உக்ரேனுக்கு ஆயுத ஏற்றுமதிகளை அமெரிக்கா அதிகரிக்கிறது, உக்ரேனிய ஆயுததாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை ஒப்புக் கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கியேவின் புறநகரில் பொதுமக்களை ரஷ்யா படுகொலை செய்ததாக அமெரிக்காவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுத்து, உக்ரேனுக்கான அதன் ஆயுத ஏற்றுமதிகளை அமெரிக்கா அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்க மண்ணில் உக்ரேனியப் படைகளுக்குப் பயிற்சி அளிப்பதையும் புதனன்று அது ஒப்புக்கொண்டது. இவ்விரண்டு நடவடிக்கைகளும் உலகின் இரண்டு மிகப் பெரிய அணுஆயுத சக்திகளான அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு நேரடி இராணுவ மோதல் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் நேற்று கூறுகையில், வாஷிங்டன் கூடுதலாக 100 மில்லியன் டாலர் ஆயுதங்களைக் கியேவுக்கு அனுப்புவதாகவும், இவற்றில் பிரதானமாக டாங்கி தகர்ப்பு ஆயுதங்கள் உள்ளடங்கும் என்றும் அறிவித்தார்.

இது ஆகஸ்ட் 2021 இல் இருந்து உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட போர்த் தளவாடங்களின் ஆறாவது மிகப் பெரிய தொகுப்பு என பிளிங்கென் தெரிவித்தார். இந்த புதிய வழங்கல், “இந்த நிர்வாகம் பதவியேற்றதில் இருந்து, உக்ரேனுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள [மொத்த] உதவியை 2.4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கொண்டு வருகிறது,” மற்றும் போர் தொடங்கியதில் 'இருந்து 1.7 பில்லியனுக்கும் அதிகமாகும்' என்றவர் தெரிவித்தார். நேட்டோவின் பெரும்பான்மை உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 30 க்கும் அதிகமான நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களைப் பாய்ச்சி உள்ளதாக பிளிங்கென் குறிப்பிட்டார்.

மார்ச் 9, 2022 புதன்கிழமை, உக்ரேனிய இராணுவப் படைகள், கியேவின் புறநகர்ப் பகுதியில், அமெரிக்காவினால் வழங்கப்பட்ட NLAW டாங்கி எதிர்ப்பு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சியளிக்கப்படுகின்றன (AP Photo/Efrem Lukatsky)

ரஷ்யாவின் போர்க் குற்றங்களாக குற்றஞ்சாட்டப்படுவதைக் குறிப்பிட்டதன் மூலம் இந்த பினாமிப் போரில் அமெரிக்காவின் தலையீட்டைத் தீவிரப்படுத்துவதை அவர் நியாயப்படுத்தினார், “புச்சா மற்றும் உக்ரேன் எங்கிலும் ரஷ்யா நடத்திய அட்டூழியங்களால் உலகமே அதிர்ச்சி அடைந்து, திகைத்துப் போயுள்ளது,” என்றார்.

திங்களன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு 'போர்க் குற்றவாளி' என்று குறிப்பிட்டு, பைடென் ரஷ்ய ஜனாதிபதி மீது ஒரு 'போர்க்கால விசாரணை' கோரியதாக அவர் உரையின் உத்தியோகபூர்வ வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது.

அமெரிக்கா, புதன்கிழமை ஓர் அறிக்கையில், உக்ரேனிய துருப்புக்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி அளிப்பதை ஒப்புக் கொண்டது, இப்போது உக்ரேனில் பயன்படுத்தப்பட்டு வரும் நூற்றுக் கணக்கான 'ஸ்விட்ச்பிளேட்' (switchblade) ரக டிரோன் மற்றும் 'காமிகேஜ் டிரோன்களை' (kamikaze drone) எவ்வாறு பயன்படுத்துவது என அது கற்றுக் கொடுக்கிறது.

'அவர்கள் இன்னமும் இந்நாட்டில் இருப்பதால், அவர்களுக்கு ஸ்விட்ச்பிளேடில் இரண்டு நாட்கள் மதிப்பார்ந்த பயிற்சி வழங்க நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினோம்' என்று பென்டகன் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி புதன்கிழமை தெரிவித்தார்.

ஏனைய நேட்டோ சக்திகளும் இதே போன்ற அவற்றின் தலையீட்டை தீவிரப்படுத்தி வருகின்றன. இங்கிலாந்து உக்ரேனுக்குக் கவச வாகனங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இலண்டன் புதன்கிழமை குறிப்பிட்டது.

'போரின் முடிவைத் தீர்மானிப்பதில் அடுத்த மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பிரிட்டன் அது வழங்கும் ஆயுதங்களில் பயங்கர உயிராபத்தான ஆயுதங்களைச் சேர்த்துள்ளது. … இந்த [கவச வாகனங்கள்] ரஷ்ய எல்லைகளை நோக்கி உக்ரேனியப் படைகள் இன்னும் அதிகமாக முன்னேற உதவும்,” என்று அந்த பத்திரிகை அவதானித்தது.

ஒரு மூத்த அரசு ஆதாரநபர் Times of London க்குக் கூறுகையில், “அடுத்த மூன்று வாரங்கள் முக்கியமானவை. [உக்ரேனியர்கள்] ஏற்கனவே பகுதியளவில் ஜெயித்துள்ளார்கள். அவர்கள் ரஷ்ய இராணுவத்தைச் சோர்வடையச் செய்து, இந்த ஆக்கிரமிப்புப் போரில் ஜெயித்துள்ளனர் மற்றும் புட்டினை நிரந்தரமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளனர். அவர்களால் ரஷ்ய இராணுவத்தைப் பின்னுக்குத் தள்ள முடியுமா? அவர்களால் ரஷ்ய இராணுவத்தை உடைக்க முடியுமா? அனேகமாக முடியும். நாம் அனைவரும் என்ன உதவி செய்ய முடியும் என்பதைப் பொறுத்துள்ளது,” என்றார்.

இதற்கிடையே, இரண்டு முன்னாள் காலனித்துவ நாடுகளான சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரப் போரில் சேராவிட்டால், அவற்றுக்கு எதிரான அதன் அச்சுறுத்தல்களை அமெரிக்கா தொடர்ந்து கொண்டிருக்கிறது.

'ரஷ்யாவுடன் மிகவும் வெளிப்படையான மூலோபாய அணிசேர்க்கைக்கு நகர்வதன் விளைவுகளும் கொடுக்கப்படும் விலைகளும் குறிப்பிடத்தக்கதாகவும் நீண்ட காலத்திற்கும் இருக்கும் என்பதே இந்திய அரசாங்கத்திற்கான எங்கள் செய்தி' என்று தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனர் பிரையன் டீஸ் (Brian Deese) தெரிவித்தார்.

வியாழக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு முயற்சி எடுக்கும்.

கடந்த முறை 2011 இல் லிபியா அகற்றப்பட்ட போதுதான் அந்த அமைப்பிலிருந்து ஒரு நாடு நீக்கப்பட்டது. அதற்குச் சில காலத்திற்குப் பின்னர், அமெரிக்கா நிதியுதவி வழங்கிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் லிபியாவின் ஜனாதிபதியைத் துப்பாக்கி முனையில் அவமானப்படுத்திக் கொன்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தொடர்ந்தும் ஓர் உறுப்பினராக உள்ளது.

உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதன் மூலம் போரைத் தூண்டுவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கங்களை விவரித்து, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஜோசப் பொரெல் (Josep Borrell) அறிவிக்கையில், “[போர்] விரைவில் முடிவுக்கு வர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம், ஆனால் எந்த வகையிலாவது இல்லை. … அதனால்தான் நாங்கள் உக்ரேனுக்குத் தொடர்ந்து ஆயுதம் வழங்கி வருகிறோம். … நிறைய ஆயுதங்கள், அதைத் தான் உக்ரேனியர்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள், அதைத் தான் நாங்கள் செய்கிறோம்,” என்றார்.

பைடென் புதன்கிழமை கூறுகையில், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரப் போரைத் தீவிரப்படுத்த சூளுரைத்தார், 'நாங்கள் ரஷ்யாவின் பொருளாதாரத் தனிமைப்படுத்தலை இன்னும் அதிகரிக்கப் போகிறோம்' என்று கூறிய பைடென், 'உக்ரேனிய மக்களின் சுதந்திரப் போராட்டத்தில் அமெரிக்கா தொடர்ந்து அவர்களுடன் நிற்கும்,' என்றார். ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளைக் குறி வைத்து, அமெரிக்கர்கள் ரஷ்யாவில் முதலீடு செய்வதற்குத் தடைவிதித்து புதியச் சுற்று தடையாணைகளை வெள்ளை மாளிகை அறிவித்தது.

அமெரிக்கா தலைமையில் நடந்து வரும் உலகளாவிய ஆயுத போட்டியை வேகமாக தீவிரப்படுத்தவும், ரஷ்யாவை மட்டுமல்ல சீனாவையும் இலக்கில் வைக்கவும் அமெரிக்காவின் இந்த பினாமிப் போர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சீனாவை இலக்கில் வைத்து புதிய தலைமுறை அணுஆயுதங்களைத் தயாரிக்க ஆஸ்திரேலிய-பிரிட்டன்-அமெரிக்காவின் ஓர் உடன்படிக்கையை வெள்ளை மாளிகை செவ்வாய்கிழமை அறிவித்தது.

'தூண்டுதலற்ற, நியாயமற்ற மற்றும் சட்ட விரோதமான ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பு' என்று குறிப்பிட்டு, ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்காட் மோரிசனும் மற்றும் பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனும் 'அணுஆயுதமல்லாத தளவாடங்களை ஏந்தக்கூடிய, அணுசக்தியில் செயல்படும் நீர்மூழ்கிக் கப்பலின் ஆற்றலை நிறுவ, ஆஸ்திரேலியாவுக்கான எங்கள் முத்தரப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து [அவர்கள்] மகிழ்ச்சி' அடைந்திருப்பதாக அறிவித்தனர்.

ஹைப்பர்சோனிக்ஸ் மற்றும் ஹைப்பர்சோனிக்ஸைத் தடுப்பது மற்றும் எலக்ட்ரானிக் போர் திறன்கள் ஆகியவற்றின் மீது புதிய முத்தரப்பு ஒத்துழைப்பைத் தொடங்குவதற்கும் அவர்கள் கூடுதலாக உறுதியளித்தனர்.

அதே நாளில், பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை மையமாக வைத்து, பென்டகன், தைவானுக்கு 95 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியது.

அமெரிக்கா மற்றும் நேட்டோவினால் தூண்டப்பட்ட உக்ரேன் போர், இப்போது, அமெரிக்காவின் 'வல்லரசு மோதலுக்கான' நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிகரித்தளவில் தெளிவாகிறது.

அமெரிக்க இராணுவ-தொழில்துறை நிறுவனங்களைப் பாரியளவில் விரிவாக்குவதற்குப் பைடென் நிர்வாகம் முன்மொழிந்த அதிகப்பட்ச 813 பில்லியன் டாலர் பென்டகன் வரவு-செலவுத் திட்டக்கணக்கு இதைத் தெளிவுபடுத்துகிறது.

பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவை கமிட்டியில் உள்ள மொத்தம் 28 குடியரசுக் கட்சியினரும் இராணுவ நிதி ஒதுக்கீட்டை இன்னும் கூடுதலாக விரிவுபடுத்த அழைப்பு விடுத்து ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அக்கமிட்டியின் தலைவர் மைக் ரோஜர்ஸ் ஃபாக்ஸ் நியூஸிடம் திங்கட்கிழமை கூறினார், 'நம் நாடு சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து முன்னோடியில்லாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, ஜனாதிபதி பைடென் மீண்டுமொருமுறை நம் போர்வீரர்களைக் குறைக்க தேர்வு செய்துள்ளார் என்பது மனசாட்சியற்றது,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ஜனாதிபதி பைடென் தொடர்ந்து தடுமாறி வருவதை ஜி ஜின்பிங் பார்த்துக் கொண்டிருக்கிறார். … உண்மையில் சொல்லப் போனால், சீனா உலகிலேயே மிகப் பெரிய கடற்படையைக் கொண்டுள்ள அதே வேளையில், அவர்களின் அணு ஆயுத தளவாடங்களை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது… அதிர்ஷ்டவசமாக, நம் இராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்று வரும் போது, காங்கிரஸ் முன்னின்று செயல்படுகிறது,” என்றார்.

Loading