நேட்டோ, ரஷ்யாவுடன் "பினாமிப் போரில்" இருப்பதாக ஒபாமாவின் பாதுகாப்பு செயலர் லியோன் பனெட்டா கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னாள் அமெரிக்க பாதுகாப்புச் செயலரும், பராக் ஒபாமாவின் கீழ் சிஐஏ இயக்குனரும், பில் கிளிண்டனின் தலைமை அதிகாரியுமான லியோன் பனெட்டா, உக்ரேனில் ரஷ்யாவுடன் அமெரிக்கா ஒரு பினாமிப் போரில் ஈடுபட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தார்.

மார்ச் 1, 2022 செவ்வாய்க் கிழமை, உக்ரேனின் தலைநகரான கியேவுக்கு அருகில் உள்ள புச்சாவில் ஒரு ரஷ்ய இராணுவ வாகனத்தின் மிச்சமீதத்தின் அருகே ஆயுதமேந்திய ஒருவர் நிற்கிறார். (AP Photo/Serhii Nuzhnenko)

'நாங்கள் இங்கே ஒரு மோதலில் ஈடுபட்டுள்ளோம், நாங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது ரஷ்யாவுடனான ஒரு பினாமிப் போர்' என்று பனெட்டா கூறினார்.

அவர் முடித்தார், 'இப்போது [ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்] புட்டினைச் சமாளிப்பதற்கான ஒரே வழி, நம்மை நாமே இரட்டிப்பாக்குவதுதான், அதாவது தேவையான அளவுக்கு இராணுவ உதவிகளை வழங்க வேண்டும்.'

அவர் மேலும் கூறினார், 'நீங்கள் செல்வாக்கு பெறுவதற்கான வழி, வெளிப்படையாக, உள்ளே சென்று ரஷ்யர்களை கொல்வதாகும்.'

2014 முதல் நாட்டிற்கு வழங்கப்பட்ட 2.5 பில்லியன் டாலர்கள் ஆயுதங்களையும் சேர்த்து, உக்ரேனுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர்கள் ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்த ஒரு நாளுக்கு பின்னர், பனெட்டாவின் கருத்துக்கள் வந்துள்ளன.

உக்ரேன் 9,000 கவச எதிர்ப்பு அமைப்புகள், 800 விமான எதிர்ப்பு அமைப்புகள், 7,000 சிறிய ஆயுதங்கள் மற்றும் 20 மில்லியன் தோட்டாக்களை பெறும் என பைடென் அறிவித்தார்.

இதுவரை, உக்ரேனில் 7,000 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது மோதலுக்கு அனுப்பப்பட்ட 28 துருப்புகளில் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது. ரஷ்ய இராணுவம் உக்ரேனின் சில பகுதிகளில் மெதுவாக முன்னேறி வரும் அதே வேளையில், கடந்த ஒரு மாத கால சண்டையில் இதுவரை எந்த முக்கிய நகரத்தின் மீதும் கட்டுப்பாட்டை பெற முடியவில்லை. உக்ரேனிய இராணுவத்திற்கு நேட்டோவின் பாரிய ஆயுத விநியோகம் போரின் போக்கில் தெளிவாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை, நேட்டோ உறுப்பு நாடான ஸ்லோவாக்கியாவின் பாதுகாப்பு அமைச்சகம், S-300 நீண்ட தூர விமான எதிர்ப்பு ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்ப முன்வந்தது.

ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ், ஆயுத அமைப்பை (weapons system) வழங்குவதை மாஸ்கோ 'அனுமதிக்காது' எனக் கூறினார், 'உக்ரேனிய எல்லைக்குள் எந்த சரக்குகளும் ஆயுதங்களை எடுத்துச் செல்வது தாக்குதலுக்குரிய நியாயமான இலக்காக கருதப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம்.'

லாவ்ரோவின் கருத்துக்கள் உக்ரேன் மீதான 'பினாமி' மோதலின் ஆபத்துக்களை வலுப்படுத்துகின்றன, இது ரஷ்யாவிற்கும் நேட்டோ உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு நேரடிப் போராக பரவுகிறது, இது நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5 இன் மூலம் ஒரு முழு அளவிலான போராக தூண்டப்படலாம்.

இந்த வாரம், போலந்தின் எல்லையில் இரண்டு பேட்ரியாட் ஏவுகணை உந்துதல் கருவிகளை அமெரிக்கா நிலைநிறுத்தியது.

வியாழனன்று, இங்கிலாந்தின் பாதுகாப்பு செயலாளர் பென் வோலஸ், இங்கிலாந்து ஒரு நடுத்தர தூர விமான எதிர்ப்பு அமைப்பை போலந்தில் நிலைநிறுத்தும் என அறிவித்தார்.

உக்ரேனும் ரஷ்யாவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர உடன்படிக்கையை நெருங்கிவிட்டதான வதந்திகளுக்கு மத்தியில், வியாழன் அன்று, அமெரிக்கா ஒரு இராஜதந்திர தீர்வை ஏற்காது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. 'ரஷ்யா ஒவ்வொரு நாளும், கிட்டத்தட்ட ஒவ்வொரு நிமிடமும் எடுக்கும் செயல்களை நாங்கள் காண்கிறோம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு தீவிரமான இராஜதந்திர முயற்சிக்கும் முற்றிலும் வேறுபட்ட பண்பைக் கொண்டுள்ளன”.

அவர் முடித்தார், 'ரஷ்யா அடுத்து என்ன செய்ய முடியும் என்பதில் எங்களுக்கு வலுவான உணர்வு உள்ளது... மாஸ்கோ ஒரு இரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான களத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று நாங்கள் நம்புகிறோம், பின்னர் உக்ரேனை, அதன் தாக்குதல்களை அதிகரிப்பதை நியாயப்படுத்த பொய்யாக குற்றம் சாட்டலாம்.'

இதற்கிடையில் அமெரிக்கா, தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை ஆயுதங்களால் நிரப்பி வருகிறது. 'ஐரோப்பிய அரசாங்கங்கள், அமெரிக்க அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை அணுகி ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களின் கொள்வனவு பட்டியலை, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு அமெரிக்க ஆயுதங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தேவையை உந்துகிறது' என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனி, இரண்டாம் உலகப் போரின் போது அதன் கொடூரமான குற்றங்களுக்குப் பின்னர் அதன் இராணுவத்தின் மீது விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட்டதால், ஆயுதங்களை பெருமளவில் வாங்குவதில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து 35 F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை அந்நாடு அறிவித்துள்ளது. மேலும் பேர்லின், ஒரு அமெரிக்க ஏவுகணை-தற்காப்பு அமைப்பை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து ரீப்பர் ட்ரோன்களை (reaper drones) வாங்க போலந்து திட்டமிட்டுள்ளது.

'பிப். 24 அன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அனைத்து வகையான ஆயுதங்களின் விற்பனையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், லாக்ஹீட் (Lockheed) பங்குகளை 8.3 வீதமாகவும் ரைத்தோன் (Raytheon) பங்குகளை 3.9 வீதமாகவும் உயர்த்தியுள்ளது' என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மோதல் ஏற்கனவே பாரிய அமெரிக்க ஆயுத வர்த்தகத்தை துரிதப்படுத்துகிறது. இந்த வாரம், Stockholm International Peace Research Institute அதன் வருடாந்திர உலகளாவிய ஆயுத வர்த்தக அறிக்கையை வெளியிட்டது, இது உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக அமெரிக்கா இருப்பதாக முடிவு செய்தது.

ஃபோர்ப்ஸ் இதழ் கருத்து தெரிவிக்கையில், “2017 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில், அமெரிக்கா உலகளாவிய ஆயுத விநியோகங்களில் 39 சதவீதத்தை கொண்டுள்ளது. இது, ரஷ்யா தனது ஆயுத வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியதை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், சீனா அனுப்பியதை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகவும் உள்ளது. கூடுதலாக, அமெரிக்கா அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது - 103 நாடுகள், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை.'

ஒரு தீவிரமான மற்றும் இரத்தக்களரி மோதலில் பாரிய அளவிலான ஆயுதங்கள் பாய்ச்சப்படும் நிலைமைகளின் கீழ், அதலபாதாளத்தின் விளிம்பிற்கு விரிவடைவதற்கான தேவையற்ற கோரிக்கைகளுடன், ஒரு முழு அளவிலான போர் பற்றிய எச்சரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

'மூன்றாம் உலகப் போர் இப்படித்தான் தொடங்குகிறது' என்ற கட்டுரையில் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் பிரட் ஸ்டீபன்ஸ் அறிவித்தார். அவர் இதை தீவிரத்தை குறைப்பதற்கான கோரிக்கையாக அல்ல, மாறாக மோதலில் இன்னும் ஆக்கிரோஷமான அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்காக என அறிவுறுத்தினார்.

ஸ்டீபன்ஸ் எழுதினார்,

'உக்ரேனில் பறக்க தடை மண்டலத்தை விதிக்க மறுப்பது நியாயப்படுத்தப்படலாம், ஏனெனில் அது, நேட்டோ நாடுகள் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருக்கும் அபாயங்களை மீறுகிறது. ஆனால் அவ்வாறு செய்வது என்ற யோசனை, மூன்றாம் உலகப் போரைத் தொடங்கலாம் என்ற வரலாற்றைப் புறக்கணித்து பலவீன தந்தி சமிக்ஞைகளை அனுப்புகிறது. கொரியப் போரில், சீன அல்லது வட கொரிய மறைவின் கீழ் இயங்கும் சோவியத் விமானிகளுடன் அமெரிக்கர்கள் உலகையே வெடிக்கச் செய்யாமல் சண்டையிட்டனர். மோதலுக்கான எங்கள் வாய்மொழியான வெறுப்பு, ரஷ்ய விரிவாக்கத்திற்கான ஒரு அழைப்பே தவிர, தடுக்கக்கூடியதில்லை.

இந்த வாரம், பைனான்சியல் டைம்ஸின் மார்ட்டின் வொல்ஃப் எச்சரித்தார், 'அமைதியான உறவுகளுக்கான நம்பிக்கை மங்கி வருகிறது. அதற்கு பதிலாக, உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர், அணுசக்தி ஆர்மகெடோனின் (நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான கடைசிப் போர்) அச்சுறுத்தல்கள், அணிதிரட்டப்பட்ட மேற்கு, எதேச்சதிகாரங்களின் கூட்டணி, முன்னோடியில்லாத பொருளாதார தடைகள் மற்றும் ஒரு பாரிய எரிசக்தி மற்றும் உணவு அதிர்ச்சி ஆகியவை எங்களிடம் உள்ளன. என்ன நடக்குமென யாருக்கும் தெரியாது. ஆனால் இது ஒரு பேரழிவு என்று எங்களுக்குத் தெரியும்.

வொல்ஃப் முடித்தார், 'உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர், அதேவழியில் நமது உலக வரைபடத்தை மாற்றியுள்ளது. நிதிச் சந்தைகளில் பெரிய சாத்தியமான விளைவுகளுடன், தேக்கநிலையின் நீடித்த செயல்பாட்டின் குறுகிய காலம் உறுதியாகத் தெரிகிறது. நீண்ட காலப் போக்கில், பூகோளமயமாதல் மற்றும் வணிக நலன்களை புவிசார் அரசியலுக்கு தியாகம் செய்வது போன்றவற்றின் வேகமான தலைகீழ் மாற்றமும், அவற்றுக்கிடையேயான ஆழமான பிளவுகளுடன் இரண்டு கூட்டுக்கள் தோன்ற வாய்ப்புள்ளது. அணுசக்திப் போர் கூட, ஐயோ, நினைத்துப் பார்க்கக்கூடியதுதான்.”

இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், மேலும் அமெரிக்க விரிவாக்கத்திற்கான கோரிக்கைகளும் உள்ளன. 'அதிக எண்ணிக்கையிலான சட்டமியற்றுபவர்கள் பைடென் நிர்வாகத்திற்கு அதிக வான் சக்திக்கான கியேவின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்' என்று த ஹில் செய்தி வெளியிட்டுள்ளது

ஹில் மேலும் தெரிவித்தது, 'இந்த விவாதம், வாஷிங்டனுக்கான வழக்கமான பாகுபாடான பிளவுகளை தாண்டியுள்ளது, குடியரசுக் கட்சியினர் மட்டுமல்ல, ஜனாதிபதி பைடெனின் நெருங்கிய ஜனநாயகக் கட்சி கூட்டாளிகள் சிலருக்கும் எதிராக வெள்ளை மாளிகை எதிர்த்து நிற்கிறது.'

மேலும், மோதல் பெருகிய முறையில் உலகளாவிய பரிமாணத்தைப் பெறுவதற்கான அறிகுறிகள் உள்ளன. வெள்ளியன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பைடென், 'ரஷ்யாவிற்கு பொருள் ஆதரவை' வழங்க மாட்டோம் என்று சீனா உறுதியளிக்க வேண்டும் எனக் கோரினார், மேலும் அவ்வாறு செய்ய மறுத்தால் 'விளைவுகள்' இருக்குமென்று அச்சுறுத்தினார்.

ஜி ஜின்பிங் தனது பங்கிற்கு, போருக்கான அமெரிக்காவின் பிரதிபலிப்பைக் கண்டனம் செய்தார், 'துடைத்தழிக்கும் மற்றும் கண்மூடித்தனமான பொருளாதாரத் தடைகள் மக்களைத் துன்புறுத்த மட்டுமே செய்யும். மேலும் அதிகரித்தால், அவை உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், நிதி, எரிசக்தி, உணவு மற்றும் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் கடுமையான நெருக்கடிகளைத் தூண்டி, ஏற்கனவே நலிந்து வரும் உலகப் பொருளாதாரத்தை முடக்கி, ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும்” என்றார்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் மார்கோ ரூபியோ (Marco Rubio), 'உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரில் சீனா உடந்தையாக உள்ளது' என அறிவித்து, 'ஜி ஜின்பிங்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு விலையைக் கொடுக்க வேண்டும்' என அறிவித்தார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் மத்தேயு பொட்டிங்ஜரின் (Matthew Pottinger) கூற்றுப்படி, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புடன் வெடித்துள்ள மோதல், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக வாஷிங்டனையும் அதன் கூட்டாளிகளையும் மோத வைக்கும் 'பனிப்போரின் சூடான தொடக்க வரவேற்பு' ஆகும். பொட்டிங்ஜர், 'நாம் செய்ய வேண்டியது நமது பாதுகாப்பு செலவினங்களை உடனடியாக இரட்டிப்பாக்க வேண்டும்' என முடித்தார்

Loading