ரஷ்யாவிற்கு எதிரான ஜேர்மனியின் பழிவாங்கும் போர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரபல அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன், 'வரலாறு ஒரேமாதிரி திரும்பவும் நிகழ்வதில்லை, ஆனால் அது மீண்டும் வேறு வடிவத்தில் நிகழ்கின்றது' என குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில், ஜேர்மன் ஏகாதிபத்தியம் ரஷ்யாவை இராணுவ ரீதியாக அடிபணிய வைக்க இரண்டு முறை முயற்சி செய்து தோல்வியடைந்தது. ஆளும் வர்க்கம் இப்போது மூன்றாவது முறையாக முயற்சிக்கிறது. உக்ரேன் போரின் தற்போதைய தீவிரம் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் செய்தி ஊடகத்தின் காதடைக்கும் ரஷ்ய போர்-எதிர்ப்பு பிரச்சாரம் இது தொடர்பாக எந்தவிதமான சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மன் ஆயுதப் படைகளின் ‘கூட்டு நடவடிக்கை தலைமையகத்திற்கு’ ஜேர்மனியின் பேர்லின் அருகே உள்ள ஸ்விலோசியில், மார்ச் 4, 2022 வெள்ளிக்கிழமை வருகை தந்தார் (AP Photo/Michael Sohn) [AP Photo/Michael Sohn]

குறிப்பாக புச்சா படுகொலை எனக் கூறப்படுவதன் காரணகர்த்தாக்கள் மற்றும் சூழ்நிலைகள் இன்னும் தெளிவாகத் தெரியாதபோது ரஷ்யாவிற்கு எதிரான இனவெறியின் கிளர்ச்சி, ரஷ்யா மற்றும் கிழக்கில் போருக்கான அழைப்பு ஆகியவை தொடர்பாக மீண்டும் குரல் எழுகின்றன. 'அனைத்து ரஷ்யர்களும் இப்போது எங்கள் எதிரிகள்,' 'தாக்குதலுக்கான டாங்கிகள்' (Frankfurter Allgemeine Zeitung) மற்றும் 'நேட்டோவின் இராணுவத் தலையீடு இனி தடையாக இருக்கக்கூடாது' (Die Welt) ஆகியவை முக்கிய ஜேர்மன் தினசரி செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகளாக உள்ளன.

இந்த பிரச்சாரத்தின் ஒரு குறிப்பாக வெறுக்கத்தக்க உதாரணம் புதன்கிழமை ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) நடந்த விவாதமாகும். அரசாங்கம் 'ரஷ்ய துருப்புக்களால் புச்சாவில் உக்ரேனிய குடிமக்கள் படுகொலைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தற்போதைய கூட்டத்தொடரை' திட்டமிட்டுள்ளது. அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒருவரையொருவர் விஞ்சி, ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலைத் தொடர, கியேவிற்கு அதிக இராணுவ ஆதரவு வழங்கக் கோரினர்.

இதற்காக சமூக ஜனநாயக (SPD) சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் குரல் கொடுத்தார். அனைத்து பாராளுமன்றக் கட்சி குழுக்களிடமிருந்தும் கைதட்ட, 'எங்கள் நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் எப்போதும் ஒருங்கிணைத்து உக்ரேனை சிறந்த முறையில் ஆதரிப்பதற்கு' ஜேர்மனி முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறினார். அதில் 'தற்போதைய ஜேர்மன் இராணுவ கையிருப்பில் இருந்து ஆயுதங்களின் அடிப்படையில் நாம் என்ன வழங்க முடியும்: அர்த்தமுள்ள அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு அனைத்தும் வழங்கப்படுவதும்' அடங்கும் என்றார்.

அதே நேரத்தில், ஷோல்ஸ் அனைத்து முடிவுகளும் 'நேட்டோ பங்காளிகள் போரில் கலந்துகொள்ளும் கட்சிகளாகாமல் இருப்பதை உறுதி செய்யும்' என்று கூறினார்.

சான்சிலர் யாரை ஏமாற்றுகிறார் என நினைக்கிறார்? உண்மையில், நேட்டோ சக்திகளும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியும் நீண்ட காலமாக ஒரு போரில் ஈடுபடும் கட்சியாக மாறிவிட்டன. ஜேர்மன் அரசாங்கம் இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவை மண்டியிட செய்யும் இலக்கை தொடர்கிறது என்பதை ஷோல்ஸ் தனது சொந்த உரையில் தெளிவுபடுத்தினார்.

'ரஷ்யா இந்தப் போரில் வெற்றி பெறக்கூடாது என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஆயுத விநியோகம், நிதி மற்றும் மனிதாபிமான உதவி, அகதிகளை வரவேற்பதில் அல்லது ஐரோப்பாவிலும் மற்றும் உலகம் முழுவதும் நாம் ஒப்புக்கொள்ளும் பொருளாதாரத் தடைப் பொதிகள் என்று வரும்போது, நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பது இதுதான்” என்று அவர் அறிவித்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், ஒரு பேச்சாளரின் பின் ஒருவராக அதே போர்க்குணமிக்க தொனியைத் தாக்கினர். பசுமைக் கட்சியினரின் நாடாளுமன்றக் குழுவின் தலைவி பிரிட்டா ஹாசல்மான், 'பொருளாதாரத் தடைகளை உண்மையான இறுக்கமாக்குதல்' மற்றும் 'ஆயுத விநியோகம் தொடர்பாகவும் இது ஒருங்கிணைந்து செய்யப்பட வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) ஜோகான் டேவிட் வாடபூல் அரசாங்கம் 'இந்தச் சூழ்நிலையில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்... இந்தப் போரை உக்ரேனியர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதற்காக அவர்களுக்கு 'கனரக உபகரணங்கள்: கவச ஆயுதங்கள், மீட்பு டாங்கிகள், பாலம் அமைக்கும் டாங்கிகள், ஒருவேளை போர் டாங்கிகள், ஒருவேளை பீரங்கி குண்டுகள்' தேவைப்படும் என்றார்.

பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ட்ரீனா லாம்ப்ரெக்ட் (SPD) ஜேர்மனி ஏற்கனவே 'உக்ரேனுக்கு பெரிய அளவில் ஆயுதங்களை வழங்கியுள்ளது' என்று பதிலளித்தார். ஜேர்மனி 'அதிக ஆயுதங்களை வழங்க கடினமாக முனைகிறது.' இதற்காக அரசாங்கம் 'உக்ரேனிய அரசாங்கத்துடனும், எங்கள் நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடனும், ஆயுதத் தொழிற்துறையுடனும் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது' என்றார்.

'விநியோகம் செய்யப்பட்ட ஆயுதங்களின் வகை மற்றும் எண்ணிக்கை பற்றி' அரசாங்கம் பகிரங்கமாக கூறவில்லை என்றால், 'அது நல்ல காரணத்திற்காக' என்று அவர் தொடர்ந்தார். பிரச்சினை என்னவென்றால், 'இராணுவக் கண்ணோட்டத்தில், வழங்கப்பட்ட ஆயுதங்களின் வகைகள் மற்றும் அளவுகள் குறித்து ரஷ்யாவிற்கு தெளிவாகத் தெரியவில்லை மற்றும் அதனால் அவர்களால் அதற்கேற்றமாதிரி தமது நடவடிக்கைகளை மாற்றியமைக்க முடியாது; எதிரி கேட்டுக்கொண்டிருக்கின்றான்.' இந்த காரணத்திற்காக, 'நாங்கள் செயல்படுவது முக்கியம், ஆனால் அதைப் பற்றி பேசக்கூடாது. ஏனென்றால் அது உக்ரேனை ஆதரிக்கும் நோக்கத்தை பாதிக்கலாம்.' என்றார்.

போருக்கான அதன் உந்துதலை நியாயப்படுத்த, ஜேர்மன் ஆளும் வர்க்கம் வெறித்தனமான ரஷ்ய-எதிர்ப்பு அட்டூழிய பிரச்சாரத்திற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது. 'புச்சாவின் தெருக்களில்' நீங்கள் 'பிணங்களை விட அதிகமாக' பார்க்க முடியும். புட்டினின் அமைப்பின் கொடுமையை நாம் குளிர்ந்த வெளிச்சத்தில் பார்க்கிறோம்” என்று லாம்ப்ரெக்ட் விளக்கினார். இவ்வாறு செயல்படுபவர்கள் “உடல்கள் புச்சாவின் தெருக்களில் இருக்கிறதா அல்லது திபிலிசி, வில்னியஸ் அல்லது பேர்லின் தெருக்களில் இருக்கிறதா என்பதைப்பற்றி பொருட்படுத்துவதில்லை” என்றார்.

மோதலில் ரஷ்யா வெற்றி பெற்றால், 'நாம் அனைவரும் இனி பாதுகாப்பாக இருக்க முடியாது, எனவே ஜேர்மனியில் நம்மை தற்காத்துக் கொள்ள நாம் மிகவும் தயாராக இருக்க வேண்டும்' என்று அவர் அச்சுறுத்தும் வகையில் மேலும் கூறினார். இந்த யோசனை 'சான்சலரால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு கொள்கை மாற்றத்திற்கும்' மற்றும் 'ஜேர்மன் இராணுவத்திற்கான 100 பில்லியன் யூரோக்கள் சிறப்பு நிதிக்கும் பின்னால் இருக்கின்றது'.

உண்மையில், லாம்ப்ரெக்ட் கூறியது போல், ஹிட்லருக்குப் பின்னர் மிகப்பெரிய மறுஆயுதமாக்கல் 'புட்டின் அமைப்புக்கு எதிராக நமது சட்டம் மற்றும் மனிதநேயத்தின் மதிப்புகளைப் பாதுகாப்பது' அல்ல. ஜேர்மன் போர் முனைவிற்குப் பின்னால், மூன்றாம் குடியரசின் காலத்தில் இருந்த அதே ஏகாதிபத்திய விருப்புக்கள் அடிப்படையில் உள்ளன.

ஜேர்மன் மீண்டும் ஒன்றிணைந்ததில் இருந்து, ஆளும் வர்க்கம் அதன் உலகளாவிய புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை நிலைநிறுத்துவதற்காக ஐரோப்பாவை ஜேர்மனியின் தலைமையின் கீழ் ஒழுங்கமைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. நேட்டோவால் சுற்றி வளைக்கப்பட்டதற்கு மாஸ்கோவின் பிரதிபலிப்பாக இருந்த உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான தாக்குதலை அது கைப்பற்றிக்கொண்டது. இது ரஷ்யாவிற்கு எதிராக மீண்டும் தாக்குவதற்கான போலிக்காரணமாக இருந்தது. அவ்வாறு செய்வதன் மூலம், பேர்லின் நாட்டின் பரந்த மூலப்பொருட்களுக்கான பசியால் மட்டுமல்ல, கடந்த கால போரில் பெற்ற தோல்விகளுக்கு பழிவாங்கும் விருப்பத்தாலும் இயக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் சமீபத்திய அமர்வு நாஜிகளின் குற்றங்களை அருவருப்பானமுறையில் சிறுமைப்படுத்துவதால் குணாதிசயப்படுத்தப்பட்டது. உக்ரைன் மீதான தாக்குதலின் போது 'ரஷ்ய படையினர்கள்' ஜேர்மன் வேர்மாக்ட்டின் (Wehrmacht), SS மற்றும் ஜேர்மன் பொலிஸின் தாக்குதல் பிரிவின் (Einsatzgruppen) முறைகளை நகலெடுத்துள்ளனர். இதுவே நாம் எதிர்கொள்ளும் உண்மை,” என்று பசுமைக் கட்சி அரசியல்வாதியான ஜூர்கன் ட்ரிட்டின் அறிவித்தார்.

இது வரலாற்றில் மிக மோசமான குற்றங்களை மறுப்பதன் விளிம்பில் உள்ளது. இழிவான 'தாக்குதல் பிரிவு-Einsatzgruppen' ஆறு மில்லியன் யூதர்களின் படுகொலை மற்றும் சோவியத் யூனியனுக்கு எதிரான அழிப்புப் போரில் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் பலியாகிய நாஜி கொலை இயந்திரத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பு ரஷ்யாவிற்கு எதிரான தற்போதைய ஜேர்மன் போர் தாக்குதல் இந்த பாரம்பரியத்தில் நிற்கிறது என்கின்ற இந்த உண்மையை மாற்றாது.

குறிப்பிடத்தக்க வகையில், ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) அரசியல்வாதியான ஜூர்கன் பிரவுன் தனது உரையில் புச்சாவில் ரஷ்ய “குற்றங்களின் பின்னணியை” பற்றி விளக்குவதற்கு ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியரும் 'வன்முறை ஆராய்ச்சியாளருமான' ஜோர்க் பாபெரோவ்ஸ்கியை மேற்கோள் காட்டினார்.

பாபெரோவ்ஸ்கி ஒரு நாஜி ஆதரவாளர். 'ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்ல, அவர் தீயவர் அல்ல. அவர் தனது மேஜையில் யூதர்களை அழிப்பதைப் பற்றி பேச விரும்பவில்லை,” என்று 2014 இல் Der Spiegel இதழில் பாபெரோவ்ஸ்கி விளக்கினார்.

அரசியல் ஸ்தாபனத்தில் எவரும் அதை எதிர்க்காததால் ஆளும் வர்க்கம் மிகவும் துணிச்சலாக செயல்படவும், அதன் பாசிச மரபுகளை கட்டியெழுப்பவும் முடிகின்றது. இடது கட்சி ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான ஊதுகுழலாகும். 'இதைச் சொல்வதானால்:போர் மற்றும் குற்றங்களுக்கு ரஷ்யா தான் பொறுபே தவிர ஜேர்மனியில் எவரும் பொறுப்பேற்க மாட்டார்கள்' என்று பாராளுமன்றக் குழுவின் தலைவர் டீட்மார் பார்ட்ச் கூறினார். பின்னர் அவர் அரசாங்கத்தை வலதுபுறத்தில் இருந்து தாக்கினார் மற்றும் 'தடைகளை அமுல்படுத்த' தவறியதாக ஷோல்ஸ் மீது குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே 2014 இல் உக்ரேனில் மேற்கத்திய-சார்பு ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் சோசலிச சமத்துவக் கட்சி, (Sozialistische Gleichheitspartei -SGP) அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் போர்க் கொள்கைகளின் பின்னணியில் உள்ள வரலாற்று மற்றும் அரசியல் உந்து சக்திகளை ஆராய்ந்து, ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுபிரவேசத்தின் நீண்டகால விளைவுகளைப் பற்றி எச்சரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது:

வரலாறு பழிவாங்கலுடன் திரும்பி வருகிறது. நாஜிகளின் குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்து ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் கைசர் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய பெரும் சக்தி அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போர் பிரச்சாரத்தின் வேகம் முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரை நினைவுபடுத்துகிறது. உக்ரேனில், ஜேர்மன் அரசாங்கம் இரண்டாம் உலகப் போரில் நாஜி ஒத்துழைப்பாளர்களின் பாரம்பரியத்தில் நிற்கும் ஸ்வோபோடா மற்றும் Right Sector இன் பாசிஸ்டுகளுடன் ஒத்துழைக்கிறது. இரண்டு உலகப் போர்களிலும் ஜேர்மனி ஆக்கிரமித்திருந்த நாட்டை ரஷ்யாவுக்கு எதிரான களமாக அது பயன்படுத்துகிறது.

இந்தக் கொள்கை தற்போது நடைமுறைக்கு வருகிறது. ஜேர்மனியும் நேட்டோவும் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனிய இராணுவம் மற்றும் அதற்குள் செயல்படும் பாசிச சக்திகளை ஆயுதம் ஏந்தி, மக்களின் முதுகுக்குப் பின்னால் அணு ஆயுத சக்திக்கு எதிராக நேரடியான இராணுவத் தலையீட்டைத் தயாரிக்கின்றன. அணுவாயுத மூன்றாம் உலகப் போரின் ஆபத்து மிகவும் தீவிரமானது.

காட்டுமிராண்டித்தனத்தினுள் மீண்டும் விழுவதைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, போர் மற்றும் அதன் மூல காரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்கள் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதுதான். இன்றே சோசலிச சமத்துவக்கட்சியில் சேர்ந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

Loading