, பொருள் ஆதரவை அல்லது பொருளாதார ஆதரவை வழங்குகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது' என்று அவர் கூறினார்.

அமெரிக்கா எடுக்கும் தண்டனை நடவடிக்கைகளை அவர் கூற மறுத்தபோதிலும், சல்லிவன் கூறினார்: 'ரஷ்யாவிற்குப் பெரிய அளவிலான பொருளாதாரத் தடை விலக்கு முயற்சிகளுக்கு அல்லது அவற்றைத் திரும்ப நிரப்புவதற்கு ஆதரவு அளிப்பது முற்றிலும் அதற்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்க பெய்ஜிங்கை நாங்கள் நேரடியாகவும், தனிப்பட்ட முறையிலும் தொடர்பு கொண்டுள்ளோம்.”

அச்சுறுத்தலை அடிக்கோடிட்டு, பெயரிடப்படாத மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஊடகத்திடம், 'ரஷ்யாவுடன் சீனாவின் இணக்கம் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது' என்று கூறினார்: 'தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அந்த கவலைகள் மற்றும் சில செயல்களின் சாத்தியமான தாக்கங்கள் மற்றும் விளைவுகள் குறித்து வெளிப்படையாக இருந்தார்.'

ரோம் கூட்டத்திற்கு முன்னதாக, பைடென் நிர்வாகம், ரஷ்யா இராணுவ உதவிக்காக சீனாவை அணுகியதாக பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவதன் மூலம் முன்னோடியாக இருந்தது. ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டுக்களைக் கொண்ட உத்தியோகபூர்வ கேபிள்கள் அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு பரவலாகக் கசிந்தன.

நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கையின்படி, மாஸ்கோ பெய்ஜிங்கிடம் இராணுவ உபகரணங்கள் மற்றும் உக்ரேனில் போருக்கான ஆதரவையும் அத்துடன் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் சுமத்தப்பட்ட முடங்கும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள கூடுதல் பொருளாதார உதவியையும் கேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவால் கோரப்பட்ட ஆயுதங்கள், இராணுவ ஆதரவு அல்லது பொருளாதார உதவி பற்றிய எந்த விவரங்களையும் வழங்கவில்லை, அவர்கள் உளவுத்துறை சேகரிக்கும் வழிமுறைகளை இரகசியமாக வைத்திருப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறினர்.

ராய்ட்டர்ஸ் அறிக்கை ஒரு படி மேலே சென்றது. இரண்டு அநாமதேய அமெரிக்க அதிகாரிகளின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, அது ரஷ்யா இராணுவ உதவியைக் கேட்டது மட்டுமல்லாமல், சீனா 'ரஷ்யாவிற்கு அதன் போரை ஆதரிப்பதற்காக இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கான அதன் விருப்பத்தை அடையாளம் காட்டியது' என்று கூறியது. அதிகாரிகளில் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்: 'இது உண்மையானது, இது விளைவுகளை கொண்டது, மேலும் இது மிகவும் ஆபத்தானது.'

சல்லிவனுக்கும் யாங்கிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே சீனாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் உளவுத்துறை அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தவறான தகவல்களின் அனைத்து அடையாளங்களையும் அமெரிக்க கூற்றுக்கள் கொண்டுள்ளது. கூற்றுகள் உண்மையாக இருந்தாலும், இதில் உள்ள முழு பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது. ரஷ்யாவிற்கு உதவ சீனா தயாராகி வருவதாக குற்றம் சாட்டுகையில், அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் உக்ரேனிய இராணுவத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களையும் ஆயுதங்களையும் வாரி வழங்குகின்றன.

நேற்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்: 'ரஷ்யாவிற்கு [இராணுவ] நடவடிக்கையைத் தொடர ஒரு சுயாதீனமான ஆற்றல் உள்ளது.' ரஷ்யா சீனாவிடம் கோரிக்கை விடுத்ததா என்பதை உறுதிப்படுத்த பத்திரிகையாளர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்ட அவர், 'இல்லை, இல்லை' என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, ரஷ்யாவிடம் இருந்து கோரிக்கையை கேட்டதில்லை என்று கூறினார். அமைதியான தீர்வுக்கான சீனாவின் அழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்: 'இப்போது அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பது பதட்டமான சூழ்நிலையை அதிகரிக்காமல் அல்லது கட்டுப்பாட்டை மீறுவதைத் தடுப்பதாகும்.'

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை சீனா கண்டிக்கவில்லை என்றாலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கிழக்கு உக்ரேனின் இரண்டு ரஷ்ய சார்பு பிரிவினைவாத கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சுதந்திரமாக அங்கீகரித்ததையும் அங்கீகரிக்கவில்லை. மோதலில் உள்ள அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு நலன்களும் —உக்ரேன் மற்றும் ரஷ்யா— மதிக்கப்பட வேண்டும் என்று பெய்ஜிங் வலியுறுத்தியுள்ளது.

நேட்டோ இராணுவக் கூட்டணியில் உக்ரேனை உறுப்பினராக சேர்ப்பதை நிராகரிக்க மறுப்பதன் மூலம், உக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்த பதட்டங்களை அமெரிக்கா வேண்டுமென்றே தூண்டிவிட்டது. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவில் மட்டுமல்ல, முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் முன்னேறியுள்ளன.

அதே நேரத்தில், கடந்த தசாப்தத்தில் அமெரிக்கா சீனாவுடனான அதன் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது, இதில் ஒரு பெரிய இராணுவ உருவாக்கம் மற்றும் இந்தோ-பசிபிக் முழுவதும் கூட்டணிகளை வலுப்படுத்துவது உட்பட அடங்கும். தீவிரமடைந்து வரும் அமெரிக்க அச்சுறுத்தல்கள், சீனாவையும் ரஷ்யாவையும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தங்கள் உறவுகளை பலப்படுத்த அதிகளவில் உந்தியுள்ளது.

பிப்ரவரி தொடக்கத்தில் பெய்ஜிங்கிற்கு சென்ற புட்டின், குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்தார். இரு தலைவர்களும் தங்கள் நட்புக்கு 'வரம்புகள் இல்லை' என்பதை உறுதிப்படுத்தும் மற்றும் பரந்த அளவிலான ஒத்துழைப்பைக் கோடிட்டுக் காட்டும் ஒரு நீண்ட கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

எவ்வாறாயினும், உக்ரேனின் மீதான ரஷ்ய படையெடுப்பு, சீனாவை ஐரோப்பாவுடன் தரைவழி மற்றும் கடல் வழியாக இணைக்க பாரிய உள்கட்டமைப்பு செலவினங்களை உள்ளடக்கிய அதன் ஒரே இணைப்பு ஒரே பாதை (Belt and Road) முன்முயற்சி உட்பட, நாட்டில் சீன நலன்களை வெட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம், சீனா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே மாற்று சாலை மற்றும் இரயில் இணைப்புகளுக்கு வழி வகுக்கும், போக்குவரத்து உள்கட்டமைப்பின் கட்டுமானம் மற்றும் நிதியுதவிக்காக உக்ரேனுடன் சீனா ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அமெரிக்காவைத் தடுக்கும் வழிமுறையாக முக்கிய ஐரோப்பிய சக்திகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் சீனாவின் முயற்சிகளுக்கு இந்தப் போர் கேடுசெய்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையை நிறுவும் முயற்சியில் கடந்த வாரம் ஜனாதிபதி ஷி, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருடன் இணையவழி பேச்சுக்களை நடத்தினார்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், பெய்ஜிங்கை மாஸ்கோவில் இருந்து விலகி இருக்க அழுத்தம் கொடுக்கும் ஒரு தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். சீனாவைக் கண்டிப்பதிலும், உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை கண்டிக்க வேண்டும் என்று கோருவதிலும் வாஷிங்டனின் கூட்டாளிகளில் ஆஸ்திரேலியா மிகவும் கடுமையானது. இந்த மாதத் தொடக்கத்தில், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் ரஷ்யாவையும் சீனாவையும் 'விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை' அச்சுறுத்தும் 'எதேச்சதிகாரத்தின் வளைவு' என்று முத்திரை குத்தினார்.

வாஷிங்டன் போஸ்ட்டுக்கான கருத்துகளில், அமெரிக்க இந்தோ-பசிபிக் ஆணையகத்தின் முன்னாள் ஆலோசகர் எரிக் சேயர்ஸ் உக்ரேன் நெருக்கடியின் பரந்த ஆபத்துகளை சுட்டிக்காட்டினார். 'உக்ரேனில் மாஸ்கோவின் போருக்கு உதவ பெய்ஜிங் எந்த வகையான இராணுவ உதவியையும் வழங்கினால், அமெரிக்க-சீன கொள்கையில் அதன் விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும்' என்று அவர் கூறினார்.

'இது பெய்ஜிங்குடன் பணிபுரிவதற்கான பாதைகள் பற்றிய விவாதத்தை திடீரென முடிவுக்கு கொண்டுவரும். மிக முக்கியமாக, சீனாவிற்கு எதிரான பழிவாங்கும் மற்றும் துண்டிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வாஷிங்டனைத் தள்ளும், மேலும் இப்போது சீனாவில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் மீது புதிய அழுத்தத்தை உருவாக்கும்' என்று சேயர்ஸ் எச்சரித்தார்.

சீனாவிற்கு எதிரான சமீபத்திய அமெரிக்க அச்சுறுத்தல்கள், உக்ரேனில் மோதலில் சம்பந்தப்பட்டுள்ள பெரும் ஆபத்துகள் பற்றிய மற்றொரு எச்சரிக்கையாகும். அதன் தாக்கங்கள் கிழக்கு ஐரோப்பாவிற்கு அப்பால் சென்று மற்ற சக்திகளை ஒரு பரந்த போரில் சிக்க வைக்கும் ஆபத்தை எழுப்புகின்றன.

Loading