முன்னோக்கு

முதலாளித்துவம் மரணங்களை வழமையாக்குகிறது: கோவிட்-19 இல் இருந்து அணுஆயுதப் போர் அச்சுறுத்தல் வரை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதிக்கான குடியரசுக் கட்சியின் எதிர்கால வேட்பாளராக வரவிருந்த, பேரி கோல்ட்வாட்டர், 1963 இல், Why Not Victory? என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார், அமெரிக்க மக்கள் அணு ஆயுதப் போரைக் குறித்து மிகவும் பயப்படுவதால் சோவியத் ஒன்றியத்தை எதிர்கொள்வதில் அமெரிக்கா போதுமானளவு ஆக்ரோஷமாக இல்லை என அந்த நூல் வாதிட்டது.

1953 ஆம் ஆண்டு நெவாடாவில் அமெரிக்கா நடத்திய 'கிரேபிள்' அணு ஆயுத சோதனை.

'மரணத்தைக் குறித்த பயங்கரமான பயம் அமெரிக்க நனவில் ஊடுருவி வருகிறது,' என கோல்ட்வாட்டர் எழுதினார், 'நிச்சயமாக நாம் உயிர் வாழ விரும்புகிறோம் தான்; ஆனால் அதை விட நாம் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம்.”

அதற்கடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லிண்டன் பி. ஜோன்சன் கோல்ட்வாட்டரின் கோஷத்திற்கு எதிர்கருத்தை நிறுத்தினார், இந்த தொனியில் “உங்கள் மனதில், அவர் சொல்வது உங்களுக்குச் சரியென்று தெரியும்,” “உங்கள் மனதில், அவர் சரியாக இருக்கலாம் என்பதாக உங்களுக்குத் தெரியும்'—அணுஆயுதங்களைப் பிரயோகித்து கோல்ட்வாட்டர் மனித நாகரீகத்தையே முடிவுக்குக் கொண்டு வரலாம் என்பது உட்கிடையாக இருந்தது.

ஓர் அணுஆயுத வெடிப்புக்கான ஏவுகணை ஏவுவதற்கான குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக, ஒரு சிறுமி ஒரு மலரின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து எரிந்தவாறு அதை உரக்க எண்ணுவதைக் காட்டும், பிரபலமான 'டெய்சி மலர்' அரசியல் விளம்பரத்தை ஜோன்சன் பிரச்சாரம் முன்னெடுத்தது.

கோல்ட்வாட்டரின் பிரச்சாரத்தைப் பற்றி அமெரிக்க அரசியல் தத்துவவியலாளர் Richard Hofstadter எழுதினார், '1964 வாக்கில் என்ன தெளிவாகி விட்டது என்றால், மற்றும் அந்த பிரச்சாரத்தில் தவிர்க்க முடியாது இருக்கும் என்பது என்னவென்றால், கோல்ட்வாட்டரின் கற்பனை ஒருபோதும் வெப்ப ஆற்றல் அணுசக்தி போரின் தாக்கங்களை எதிர்கொள்ளவில்லை என்ற பொதுக் கருத்தாகும்.” கோல்ட்வாட்டர், “ஒட்டுமொத்த அழிவின் சாத்தியக்கூறைக் குறித்து வினோதமாக சர்வசாதாரணமாக இருப்பதாக தெரிந்தது,” என்று Hofstadter எழுதினார்.

1964 ஜனாதிபதிப் போட்டிக்கு அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், அமெரிக்காவும் ரஷ்யாவும் உக்ரேன் சம்பந்தமாக ஒரு கொடிய பினாமி போரில் ஈடுபட்டுள்ளன, இது முழு அளவிலான மோதலாக பரவ அச்சுறுத்துகிறது. போர் கட்டுப்பாட்டை மீறிச் சுழலும் நிலையில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் கணிசமான பிரிவுகள் மீண்டும், Hofstadter இன் வார்த்தையைப் பயன்படுத்தினால், “முழு அழிவின் சாத்தியக்கூறைக் குறித்து வினோதமாக சர்வசாதாரணமாக' உள்ளன.

இது வெறுமனே அதிவலது சம்பந்தமான கோல்ட்வாட்டரின் அரசியல் வழிதோன்றல் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அணுஆயுதப் பேரழிவுக்கான சாத்தியக்கூறுடன் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மக்களிடம் இருந்து எந்த உள்ளீடும் இல்லாமல் அல்லது தீவிர பொது விவாதம் எதுவும் இல்லாமல், அமெரிக்க அரசாங்கம் மிகவும் அழிவார்ந்த விளைவுகளை அச்சுறுத்தும் தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அணுஆயுதப் போரின் தற்போதைய அச்சுறுத்தல், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள திட்டமிட்ட அணுஆயுதப் போர் தயாரிப்புகளின் மேற்பரப்பில் வந்துள்ள வன்முறையான வெடிப்பு மட்டுமே ஆகும்.

அரசியல் ஸ்தாபகத்திற்குள் எந்த பொது விவாதமும் இல்லை எந்த எதிர்ப்பும் இல்லை என்கின்ற நிலையில், அடுத்தடுத்து வந்த மூன்று ஜனாதிபதிகள் ரஷ்யா மற்றும் சீனாவைக் குறி வைக்க போரில் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான விரிவான, தொலைநோக்கான தயாரிப்புகளைச் செய்துள்ளனர்.

2016 இல், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பனிப்போரின் முடிவில் இருந்து அமெரிக்காவின் அணுஆயுத சக்திகளை 1.2 ட்ரில்லியன் டாலர் செலவில் வியத்தகு முறையில் விரிவாக்கி நவீனப்படுத்தத் தொடங்கினார்.

ஒபாமாவின் அணு ஆயுதப் போட்டி, அந்நேரத்தில் வர்ணனையாளர்கள் குறிப்பிட்ட 'இரண்டாம் அணுஆயுத யுகம்' என்பதைத் தூண்டியது. 'உறுதியளிக்கப்பட்ட பரஸ்பர அழிவு' என்ற பனிப்போர் கோட்பாட்டிற்கு மாறாக, இந்த 'இரண்டாம் அணுஆயுத யுகம்', மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின் வார்த்தைகளில் கூறுவதானால், போரிடும் நாடுகள் 'உண்மையில் ஒரு மோதலுக்கு முன்னரே மற்றும் பாரபட்சமின்றி அணுஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் குறித்து சிந்திப்பதை' உள்ளடக்கி இருக்கும்.

இந்த நோக்கத்திற்காக, ஒபாமாவின் அணுஆயுத நவீனமயமாக்கல் திட்டத்தில், அமெரிக்க இராணுவக் கோட்பாட்டாளர்கள் மீது நம்பிக்கை வைத்து, குறைந்த பாதிப்பு ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்குவது முழு அளவிலான வெப்ப ஆற்றல் அணுஆயுத பரிமாற்றத்தைத் தூண்டாமல் உண்மையில் சண்டையை நடத்த முடியும் என்பதை உள்ளடக்கி இருந்தது.

அணு ஆயுதங்களை சிறியதாகவும், இலகுவாகவும், நாசம் குறைந்ததாகவும், மிகவும் கையடக்கமாகவும் உருவாக்குவதற்குக் கூடுதலாக, 'பயன்படுத்தக்கூடிய' அணு ஆயுதங்களை தயாரிப்பது என்பது குறுகிய தூர ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடுகளை கைவிடுவதாகும்.

ஒரு சில நிமிடங்களில் பிரதான நகரங்களைத் தாக்கும் ஆற்றல் கொண்ட குறுகிய தூர அணுஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா மற்றும் சீனாவைச் சுற்றி வளைக்க அமெரிக்காவைச் சுதந்திரப்படுத்தும் வகையில், மத்தியதூர அணுஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியதன் மூலம் ஒபாமாவின் கீழ் தொடங்கப்பட்ட ஆயுதப் போட்டியை, 2018 இல், ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியது. அமெரிக்க அணுஆயுத நவீனமாக்கல் திட்டத்தை முறைப்படி விரிவாக்குவதும் இத்துடன் சேர்ந்திருந்தது, அதை அடுத்து இதற்கான செலவு சுமார் 2 ட்ரில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டது.

பைடென் நிர்வாகம் அதன் முன்னோடிகளின் அணுஆயுதத் தயாரிப்புகளை இரட்டிப்பாக்கியுள்ளது, மேலும் பைடெனின் முன்மொழியப்பட்டுள்ள 2023 வரவு-செலவுத் திட்டம், அமெரிக்க அணுஆயுத 'முப்படைகளின்' ஒவ்வொரு ஆயுத அமைப்பின் புதிய பதிப்புகளையும் உருவாக்க அழைப்பு விடுக்கிறது. பைடென் அவர் முன்னோடியின் 'நெருப்பு கக்கும் சீற்றத்தை' தவிர்ப்பதாக கூறினாலும், அதேவேளையில் அவர் நிர்வாகம் ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதல்களைத் தூண்டுவதில் ஒபாமா மற்றும் ட்ரம்பை விட மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது.

2021 இல், வெள்ளை மாளிகை அமெரிக்க-உக்ரேன் மூலோபாய பங்காண்மையில் கையெழுத்திட்டது, இது செப்டம்பர் 1, 2021 இல் அறிவிக்கப்பட்டது, அமெரிக்கா 'கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்ட முயற்சியை ஒருபோதும் அங்கீகரிக்காது' என்று அது அறிவித்தது. டொன்பாஸ் உத்தியோகபூர்வ அரசு கோட்பாட்டை உக்ரேன் மீண்டும் ஏற்றுக் கொண்டு, ரஷ்யாவுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட உக்ரேனிய போரை ஏறக்குறைய முழுமையாக அறிவித்து வெறும் ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் இந்த உடன்பாடு கையெழுத்தானது.

அதே நேரத்தில், இந்த நிர்வாகம் ஒரே சீனா கொள்கைக்குக் குழிபறிக்க திட்டமிட்டு செயலாற்றியது, சீனாவிடமிருந்து தைவானைப் பாதுகாக்க பைடென் ஒரு டவுன்ஹால் கூட்டத்தில் சூளுரைத்தார். ஜப்பான் மற்றும் தைவான் உட்பட 'முதல் தீவு சங்கிலியில்' தாக்கும் அணுஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை அமெரிக்கா செயல்படுத்தி வருவதாக கடந்தாண்டு நிக்கி செய்திகள் வெளியிட்டது.

ஆனால் ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையே போர் வெடித்த நிலையில், மக்கள் முதுகுக்குப் பின்னால் தயாரிக்கப்பட்ட நீண்டகால 'வல்லரசு மோதல்' திட்டங்கள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன, இதனால் மனிதகுலம் அணுஆயுதத்தால் நிர்மூலமாக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

பாரி கோல்ட்வாட்டரின் 1964 பிரகடனத்தை எதிரொலிக்கும் வகையில், ஐரோப்பாவில் நேட்டோவின் முன்னாள் உயர்மட்ட கூட்டுப்படை தளபதி பிலிப் ப்ரீட்லோவ் இந்த வாரம் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் கூறுகையில், “அணு ஆயுதங்கள் மற்றும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி நாம் மிகவும் கவலைப்படுகிறோம், நம்மைநாமே முழுமையாக கட்டுப்பாடுகளுடன் இருக்க அனுமதித்துள்ளோம். [புட்டின்] வெளிப்படையாகவே முற்றிலும் தடையின்றி இருக்கிறார்,” என்றார்.

மக்கள் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலை ஏற்றுக் கொண்டு, அதன் 'கோழைத்தனமான மரண பயத்தை' கடந்து செல்ல வேண்டும் என்பதே தவிர்க்க முடியாத முடிவாக உள்ளது.

ஒரு முழு அளவிலான அணுஆயுதப் பரிமாற்றத்தைத் தீவிரப்படுத்தும் ஒரு போர் சாத்தியக்கூறை அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் முற்றிலும் சர்வசாதாரணமாக மற்றும் முற்றிலும் பொறுப்பின்றி கையாண்டு வருகிறது என்பது இந்த பெருந்தொற்றின் பாரிய மரணங்கள் மீது ஆளும் வர்க்கம் காட்டும் அலட்சியத்தில் ஒரு துணுக்காக உள்ளது.

ஜனவரி 2020 இல் இருந்து கோவிட்-19 நோயால் ஒரு மில்லியன் அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். ஒரு மாதத்தில் என்று எடுத்துக் கொண்டால், 37,000 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது பன்னிரெண்டு 9/11 தாக்குதல்களுக்குச் சமம்.

உயிர்களைக் காப்பாற்ற போராடுகிறோம், சுதந்திரப் பிரகடனத்தில் பொதியப்பட்டுள்ள முதல் உரிமையைப் பாதுகாக்க போராடுகிறோம் என்பதே அமெரிக்காவில் இந்த பெருந்தொற்று குறித்து குறிப்பிடத்தக்களவில் வெளியிடப்படும் ஊடக கருத்துரையாக இருந்தது என்பது 'பயத்திற்கு' ஒத்திருக்கிறது.

நியூ யோர்க் டைம்ஸ் எழுத்தாளர் டேவிட் லியோன்ஹார்ட் அவர் நிபுணத்துவத்துடன் இதை மறைமுகமாக உள்நுழைத்துள்ளார். உரிய காலத்திற்கு முன்னரே கட்டுரை மாற்றி கட்டுரையில் இந்த பெருந்தொற்று முடிந்துவிட்டதாகவும், பருவகால சளிக் காய்ச்சலை விட இது பாதிப்பு குறைவு என்றும் கூறி, லியோன்ஹார்ட் 'பகுத்தறிவற்ற கோவிட் அச்சங்களை' குறிப்பிட்டதுடன், “எதற்காக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தளவு மக்களே பயப்படுகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

பெருந்தொற்றுக்கும் போருக்கும் இடையிலான உறவைப் பற்றி கருத்து தெரிவித்த புளூம்பேர்க் கடந்தாண்டு ஊகித்தது, “ஆம், கோவிட்-19 க்கு அமெரிக்காவின் விடையிறுப்பு சர்ச்சைக்குரியதாக உள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கா ஒரு தேசமாக உண்மையில் பாதிக்கப்பட்டவர்களைச் சகித்துக் கொள்ள முடியும், உண்மையில் நிறைய பேரை சகித்துக் கொள்ள முடியும். அமெரிக்கர்கள் 'மென்மையானவர்கள்' அவர்கள் நிறைய அபாயம் ஏற்க விரும்பவில்லை என்பதே நீண்டகாலமாக சீனாவின் நிலையான கோட்பாடாக உள்ளது. நீங்கள் சீன போர் விளையாட்டு திட்ட வல்லுனராக இருந்தால், அந்த அனுமானத்தை உங்களால் இப்போது அனுமானித்திருக்க முடியும்?”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கோவிட்-19 அமெரிக்காவில் உயிரை மலிவாக்கி உள்ளது. ஒரு மில்லியன் பேர் இறந்துள்ளனர், அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் இறப்பு எண்ணிக்கையைச் சர்வசாதாரணமாக புறக்கணிக்கின்றன. பாரிய மரணம் வெறுமனே பின்னணி இரைச்சலின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்மாதிரியான மாற்றம் விவாதிக்கப்படவில்லை, இது பிரச்சாரத்தின் மூலம் சர்வசாதாரணமாக மக்கள் மீது திணிக்கப்படுகிறது. ஊடகங்களில் யாருமே எந்த இடத்திலும், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஓர் அணுஆயுதப் போர் எப்படி இருக்கும்? என்று கேட்பதில்லை.

இந்தாண்டு தொடக்கத்தில், ஐரோப்பாவில் நேட்டோவின் முன்னாள் உயர்மட்ட கூட்டுப்படை தளபதி ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் ஒரு கற்பனையான எதிர்கால அணு ஆயுதப் போரை விவரிக்கும் ஒரு நாவலை வெளியிட்டார். ஷாங்காய் மீதான ஓர் அமெரிக்க அணுஆயுதத் தாக்குதலை விவரித்து, ஸ்டாவ்ரிடிஸ் எழுதினார்: “இதற்குப் பல மாதங்களுக்குப் பின்னர் அந்நகரம் எரிந்த, கதிரியக்க தரிசு நிலமாக இருந்தது. இறப்பு எண்ணிக்கை முப்பது மில்லியனைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு அணுஆயுதத் தாக்குதல்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தைகள் சரிந்தன. பயிர்கள் நாசமாயின. தொற்றுநோய்கள் பரவின. கதிரியக்க நச்சு தலைமுறைகளை மாசுபடுத்த உறுதியளித்தது. புரிந்து கொள்ளும் ஆற்றலையே… இந்த நாசம் விஞ்சி இருந்தது.”

சான் டியாகோ மீதான சீன அணுஆயுதத் தாக்குதலில் உயிர்பிழைத்த அமெரிக்கர்கள் 'மோசமான முகாம்களில்' வாழ விடப்பட்டனர், அங்கே 'கேட்பாரற்றுக் கிடந்த கழிவறைகளில் இருந்து மற்றும் வரிசையான பிளாஸ்டிக் முகாம்களில் இருந்து அடிக்கடி எரிச்சலூட்டும் விதத்தில் தோல் தடிப்பு நோய், தட்டம்மை மற்றும் சிற்றம்மையும் கூட வெடிக்கின்றன.”

அவரது நூல் வெளியானதில் இருந்து, ஸ்டாவ்ரிடிஸ் ஞாயிற்றுக்கிழமை உரையாடல் நிகழ்ச்சிகளில் வழக்கமாக பங்கெடுப்பவராகி விட்டார், அங்கே அவர் அமெரிக்க எதிரிகளின் குற்றங்கள் மற்றும் கொடுமைகளை வெளிப்படுத்துகிறார், அவர்களை அவர் 'புச்சாவின் கசாப்புக்காரர்கள்' என்று குறிப்பிடுகிறார்.

அவர் நூலில் உள்ள அணுஆயுதப் போர் விவரிப்புக்கும் அதிகரித்து வரும் மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலுக்கும் உள்ள பொருத்தத்தைக் குறித்து அவரை இடைமறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை. மாறாக செய்திகள் முழுமையாக போர் பிரச்சாரத்தால் நிரம்பியுள்ளன, இவை மக்கள் உணர்ச்சிகளின் மீது செயல்படவும் மற்றும் இரண்டு மிகப் பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு போரை அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் தூண்டவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மனித உயிர் மீது முற்றிலும் மதிப்பின்றி இருப்பது, பெருந்தொற்றின் பாரிய உயிரிழப்பு மீதான அலட்சியம் மற்றும் பொறுப்பற்றத்தன்மை என இவற்றுடன் அமெரிக்க முதலாளித்துவம் ரஷ்யாவுடனான மோதலுக்கு முண்டியடித்துக் கொண்டிருக்கிறது, இது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டங்கள் மற்றும் சமூக தன்மையைப் பிரதிபலிக்கிறது. இந்த ஒட்டுண்ணித்தனமான தன்னலக்குழு உழைக்கும் மக்களை வறுமைக்குட்படுத்தி சுரண்டலில் இருந்து கொழுத்து வருகிறது.

அமெரிக்க மற்றும் உலகின் உழைக்கும் மக்கள் மீதான அச்சம் மற்றும் வெறுப்பால், பெடரல் ரிசர்வ் மூலம் ஊதிப் பெருக்கப்பட்ட கடன் குமிழியால் சாத்தியமாக்கப்பட்ட நிதிய ஊகவணிகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்தளவுக்கு ஈவிரக்கமின்றி இருக்கிறதோ அதேயளவுக்கு விரக்தியோடும் பொறுப்பின்றியும் உள்ளது.

முதலாளித்துவத் தன்னலக்குழுவின் போர் முனைவா அல்லது அதிகரித்து வரும் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய கிளர்ச்சியா என்ற மத்தியக் கேள்வி மிக விரைவிலேயே அபிவிருத்தி அடையும்.

உலகெங்கிலும், அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள் போன்ற, தொழிலாள வர்க்க எதிர்ப்பை உருவாக்கி உள்ளன. தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் நுழைகையில், அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கைகள் மற்றும் முதலாளித்துவத் தன்னலக்குழுவின் போர் அச்சுறுத்தல்களை எதிர்ப்பது ஆகிய போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

Loading