முன்னோக்கு

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகளாவிய ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Population and Development Review இதழில் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வு, உலகளாவிய ஆயுட்காலம் 2020 ஆம் ஆண்டில் சுமார் 0.92 ஆண்டுகளும், மேலும் 2021 ஆம் ஆண்டில் மற்றொரு 0.72 ஆண்டுகளும் குறைந்துள்ளதாக மதிப்பிடுகிறது. இது, 1950 இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த எண்ணிக்கையை கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து உலகளாவிய ஆயுட்காலத்தில் ஏற்பட்ட முதல் சரிவாகும் என்பதுடன், 70 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொன்று குவித்த இரண்டாம் உலகப் போருக்குப் பின்னைய மோசமான நிலைமை ஆகும்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியலாளரான டாக்டர். பாட்ரிக் ஹியூவ்லின் (Dr. Patrick Heuveline) எழுதிய இந்த ஆய்வு, கோவிட்-19 தொற்றுநோயால் உலகளாவிய ஆயுட்காலம் குறைவதை முதலில் மதிப்பிட்டது என்பதால் மிகவும் முக்கியமானது.

இந்த அறிக்கை, “ஆயுட்காலத்தில் ஏற்படும் வருடாந்திர சரிவு… குறைந்தது 50 நாடுகளில் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஏதோவொரு கட்டத்தில் இரண்டு ஆண்டுகளைத் தாண்டியதாகத் தெரிகிறது. 1950 ஆம் ஆண்டு முதல், 1970 களில் கம்போடியா, 1990 களில் ருவாண்டா, மற்றும் சில துணை-சஹாரா ஆபிரிக்க நாடுகளில் பரவியிருந்த நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி (AIDS) தொற்றுநோயின் உச்சம் போன்ற அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே ஆயுட்காலத்தின் வருடாந்திர சரிவு காணப்பட்டது” என்று குறிப்பிடுகிறது.

2020 ஆம் ஆண்டுக்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபை இந்த எண்ணிக்கையைக் கணக்கிடத் தொடங்கியதிலிருந்து ஆயுட்காலம் தடையின்றி 69 ஆண்டுகள் வரை உயர்ந்துள்ளது, ஆயுட்காலம் 1950 இல் 45.7 ஆண்டுகளாக இருந்தது 2019 இல் 72.6 ஆண்டுகளை எட்டியது வரை, வருடத்திற்கு சராசரியாக 0.39 ஆண்டுகள் அதிகரித்து வந்தது.

உலகளாவிய ஆயுட்காலம், 2010-2021 (இரு பாலினருக்கும், ஆண்டுகளில்). ஆதாரம்: 2010-2019, ஐக்கிய நாடுகள் சபை (2019); 2010-2021, ஆசிரியரின் கணக்கீடுகள் (see the Appendix for details)

இந்த அறிக்கை, “1964 முதல் 1968 வரையிலான காலக்கட்டத்தில் 0.7 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பெறப்பட்ட மிகப்பெரிய வருடாந்திர ஆதாயங்கள், உலகளாவிய பொது சுகாதார பிரச்சாரங்களின், குறிப்பாக குழந்தை தடுப்பூசித் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலித்தது” என்று குறிப்பிடுகிறது. அந்த நேரத்தில், ஏனைய பல விஞ்ஞான சாதனைகளுக்கு மத்தியில், பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூடுதல் பொது சுகாதார முன்முயற்சிகளில், தண்ணீரை வடிகட்டி குளோரின் கலந்து விநியோகித்தல், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சதுப்பு வடிகால் அமைத்தல், பாலில் நோய் கிருமிகளை அழித்து தரப்படுத்துதல் (milk pasteurization) மற்றும் பாரிய தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.

1991 இல் நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு ஆகியவை உலக அளவில் மூன்று தசாப்தங்களாக இடைவிடாத சமூக எதிர்ப்புரட்சியைத் தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்த முற்போக்கான ஆயுட்கால விரிவாக்கம் அதிகரித்து வரும் தாக்குதலுக்கு உட்பட்டது. இந்த அறிக்கை, தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில், “உலகளாவிய ஆயுட்காலத்திற்கான வருடாந்திர ஆதாயங்கள்… அவற்றின் 1950-2019 காலக்கட்டத்தின் சராசரியான 0.39 ஆண்டுகளை விடக் குறைந்துள்ளது, அதாவது 2015 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தின் சராசரி 0.3 ஆண்டுகள், மற்றும் 2019 ஆம் ஆண்டின் சராசரி 0.2 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் ஆகியவற்றுக்கு கீழே குறைகிறது” என்று கூறுகிறது.

தொற்றுநோய் இந்த பின்னடைவை விரைவாக துரிதப்படுத்தியுள்ளது, மேலும் மனித நாகரிகத்தை இதுவரை இந்தளவிற்கு அழிக்காத கொடிய நோய்க்கிருமிகளில் ஒன்றாக அது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயை உலகப் போர்களுடன் ஒப்பிடுவது மிகைப்படுத்தல் அல்ல. லான்செட் இதழில் பிரசுரமான ஒரு ஆய்வின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த உலகளாவிய அதிகப்படியான இறப்புக்கள் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 18.2 மில்லியனாக இருந்தது, இது முதலாம் உலகப் போரின் போதான ஒட்டுமொத்த இறப்புக்களுக்குச் சமமானதாகும்.

முந்தைய தொற்றுநோய்களைப் போலல்லாமல், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து வெளியிடப்பட்ட டஜன் கணக்கான அறிவார்ந்த ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றால் ஆவணப்படுத்தப்பட்டபடி, கோவிட்-19 தொற்றுநோயின் ஒவ்வொரு அம்சமும் கணிக்கக்கூடியதாகவும் தடுக்கக்கூடியதாகவும் இருந்தது. ஆனால், தொற்றுநோய் நடவடிக்கைகள் தொடர்பான ஒவ்வொரு அடியெடுப்பிலும், நிதிய தன்னலக்குழுவும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் மனித உயிர்கள் மற்றும் அவர்களின் நல்வாழ்வைக் காட்டிலும் இலாபங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை உறுதி செய்தனர்.

சுருக்கமாகச் சொல்வதானால், ஆயுட்காலம் குறைவது என்பது சமூகக் கொலைக் கொள்கைகளின் உறுதியான சுகாதார அளவீடாகும், இவற்றின் பண மதிப்புகளை பங்குச் சந்தை குறியீடுகளில் ஏற்படும் உயர்வைக் கொண்டு மதிப்பிடலாம்.

அமெரிக்காவிலும் மற்றும் பல நாடுகளிலும், ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் நீண்ட காலமாக ஆயுட்காலம் குறைக்கப்பட வேண்டும் என்றே வாதிடுகின்றன. முதியவர்கள் மற்றும் பலவீனமானவர்களைக் கொல்லவும், ஓய்வூதியக் கடமைகளைக் குறைக்கவும், மற்றும் சமூக சேவைகளைக் குறைக்கவும் என தொற்றுநோயை ஒரு சாதகமான வாய்ப்பாக அவர்கள் வரவேற்றனர்.

6 வயது லெக்ஸி (இடது), 8 வயது சார்லி (வலது) மற்றும் அவர்களது அம்மா ஆகியோர், ஜனவரி 26, 2022, புதன்கிழமை, வாஷிங்டனில் உள்ள குழந்தைகள் தேசிய மருத்துவமனையில் நீண்ட நாள் நடந்த சோதனையின் போது, சார்லிக்கு MRI பரிசோதனை செய்வதற்கு முன்பாக ஒரு பரிசோதனை அறையில் காத்திருக்கின்றனர். (AP Photo/ Carolyn Kaster)

தேசியளவில், எட்டு நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கணிசமாகக் குறைவதை எதிர்கொண்டுள்ளன. இதில், பெரு (ஆயுட்காலம் 5.6 ஆண்டுகள் குறைந்துள்ளது), குவாத்தமாலா (4.8), பராகுவே (4.7), பொலிவியா (4.1) மற்றும் மெக்சிகோ (4.0) உட்பட இலத்தீன் அமெரிக்காவில் உள்ள ஐந்து நாடுகளும், மற்றும் ரஷ்யா (4.3), பல்கேரியா (4.1) மற்றும் வடக்கு மாசிடோனியா (4.1) உட்பட ஐரோப்பாவில் மூன்று நாடுகளும் அடங்கும்.

அமெரிக்கா உட்பட 53 நாடுகளில், தொற்றுநோயின் போதான மோசமான 12 மாத காலத்தில் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்துள்ளதாக ஆய்வு மதிப்பிடுகிறது. மேலும் பல நாடுகளும், இந்த மோசமான 12 மாத காலத்தில் ஆயுட்காலம் குறைவதை எதிர்கொண்டன, இதில், துனிசியா (ஆயுட்காலம் 3.4 ஆண்டுகள் குறைந்துள்ளது), தென்னாபிரிக்கா (3.1), எகிப்து (2.3), பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (4.0), வடக்கு மாசிடோனியா (4.0), பிலிப்பைன்ஸ் (3.0), இந்தியா (2.6), கஜகஸ்தான் (3.2), லெபனான் (3.4) மற்றும் பிற நாடுகள் அடங்கும். இருப்பினும், 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனா உட்பட, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஒழிப்பு மூலோபாயத்தை பயன்படுத்திய பல நாடுகளில் ஆயுட்காலம் உயர்ந்துள்ளது.

ஆய்வின் கண்டுபிடிப்புகளின் முழு தாக்கத்தையும் பாராட்டும் வகையில், 2019 இல் ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ஆயுட்காலம் 2020 இல் 0.18 ஆண்டுகள் உயரும் என்று எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது. 2020 ஜனவரி-மார்ச் மாதங்களில் கோவிட்-19 நோயை ஒழிக்க ஆளும் உயரடுக்குகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், உலக மக்கள்தொகை தற்போது இருப்பதை விட இரண்டு ஆண்டுகள் அதிக ஆயுளை எதிர்பார்த்திருக்கும். அதற்கு மாறாக, உலகளாவிய ஆயுட்காலம் 2013 நிலைமைகளுக்குக் கீழே குறைந்துள்ளது, அதாவது ஒரு தாசப்த கால ஆயுட்கால ஆதாயம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கிடைக்காமல் போகிறது.

பாரிய உயிர்ச் சேதத்திற்கு ஒருபுறம், பெரும் வாழ்வாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு, உலகளவில் பதிவான நோய்தொற்றுக்களில் சுமார் 43 சதவீதம் நெடுங்கோவிட் நோய்க்கு வழிவகுத்துள்ளது, இதனால் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படக்கூடிய பல்வேறு நோயறிகுறிகளை அனுபவிக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.

நெடுங்கோவிட் நோய்க்கு ஆளான கணிசமான துணைக்குழுவினரைப் பொறுத்தவரை, அவர்களின் நிலைமை முற்றிலும் பலவீனமடையும், மேலும் அவர்களால் வேலை செய்யவோ அல்லது தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளவோ முடியாமல் போகும். சமீபத்திய ஆய்வுகள் இலேசான கோவிட்-19 நோய்தொற்றுக்களை கூட அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புக்களின் அதிகரிப்புடன் தொடர்புபடுத்தியுள்ளன.

இந்த உலகளாவிய பேரழிவிற்கு உலக முதலாளித்துவத்தின் பதிலிறுப்பு ஒரு பேரழிவுகரமான குற்றச்சாட்டாகும் என்பதை டாக்டர். ஹியூவ்லின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. முதலாளித்துவத்தின் மௌனமான மிருகத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பெருநிறுவன ஊடகம் கூட இந்த புதுமையான ஆய்வு பற்றிய செய்திகளை வெளியிடவில்லை. செய்தி ஊடகங்களும் மற்றும் அனைத்து உலக அரசாங்கங்களும் இந்த அறிக்கை குறித்து மௌனம் சாதிப்பதானது, அவர்களின் குற்றத்தை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னைய மிகப்பெரிய சமூகக் குற்றமாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 ஐ ஒழித்த சீனா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஒருசில நாடுகள் தவிர, பிற உலக முதலாளித்துவ அரசாங்கங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த மறுத்துவிட்டன. அதற்கு பதிலாக, அவர்கள் பாரிய நோய்தொற்றுக்களை உருவாக்கும் மிகக் கொடூரமான ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ மூலோபாயத்தைப் பின்பற்றினர், அல்லது வரையறுக்கப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதைப் போல பாசாங்கு செய்தனர், என்றாலும் இவை அனைத்தும் ஓமிக்ரோனின் BA.1 துணை மாறுபாட்டின் எழுச்சியின் போது அகற்றப்பட்டன.

இந்தக் கொள்கைகள் முன்னெப்போதையும் விட இன்னும் அதிக தொற்றும் தன்மை மற்றும் தடுப்பூசி-எதிர்ப்பு கொண்ட மாறுபாடுகளின் பரிணாமத்தை உருவாக்கியுள்ளன, இதில் ஓமிக்ரோனின் BA.2 துணைமாறுபாடு இதுவரை மிகவும் ஆபத்தானதாக உள்ளது. சீனா மட்டுமே பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்திற்காக போராடும் ஒரே பெரிய நாடாகும், என்றாலும் இப்போது BA.2 துணை மாறுபாட்டின் காரணமான தொற்றுநோயின் மோசமான வெடிப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது, இதனால் செவ்வாயன்று மட்டும் அங்கு 20,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட சீனாவில் மில்லியன் கணக்கான இறப்புக்களை இது விளைவிக்கக்கூடும் என்பதை நன்கு அறிந்தும் கூட மேற்கத்திய ஊடகங்கள், பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்தை அது கைவிட வேண்டும் என்று இப்போது வலியுறுத்துகின்றன. அதே நேரத்தில், அணுசக்தி மூன்றாம் உலகப் போரை கட்டவிழ்த்துவிட அச்சுறுத்தும் ரஷ்யாவுடனான போருக்கான அமெரிக்க-நேட்டோ கூட்டணியின் தீவிர முனைப்பை அவர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

தொற்றுநோய் மற்றும் அதிகரித்துவரும் போருக்கான உந்துதல் ஆகிய இரண்டிற்கான பதிலிறுப்பு, மனிதகுலத்தை பேரழிவிற்குள் வலியத் தள்ளும் முதலாளித்துவ அமைப்பின் குற்றம் மற்றும் திவால் தன்மைகளை வெளிப்படுத்துகின்றன. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தன்னைத்தானே தரம் தாழ்த்திக் கொண்டு டிரில்லியன் கணக்கான டாலர்களைக் குவித்துள்ள அதே குற்றவியல் நிதிய தன்னலக்குழு, இப்போது ரஷ்யா, சீனா மற்றும் முழு யுரேசிய நிலப்பரப்பையும் ஏகாதிபத்திய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பாடுபட்டு, பிராந்தியத்தின் பரந்த வளங்களையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தினரையும் நேரடியாகச் சுரண்டுகிறது.

ஓமிக்ரோனின் எழுச்சி தொடங்குவதற்கு சற்று முன்பாக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர் விசாரணையை (Global Workers’ Inquest) தொடங்கியுள்ளது, இது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கோவிட் எதிர்ப்பு ஆர்வலர்களிடமிருந்து சாட்சியங்களை சேகரித்து, தொற்றுநோய்க்கான பேரழிவுகரமான பதிலைக் கண்டறிந்து ஆவணப்படுத்துகிறது. இந்த முயற்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் மற்றும் கண்டுபிடிப்புக்கள் தொழிலாள வர்க்கத்திற்குள் பிரபலப்படுத்தப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, போருக்கு எதிராகவும், மற்றும் உலகளவில் கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரு மூலோபாயத்திற்காகவும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அயராது போராடும் ஒரு பாரிய இயக்கத்தை கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும்.

வருமான இழப்பீட்டுடன் கூடிய பூட்டுதல்கள், பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், நோய்தொற்றாளர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்துதல், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை உலகளவில் ஒருங்கிணைத்து வழங்குதல், உயர்தர N95 அல்லது சிறந்த முகக்கவசங்களை வழங்குதல் மற்றும் அவற்றை அணியுமாறு வலியுறுத்துதல், மற்றும் பல நடவடிக்கைகள் உட்பட, ஒவ்வொரு பொது சுகாதார நடவடிக்கையையும் உலகளவில் செயற்படுத்துவதால் மட்டுமே, தொற்றுநோயை தடுக்க முடியும், மற்றும் உலகளாவிய ஆயுட்கால வளர்ச்சியைப் புதுப்பிக்க முடியும்.

போர் மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டம் என்பது, இயல்பாகவே புரட்சிகர தாக்கங்களைக் கொண்ட ஒரு உலகளாவிய போராட்டமாகும். நலிந்துபோன மற்றும் காலாவதியான முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பு சோசலிசத்திற்கு மாறுவது மட்டுமே, போர், கொள்ளைநோய்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் அது மேலும் வீழ்வதைத் தடுக்க முடியும். மே 1 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), இந்த ஆண்டுக்கான சர்வதேச மே தின இணையவழி பேரணியை நடத்துகிறது, இது போரையும், தொற்றுநோயையும் நிறுத்துவதற்கும், சமூகத்தை சோசலிச அடித்தளத்தில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுகிறது.

Loading