பைடென் தனது போர்வெறி உரையில், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கு தொழிற்சங்கங்களை அணிதிரட்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம், ஒரு பெரிய தொழிற்சங்க மாநாட்டில் தனது போர்வெறி மிக்க உரையில், ஜனாதிபதி பைடென் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கு ஆதரவளிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்தை அணிதிரட்டினார். இந்த உரை, ரஷ்யாவிற்கு எதிரான முழுமையான போருக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயாரிப்புக்காக பெரும் தியாகம் செய்வதற்கான கோரிக்கைக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு AFL-CIO தொழிற்சங்கங்களுடன் ஒரு ‘தொழிலாளர் முன்னணியை’ ஒன்றிணைப்பதற்கான நிர்வாகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இருந்தது.

14 தேசிய கட்டுமான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்காவின் கட்டிடத் தொழிற்சங்கங்களின் (NABTU) மாநாட்டில் பைடென் பேசினார். பைடெனின் உரையின் முதல் பாதி முழுவதும் உக்ரேன் போருக்காக மட்டுமே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவரது கருத்துக்கள், ‘சுதந்திரம்’ மற்றும் ‘மனித உரிமைகளை’ பாதுகாப்பதற்காக என பறைசாற்றும் அவர்களின் வழமையான பாசாங்குத்தனமான கூற்றுக்களுக்கு அப்பால், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான, மேலும் அதை மேற்கத்திய சக்திகளின் அரை-காலனித்துவ நாடாக மாற்றுவதற்கான ஒரு தொடக்கத் தளமாக உக்ரேனை அமெரிக்காவும் நேட்டோவும் பயன்படுத்துகின்றன என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தின.

கடந்த வாரம் NABTU மாநாட்டில் பங்கேற்ற பைடென் [Source: NABTU]

பைடென், ரஷ்ய பொருளாதாரத்தின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து பேரழிவை ஏற்படுத்தியது பற்றி பெருமை பீற்றியதுடன், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இரண்டு இலக்கங்களாக சுருங்கிப் போன உண்மையை மேற்கோள் காட்டினார். “ஒரே ஆண்டில், எங்கள் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் கடந்த 15 ஆண்டு கால பொருளாதார ஆதாயங்களை அழிக்கக்கூடும்” என்று பைடென் கூறினார். மேலும், “21 ஆம் நூற்றாண்டில் அவர்கள் போட்டியிட தேவைப்படக்கூடிய குறைக்கடத்திகள் மற்றும் குறியாக்க பாதுகாப்பு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தின் முக்கியமான கூறுகள் போன்ற தொழில்நுட்பங்களை ரஷ்யா இறக்குமதி செய்யவிடாமல் நாங்கள் துண்டித்துவிட்டதால், ரஷ்யாவின் திறனையும் பொருளாதாரத்தையும் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைய விடாமல் நாங்கள் முடக்கப் போகிறோம்” என்றும் கூறினார்.

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேன் ஏற்படுத்திய இராணுவப் பின்னடைவுகளுக்கு காரணம், நேட்டோ பல ஆண்டுகளாக உக்ரேனுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வாரி வழங்கியுள்ளதுதான் என பைடென் கூறினார். “நாங்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம், நாங்கள் அவர்களுக்கு ஆயுதங்களையும் கொடுத்துள்ளோம்” என்றார். உக்ரேனிய இராணுவத்திற்கு ஒவ்வொரு புதிய ஆயுத அமைப்பும் அனுப்பப்பட்டது மற்றும் ரஷ்ய பொருளாதாரம் அழிக்கப்படுவதற்கான வாய்ப்பு பற்றிய அறிவிப்பு கூடியிருந்த தொழிற்சங்க அதிகாரிகளிடமிருந்து பலத்த கரகோஷத்தை எழுப்பியது.

இந்த பேச்சு பைடென் நிர்வாகத்தில் நிலவும் பொறுப்பற்ற தன்மையின் அதிர்ச்சியூட்டும் அளவைக் காட்டியது. வாஷிங்டன் வேண்டுமென்றே போரைத் தூண்டியுள்ளது, மேலும் உலகின் இரண்டாவது பெரிய அணுசக்தி வல்லரசுடனான அணுசக்தி பரிமாற்றத்திற்கான ஆபத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

பொருளாதாரம் மற்றும் மனித உயிர்களின் விலைகொடுப்பு ரீதியாக தொழிலாளர்கள் பாரிய தியாகம் செய்ய வேண்டியிருக்கும் ஒரு நீண்ட, இழுத்தடிக்கப்படும் போருக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது என்பதை பைடென் தெளிவுபடுத்தினார். “இந்தப் போர் நீண்ட காலம் தொடரலாம், என்றாலும் உக்ரேன் மற்றும் உக்ரேனிய மக்களின் இந்த சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு துணை நிற்கும். அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

குறிப்பிடத்தக்க வகையில், பைடென் மேலும் இவ்வாறு கூறினார், “நான் போருக்கு செல்ல வேண்டும் என்றால், நான் உங்களுடன் செல்கிறேன் நண்பர்களே. நான் உங்களுக்கு சொல்கிறேன். நான் அதைத்தான் சொல்கிறேன்.”

ஆனால், இந்த மாநாட்டு அரங்கில் போருக்குச் செல்ல தயாராக இருப்பவர்கள் வாஷிங்டன் டி.சி. இல் அதிக ஊதியம் பெறும் மற்றும் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தொழிலாளர்களின் மகன்களாகவும் மகள்களாகவும் இருப்பார்கள். மூன்று தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் பிற நாடுகளில் நடத்தப்பட்ட இடைவிடாத போர்களுக்குப் பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போருக்காக பைடென் தொழிற்சங்க நிர்வாகிகளை நியமிப்பதான இந்த ஒரே ‘போர்’ மற்றொரு இராணுவத் தலையீட்டை, குறிப்பாக உலகப் போராக உருவெடுக்கக்கூடிய ஒரு தலையீட்டைத் தொடங்குவதில் எச்சரிக்கையுடனும் எதிர்ப்புணர்வுடனும் இருக்கிறது.

பென்டகனின் பாரிய 782 பில்லியன் டாலர் வரவு செலவுத் திட்டம், உக்ரேனுக்கு பல பில்லியன்களுக்கு அதிகமான மதிப்பீட்டில் இராணுவ உதவி வழங்குவது மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்புவதற்கான செலவினங்கள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் நிதிக்காக முக்கிய சமூகத் திட்டங்களை மேலும் வெட்டுவது உட்பட, போருக்கான விலைகொடுப்புக்களை தொழிலாளர்களின் முதுகில் சுமத்த பைடெனுக்கு AFL-CIO இன் உதவி தேவைப்படுகிறது. அதற்கு மேலாக, போரினால் ஏற்பட்ட பொருளாதார சீர்க்குலைவும், மற்றும் ரஷ்ய பொருளாதாரத் தடைகள் எரிபொருள், உணவு மற்றும் பிற பொருட்களின் விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளமையும், தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கு அண்ணளவாக 300 டாலர் செலவு செய்யும் நிலையை உருவாக்கியுள்ளது.

மேலும், உயிரை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் ஒரு மில்லியன் தேவையற்ற மரணங்களுக்கு வழிவகுத்த தொற்றுநோயானது முடிவுக்கு வராமல், இப்போது அமெரிக்கா எங்கிலும் ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாட்டின் வடிவில் புதிய எழுச்சி பெற்றுள்ளது.

பைடென் தனது பொறுப்பற்ற போருக்கான உந்துதலுக்காக ஒரு செயற்கையான ‘தேசிய ஒற்றுமையை’ உருவாக்குவதன் மூலம் தற்போதைய நிலைமைகள் மீதான தொழிலாளர்களின் சீற்றத்தை திசைதிருப்ப முடியும் என்று நம்புகிறார்.

எவ்வாறாயினும், பல தசாப்த கால நிறுவன-சார்பு காட்டிக்கொடுப்புகளுக்குப் பின்னர் தொழிற்சங்கங்கள் பெரிதும் மதிப்பிழந்து வெறுக்கப்படுவதானது, தொழிலாளர் அமைதியை கெடுக்கும் இந்த திட்டத்திற்கு தடையாக இருக்கும். பைடெனின் உரையின் போது அங்கு கூடியிருந்த கூட்டம் தொழிலாளர்களுக்காக பேசவில்லை. ஏனென்றால், அவர்கள் ஆறு இலக்கங்களில் சம்பளம் பெறும் அதிகாரத்துவத்தின் சலுகை பெற்ற உயர் அடுக்கினராவர் (NABTU இன் தலைவர் சீன் மெக்கார்வி மட்டும் கடந்த ஆண்டு 424,252 டாலர் சம்பாதித்துள்ளார்). McGarvey & Co. தொழிலாளர்களின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானது, அதேவேளை பெருநிறுவன அமெரிக்கா போரினால் ஈட்டும் இலாபத்தில் இருந்து ஒரு பங்கைப் பெற எதிர்பார்க்கிறது.

Teamsters மற்றும் உலோகத் தகடு உற்பத்தியாளர்கள், விமானம், இரயில் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சர்வதேச சங்கம் (SMART-TD) உள்ளிட்ட NABTU இன் உறுப்பினர் தொழிற்சங்கங்கள், BNSF இரயில் பாதையில் வேலைநிறுத்த தடை உத்தரவை தீவிரமாக செயல்படுத்துகின்றன. BNSF இன் மிருகத்தனமான புதிய வருகைக் கொள்கைக்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்குத் தடை விதித்த ஒரு கூட்டாட்சி நீதிபதி, அமெரிக்க விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டினார். பைடென் நிர்வாகம், சீனாவுக்கு எதிரான போரிலும் இறங்குவதற்கு தீவிரமாக முயற்சிக்கும் நிலையில், அதற்கு தேவையான முக்கிய கனிமங்கள் மற்றும் பிற வளங்களின் விநியோகத்தை பாதுகாப்பதற்கு, ஐக்கியப்பட்ட எஃகுத் தொழிலாளர்கள், ஐக்கியப்பட்ட வாகனத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிற்சங்கங்களை உள்ளடக்கி Teamsters தொழிற்சங்கத்தை செயலூக்கத்துடன் நியமிக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்கப் போராட்டத்தின் வெடிக்கும் வளர்ச்சி உருவெடுத்துள்ளது. இது போர்க்குணமிக்க தொழிலாளர்களுக்கும் பெருநிறுவனவாத தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான ஒரு நேரடி மோதலின் வடிவத்தை எடுத்துள்ளது.

போருக்கான உந்துதலின் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளானது, வர்க்கப் போராட்டத்தின் வெடிக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சாமானிய தொழிலாளர்களின் மேலதிக கிளர்ச்சிக்கும் இட்டுச் செல்கிறது. குறிப்பாக, அரசாங்கத்தை அகற்றக் கோரி இலங்கையில் நடைபெறும் பாரிய போராட்டங்கள், பணவீக்கம், உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை, மற்றும் சிக்கன கோரிக்கைகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சியின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்காவில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும், பிற சலுகை பெற்ற அடுக்குகளையும் வாட்டி வதைத்துள்ள போர்க் காய்ச்சல், உள்நாட்டில் தாம் எதிர்கொள்ளும் அதிகரித்தளவில் சாத்தியமற்ற சமூக நிலைமைகள் குறித்து அதிக அக்கறை கொண்ட தொழிலாளர்கள் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, மினியாபொலிஸ் மற்றும் சாக்ரமென்டோவில் உள்ள ஆசிரியர்கள், வடக்கு கலிபோர்னியாவில் உள்ள எண்ணெய் தொழிலாளர்கள், மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட மேற்கு கடற்கரை கப்பல்துறை தொழிலாளர்கள் உட்பட, அடுத்த சில மாதங்களில் ஒப்பந்தம் முடிவடையவுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்களின் ஏராளமான வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தேறியுள்ளன.

முதல் இரண்டு உலகப் போர்களில் இருந்து 21 ஆம் நூற்றாண்டின் கொரியா மற்றும் வியட்நாம் போர்கள் வரை, அமெரிக்க தொழிற்சங்கங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுடன் பெரியளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த பாத்திரம் உக்ரேனில் இன்றும் தொடர்கிறது. ஜனநாயகக் கட்சியுடன் உயர்மட்ட உறவுகளைக் கொண்ட அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பின் (AFT) தலைவர் ராண்டி வைன்கார்டன், விக்டர் யானுகோவிச்சின் ரஷ்ய-சார்பு அரசாங்கத்தை வீழ்த்திய அமெரிக்க ஆதரவு பெற்ற வலதுசாரி சதியின் போது 2014 இல் கியேவில் இருந்தார். அவர் இந்த மாத தொடக்கத்தில் போலந்துக்கு விஜயம் செய்து திரும்பினார், அங்கு உக்ரேனிய அகதிகளுடன் புகைப்படம் எடுத்தார்.

ஆனால், AFT தலைவரின் மனித உரிமைகள் பற்றிய இந்த அக்கறை அமெரிக்கப் பள்ளி அமைப்பு வரை நீட்டிக்கப்படவில்லை, ஏனென்றால் பள்ளிகளை மீண்டும் திறப்பதையும், கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் எதிர்த்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பை முறியடிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

வோல் ஸ்ட்ரீட்டின் பாரிய அரசாங்கப் பிணையெடுப்பால் மட்டுமே ஆழப்படுத்தப்பட்ட, சமரசம் செய்ய முடியாத, ஆழமான வர்க்கப் பிளவுகளால் அமெரிக்கா ஒரு பிளவுபட்ட ஒரு சமூகம் என்ற உண்மையை பைடென் தனது ‘தேசிய ஒற்றுமை’க்கான துதிகளைக் கொண்டு மூடிமறைக்க முடியாது. தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்படும் பைடென் நிர்வாகம், சராசரியாக 2-3 சதவீத ஊதிய உயர்வுடன் கூட தொழிலாளர்கள் மீது நடைமுறை ஊதிய வெட்டை சுமத்தியுள்ளது, அதேவேளை பணவீக்கம் 40 ஆண்டு உச்சத்தில் உள்ளது. அதே நேரத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், வேளாண் வணிக ஜாம்பவான்கள் மற்றும் ஆயுத உற்பத்தியாளர்கள் ஆகியோர் அப்பட்டமாக போரில் இருந்து இலாபமீட்டுவதில் திளைத்துள்ளனர். இது, அரசாங்கம், போர்-ஆதரவு தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்கள் பாதுகாக்கும் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான மோதலுக்குள் தொழிலாளர்களை உந்தித் தள்ளுகிறது.

தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புக்களை எதிர்ப்பதற்கும், மற்றும் தங்கள் நலன்களைப் பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த தொழில்துறை மற்றும் அரசியல் எதிர்த்தாக்குதலை முன்னெடுப்பதற்கும், தொழிலாளர்களுக்கு தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் உருவாக்கப்படும் சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்கள் போன்ற புதிய போராட்ட அமைப்புக்கள் தேவை. எவ்வாறாயினும், பொருளாதார மற்றும் சமூக தேவைகளுக்கான போராட்டமானது, அணுசக்தி அர்மகெதோனை (Armageddon) நோக்கிச் செல்லும் ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற உந்துதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்தும் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். சமூகத்தின் செல்வத்தை உருவாக்கும், அதேவேளை முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கம், உலகின் ஏகாதிபத்திய மறுபங்கீட்டில் எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், போருக்கு எதிராகவும் சர்வதேச சோசலிசத்திற்காகவும் அணிதிரட்டப்படக்கூடிய மற்றும் அணிதிரட்டப்பட வேண்டிய அடிப்படை சமூக சக்தியாகும்.

Loading