“McKinseyGate” ஊழல் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மக்ரோனை தாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 25 அன்று, பிரெஞ்சு செனட் மன்றம், நிர்வாக ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸி (McKinsey) க்கு எதிராக சட்ட நடவடிக்கையைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) உறுப்பினரான செனட்டர் எலியான் அசாஸியின் தலைமையில் நடத்தப்பட்டது. கோவிட்-19 கொள்கை குறித்து மக்ரோன் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும்போது, நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்கள் வரி ஏய்ப்பு செய்ததாக மெக்கின்ஸி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து செனட் குழுவின் முன் பொய் சாட்சியம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன். (Ludovic Marin, Pool via AP)

செனட் அறிக்கையானது மக்ரோன் அரசாங்கத்திற்குள் பாரிய நிதி ஊழலை விவரிக்கிறது. இது, 2021 இல் 1 பில்லியன் யூரோக்கள் உட்பட, 2018 முதல் மெக்கின்ஸிக்கு மொத்தம் 2.4 பில்லியன் யூரோக்களை ஆலோசனைக் கட்டணமாக வழங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்புக்கு, நிர்வாகத்தின் மிக முக்கிய பிரிவுகளை மட்டுமே வாக்களித்ததால், உண்மையான மொத்த தொகை இன்னும் அதிகமாக இருக்கலாம். நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 329 மில்லியன் யூரோக்கள் அளவிற்கு இருந்தாலும், 2020 ஆம் ஆண்டில், பெருநிறுவன வரியில் ஒரு சதம் கூட மெக்கின்ஸி செலுத்தவில்லை.

அரசாங்கம் ஆலோசனை நிறுவனங்களை பயன்படுத்துவது 'மண்டியிடும் எதிர்வினை' என்றும், ஓய்வூதியங்கள், வீட்டுவசதி, மற்றும் வேலையின்மை நலன்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, மக்ரோன் அரசாங்கம் செய்த “பெரும்பாலான முக்கிய சீர்திருத்தங்களில்” மெக்கின்ஸியும் மற்றும் பல நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன என்றும் அறிக்கை கூறியது. மெக்கின்ஸி உட்பட பல தனியார் ஆலோசனை நிறுவனங்கள் முன்னைய பிரெஞ்சு அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டது என்றாலும், மக்ரோன் அவற்றின் பயன்பாட்டை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளார்.

பிரான்சில் 142,000 க்கும் அதிகமான மக்கள் இறந்தாலும் கூட, மெக்கின்சி ஆலோசகர்கள் மக்ரோனின் தொற்றுநோய்க் கொள்கையின் மையத்தில் இருந்ததாகவும், வைரஸின் சுழற்சியை அகற்றுவதற்கான அடிப்படை சமூக தொலைதூர நடவடிக்கைகளை செயல்படுத்த மறுத்ததாகவும் கூறப்பட்டது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெக்கின்ஸி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 10 பில்லியன் டாலராகும், மேலும் 65 நாடுகளில் அதன் அலுவலகங்கள் உள்ளன. இது, தான் வழங்கும் ‘மூலோபாய மேலாண்மை’ ஆலோசனைக்கு அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான கட்டணங்களை வசூலிக்கிறது, இது தொழிலாள வர்க்கத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு வழிவகுக்கிறது. மக்ரோன் செய்தித் தொடர்பாளர், இங்கிலாந்து அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் மெக்கின்ஸி நிறுவனத்திற்கு பிரெஞ்சு அரசாங்கத்தை விட 40 மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தியுள்ளது பற்றிக் கூறி, இந்நிறுவனத்தின் ஒட்டுண்ணித்தனத்தை கவனக்குறைவாக சுட்டிக்காட்டினார். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தற்போது தனியார்மயமாக்கப்பட்டு வருவதில் மெக்கின்ஸி அதன் பங்கிற்கு இழிபுகழ் பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை, மக்ரோனின் ஆரம்பகட்ட பதில், 'குடியரசில் ஏல விதிகளை மதிக்காமல் எந்த ஒப்பந்தமும் வழங்கப்படுவதில்லை' என வலியுறுத்தி, எந்த தவறையும் மறுப்பதாக இருந்தது. எவ்வாறாயினும், திங்களன்று டிஜோனில் அவர் பேசுகையில், மெக்கின்ஸி விவகாரத்தில் இருந்து தன்னை விலக்கி, “ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது நான் அல்ல” எனக் கூறினார். பின்னர் புதன்கிழமை, அவரது செய்தித் தொடர்பாளர் வெளிப்புற ஆலோசனைக்கான செலவினங்களை 15 சதவீதம் குறைப்பதாக உறுதியளித்தார்.

மெக்கின்ஸிக்கும் மக்ரோனின் குடியரசை நோக்கி முன்னேறுவோம் (Le Republique En Marche - LREM) கட்சிக்கும் இடையே நெருங்கிய உறவுகள் உள்ளன. LREM இன் துணை இயக்குநரான போல் மிடி, 2007 முதல் 2014 வரை மெக்கின்ஸியில் பங்குதாரராக இருந்தார். மத்தியூ மோகூர் (Mathieu Maucourt), LREM இன் அரசியல் இயக்குநராவதற்கு முன்பாக மூன்று ஆண்டுகள் மெக்கின்ஸியில் திட்ட மேலாளராக இருந்தார், இப்போது அவர் அரசு செயலகத்தில் அங்கம் வகிக்கிறார். Etienne Lacourt, மெக்கின்ஸி இன் ஒரு பங்குதாரராக பணியமர்த்தப்படுவதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு வரை LREM இன் வழிநடத்துக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

மெக்கின்ஸியின் வரி ஏய்ப்பும், மற்றும் மக்ரோன் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவதில் அவர்களின் பங்கும் ஒரு குற்றவியல் தன்மை கொண்டது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. மேலும் கூறுவதானால், தெளிவாக, இது சில காலமாக பிரெஞ்சு அரசாங்கம், நீதித்துறை மற்றும் ஊடக வட்டாரங்களில் பகிரங்கமான இரகசியமாக இருந்து வருகிறது. நான்கு மாதங்களுக்கும் மேலாக தயாரிக்கப்பட்ட செனட் அறிக்கை, வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக முன்வைக்கப்படுகிறது.

ஏப்ரல் 10 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றுக்கு முன்னதாக, போட்டி வேட்பாளர்கள், அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்திற்கும் மக்ரோனின் LREM க்கும் இடையே உள்ள நெருக்கமான உறவுகளைச் சுட்டிக்காட்டி, இந்த ஊழல் தொடர்பாக மக்ரோனை விமர்சிக்கின்றனர்.

தீவிர வலதுசாரி வேட்பாளர் மரின் லு பென், “இமானுவல் மக்ரோன், மெக்கின்ஸியால் கடந்த ஆண்டு உங்களுக்கு 1 பில்லியன் யூரோக்கள் மிகவும் தெளிவற்ற பணிகளுக்காக செலவிட்டது, அது வரி செலுத்தாமலும், செனட்டில் பொய் சொல்லியும், பொதுப் பணத்தை தொடர்ந்து கபளீகரம் செய்யும்!” என்று ட்வீட் செய்தார். மேலும், அடிபணியா பிரான்ஸ் கட்சியின் வேட்பாளர் ஜோன்-லூக் மெலோன்சோன் “என்னுடன், ஆலோசனைக் குழுக்கள் இல்லாமல் போகும்” என்று கூறுவதன் மூலம் பதிலிறுத்தார்.

குடியரசுக் கட்சி (Les Republicains - LR) வேட்பாளர் வலெரி பெக்ரெஸ் (Valerie Pecresse) புதனன்று, “அரசாங்கம் மறைக்க ஏதாவது இருப்பதாகத் தெரிகிறது” என்று கூறினார். பெக்ரெஸ் இன் ஆதரவாளரான சேவியர் பெர்ட்ராண்ட் (Xavier Bertrand), அறிக்கையின் கண்டுபிடிப்புகளை ஒரு ‘அரசு ஊழல்’ என்று விவரித்தார், அரசாங்கம் ஆலோசனை நிறுவனங்களைப் பயன்படுத்துவது குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.

மெக்கின்ஸி உடனான மக்ரோனின் ஊழல் பேரங்களை போட்டி வேட்பாளர்கள் கண்டனம் செய்வது முற்றிலும் பாசாங்குத்தனமானது. LR வேட்பாளர் பெக்ரெஸ், முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதியும் குற்றவாளியுமான நிக்கோலா சார்க்கோசியின் கீழ் உயர்கல்வி மந்திரியாகவும் மற்றும் வரவு-செலவுத் திட்ட மந்திரியாகவும் இருந்த காலத்தில் மெக்கின்ஸி ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றினார். சேவியர் பெர்ட்ராண்டும் மெக்கின்ஸி ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஆலோசனை நிறுவனம் குறித்து மக்ரோனை இழிவுபடுத்தும் LR இன் ஆவல், பரவலான ஊழலுடன் தங்கள் சொந்த பிரபலமான தொடர்பைக் கைவிடுவதற்கான அவர்களின் இக்கட்டான ஆர்வத்தையும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட குற்றத்திற்காக சார்க்கோசி, மற்றும் 2017 இல் LR ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஃபியோன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்குகள் இன்னும் மக்கள் நினைவில் அழியாது உள்ளன.

அடிபணியா பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் ஸ்ராலினிச PCF இன் ஃபாபியன் ரூசெல் ஆகியோர், தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்தே மெக்கின்ஸியால் அறிவுறுத்தப்பட்ட தொற்றுநோய்க் கொள்கையை ஆதரித்தனர், மேலும் பிரெஞ்சு நிதியப் பிரபுத்துவத்தால் பின்தொடரப்பட்டனர். இந்த ஆதரவு, பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் பைகளை நிரப்புவதற்கான தொடர் பிணையெடுப்புகளுக்கு ஒருபுறமும், தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய நோய்த்தொற்று மற்றும் இறப்புக் கொள்கைகளை திணிப்பதிலும் முக்கியமானதாக இருந்தது.

பிரெஞ்சு அரசாங்கத்தைச் சூழ்ந்துள்ள பல திருட்டு ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான McKinsey மீதான கவனம் இந்த பிரச்சாரத்தின் இழிந்த தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உண்மையில், தனியார் ஆலோசனை நிறுவனங்களுக்கான பிரெஞ்சு அரசாங்கத்தின் செலவினத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே மெக்கின்ஸி கொண்டுள்ளது. செனட் அறிக்கையின்படி, 2018 முதல் 2020 வரை, அரசாங்கத்தின் ஆலோசனைச் செலவில் 1 சதவீதம் மெக்கின்ஸிக்கும், 5 சதவீதம் காப்ஜெமினிக்கும் (Capgemini), மற்றும் 10 சதவீதம் யூரோகுரூப்புக்கும் (Eurogroup) சென்றுள்ளது.

இந்த ஊழலுக்கு மத்தியில், பிற்போக்குத்தனமான தடுப்பூசி-எதிர்ப்பு ஆதரவாளர்கள், வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளையும் கண்டிப்பதற்காக ஃபைசருக்கும் மெக்கின்ஸிக்கும் இடையிலான உறவில் குதித்துள்ளனர்.

ஃபைசரின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆல்பர்ட் போர்லா மற்றும் தலைமை வணிக கண்டுபிடிப்பு அதிகாரி அமீர் மாலிக் இருவரும் மெக்கின்ஸியின் முன்னாள் ஊழியர்கள் ஆவர். இது ஃபைசர் தடுப்பூசிகளை வாங்குமாறு அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தியது. தடுப்பூசிகளை வாங்குவதற்கான மெக்கின்ஸியின் ஆலோசனை குற்றவியல் வணிகத்துடன் தொடர்புடையது என்பதில் சந்தேகமில்லை, உதாரணமாக, இது ஃபைசருக்கு மட்டும் சுமார் 30 பில்லியன் யூரோக்கள் இலாபம் ஈட்டியது. இருப்பினும், அவர்களின் முக்கிய குற்றம், உயிர்காக்கும் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதை அவர்கள் ஆதரித்தது அல்ல, மாறாக உயிர்காக்கும் சமூக இடைவெளி நடவடிக்கைகளை விஞ்ஞானபூர்வமாக செயல்படுத்த மறுப்பதில் பிரெஞ்சு அரசாங்கத்துடன் அவர்கள் ஒத்துழைத்ததாகும்.

இந்த முழு இழிவான விவகாரம், ‘பணக்காரர்களின் ஜனாதிபதி’ என பிரபலமாக அழைக்கப்படும் மக்ரோன் மற்றும் அவரது தேர்தல் போட்டியாளர்கள் இருவரையும் ஒரேநேரத்தில் கேவலமாக அம்பலப்படுத்துகிறது. அவர்கள் அனைவரும், மக்ரோனின் ஜனாதிபதி பதவிக் காலம் முழுவதும் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் பொதுப் பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு பாய்ச்சுவதில் உடந்தையாக உள்ளனர், அது பங்குச் சந்தை ஊக நிதி, பெருநிறுவன பிணையெடுப்புகள் அல்லது பெரியளவிலான அரசாங்க ஒப்பந்தங்கள் என எந்த வடிவிலாவது நிகழ்கின்றன. மேலும், தொற்றுநோயின் கீழ், இந்த செல்வக் குவிப்பு வியத்தகு முறையில் துரிதப்படுத்தப்பட்டது.

இறுதி ஆய்வில், மெக்கின்ஸி ஊழல் வெளிப்படுத்தியது ஒரு தனி மனிதனின், கட்சி அல்லது ஆலோசனை நிறுவனத்தின் தனிப்பட்ட ஊழலை அல்ல, மாறாக முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கம் கொண்ட முழு சமூக ஒழுங்கின் ஊழல் மற்றும் ஒட்டுண்ணித்தனத்தை ஆகும்.

Loading