கோவிட்-19 நோய்தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஷாங்காய் பூட்டுதல் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோயைப் பொறுத்தவரை, அனைவரின் பார்வையும் சீனாவை நோக்கி திரும்பியுள்ளது, காரணம் அந்நாடு முழுவதும் நோய்தொற்றுக்களின் கடுமையான எழுச்சியை உருவாக்கியுள்ள மிகுந்த தொற்றும் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு-எதிர்ப்புத் திறன் கொண்ட ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாட்டை எதிர்த்துப் போராடும் வகையில் ஷாங்காய் நகர பூட்டுதல்கள் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 7, 2022, வியாழக்கிழமை, பெய்ஜிங்கில், குடியிருப்பு கட்டிடங்களுக்கு அருகிலுள்ள வளாகத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய பாதுகாப்பு உடையில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் தயாராகிறார்கள். (AP Photo/Andy Wong)

மார்ச் நடுப்பகுதியில் இருந்து, சீனாவின் நிதி மையமான ஷாங்காயில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மார்ச் 28 ஆம் தேதி அன்று, ஷாங்காய் சுகாதார அதிகாரிகள் இரண்டு கட்ட பூட்டுதலைத் தொடங்கினர், அதன்படி ஹுவாங்பு நதிக்கு கிழக்கே உள்ள நகரம் ஐந்து நாட்களுக்கு முழுமையாக பூட்டப்பட்டிருக்கும், அதைத் தொடர்ந்து நகரத்தின் மேற்கு பாதி முழு பூட்டுதலில் இருக்கும் என்பதாகும். இருப்பினும், கடந்த வியாழன் பிற்பகுதியில் சுகாதார அதிகாரிகள் நோய்தொற்றுக்கள் பூஜ்ஜியமாக்கப்படும் வரை ஒட்டுமொத்த நகரத்தையும் முழுமையாக பூட்ட முடிவு செய்தனர்.

நோய்தொற்றுக்கள் கட்டுப்பாட்டை மீறி வெடித்துப் பரவும் சூழலில் ஷாங்காய்க்கு உதவ பெய்ஜிங் அதன் அனைத்து வளங்களையும் அணிதிரட்டி வருகிறது. குறைந்தபட்சம் 50,000 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குவது உட்பட, 15 மாகாண அளவிலான பிராந்தியங்களில் இருந்து 38,000 க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு உதவ அனுப்பப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை, நகரம் முழுவதும் இரண்டாவது கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது.

பூட்டுதலின் கீழ் பொருட்கள் அண்டைப் பகுதிகளை சென்றடைவது மற்றும் உணவு விநியோகங்களை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் தாமதம் பற்றிய கவலைகள் இருந்தாலும், நிலைமை சமீபத்தில் மேம்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ப்ளூம்பேர்க் உறுதிப்படுத்தியபடி, “அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் தங்கள் உதவிகளை அதிகரித்துள்ளனர், மேலும் சில குடியிருப்பாளர்கள் முட்டை, பால், காய்கறிகள் மற்றும் மதிய உணவு இறைச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய உணவப் பொதிகளை அரசாங்கத்திடமிருந்து பெறத் தொடங்கியுள்ளனர்.”

ஷாங்காயில் பயன்படுத்தப்பட்டு வரும் முயற்சிகள் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளன, அதாவது இந்நகரம் தொடர்ச்சியான 79 நாட்கள் கடும் பூட்டுதலில் இருந்து துல்லியமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 8, 2020 அன்று வெளிவந்தது. அப்போது நடந்தது போல், பூட்டுதலின் ஆரம்பகட்ட போக்கு குழப்பமாகவும் சிக்கலாகவும் இருந்தது. அதாவது, இவ்வளவு பரந்த, முன்நிகழ்ந்திராத வகையிலான தளவாட வலையமைப்பை உருவாக்குவது என்பது தாமதங்கள், பின்னடைவுகள் மற்றும் சமூக அச்சத்தை எதிர்கொள்வதாக உள்ளது. இருப்பினும், இந்த முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகும்.

நேற்று, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (NHC) 24,224 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களை (91 வெளிநாட்டில் இருந்து வந்த நோய்தொற்றுக்கள் உட்பட) பதிவு செய்துள்ளது, அவற்றில் 22,648 நோயறிகுறி அற்றவையாகும். இருப்பினும், தினசரி கோவிட்-19 நோய்தொற்றுக்களில் பெரும்பகுதி ஷாங்காயில் தான் தொடர்ந்து கணக்கிடப்படுகிறது, மேலும் இந்நகரத்தில் நேற்று 21,222 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 824 மட்டுமே நோயறிகுறிகளை கொண்டிருந்தன.

மார்ச் 1 முதல் ஏப்ரல் 8, 2022 வரை சீனாவில் பதிவான நாளாந்த கோவிட் நோய்தொற்றுக்களின் விபரம் (WSWS Media)

தேசியளவில் ஒப்பிடுகையில், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 3,001 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியிருந்தன, அவற்றில் 716 மட்டுமே நோயறிகுறிகளை கொண்டிருந்தன. மேலும் அவற்றில் பெரும்பகுதி வடகிழக்கு மாகாணமான ஜிலினில் தொடர்ந்து அடையாளம் காணப்படுகின்றன. அங்கு 2,266 கோவிட்-19 நோய்தொற்றுக்கள் இருந்தன, மேலும் சீனாவின் ‘City of Automobiles’ அல்லது ‘Detroit of China’ என்று உள்நாட்டில் அறியப்படும் ஒன்பது மில்லியன் மக்கள் வசிக்கும் சாங்சுனில் 2,027 கோவிட்-19 நோய்தொற்றுக்கள் உள்ளன. ஜிலின் நகரின் பூட்டுதல்கள் புதிய நோய்தொற்றுக்களை கணிசமாகக் குறைத்துள்ளன, அங்கு வெள்ளிக்கிழமை 228 நோய்தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

ஷாங்காய் முழுவதுமான கோவிட்-19 நோய்தொற்றுக்களின் வெளிப்படையான அதிகரிப்பானது, ஒவ்வொரு நோய்தொற்றின் இருப்பிடத்தையும் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்டதான பாரிய PCR பரிசோதனையின் விளைவாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நோய்தொற்றுக்களின் அதிகரிப்புக்கு பங்களிக்கும் அமைதியான சமூக பரவலின் உண்மையான அளவை பரிசோதனை வெளிப்படுத்தியுள்ளது.

கோவிட்-19 ஒழிப்பை ஆதரித்தவர்களில் பலர், மார்ச் மாதம் இறுதி வரை ஷாங்காயில் பின்பற்றப்பட்ட சிறிதும் இலாயக்கற்ற அணுகுமுறை தவிர்க்கக்கூடிய கடுமையான வெடிப்புக்கு பங்களித்ததாக புகார் தெரிவித்தனர். சீன அரசாங்கத்தை விமர்சித்ததன் பின்னர், நியூ யோர்க் டைம்ஸ் கூட, சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு இன்னும் அதிக ஆதரவு இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

அரசியல் விஞ்ஞானம் மற்றும் சட்டத்திற்கான ஷாங்காய் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியரான சென் தாயோயின், “பெய்ஜிங், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை தெளிவாக இரட்டிப்பாக்கி, ஷாங்காயை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இணையாக கொண்டு வந்திருக்கிறது. சீனா போன்ற ஒரு அமைப்பில், அரசியல் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது, எனவே நீங்கள் வேறு வழியில் நடப்பது சாத்தியமில்லை” என்று டைம்ஸூக்கு தெரிவித்தார்.

இதற்கு மாறாக, அமெரிக்கா ‘வைரஸூடன் வாழும்’ கொள்கையை இரட்டிப்பாக்குகிறது. அதாவது, முன்னாள் பாசிச ஜனாதிபதி ட்ரம்பின் இழிந்த நகைப்புக்குரியதான “நாம் எந்த பரிசோதனையும் செய்யவில்லை என்றால், நம்மிடம் ஒரு சில நோய்தொற்றுக்களே இருக்கும்” என்ற கொள்கையைப் பின்பற்றி அங்கு கோவிட்-19 கண்காணிப்பு அமைப்புகள் விரைவாக அகற்றப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு முழுமையான இருகட்சி ஆதரவும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஒப்புதலும் கிடைத்துள்ளன. மேலும், சபாநாயகர் நான்சி பெலோசி உட்பட, உயர்மட்ட வாஷிங்டன் அரசியல்வாதிகளிடையே ஏராளமான நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளமை, கோவிட்-19 பாதிப்பற்றது என்பதாக அமெரிக்கர்களை தவறாக வழிநடத்துகிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் தேவையில்லாமல் உயிரிழந்துள்ளனர், மேலும் தொற்றுநோய் காலத்தில் அமெரிக்காவில் மனித ஆயுட்காலம் 2.2 ஆண்டுகளுக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, சீனாவில் 5,000 க்கும் குறைவான மக்களே கோவிட் நோயால் இறந்துள்ளனர், மேலும் ஆயுட்காலம் இப்போது அமெரிக்காவை விட அதிகமாக உள்ளது.

அமெரிக்காவிலும், உலகின் ஏனைய பெரும்பாலான பகுதிகளிலும் பயன்படுத்தப்படும் விஞ்ஞானபூர்வமற்ற நடவடிக்கைகளுக்கு முற்றிலும் முரணாக, சீன அதிகாரிகள் ஷாங்காயில் நடைமுறையில் இருந்த ஒரு தணிப்பு மூலோபாயத்தில் இருந்து மாறி கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கும், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் ஏற்ற கடுமையான தரமான நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த திடீர் மாற்றமும், உறுதியும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு எதிராக மேற்கத்திய ஊடகங்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை எதிர்கொண்டது, இது உலகளாவிய சந்தையில் அதன் தாக்கத்தை குறைத்தது.

மார்ச் 29 அன்று, நிதி மூலதனத்தின் ஊதுகுழலான பைனான்சியல் டைம்ஸின் ஆசிரியர் குழு, “இறுதியில், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையிலிருந்து வெளியேறி வைரஸூடன் வாழும் கொள்கைக்கு மாறுவதற்கு சீனாவுக்கு ஒரு மூலோபாயம் தேவைப்படும்… உலகம் மெதுவாக வழமையான வணிகத்திற்கு திரும்பும் நிலையில், இந்தக் கொள்கை சீனாவுக்கு பெரிதும் விலை கொடுக்கக்கூடியதாக இருக்கும்” என்று குறிப்பிட்டது.

ஏப்ரல் 3 அன்று, எக்னாமிஸ்ட் பத்திரிகை, “உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஆழமாகச் சிக்கியுள்ள மற்றொரு நகரமான ஷென்செனில் பூட்டுதல்களுக்கு மத்தியில் இருந்ததைப் போலவே வெளிநாட்டிலும் வலி உணரப்படும்… ஷாங்காயின் ஒரு மாத கால பூட்டுதல் மற்றும் அதனால் பெருகும் விளைவுகளால் அந்த காலகட்டத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீதம் வீழ்ச்சியடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் குழு மதிப்பிடுகிறது” என்று குறிப்பிட்டது.

ஏப்ரல் 6 அன்று, வாஷிங்டன் போஸ்டின் ஆசிரியர் குழு, “இரண்டு ஆண்டுகளாக, சீனாவின் தலைமை, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் ஒழுக்கமற்ற மற்றும் குழப்பமான ஜனநாயகங்களை விட அதன் சர்வாதிகார அமைப்பு சிறப்பாக செயலாற்றியுள்ளதாக எவரும் புகழ்வதைக் கேட்டு தற்பெருமை கொண்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் உயர்ந்து வரும் இறப்பு எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, பெய்ஜிங், ஒரு தொற்று கண்டறியப்படும் போதெல்லாம் அதை இரக்கமின்றி கட்டுப்படுத்தும் வகையில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை செயல்படுகிறது என பெருமிதத்தை வெளிப்படுத்தியது” என்று எழுதியது.

மேலும் போஸ்ட், “பெரும்பாலும், அதன் நடவடிக்கையால், சீனாவின் மக்கள் வேறு இடங்களில் காணப்பட்ட தியாகங்கள் மற்றும் துயரங்களில் இருந்து தப்பித்துக் கொண்டனர். ஆனால் இப்போது, சீனாவின் சர்வாதிகாரம் வைரஸூடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தது. வெளிப்படையாக, இந்த போரில் போஸ்ட் வைரஸின் வெற்றியை ஊக்குவிக்கிறது

ஏப்ரல் 7 அன்று, ப்ளூம்பேர்க் செய்தி ஊடகம் “செல்லப்பிராணிகள் அடித்துக் கொல்லப்பட்டன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பிரிந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். வயதானவர்கள் மருத்துவ சிகிச்சையை அணுக முடியவில்லை. பூட்டுதலுக்கு உள்ளான குடியிருப்பாளர்கள் ‘எங்களுக்கு உணவு வேண்டும்’ மற்றும் ‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ என்று கோஷமிட்டனர்” என்று ஆத்திரமூட்டும் வகையில் செய்தி வெளியிட்டது. அதே நேரத்தில், பூட்டுதலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த சிறுபான்மையினரைப் பாதிக்கும் இந்த கவலைகளைத் தணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி அது எதுவும் குறிப்பிடவில்லை.

ஏப்ரல் 8 அன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பூட்டுதல்கள், உற்பத்தி செயல்பாடுகளை நெரிப்பதாகவும், “நீட்டிக்கப்பட்ட உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில்” தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்துவதாகவும் புகார் கூறியது. அவர்கள், “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான நிலையை உருவாக்கியுள்ள, நாட்டின் கோவிட்-19 வெடிப்பைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கடுமையான அரசாங்க நடவடிக்கைகள், பெரும்பாலும் சீனாவின் தொழில்துறை மையமான ஷாங்காய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள பல மில்லியன் மக்களை பூட்டுதலில் வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஷாங்காயின் அவலநிலை குறித்து கூறப்படும் இந்த உக்கிரமான அறிக்கைகள் மற்றும் வதந்திகள் தொடர்பாக, அதன் தற்போதைய அறியப்படாத நிலை பற்றி டாக்டர். ஒய் உடன் பேச உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவது பற்றி ஊடகங்களில் எழுந்துள்ள கவலைகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், அவர், “ஆம், அது உண்மைதான், பெரும்பாலான மக்களை அது கோபப்படுத்தி வார்த்தைகளால் வசைபாட வைத்துள்ளது. கோவிட் உறுதிசெய்யப்பட்ட குழந்தைகள் அவர்களது நோய்தொற்று இல்லாத பெற்றோரிடமிருந்து அவர்களை விலக்கி ஒரு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இருப்பினும், பெற்றோர்களுக்கும் நோய்தொற்று இருந்தால் அவர்கள் தங்கள் குழுந்தைகளுடன் இருக்க முடியும். இருப்பினும், மக்கள் கோபம் அதிகரித்ததன் பின்னர், அதிகாரிகள் தங்கள் கொள்கையை சரிசெய்து, பெற்றோர்களை அவர்களது குழந்தைகளுடன் தங்க அனுமதித்தனர்” என்று கூறினார்.

உணவு மற்றும் பிற பொருட்கள் விநியோகம் பற்றி டாக்டர். ஒய் பேசுகையில், உணவு விநியோகம் சமூகங்களால் உள்நாட்டில் கையாளப்படுகிறது என்று விளக்கினார். “மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் அனைவரையும் வீடுகளில் அடைத்து வைப்பதும் மற்றும் அனைத்து பல்பொருள் அங்காடிகளை மூடுவதும் வெளிப்படையாக உணவுப் பற்றாக்குறையை உருவாக்குகிறது. அதனால், பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய மக்கள் தங்கள் சமூகத்தில் WeChat குழுக்களை உருவாக்குகிறார்கள், மேலும் அவர்கள் மளிகைப் பொருட்களுக்கு ஆர்டர் செய்து வெவ்வேறு செயலிகள் மூலம் வாங்கிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் கிடைக்கும் வெற்றி முக்கியமாக அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டது” என்றும் கூறினார்.

ஷாங்காயில் உள்ள ஒரு குடும்பத்திற்கு விநியோகிக்கப்பட்ட ஒரு பெட்டி காய்கறிகள். (WSWS Media)

மேலும் அவர், “உணவின்மை குறித்த அழுகை மிகவும் உரக்க எழுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், உள்ளூர் சமூகங்களை நம்புவதற்கு பதிலாக, முழு நகரத்திற்கான உணவு விநியோகத்தையும் அதிகாரிகள் தங்கள் கையிலெடுத்து செய்யப் போவதாக தகவல்கள் உள்ளன” என்று கூறினார்.

டாக்டர். ஒய் உம் பிற சுகாதாரப் பணியாளர்களும், ஒழிப்பு மூலோபாயம், சமீப காலம் வரை அவர்களை சாதாரண வாழ்க்கை முறைகளுக்குத் திரும்ப அனுமதித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஓமிக்ரோனின் அச்சுறுத்தல் குறித்து கவலையை தெரிவித்ததுடன், தற்போதைய முயற்சிகளை ஆதரித்தனர்.

போக்குவரத்து சுதந்திரத்திற்கு அதிகாரிகள் சமீபத்தில் விதித்த கட்டுப்பாடுகளானது, போதுமான நோயெதிர்ப்பு பாதுகாப்பு இல்லாத மக்கள் மத்தியில் வைரஸை பரவ அனுமதிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுடன் நேரடி தொடர்புள்ளவை ஆகும். சர்வதேச நிதிச் சந்தைகள் வலியுறுத்தும் வைரஸை தடையின்றி பரவ அனுமதிக்கும் கொள்கை, சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அதிகாரிகளுக்கு சமூக பேரழிவு மற்றும் அரசியல் ரீதியாக ஸ்திரமின்மையை ஏற்படுத்தும்.

சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை மேற்கத்திய ஊடகங்கள் தாக்குவதன் நோக்கம், சீன மக்களிடையே கோபத்தையும் எதிர்ப்பையும் தூண்டுவதாகும். தங்களின் சொந்த மக்கள் அல்லது வேறு எந்த நாட்டினது மக்களின் வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு பற்றிய கவலைகள் குறித்து முற்றிலும் அலட்சியமாக இருக்கும் ஆளும் உயரடுக்குகள் வைரஸை இருத்தலியல் அச்சுறுத்தலாகவும் மற்றும் சீனர்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகவும் கருதி, அதை ஆயுதமாகப் பிரயோகிக்கின்றனர்.

Loading