முன்னோக்கு

உக்ரேன் தொடர்பாக அமெரிக்கா-நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மோதல் அணுஆயுதப் போருக்கு அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கியூப ஏவுகணை நெருக்கடிக்கு அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த உக்ரேன் போர் நிஜமாகவே அணு ஆயுத பயன்படுத்தும் அபாய நிலைக்கு உலகை கொண்டு வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பனிப்போருக்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாத வகையில் அந்நாட்டின் அணுஆயுத தடுப்புப் படைகளை எச்சரிக்கையில் நிறுத்தும் நடவடிக்கை எடுத்தார். கிரெம்ளினில் இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் வழங்கிய மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த கருத்துக்களில், ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் 'சிறப்பு போர் முறை சேவை' (special combat service regime) என்று அவர் எதை விவரித்தாரோ அதற்கு மாற்றப்படும் என்றார்.

GMD அமைப்பு ஏவுகணை ஏவுதல், ஜனவரி 26, 2013 (Photo: MDA)

அந்த முடிவை விளக்கிய புட்டின், 'மேற்கத்திய நாடுகள் நம் நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் துறையில் மட்டும் விரோதமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, மாறாக முன்னணி நேட்டோ உறுப்பு நாடுகளின் உயர் அதிகாரிகள் இந்நாட்டைக் குறித்து ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிடுகின்றனர்' என்றார்.

உலக சோலிச வலைத் தளம் புட்டின் அரசாங்கத்தின் அபாயகரமான அணுஆயுத இராஜதந்திர நடைமுறைகளைக் கண்டிக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் ஒன்றிய உடைவால் உண்டான பேரிடரைப் பொறுப்பின்றி இராணுவவாதத்தை அதிகரிப்பதன் மூலமாக மாற்றிவிட முடியாது. இந்த ஆட்சியின் விரக்தி மற்றும் நோக்குநிலைப் பிறழ்வை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, புட்டினும் ரஷ்ய தன்னலக் குழுவின் கன்னையும் உக்ரேனில் ரஷ்யப் பாதுகாப்பு நலன்களை அங்கீகரித்து, அவற்றின் கொள்கைகளை அதற்கேற்ப மாற்றுவதன் மூலம் ஏகாதிபத்திய சக்திகளை அச்சுறுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால் புட்டினின் பொறுப்பற்ற தன்மை, தற்போதைய நெருக்கடிக்கும் மற்றும் இதனால் ஏற்படக்கூடிய சாத்தியமான பேரழிவுகரமான விளைவுகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நேட்டோ கூட்டாளிகளுமே முக்கிய பொறுப்பு என்ற உண்மையை மாற்றிவிடாது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, புட்டின் அறிக்கைக்கு விடையிறுத்து அறிவிக்கையில், இது 'இந்த மோதலின் போக்கில் ஜனாதிபதி புட்டினிடமிருந்து நாம் கண்ட வடிவத்தின் ஒரு பகுதியாகும், கூடுதலாக வலிந்து தாக்குவதை நியாயப்படுத்துவதற்காக அது இல்லாத அச்சுறுத்தல்களை ஜோடிக்கிறது, அப்படி எதுவும் இல்லை,' என்றார். ரஷ்யாவுக்கு 'உக்ரேன் மூலமாகவோ அல்லது நேட்டோ மூலமாகவோ ஒருபோதும் அச்சுறுத்தல் இருந்ததில்லை, நேட்டோ உக்ரேனில் சண்டையிடாத ஒரு தற்காப்பு கூட்டணியாகும்,' என்று ஒரு மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி கூறியதை CNN மேற்கோள் காட்டியது.

ரஷ்யாவின் நடவடிக்கையானது அதற்கு எதிராக வெறுமனே 'இட்டுக்கட்டப்பட்ட அச்சுறுத்தல்களுக்கான' ஒரு விடையிறுப்பு என்ற வாதங்கள் அமெரிக்கா/நேட்டோ சக்திகளது நடவடிக்கைகளுக்கு நேரெதிராக உள்ளன, கடந்த மூன்று நாட்களாக இவற்றின் அறிக்கைகளும் நடவடிக்கைகளும் ரஷ்ய பொருளாதாரத்தை அழித்து அவரது அரசாங்கத்தைத் தூக்கி எறியும் ஒரு முயற்சியாக புட்டினால் தவிர்க்க முடியாமல் பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை மாலை, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் கனடாவுடன் சேர்ந்து, வெள்ளை மாளிகை, சில ரஷ்ய வங்கிகளை SWIFT நிதி பரிவர்த்தனை வலையமைப்பில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்தது.

பிரெஞ்சு நிதி அமைச்சர் புரூனோ லு மேர் (Bruno Le Maire) முன்னதாக SWIFTக்கான ரஷ்ய அணுகலை நீக்குவதை 'நிதியியல்ரீதியான அணு ஆயுதம்' என்று குறிப்பிட்டிருந்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “உங்கள் கையில் ஓர் அணு ஆயுதம் இருக்கும் போது, அதைப் பயன்படுத்துவதற்கு முன்னர் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்பதே உண்மை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். 'விளாடிமிர் புட்டினின் ரஷ்யாவுக்கு எதிராக, விதிவிலக்கின்றி, தேவையான அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த நாங்கள் தயங்கவில்லை' என்று அவர் ஆத்திரமூட்டும் வகையில் கூறினார்.

சனிக்கிழமை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளின் அறிக்கை, 'ரஷ்ய மத்திய வங்கி அதன் சர்வதேச கையிருப்புகளைப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுமத்துவதற்கான' உறுதிப்பாட்டை அறிவித்தது. வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுகையில், 'அணு ஆயுதங்கள் வைத்துள்ள அல்லது ரஷ்யாவைப் போன்ற ஒரு பெரிய பொருளாதாரம் கொண்ட எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் அமெரிக்கா ஒருபோதும் இந்த நடவடிக்கையை எடுத்ததில்லை,' என்றது.

உக்ரேன் நேரடி போர்க்களமாக மட்டுமே சேவையாற்றுகின்ற நிலையில், இந்த பொருளாதாரப் போர்முறை நடவடிக்கைகள் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் நடைமுறைப் போராக மாறிவிட்ட சூழலில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்புக்குப் பின்னர் பார்க்கப்பட்ட எதையும் போலில்லாமல், ஜேர்மனியில் இருந்து வெளியாகும் போர் வாய்சவுடால் குறிப்பாக ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது. ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் ஜேர்மன் இராணுவத்திற்கு கூடுதலாக 110 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும் என்றார், இது அதன் வருடாந்தர வரவு-செலவு திட்டத்தின் தொகையை விட அண்மித்து இரண்டு மடங்காகும், ஜேர்மனி உக்ரேனுக்கு நேரடி இராணுவ உதவிகளை வழங்க உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவரும் முன்னாள் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சருமான ஊர்சுலா வொன் டெர் லெயென் அறிவிக்கையில், உக்ரேன் இந்த போரில் நேரடியாக அதன் ஈடுபாட்டைத் தீவிரப்படுத்த, ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் மற்றும் ஆயுதங்களை வினியோகிப்பதற்கும், முதல் முறையாக, ஐரோப்பிய ஒன்றியம், நிதியுதவி செய்யத் தொடங்கும் என்றார்.

உக்ரேனில் நேட்டோ படைகள் நேரடியாக ஈடுபடாது என்ற வாதமே கூட பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரூஸின் அறிவிப்பால் சிதைந்தது, ரஷ்யாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைய அப்பெண்மணி பிரிட்டிஷ் இளைஞர்களை ஊக்குவிப்பதாக அறிவித்தார்.

இத்தகைய அறிக்கைகள், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனின் அறிவிப்பைத் தொடர்ந்து வந்தன, அமெரிக்கா அந்நாட்டுக்கு இராணுவ உதவியாக கூடுதலாக 350 மில்லியன் டாலர் அனுப்ப இருப்பதாக இவர் தெரிவித்திருந்தார், இது மொத்த நிதியுதவியைக் கடந்தாண்டை விட 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஆக்கும். வெள்ளிக்கிழமை நேட்டோ பொது செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க், ரஷ்யாவுடனான ஒரு போரை எதிர்நோக்கி, நேட்டோவின் 40,000 பலமான 'அதிரடி எதிர்வினை படைகளை', 2003 இல் உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக செயலுக்குக் கொண்டு வந்தார்.

அனைத்து முக்கிய நேட்டோ நாடுகளிலும் உள்ள உயர் அதிகாரிகள் இன்னும் கூடுதலான வலிந்து தாக்கும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஆடம் கிஞ்சிங்கர் உக்ரேன் மீது 'விமானங்கள் பறக்கத் தடை' விதிக்கப்பட்ட மண்டலத்தை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார், இது ரஷ்ய விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்துவதை உள்ளடக்கும். 2011 இல் லிபியா மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் நிறுவப்பட்ட போது அது லிபிய அரசாங்கத்தைத் தூக்கியெறிவதிலும், மௌம்மர் கடாபியைச் சித்திரவதை செய்து கொல்வதிலும் உச்சக்கட்டத்தை அடைந்த ஒரு போரின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இருந்தது என்பது புட்டினுக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி தெரியும்.

வெளிநாட்டுத்துறை உறவுகள் கவுன்சில் தலைவர் ரிச்சர்ட் ஹாஸ் ஞாயிற்றுக்கிழமை காலை ட்வீட் செய்தியில், உக்ரேன் போர் பற்றிய 'பேச்சுக்கள்' 'ரஷ்யாவில் விருப்பத்திற்குரிய ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியத்தை உள்ளடக்கி மாறியுள்ளது' என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் ஊடகங்களில் மோசமான ரஷ்ய-விரோத பிரச்சாரத்தை ஊக்குவிப்பதோடு சேர்ந்துள்ளன. அமெரிக்கா, ரஷ்ய மக்களை குறிவைக்கவில்லை என்று கூறினாலும், ரஷ்ய இசையமைப்பாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளை தடை செய்தது மற்றும் போல்ஷோய் பலே நிகழ்ச்சிகளை இரத்து செய்தது போன்ற ரஷ்ய குடிமக்களுக்கு எதிரான தண்டிக்கும் வகையிலான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பின்வாங்க நிர்பந்திக்கப்படும் என்ற புட்டினின் நம்பிக்கை ஒரு பேரழிவுகரமான பிழையான கணக்கீடாகும். அதற்கு மாறாக, அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் அவற்றின் போர்வெறியைத் தீவிரப்படுத்த உக்ரேன் மீதான படையெடுப்பைக் பயன்படுத்திக் கொள்கின்றன.

உக்ரேன் படையெடுப்பானது மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க பிரிவுகளுக்குள் நோக்குநிலை பிறழ்வை ஏற்படுத்தி உள்ள அளவு, அதன் மிகவும் மோசமான விளைவுகளில் ஒன்றாக உள்ளது. நேற்று, ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து பேர்லினில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100,000 பேர் கலந்து கொண்டனர்.

சந்தேகத்திதற்கிடமின்றி அதில் பங்கெடுத்தவர்களில் பலர் மனிதாபிமான உணர்வுகளால் உந்தப்பட்டவர்கள், என்றாலும் கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் நேட்டோவால் தொடங்கப்பட்ட கொடூரமான போர்களுக்கு எதிராக பாரிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். எந்த விதத்திலும், நேட்டோ சக்திகள் அவற்றின் சொந்த பிற்போக்குத்தனமான இராணுவவாத நிகழ்ச்சிநிரலை முன்னோக்கி அழுத்த, மக்களின் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன. இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பால் மிகப் பெரியளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள, பிரதான முதலாளித்துவ சக்திகள் அனைத்தினதும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவினது, தீர்க்க முடியாத உள்நெருக்கடிகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப அவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான இந்த பிரச்சாரத்தைப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.

தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அது ரஷ்ய தேசியவாதத்திற்கு இடங்கொடுக்காமல் ஏகாதிபத்தியத்தையும், ஏகாதிபத்தியத்திற்கு இடங்கொடுக்காமல் ரஷ்ய தேசியவாதத்தையும் எதிர்ப்பது அவசியமாகும்.

சனிக்கிழமை உலக சோசலிச வலைத் தளம் நடத்திய, “மூன்றாம் உலகப் போருக்கான முனைவை நிறுத்து' என்ற இந்த சர்வதேச இணையவழி கலந்துரையாடலில், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் விவரிக்கையில், “இந்த போரை நோக்கிய ஒருவரின் மனோநிலையைத் தீர்மானிப்பதில், 'யார் முதலில் சுட்டார்கள்?' என்ற கேள்வியில் ஒருமுனைப்படுவது மற்றும் ஊடுருவது என்பதை விட அரசியல்ரீதியிலும் புத்திஜீவிதரீதியிலும் மிகவும் திவாலான அணுகுமுறை வேறெதுவும் இருக்க முடியாது,” என்று குறிப்பிட்டார்.

இந்தக் கேள்வியானது, உலகளவில் செயல்படும் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ள பொருளாதார, அரசியல், சமூக மற்றும் புவிசார் மூலோபாய நலன்கள் மற்றும் நிலைமைகளின் பரந்த அளவிலான தொடர்புகளிலிருந்து ஒரு நிகழ்வைப் பிரிக்கிறது. மேலும் அவை திடீரென ஒரு முக்கியமான கட்டத்தை அடையும் வரை, உலக அளவில் செயல்படுகின்றன, பின்னர் அவை இராணுவ வன்முறை வெடிப்பைத் தூண்டுகிறது.

அணுஆயுதங்கள் கொண்டு நடத்தப்படும் மூன்றாம் உலகப் போர் அபாயம் “ஒரு தீய மனிதனின், அதாவது புட்டனின், நடவடிக்கைகளில் இருந்தே எழுகிறது” என்ற சொல்லாடலை ஒப்புக்கொண்ட நோர்த், இதற்கு “விமர்சன சிந்தனையின் அனைத்து திறன்களையும் நிறுத்துவது மட்டுமல்லாமல், மாறாக பரந்த மக்களின் மறதியும் அவசியப்படுகிறது,” என்று குறிப்பிடாடர்.

இந்த மறதி நோய் உள்ள கூறுபாடுகளில் உக்ரேன் மோதலின் பின்புலத்தையே மறந்துவிடுபவர்களும் உள்ளடங்குவர், ரஷ்ய-விரோத அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்திய 2014 அமெரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு சதியும், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கம் இதையும் இவர்கள் மறந்து விடுகிறார்கள். மத்தியதூர அணுஆயுத தளவாடங்கள் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகி, ருமேனிய மற்றும் போலாந்தில் தாக்கும் ஏவுகணைகளை நிலைநிறுத்தி, அமெரிக்க அணுஆயுதப் படைகளை பல ட்ரில்லியன் டாலரில் விரிவாக்கி, அணுஆயுதங்களைப் பிரயோகிக்க திட்டமிடுவதில் அமெரிக்காவே முன்னிலை எடுத்தது என்பதை ஒருவர் மறந்து விடுவதும் இதற்கு தேவைப்படுகிறது.

கோவிட்க்கு எதிராக போராடுவோம்! உயிர்களைப் பாதுகாப்போம்! மூன்றாம் உலகப் போர் முனைவை நிறுத்து' என்ற இணையவழி கருத்தரங்கின் பதிவைப் பார்க்குமாறும், பகிர்ந்து கொள்ளுமாறும் நாம் நம் வாசகர்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறோம்.

Loading