மக்ரோனும் வேண்டாம் மரின் லு பென்னும் வேண்டாம்! 2022 பிரெஞ்சு தேர்தல்களை தீவிரமாக புறக்கணிபோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று, தற்போதைய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் நவ-பாசிச வேட்பாளர் மரீன் லு பென்னுக்கும் இடையே போட்டிக்கு வழிவகுத்துள்ளது.

பிரான்சில் இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தல்கள் தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கும் நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னுக்கும் இடையில் நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 10, 2022 அன்று, பாரிஸில் தற்போதைய பிரெஞ்சு ஜனாதிபதியும் மறுதேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளருமான இமானுவல் மக்ரோன் மற்றும் திங்கள்கிழமை பாரிஸில் 'பிரான்ஸ் போருக்கு முகம் கொடுக்கிறது' என்ற நிகழ்ச்சியின் போது பிரெஞ்சு அதி தீவிர வலதுசாரி ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென் [Credit: AP Photo/Thibault Camus, Ludovic Marin, pool via AP, File]

2002 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளைப் போலவே, ஒரு திவாலான அரசியல் ஸ்தாபகம் வாக்காளர்களுக்கு ஒரு பிற்போக்குத்தனமான 'செல்வந்தர்களின் ஜனாதிபதி'க்கும் பிரான்சின் முக்கிய நவ-பாசிசக் கட்சியின் தலைவருக்கும் இடையே ஒரு தேர்வை செய்ய வாக்காளர்களை விட்டுள்ளது. தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும், அது உழைக்கும் மக்களை வன்முறையில் தாக்கும் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை உருவாக்கும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste PES), இரண்டாவது சுற்றுத் தேர்தலை செயலூக்கமாக புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது. தொழிலாளர்களும், இளைஞர்களும் இத் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்றும், மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் இடையிலான நச்சுத் தேர்வை நிராகரிக்குமாறும், நனவான அரசியல் நிராகரிப்புக்கு ஆதரவளிக்குமாறும் PES முன்மொழிகிறது. அத்தகைய புறக்கணிப்பு பிரச்சாரம் என்பது, வெற்றிபெறும் வேட்பாளருடன் வரவிருக்கும் மோதலுக்கு அவர்களை தயார்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

இந்தத் தேர்தலில், கடந்த அரை நூற்றாண்டு காலமாக உத்தியோகபூர்வ அரசியலில் ஆதிக்கம் செலுத்திய கட்சிகள் திவாலாகிப்போயுள்ளன. கோலிஸ்ட் குடியரசுக் கட்சி (LR), பெரு வணிக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) அனைத்தும் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன. எல்லாவற்றிற்கும் PS மற்றும் PCF உடனான ஆழ்ந்த சமூக கோபத்தையும் விரக்தியையும் சுரண்டுவதன் மூலம் லு பென் தனது வாக்குகளைப் பெற்றுள்ளார். ஒரு காலத்தில் PS அல்லது PCF கோட்டைகளாக இருந்த, ஆனால் இந்தக் கட்சிகளின் சிக்கன நடவடிக்கைகளால் பேரழிவிற்குள்ளான சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பழைய வாக்காளர்கள் மத்தியில் லூ பென்னுக்கு வாக்குகள் குவிந்துள்ளன.

மில்லியன் கணக்கான வாக்காளர்கள், மக்ரோன் மற்றும் லு பென் ஆகிய இருவருக்கும் எதிரான இடதுசாரி மாற்றீட்டைத் தேடி, அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோனுக்கு வாக்களித்தனர். அவருக்கு கிடைத்த வாக்குகள், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களின் தீவிரமயமாக்கலை பிரதிபலித்ததோடு, இது கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் உந்துதலுக்கு மத்தியிலும் நடந்துள்ளது. மெலோன்சோன் 35 வயதிற்குட்பட்ட மக்களிடையே வாக்குகளைப் பெற்றுள்ளார். பாரிஸ் பெருநகரப் பகுதி, மார்சேய், துலூஸ், லில், மொன்பிலியே மற்றும் பிரான்சின் 16 பெரிய நகரங்களில் உள்ள மொத்தம் 10 நகரங்களில் அவரக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. முதன்மையாக தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

லு பென்னை விட 1 சதவீதப் புள்ளி குறைவாக, மெலோன்சோன் மொத்தம் 22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். மெலோன்சோன் இதைப் போராடுவதற்கான ஒரு ஆணையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவரது வாக்காளர்கள் மக்ரோனை ஆதரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் அவர் அடுத்த தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஞாயிறு இரவு, பிரான்ஸ் ஒரு 'அரசியல் அவசர நிலையை' எதிர்கொள்கிறது என்பதை ஒப்புக்கொண்ட அவர், 'திருமதி லு பென்னுக்கு நீங்கள் எந்த வாக்குகளையும் கொடுக்கக்கூடாது!' என்று மீண்டும் மீண்டும் கோஷமிட்டதோடு, மக்ரோனுக்கு வாக்களிக்கும்படி நொண்டியாக அழைப்பு விடுத்தார்.

மக்ரோனுக்கு வாக்களிப்பது பாசிச அபாயத்துக்கு எதிரான ஆயுதம் அல்லது மெலோன்சோன் வாக்காளர்கள் லு பென்னை எதிர்க்க மக்ரோனுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பொய்யை சோசலிச சமத்துவக் கட்சி (PES) இழிவுடன் நிராகரிக்கிறது. இத்தகைய வாதங்கள் 2017 தேர்தல்களின் படிப்பினைகளை முற்றிலும் புறக்கணிக்கின்றன.

2017 ஆம் ஆண்டில், மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் இடையே நடந்த வாக்குப்பதிவில் இதே சூழ்நிலையை எதிர்கொண்ட மெலோன்சோன், தெளிவற்ற முறையில், வாக்களிக்க அழைப்பு விடுக்கவில்லையென்றாலும், என்ன செய்வது என்று அவரது வாக்காளர்களுக்குத் தெரியும் என்று கூறினார். இதன் மூலம் தொழிலாளர்கள், லு பென்னை விட குறைந்த தீயவர் என்று மக்ரோனுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஊடகப் பிரச்சாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மறுபுறம், சோசலிச சமத்துவக் கட்சி ஒரு செயலூக்கமிக்க தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்ததோடு, மக்ரோன் லு பென்னை விட குறைவான தீயவர் அல்ல என்றும் எச்சரித்தது. இந்த நிலைப்பாடு சரியென இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மக்ரோன் ஒரு வன்முறையான பிற்போக்குத்தனமான கொள்கையை பின்பற்றினார். அவர், பாரிய பணிநீக்கங்களை விரைவுபடுத்தினார், மற்றும், இரயில்வே தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க ஆணைகளை அமுல்படுத்தினார். இது 2018-19, இல் சமூக ஊடகங்கள் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட 'மஞ்சள் சீருடை' எதிர்ப்புகளைத் தூண்டியது. பிரான்சின் நாஜி ஒத்துழைப்பு சர்வாதிகாரியான பிலிப் பெத்தானை ஒரு 'மகத்தான சிப்பாய்' என்று பாராட்டிய அவர், 'மஞ்சள் சீருடை' போராட்டத்துக்கு எதிராக கலகப் பொலிஸை கட்டவிழ்த்துவிட்டார். இப் போராட்டத்தில், 10,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 4,400 பேர் காயமடைந்தனர்.

மக்ரோனின் கருத்துக்கணிப்பு மதிப்பீடுகள் சரிந்ததால், அவர் தீவிர வலதுசாரி சக்திகளை நேரடியாக நம்பியிருந்தார். ஓய்வுபெற்ற ஜெனரல் பியர் டூ வில்லியேயை சுற்றியுள்ள பாசிச அதிகாரிகள் 'மஞ்சள் சீருடை' போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறையைக் கோரியதோடு, 'அதிகாரத்தை' மீண்டும் நிறுவ ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அச்சுறுத்தல் விடுத்தபோது, அவர் எதுவும் செய்யவில்லை. அவரது உள்துறை மந்திரியும், அதி வலதுசாரி Action Française அமைப்பின் அனுதாபியுமான ஜெரால்ட் டார்மனனின், முஸ்லிம் அமைப்புக்கள் மீது பாரபட்சமான நடவடிக்களை சுமத்தும் சட்டத்தை ஆதரித்தார். லு பென் இஸ்லாத்தின் மீது 'மென்மையாக' இருக்கிறார் என பகிரங்கமாக டார்மனன் தாக்கியுள்ளார்.

உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் குறித்து, அவர் 'வைரஸுடன் வாழ்வது' என்ற ஐரோப்பிய கொள்கையை உருவாக்கினார். ஆரம்பத்தில் விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்ட கடுமையான முடக்க நடவடிக்கைகளை விதிக்க வேலைநிறுத்த அலைகளால் கட்டாயப்படுத்தப்பட்ட அவர், முடக்க நடவடிக்கைகள் முடிந்ததும் வைரஸின் மீள் எழுச்சியைத் தடுக்க தேவையான தொடர்புத் தடமறியும் திட்டங்களை அமைக்க மறுத்துவிட்டார். இதன் விளைவாக, வைரஸ் மீண்டும் பரவியது. இது, முடக்குதல் மற்றும் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பி, பெரும்பாலும் வைரசை கட்டுக்குள் வைத்த சீனாவைப் போலல்லாமல், ஐரோப்பாவில் 1.8 மில்லியன் உயிர்களும் பிரான்சில் 142,000 உயிர்களும் பலியாவதற்கு வழிவகுத்தது. இன்று, மக்ரோன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நீக்கியுள்ளார்.

இந்த ஆண்டு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின், உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான படையெடுப்பிற்குப் பின்னர், ரஷ்யாவுடனான மோதலின் பொறுப்பற்ற அமெரிக்க-நேட்டோ விரிவாக்கத்துடன் மக்ரோன் பிரான்சை இணைத்தார். 'புதிய உலக ஒழுங்கை' யார் 'வழிநடத்துவது' என்பதை முடிவு செய்ய, போர்களில் 45 முதல் 60 மில்லியன் போர் இறப்புகள் என்ற எண்ணிக்கையை பென்டகன் எதிர்பார்க்கிறது என அமெரிக்க ஜனாதிபதி பைடென் கூறியுள்ளார். ஆயினும்கூட, மக்ரோன் வாஷிங்டனில் உள்ள கொள்ளி வைப்பவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு, உக்ரேனில் அதி வலதுசாரி ஆயுததாரிகளுக்கு ஆயுதம் கொடுத்துள்ளதோடு, ரஷ்யாவுடன் முக்கிய பொருட்களின் வர்த்தகத்தின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளார்.

மெலோன்சோனின் LFI மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பல்வேறு கட்சிகள், மக்ரோனுக்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பைத் தடுக்க தொடர்ந்து செயற்பட்டுள்ளன. அவர்கள் 'மஞ்சள் சீருடை' போராளிகளை பாதுகாப்பதற்கு தங்கள் வாக்காளர்களுக்கு எந்த அழைப்பையும் விடுக்கவில்லை. மாறாக, அவர்கள் அதி வலதுசாரிகளால் நடத்தப்பட்ட செல்வாக்கற்ற தடுப்பூசி எதிர்ப்பு போராட்டங்களை ஆதரித்து, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலுடன் இணைந்து கொண்டனர். மக்ரோனுக்கு எதிரான இடதுசாரி எதிர்ப்புக்களை கழுத்து நெரித்ததன் மூலம், அவர்கள் அதி வலதுசாரிகளை மக்ரோனின் முன்னணி எதிரியாக காட்டிக் கொள்ள அனுமதித்தனர்.

இது, லு பென் சமூகநலக் கொள்கைகளின் பாதுகாவலர் என்று மோசடியாகக் கூறுவதற்கு வழி வகுத்தது. ரஷ்ய அதிகாரிகளுடனான அவரது முந்தைய உறவுகள், ரஷ்யாவிற்கு எதிராக மக்ரோனை விட இராணுவ ரீதியாக எதிர்ப்பு குறைந்தவராக ஆக்கியது. மக்ரோன் அரசாங்கம் பொலிஸ் மிருகத்தனத்தைப் பயன்படுத்துவது மற்றும் முஸ்லீம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது தாக்குதல்கள் ஆகியவை லு பென்னின் காவல்துறையின் மீதான அவரது அன்பையும் அவரது இனவெறிக் கொள்கைகளையும் அற்பமாக்குகின்றன.

எவ்வாறாயினும், லு பென் ஒரு இரக்கமற்ற நவ-பாசிச கொள்கையுடையவர் ஆவர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், இரத்தம் தோய்ந்த மக்ரோனை விட குறைந்தவரில்லை என்பதை நிரூபிப்பார். அவரது தேர்தல் பிரான்சின் மறுபிறப்புக்கு வழிவகுக்காது. ஆனால், பிரான்சை புதைசேற்றுக்குள் இழுத்துச் செல்லும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, உலக முதலாளித்துவ அமைப்பின் சிதைவால் அடுத்த பிரெஞ்சு ஜனாதிபதியின் அரசியல் கொள்கைகள் வடிவமைக்கப்படும். பாரிய மரணங்கள் மற்றும் தொற்றுநோயின் பொருளாதார பேரழிவின் பின்னணியில், உலகப் போருக்கான ஏகாதிபத்திய உந்துதல் உழைக்கும் மக்கள் மீது ஒரு சர்வதேச தாக்குதலை இயக்கி வருகிறது.

76 சதவீத பிரெஞ்சு மக்கள் அணு ஆயுதப் போரைப் பற்றி கவலைப்படுவதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. விலை உயர்வு மற்றும் எரிபொருட்கள் பற்றாக்குறை, பல்பொருள் அங்காடிகளில் சமையல் எண்ணெய், மல-சல கூட பேப்பர் மற்றும் முட்டை போன்ற முக்கிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு அதிகரித்து வருவது குறித்து கவலைகள் அதிகரிக்கிறது.

அடுத்த ஜனாதிபதிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே உருவாகும் மோதலுக்கு அரசியல்ரீதியாக தயார்படுத்துவதே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் பணியாகும். செயலூக்கமான தேர்தல் புறக்கணிப்புக்கு பிரச்சாரம் செய்யும் போது, போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் முதல் படியாக நடவடிக்கை குழுக்களை அமைக்கவும், பிரான்சிலுள்ள அனைத்து இடங்களிலும், சர்வதேச அளவிலும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட இதர போராட்ட அமைப்புகளுடன் தொழிலாளர்களை ஒன்றிணைக்கவும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

அத்தகைய போராட்டத்திற்கு புரட்சிகர தலைமை அவசியம். சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் அனைத்து வகையான குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக, ட்ரொட்ஸ்கிசத்திற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) போராட்டத்தின் உடையாத தொடர்ச்சியை சோசலிச சமத்துவக் கட்சி அடித்தளமாகக் கொண்டுள்ளது.

மெலோன்சோனுக்கான வாக்குகள், தேர்தலின் ஒரு சிதைந்த வடிவத்தில், பரந்த அளவிலான தொழிலாளர்கள் இடது பக்கம் நகர்வதைக் காட்டுகிறது. பிரான்சிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் சமத்துவமின்மை, போர், பாசிச எதேச்சாதிகாரத்தின் எழுச்சி மற்றும் தொற்றுநோய்க்கு ஆளும் உயரடுக்கின் குற்றவியல் எதிர்வினை ஆகியவற்றை எதிர்ப்பதற்கான வழியைத் தேடுகின்றனர். எவ்வாறாயினும், சண்டையிடுவதற்குப் பதிலாக நழுவி ஓடுவதற்கான மெலோன்சோனின் முடிவு, இந்த உணர்வுகளை செயல்படுத்துவதற்கான ஒரே வழி சர்வதேச சோசலிசத்திற்கான நனவான போராட்டமே என்பதை நிரூபிக்கிறது.

இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எங்களைத் தொடர்புகொண்டு, மக்ரோன் மற்றும் லு பென்னுக்கு எதிராக தீவிரமான தேர்தல் புறக்கணிப்புக்காகப் போராடவும், பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டமைக்கவும் உதவுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Loading