பிரெஞ்சுத் தேர்தல்கள் வெற்றியாளரைக் கணிக்க முடியாத அளவுக்கு மிக நெருக்கமாகவுள்ள நிலையில் அதிவலதானது தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது

மொழிபெயர்ப்பின்மூலக்கட்டுரையைஇங்கேகாணலாம்

2022 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றானது இந்த ஞாயிறன்று ஆளும் ஸ்தாபகத்திலிருந்துஆழமாக மக்கள் அந்நியப்பட்டிருப்பதற்கும், ஏப்ரல் 24 அன்று இரண்டாம் சுற்று போட்டியில் யார் யார் போட்டியிடுவார்கள் என்ற நிச்சயமற்ற தன்மைக்கும் இடையே நடைபெறுகிறது. வெளியேறும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், 2017 ஆண்டு நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென் மற்றும் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சித் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு வரக்கூடும்.

அதிவலது தலைவர் மரின் லு பென் தெற்கு பிரான்சிலுள்ள துலோனில் ஜூன் 17, 2021 அன்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொள்கிறார். (AP Photo/Daniel Cole)

பிற்போக்குத்தனமான சிக்கன நடவடிக்கைகள், கோவிட்-19 இனால் வெகுஜன பெருந்தொற்று மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ அச்சுறுத்தல்கள் என அனைத்து வேட்பாளர்களும் இவைகளை ஆதரித்ததால், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் பரந்தளவில் செல்வாக்கற்றதாக இருந்தது. இது வாக்காளர்களின் வாக்குரிமையை திறம்பட பறித்தது. பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகரித்துவரும் பணவீக்கம், கோவிட்-19 பெருந்தொற்று நோய் மற்றும் உக்ரேனியப் போர் ஆகியவற்றிலிருந்து தங்கள் உயிருக்கும் வாழ்க்கைத் தரநிலைமைகளுக்கும் ஆபத்தைத் தவிர்ப்பதற்கான எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

ஆளும் உயரடுக்கின் மீதான ஆழ்ந்த மக்கள் ஏமாற்றமானது வாக்காளர்களில் 21 சதவிகிதத்தினர் ஞாயிறன்று யாருக்கு வாக்களிப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்ற உண்மையின் மூலம் பிரதிபலிக்கிறது.

முடிவு செய்யப்படாத வாக்காளர்களின் பரந்த எண்ணிக்கையானது, தற்போதைய கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், மூன்று முன்னணி வேட்பாளர்களும் கோட்பாட்டுரீதியாக முதல் சுற்றில் முதலிடத்திற்கு வர முடியும் என்பதாகும், இது முடிவு செய்யப்படாத வாக்காளர்கள் யாரை ஆதரிக்க முடிவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. மக்ரோன் 20.5 முதல் 28.5 சதவீத வாக்குகளையும், மரின் லு பென்னுக்கு 19 முதல் 27 சதவீத வாக்குகளையும், மெலோன்சோன் 14.5 முதல் 22 சதவீத வாக்குகளையும் பெறக்கூடும் என்று BVA வாக்கெடுப்பு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 'செல்வந்தர்களின் ஜனாதிபதி' என்று தொழிலாளர்கள் மத்தியில் பரந்தளவில் வெறுக்கப்படும் மக்ரோனை அகற்றுவது சாத்தியமாகும்.

பிரான்சின் முதல் நவ-பாசிச ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதும் ஒரு தனித்துவமான சாத்தியமாகும். கடந்த 2017 ஜனாதிபதித் தேர்தல்களைப் போலவே, மக்ரோன்-லு பென் இடையிலான போட்டியானது மிகவும் சாத்தியமான போட்டியாக கருதப்படும் நிலையில், முடிவு இப்போது மீண்டும் கணிக்க முடியாத அளவிற்கு நெருக்கமாக உள்ளது. மக்ரோன் அத்தகைய போட்டியில் 52 அல்லது 51 சதவீத சிறு வித்தியாச அளவு வாக்குகளையே பெறும் பெருமைக்குரியவர், இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையிலான இடைவெளி, கருத்துக் கணிப்பின் பிழையின் விளிம்பில் உள்ளது.

வேட்பாளர்களின் பிரச்சார நிறைவு நிகழ்வுகளை மீளாய்வு செய்து பார்த்தால், தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும், உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் எரியும் பிரச்சினைகள் எதனையும் தீர்க்காது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வியாழனன்று RTL வானொலிக்கு பேட்டியளித்த லு பென், முன்னாள் சோசலிஸ்ட் கட்சி (PS) பாதுகாப்பு மந்திரி Jean-Pierre Chevènement ஐச் சுற்றியுள்ள சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து அரசியல் ஸ்தாபகத்திற்குள் தனக்கு ஒரு பரந்த அடித்தளத்தை வழங்குவதற்காக ஒரு 'தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கான' தனது திட்டங்களை முன்வைத்தார்.

'நான் ஏற்கனவே கூறியது போல, ஒரு தேசிய கூட்டணி அரசாங்கத்தின் பின்னணியில், முதலில் நான் யாருடன் வேலை செய்கிறேனோ அவர்களுடன் ஆட்சி செய்வேன்,' என்று லு பென் அறிவித்தார், 'ஆனால் என்னுடன் சேரும் மக்களுடன் ஆட்சி செய்வேன். நிச்சயமாக என்னிடம் மக்கள் பட்டியல் உள்ளது, அவர்களைக் கண்டுபிடிப்பதை விட தேர்வு செய்வதே எனது பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் பிரான்சில் அரசியல் வாழ்க்கையிலோ அல்லது சிவில் சமூகத்திலோ எனது கொள்கையின் பரந்த வரையறைகளைப் பகிர்ந்து கொள்ளும் பலர் உள்ளனர்.'

'தேசிய கூட்டணி அரசாங்கத்தில் பங்குபெற முடிவு செய்யும் மக்களை வரவேற்கும் வகையில், அனைத்து நிலைப்பாடுகளையும் தீர்மானகரமாக முடிவு செய்யப்போவதில்லை' என்று லு பென் கூறினார்.

பெயரளவிற்கு 'இடது' அரசியல்வாதிகளை தனது தேசிய கூட்டணி அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார். ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் எச்சரிக்கையுடன் பதிலளித்தார், 'அநேகமாக இல்லை.' எவ்வாறிருப்பினும், 'Jean-Pierre Chevènementஐசுற்றியுள்ள இடதில் இருந்து எடுத்துக்காட்டாக வருபவர்களை, அதாவது, தேசிய இறையாண்மையின் ஒரு இடது, மறுதொழில்துறைமயமாக்கலைப் பாதுகாக்கும் ஒரு இடது, நமது மகத்தான தொழிற்துறைகளைப் பாதுகாக்கும் ஒரு இடது ஆகியவற்றை என்னால் நன்றாகக் கொண்டிருக்க முடியும்' என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

மக்ரோன், பிரான்சின் இணையவழி செய்தி சேனலான Brut க்கு ஒரு பேட்டி அளித்தார், அதில் ஊதியங்கள் மற்றும் தொழிலாளர் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் பிரான்சில் நடவடிக்கைகளை அமைக்க வணிகங்களை ஊக்குவிப்பதை உள்ளடக்கிய அவரது பொருளாதார வரலாற்று சாதனையைக் கூற முயற்சிக்கிறது. அவரது ஜனாதிபதி பதவிக் காலத்தில், 'நாங்கள் மூடுவதை விட அதிகமான தொழிற்சாலைகளை கட்டுகிறோம், இது 30 ஆண்டுகளில் நடக்காத ஒன்று. ... இந்தப் போர்கள் வெற்றி பெற்றுள்ளன. அவர்கள் அரசியல் அதிதீவிரவாதத்திற்கு ஊட்டமளித்தனர்' என்று மக்ரோன் அந்தப் பேட்டியில் பெருமையடித்துக் கொண்டார்.

அப்போது பேட்டி கண்ட ஒருவர், அதிவலது வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக ஐந்து ஆண்டுகளில் அவர் அளித்த உறுதிமொழியை நினைவுகூர்ந்து, அவருக்கு சவால் விடுத்தார். லு பென்னும் அவரது சக நவ-பாசிச வேட்பாளரான எரிக் செமூரும் சேர்ந்து 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறார்கள், இது 2017ல் ஒரே ஒரு நவ-பாசிச வேட்பாளரான லு பென்னுக்கு முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட அதிகமாகும் என்று Brutபத்திரிகையாளர் சுட்டிக் காட்டினார்.

மக்ரோனால் மட்டுமே இவ்வாறு பதிலளிக்க முடிந்தது, 'தனியாக இருக்கும் ஒரு மனிதனால் எல்லாவற்றையும் தீர்க்க முடியாது, சில நேரங்களில் அதைச் செய்ய முயற்சித்ததற்காக நான் விமர்சிக்கப்பட்டேன். நாங்கள் தாக்கப்பட்ட விஷயங்கள், அவற்றை தீர்க்கத் தொடங்கிவிட்டோம் என்று நான் நினைக்கிறேன்.' பிரெஞ்சுக் குடியரசின் ஜனாதிபதி பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றால் அவர் எவ்வாறு 'தனியாக' கருதப்படுவார் என்பதை விளக்காமல், மக்ரோன் பின்னர் 180 டிகிரிக்கு திரும்பி, 'மக்கள் தீவிரவாத அரசியலில் இருந்து பாரியளவில் விலகிச் செல்வதற்கு போதுமான நம்பகமான தீர்வைக் கொண்டுவர எங்களால் முடியவில்லை' என்று ஒப்புக்கொண்டார்.

மெலோன்சோன் முக்கிய கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்று வருவதுடன், பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் தேர்தல்களில் தனது எழுச்சியை விரைவுபடுத்துவார் என்று நம்புகிறார். ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் Blanche Gardin, நடிகைகள் Anny Duperey மற்றும்Corinne Masiero, நடிகர் Bruno Solo, இசைக்கலைஞர் Yvan le Bolloc’hமற்றும் இயக்குனர் Robert Guédiguian உட்பட 50 கலைஞர்கள் கொண்ட ஒரு குழு, லு பென்னை இரண்டாவது சுற்றில் இருந்து விலக்கி வைப்பதற்காக மெலோன்சோனுக்கு வாக்களிக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டது.

ஏற்கனவே MEDEF வணிகக் கூட்டமைப்பின் தலைவர் Geoffroy Roux de Bézieuxஇருந்து ஒரு 'நம்பகமான' வேட்பாளர் என்ற பாராட்டைப் பெற்ற மெலோன்சோன், மக்ரோனின் சொந்த குடியரசு அணிவகுப்பு (Republic on the March - LRM) கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் நீதித்துறை அமைச்சர் Christiane Taubira மற்றும் Sébastien Nadotஆகியோரிடமிருந்து ஒப்புதல்களைப் பெற்றார். முன்னர் மக்ரோனை ஆதரித்திருக்கக் கூடிய அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு கன்னை, மெலோன்சோனை ஆதரிப்பதா வேண்டாமா என்று தனக்குள்ளேயே விவாதித்துக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை. எவ்வாறிருப்பினும், மெலோன்சோன் தேர்ந்தெடுக்கப்பட்டால், வங்கிகளின் நலன்களுக்காக ஆட்சி செய்வார் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஏமாற்றுவார் என்பதைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ரஷ்யாவுடனான போர் அபாயம், கோவிட்-19 பெருந்தொற்று நோயின் அதிகரித்துவரும் இறப்பு எண்ணிக்கை அல்லது விலைவாசிகளின் விரைவான உயர்வினால் உழைக்கும் மக்கள் வறிய நிலையில் இருப்பது போன்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் இந்த வேட்பாளர்களில் எவரிடமும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு எதுவும் இல்லை.

பிரான்சில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் 1,000 பேர் உயிரிழக்கும் நிலையில், பிரெஞ்சு மக்களில் 76 சதவிகிதத்தினர் ரஷ்யாவுடனான அணுஆயுதப் போரின் ஆபத்து குறித்து கவலை கொண்டுள்ளனர் என்று கடந்த மாதம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது. ஆயினும்கூட பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் வழங்க வேண்டியதெல்லாம் கோவிட்-19 க்கு எதிரான பாதுகாப்புக்களை மேலும் தளர்த்துவது மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் அச்சுறுத்தல்களுக்கான ஆதரவு அறிக்கைகளாகும்.

பெருந்தொற்று நோயின் போது ஐரோப்பாவின் மத்திய வங்கிகளின் பாரிய பண அச்சிடும் நடவடிக்கைகள் மற்றும் ரஷ்யா மீதான நேட்டோ பொருளாதாரத் தடைகள் காரணமாக, அடிப்படைப் பொருட்களின் விலைகள் உயர்வது குறித்து தொழிலாளர்களிடையே பெருகிய கவலையும் உள்ளது. கடந்த அக்டோபரில் அரசால் கட்டுப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 12.6 சதவீத உயர்வைக் கண்டன. நேற்று பிரெஞ்சு இயற்கை எரிவாயு விநியோகஸ்தரான GRDF, ரஷ்ய எரிசக்தி மீது பொருளாதாரத் தடைகளை நேட்டோ சுமத்துவதால், விநியோகப் பற்றாக்குறையின் காரணமாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு எரிவாயுவை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது.

மார்ச்சில் உலக உணவு விலைகள் 13 சதவிகிதம் உயர்ந்ததாக ஐ.நா. அறிவித்துள்ள நிலையில், ரஷ்ய-உக்ரேன் போருக்கு மத்தியில் பயிர்களை நடுதல் மற்றும் ஏற்றுமதி செய்வதிலுள்ள பிரச்சினைகள் காரணமாக உணவுப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ரஷ்யாவும் உக்ரேனும் சூரியகாந்தி எண்ணெய்யின் உலக ஏற்றுமதியில் 80 சதவீதத்தை வழங்குகின்றன, மேலும் ஐரோப்பாவின் சூரியகாந்தி எண்ணெய் இருப்புக்கள் 15 நாட்களில் தீர்ந்துவிடும், இது வெண்ணெய் முதல் பாஸ்தா, உருளைக்கிழங்கு சிப்ஸ்கள், ரொட்டி மீன்கள், சோஸ்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வரை பொருட்களின் பல்வேறு வகையானதயாரிப்புகளை பாதிக்கும். தானிய பற்றாக்குறையானது இறைச்சி விலைகளை வெடிக்கச் செய்து கோழி மற்றும் முட்டைகளின் கணிசமான பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டம், கோவிட்-19 தொடர்பாக உத்தியோகபூர்வ அக்கறையின்மை, தொழிலாள வர்க்கத்தின் வறிய நிலை மற்றும் பாசிச ஆட்சியின் ஆபத்து ஆகியவற்றை தற்போதைய தேர்தல்களில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர்களின் மூலமும் முன்னெடுக்க முடியாது. இது ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கின் அடிப்படையில், இந்த வேட்பாளர்கள் அனைவருக்கும் எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒரு சுயாதீனமான புரட்சிகர அணிதிரட்டலைக் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது.

Loading