பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் லு பென் ஜேர்மனி மற்றும் அல்ஜீரியாவை அச்சுறுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 13 அன்று, தேசிய பேரணியின் மரின் லு பென் பாரிஸில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஒரு ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கையை முன்வைத்தார். பிரெஞ்சு ஜனாதிபதி பதவிக்கான நவ-பாசிச வேட்பாளரான அவர், ஜேர்மனி உடனான ஒத்துழைப்பை நிறுத்தவும், அல்ஜீரியர்களுக்கு வதிவிட அனுமதிகளை (visas) மறுக்கவும் அழைப்பு விடுத்தார், அதேவேளை பிரான்சில் உள்ள முஸ்லீம்களை போலிஸ் வன்முறை கொண்டு ஒடுக்க அச்சுறுத்தினார்.

பிரெஞ்சு அதிவலது தலைவர் மரின் லு பென், பெப்ரவரி 5, 2022, சனிக்கிழமை, கிழக்கு பிரான்சில் உள்ள ரான்ஸ் நகரில் ஒரு பிரச்சார பேரணியின்போது உரையாற்றுகிறார். (AP Photo/Michel Euler)

பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) லு பென்னுக்கும் தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கும் இடையேயான இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலை தீவிரமாகப் புறக்கணிக்க தொழிலாளர்களும் இளைஞர்களும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இவ்விரு வேட்பாளர்களின் பிற்போக்குத்தனமான தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இருவரையும் நிராகரித்து, அடுத்த அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையேயான ஒரு சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதுதான் ஒரே முன்னோக்கிய வழியாகும் என வலியுறுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த எதிர்ப்பை, மார்க்சிச சர்வதேசியம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்கான போராட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கிறது.

லு பென்னின் போர்வெறிமிக்க கருத்துக்கள், தேர்தல்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்த கொள்கை சரியென நியாயப்படுத்துகின்றன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உக்ரேன் மீதான படையெடுப்பிற்குப் பின்னர், ரஷ்யாவுடனான போருக்கு அச்சுறுத்தும் பொறுப்பற்ற நேட்டோ கொள்கையை மக்ரோன் ஆதரிக்கிறார். இது லு பென்னுக்கு மக்ரோனை விமர்சிப்பதற்கும், தற்போது பதவியில் இருப்பவரை விட குறைந்த போர்க்குணம் உள்ள நபராக அவர் தன்னைக் காட்டிக்கொள்வதற்கும் வாய்ப்பளிக்கிறது; இருப்பினும், இது தவறான மற்றும் வெற்று வாய்வீச்சு மட்டுமே ஆகும்.

ஒருபுறம், லு பென், ரஷ்யா மற்றும் தற்போது ரஷ்யாவின் முக்கிய சர்வதேச கூட்டாளியாக இருக்கும் சீனாவிடம் குறைவான ஆக்கிரோஷ கொள்கையையே அவர் பேணுவார் என்பதைச் சுட்டிக்காட்டினார். “ரஷ்ய-உக்ரேனிய போர் முடிந்தவுடன்,” “நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான ஒரு மூலோபாய நல்லிணக்கத்திற்கு” தான் அழைப்பு விடுக்கப் போவதாக லு பென் கூறினார்.

சீனாவைப் பொறுத்தவரை, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை “பெய்ஜிங்கிற்கு மிகவும் ஆக்கிரோஷமானது” என்று அவர் விமர்சித்தார். வாஷிங்டன் “அதன் மேலாதிக்கத்தின் கீழ் அதன் கூட்டாளிகளை பிணைக்க அதற்கு எதிரிகள் தேவை” என்றும் தொடர்ந்து கூறினார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்ஸ் “பெய்ஜிங்குடனும் சமமான உறவுகளை” தொடர்ந்து பேணும் என்றும் அவர் கூறினார்.

இந்த அறிக்கைகள், மக்ரோனை முரண்பட வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, தற்போதைய ஜனாதிபதியின் பொறுப்பற்ற இராணுவக் கொள்கையை விட குறைவான பொறுப்பற்ற இராணுவக் கொள்கையை முன்வைப்பதன் மூலம் அவரது ஜனரஞ்சக சொற்பொழிவை நிறைவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. உண்மையில், நாஜி ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்சை விடுவிப்பதில் சோவியத் ஒன்றியம் முக்கிய பங்கு வகித்தது என்பது பெரும்பாலான தொழிலாளர்களுக்குத் தெரியும். ரஷ்யாவுடனான முழுமையான மோதலில் வாஷிங்டன் மற்றும் பேர்லின் உடன் பாரிஸூம் இணைவதற்கு அழைப்பு விடுக்கும் லு பென் மீதான ஊடக விமர்சனங்கள் பரந்த மக்களிடையே அவநம்பிக்கையையும் அமைதியின்மையையும் தூண்டுகிறது.

ஆனால் லு பென்னின் வெளியுறவுக் கொள்கை சமாதானக் கொள்கை அல்ல, அதாவது சமூக சமத்துவக் கொள்கையைக் குறிக்கும் வகையில் 60 வயதை ஓய்வு பெறும் வயதாக மீண்டும் மாற்றுவதற்கு அவர் அளித்த வாக்குறுதியை விட மோசமானது அல்ல. லு பென் வெறுமனே மற்ற எதிரிகளையும் குறிவைக்க முன்மொழிகிறார், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய சக்தியான ஜேர்மனியையும் மற்றும் 1954-1962 காலக்கட்டத்தில் இரத்தம் தோய்ந்த காலனித்துவப் போரில் வீரமிக்க போராட்டத்தில் சுதந்திரம் பெற்ற முன்னாள் பிரெஞ்சு காலனி அல்ஜீரியாவையும் அவர் குறிவைக்கிறார்.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இராணுவ மற்றும் ஆற்றல் நலன்களுக்கு ஜேர்மனி ஒரு சரிசெய்ய முடியாத தடையாக இருப்பதாக கடுமையாக விமர்சிப்பதன் மூலம் லு பென் தொடங்கினார்.

“ஜேர்மனி தன்னை பிரெஞ்சு மூலோபாய அடையாளத்தின் முழுமையான எதிர்மறையாக வலியுறுத்துகிறது,” என்று லு பென் கூறினார். மேலும், “சமரசமற்ற மூலோபாய வேறுபாடுகள்” பாரிஸையும் பேர்லினையும் பிரிக்கின்றன என்றும், “எங்கள் அணுசக்தியை அழிக்க ஜேர்மனியை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றும் அவர் கூறினார்.

லு பென் பேர்லினுடன் முறித்துக் கொள்ள முன்மொழிந்தார், அதே நேரத்தில் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஆக்கிரமிப்பு இராணுவ சக்தியாக மாற்ற முயற்சிக்கும் வகையில், பேர்லின் உடனான ஒத்துழைப்பை அதிகரித்துள்ளார். “ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் ஒரு நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான ஜேர்மனியின் கோரிக்கைக்கான பிரான்சின் ஆதரவு [உட்பட], பேர்லின் உடனான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் நிறுத்துவோம்,” என்று அவர் கூறினார். புதிய ஐரோப்பிய போர் விமானம் அல்லது டாங்கிகளை கட்டமைப்பது போன்ற இராணுவத் திட்டங்களில் பேர்லின் பாரிஸூடன் ஒத்துழைக்கவில்லை என்று அவர் பேர்லினைக் குற்றம் சாட்டினார்.

நாஜிக்களின் நினைவை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆளும் வர்க்கம் செய்யும் முயற்சிகளின் மூலம் பேர்லினுடன் இணைந்து கொண்டு, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக ஐரோப்பா ஆயுதம் ஏந்துவது, ஆழ்ந்த பிற்போக்குத்தனமானது. ஆனால், லு பென் போன்ற பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பல்வேறு பிரதிநிதிகளால் ஒரு சுயாதீனமான கொள்கையை கட்டமைக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு முற்போக்கான மாற்று அல்ல. லு பென் மக்ரோனை எதிர்க்கிறார், காரணம் அவர் இராணுவவாதத்தையோ அல்லது உலகப் போரையோ நிராகரிப்பதால் அல்ல, மாறாக அவர் வேறுபட்ட ஒரு இலக்குப் பட்டியலைக் கொண்டிருப்பதால் தான்.

லு பென், ஹிட்லர் அல்லது 20 ஆம் நூற்றாண்டின் பாசிஸ்டுகளைப் போல் குட்டி முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பாசிச துணை இராணுவப் போராளிகளின் பாரிய இயக்கத்தில் தங்கியிருக்கவில்லை. இத்தகைய இயக்கங்கள் இப்போது இல்லை, மேலும் பெரும் திரளான தொழிலாளர்களும் இளைஞர்களும் இடதை நோக்கி நகர்கின்றனர். ஆனால் அவரது தேர்தல் அரசியல், 20 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தீவிர வலதுசாரி மரபுகளின் அடிப்படையில் தற்போதைய பொலிஸ்-அரசு இயந்திரத்திற்கு ஒரு தீவிர-அதிகாரக் கொள்கையை முன்வைத்தது.

ஜேர்மனிக்கு எதிரான அவரது அச்சுறுத்தல்கள், ரஷ்யாவுடனான போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அதிகரித்து வரும் பெரும் இராணுவ பதட்டங்களை பிரதிபலிக்கின்றன. உயர்மட்ட மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் கணிசமான பிரிவுகளை வைத்து அவர் தனது போக்கை அமைத்துக் கொண்டார். நாஜிக்களுடன் ஒத்துழைப்பதற்கு முன்பு, 1870 மற்றும் 1940 வருடங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தங்கள் ஜேர்மானிய வெறுப்பு, மார்க்சிச எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு கொள்கைகளால் தங்களை வேறுபடுத்திக் கொண்ட பாசிசக் கட்சிகளையும் அவர் எதிரொலிக்கிறார்.

லு பென் ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணிபுரியும் ஆயிரக்கணக்கான அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார், அவர்கள் நவ-பாசிச இதழான Current Values இல் ஆட்சிக்கவிழ்ப்புக்கான அழைப்புகளில் கையெழுத்திட்டனர். இந்த அழைப்புக்கள், கோவிட்-19 குறித்த விஞ்ஞானப்பூர்வ போராட்டத்திற்கு விரோதமான தடுப்பூசி எதிர்ப்பு ஜெனரல்களால் விடுக்கப்பட்டன, மேலும் அவை அல்ஜீரிய சுதந்திரத்திற்கு எதிராக ஏப்ரல் 21, 1961 இல் தோல்வியுற்ற ஆட்சிக்கு சாதகமாக இருந்தன. இவற்றைச் சுற்றி, அதிகாரிகளின் ஒரு பெரிய குழு பிரான்சிற்குள் இராணுவ ரீதியாக தலையிட கடந்த ஆண்டு அச்சுறுத்தியது.

இந்த அச்சுறுத்தல்கள் குறித்து மக்ரோன் மௌனமாக இருக்கிறார், அதேவேளை அடிபணியா பிரான்சின் (LFI) வேட்பாளர் ஜோன்-லூக் மெலோன்சோன் மட்டும் தனது தளபதிகளை கட்டுப்படுத்துமாறு மக்ரோனுக்கு அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில், பிரெஞ்சு மக்களுக்கு அல்லது ஆபிரிக்காவில் அது ஆக்கிரமித்துள்ள நாடுகளுக்கு இராணுவம் விடுக்கும் அச்சுறுத்தல்கள் பற்றி எந்த வேட்பாளரும் எச்சரிக்கவில்லை. ஆனால் வெளிநாட்டில் ஏகாதிபத்திய போருக்கான தயாரிப்புகள் உள்நாட்டில் வர்க்கப் போருக்கான தயாரிப்புகளுடன் தெளிவாக கைகோர்த்து செல்கின்றன.

பிரெஞ்சு பிரசன்னத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு மாலியில் இருந்து பிரெஞ்சு துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதன் பின்னர், லு பென் ஆபிரிக்காவில் ஒரு ஆக்கிரமிப்பு கொள்கையை முன்னெடுத்துச் செல்வதானது, பிரான்சிற்குள் அரபு மற்றும் ஆபிரிக்க குடியேற்றவாசிகள் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

பிரெஞ்சு ‘பழக்கவழக்கங்கள்’ மற்றும் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாத எந்த அல்ஜீரியரையும் வெளியேற்றப் போவதாக லு பென் அச்சுறுத்தினார். அதாவது, “ஏற்கனவே பிரான்சில் வசிக்கும் மற்றும் பிரெஞ்சு சட்டத்திற்குட்பட்டு நடக்கும், எங்கள் பழக்கவழக்கங்களை மதிக்கும் மற்றும் பிரான்சை நேசிக்கும் அல்ஜீரியர்கள் இங்கு தங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், சிறுபான்மையினராக ஒப்புக்கொள்ளப்பட்ட மற்றவர்கள் வெளியேற வேண்டும்” என்று அவர் கூறினார்.

அல்ஜீரியா உடனான ‘தெளிவான மற்றும் கூச்சமில்லாத’ பேச்சுவார்த்தைக்கு அவர் அழைப்பு விடுத்தார், இதில் பாரிஸ், அல்ஜீரியப் போரின் போது தான் நிகழ்த்திய பாரிய படுகொலை, சித்திரவதை மற்றும் வதை முகாம்களில் அல்ஜீரியர்களை அடைத்து துன்புறுத்தியது போன்ற தனது ஏகாதிபத்திய குற்றங்களுக்கு எந்த மன்னிப்பும் கோராமல் அவற்றை ஒப்புக்கொள்ளும். அவர் மேலும் இவ்வாறு கூறினார்: “கடந்த காலத்தையும், அதன் புகழ்பெற்ற கூறுகளையும், அதன் இருண்ட தருணங்களையும் ஒப்புக்கொள்வது மனந்திரும்புதலைக் குறிக்காது. அல்ஜீரிய மக்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளவே நான் விரும்புகிறேன்.”

அல்ஜீரியப் பிரஜைகள் பிரான்ஸுக்கு வரும் அனைத்துப் பயணங்களையும் தடுப்பதாகவும் அவர் அச்சுறுத்தினார், அதே நேரத்தில் அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்கள், பிரான்சுக்கு தங்கள் உறவினர்களை வரவேற்கிறார்கள் மற்றும் அல்ஜீரியாவுக்குச் செல்ல விரும்புகிறார்கள். “அல்ஜீரியப் பிரஜைகளுக்கு புதிய வதிவிட அனுமதி (visa) வழங்குதல், நிதி பரிமாற்றங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், பிரான்சில் அல்ஜீரிய தூதரகம் மூலம் மறுஅனுமதி பெறுவதற்கு அல்ஜீரிய உயரதிகாரிகள் மூலம் பிரான்சில் ஏதேனும் சொத்துக்களை கையகப்படுத்துதல்” போன்ற அல்ஜீரியர்களின் செயல்களை ‘விரும்பத்தகாதது’ எனக் கருதி, அவர்கள் பிரான்சால் வெளியேற்றப்படுவதற்கு முன்மொழிந்தார்.

லு பென்னின் திட்டநிரல் மீதான ஊடக விமர்சனத்தின் பெரும்பகுதி ரஷ்யாவை நோக்கிய அவரது குறைந்த ஆக்கிரமிப்புக் கொள்கையின் மீது கவனம் செலுத்துகிறது என்பது முழு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான பரிணாமத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு தடுப்பூசி-எதிர்ப்பு தொற்றுநோய் கொள்கை, ஆபிரிக்காவில் நவ-காலனித்துவ போர்கள் மற்றும் பிரான்சுக்குள் இராணுவ தலையீட்டிற்கான அச்சுறுத்தல் ஆகியவை மக்ரோனின் வட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கால் ஏகமனதாக ஆதரிக்கப்படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி (PES) அதன் புறக்கணிப்பு அழைப்பில் விளக்குவது போல், லு பென் மற்றும் மக்ரோன் இருவருக்கும் எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே ஒரு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சியானது, ஜேர்மன் மறுஆயுதமயமாக்கம் மற்றும் பாசிச இராணுவவாதத்தை சட்டபூர்வமாக்குவது ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) தோழர்களுடனான அதன் பொதுவான போராட்டத்தை தீவிரப்படுத்தும். மேலும், சோசலிச சமத்துவக் கட்சி, ஏகாதிபத்திய போர் மற்றும் இராணுவ அடக்குமுறைக்கு எதிரான அதன் போராட்டத்தில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒருவரின் சொந்த நாட்டின் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் இருந்து தொடங்குகிறது என்ற மார்க்சிச தத்துவத்தை பின்பற்றுகிறது.

Loading