மக்ரோன் மற்றும் மரின் லு பென்னுக்கு இடையிலான விவாதம் பிரான்சில் தீவிர வலதுசாரி சர்வாதிகாரத்தின் ஆபத்தை காட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னுக்கும், தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கும் இடையிலான விவாதம் பிரான்சில் பாசிச சர்வாதிகாரத்தின் பெருகிவரும் ஆபத்தைக் காட்டுகிறது.

இந்த விவாதம் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு வங்கியாளரான மக்ரோன் ஆணவத்துடன் தோன்றுவதற்கு எதிராக, அவருடைய ஊழியர்களே அவரை எச்சரித்துள்ளனர். லு பென், நவ-பாசிச கட்சியை 'அரக்கத்தனம்-அற்றதாக' காட்ட ஒரு தசாப்த காலத்தை செலவளித்துள்ளார். இந்த இருவரும், வாக்காளர்களை அந்நியப்படுத்தக்கூடிய வெளிப்பாடல்கள் அல்லது தமது நடத்தைகளை தவிர்க்கும் வித்தைகளை தெளிவாகத் தெரிந்திருந்தார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் மரியாதையை தெளிவுபடுத்தினர். குறிப்பாக மக்ரோன், லு பென்னிடம், 'நீங்கள் சொல்வது சரிதான்' என்று மீண்டும் மீண்டும் கூறினார். இறுதியில், இந்த விவாதம் எல்லாவற்றிற்கும் மேலாக, பிரான்சில் நாஜிக்களுடன் ஒத்துழைத்த அரசியல் வழித்தோன்றலில் இருந்து மக்ரோனைப் பிரிக்கும் வேறுபாடுகளின் மிகக் குறைந்த தன்மையைக் காட்டியது.

நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னுக்கும், தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கும் இடையிலான விவாதம்

அதி தீவிர வலதுசாரி ஆட்சியின் ஆபத்துக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் மூலம் மட்டுமே தொடர முடியும் என்றும், இரு வேட்பாளர்களையும் நிராகரித்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் சோசலிச சமத்துவக் கட்சி (PES) வலியுறுத்தியுள்ளது. லு பென்னாக இருந்தாலும் சரி மக்ரோனாக இருந்தாலும் சரி, தேர்தலில் வெற்றி பெறுபவர் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக, வெடிக்கும் போராட்டங்களைத் தயார்படுத்த இதுவே சிறந்த வழியாகும்.

எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில், திவாலாகிய பணவீக்கம் மற்றும் தொழிலாளர்களின் வாங்கும் திறன் பற்றிய கேள்வியில் விவாதம் தொடங்கியது. லு பென் 'இனிமேலும் தங்கள் வாழ்க்கைத் தேவையை பூர்த்திசெய்ய முடியாது என்று கூறிய பிரெஞ்சுக்காரர்களை மட்டுமே சந்தித்தேன்' என்று கூறினார். அத்தோடு, நேட்டோ நாடுகள் ரஷ்ய எரிவாயு ஏற்றுமதி மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால், சர்வதேச அளவிலும் பிரான்சிலும் இயற்கை எரிவாயு விலைகள் திகைப்பூட்டும் வகையில் உயர்வு அதிகரித்து வருவதாக அவர் விமர்சித்தார்.

லு பென்னின் வார்த்தைஜாலங்களை பெரும்பாலும் வலதுபுறத்தில் இருந்து மக்ரோன் தாக்கியதோடு, அவரது கொள்கைகளுக்கு எதிரான மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் யதார்த்தமற்றது என்று வாதிட்டார். இயற்கை எரிவாயு விலையில் மேலும் அதிகரிப்பை தற்காலிகமாக தடுக்கும் தனது அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக லு பென் வாக்களித்ததாக அவர் குற்றம் சாட்டினார். மக்ரோன் தனது பதவிக்காலத்தில் 400,000 பேரை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளியதாக லு பென் குற்றம் சாட்டிய பின்னர், வணிக சலுகைகளை கேள்விக்குள்ளாக்கியதாக லு பென்னை, மக்ரோன் குற்றம் சாட்டினார்: 'மேடம் லு பென், நீங்கள் முதலாளிக்காக முடிவு செய்யப்போவதில்லை. என்ன சம்பளம் என்பதை நீங்கள் கட்டளையிட மாட்டீர்கள்” என்று மக்ரோன் குறிப்பிட்டார்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ நடத்தி வரும் போருடன் இரு வேட்பாளர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் பென்டகன் 45 மில்லியனிலிருந்து 60 மில்லியன் வரை மக்கள் மரணமடைவதற்கான சாத்தியக் கூறுகளை பரிசீலித்து வருகிறது என்ற பைடெனின் கருத்துக்கு அவர்கள் அமைதியாக இருந்தனர். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை நடத்தும் நேட்டோவின் கொள்கையை பாராட்டிய மக்ரோனுக்கு, லு பென் பின்வருமாறு பதிலளித்தார்: 'பிரான்சின் பெயரில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள், வழிகள் மற்றும் அமைதிக்கான வழிமுறைகள் என்பன போர் ஆதரவுக்கு தகுதியானவை.'

பிரான்சில் உள்ள தொழிலாளர்களின் கணிசமான அடுக்குகள் மக்ரோன் மீதான கோபத்தால் லு பென்னுக்கு வாக்களிக்கக் கருதும் சூழ்நிலையில், மக்ரோனின் ரஷ்யா கொள்கையின் இந்த ஒப்புதல் பலவற்றில் ஒரு புள்ளி என்று ஒருவர் கூற முடியும். அத்தோடு, லு பென் பிரெஞ்சு வங்கிகள் மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின் ஒரு கருவி என்பதையும் இது காட்டுகிறது.

ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்ற மக்ரோனின் ஆழ்ந்த செல்வாக்கற்ற அழைப்பை லு பென் 'சகிக்க முடியாத அநீதி' என்று அழைத்தபோது மக்ரோன், லு பென்னின் ஓய்வூதியங்களுக்கு நிதியளிப்பதற்கான திட்டங்களைத் தாக்கி எதிர்வினையாற்றினார், இது பெருந் தொற்றுநோய் பற்றிய சுருக்கமான கருத்துப் பரிமாற்றத்தையும் தூண்டியது. 'எனது திட்டங்களின் நிதியுதவி பற்றி எனக்கு விரிவுரை செய்ய வேண்டாம்' என்று கூறிய லு பென், மக்ரோன் தனது பதவிக் காலத்தில் செய்த '600 பில்லியன் யூரோக்கள் கூடுதல் கடனை' விமர்சித்தார்.

பிரான்சில் மட்டும் ஏற்கனவே 144,000 உயிர்களைப் பலி வாங்கிய COVID-19 தொற்றுநோய் மீதான பாரிய தொற்று பற்றிய தனது கொலைகாரக் கொள்கையைப் பாதுகாப்பதன் மூலம் மக்ரோன் இதற்கு பதிலளித்தார். டிரில்லியன் யூரோ தொற்றுநோய் பிணை எடுப்பானது, வங்கிகளை பெருமளவில் வளப்படுத்தியதோடு பில்லியனர் பேர்னார்ட் ஆர்னோவின் சொத்து மதிப்பை $70 பில்லியனில் இருந்து $167 பில்லியனாக உயர்த்தியது. ஆனால், மக்ரோன் பாசாங்குத்தனமாக இந்த பிணையெடுப்பானது, உயிர்கள், ஆரோக்கியம் மற்றும் சிறு வணிகங்களின் பாதுகாப்புக்கு என்று கூறினார்: “பெரிய வணிகங்களுக்கு நாங்கள் உதவி செய்தோம் என்று சொல்ல உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது? அந்த எண்ணிக்கையை… சிறு தொழில்கள், கைவினைஞர்களிடம் கேளுங்கள், நாங்கள் அவர்களின் உயிரைக் காப்பாற்றினோம்”

பிரான்சில் நன்கறிந்த வகையில், கோவிட்-19 தடுப்பூசிகளைக் கண்டித்த கட்சியின் தலைவி லு பென், மக்ரோன் தனது பில்லியனர் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களை வளப்படுத்திய பாரிய மரணங்கள் குறித்து அமைதியாக இருந்தார். அத்தோடு, மக்ரோனுக்கு எதிரான, சமூக சமத்துவத்திற்கான 'மஞ்சள் சீருடை' எதிர்ப்புகளை சுரண்டுவதற்கான லு பென்னினது முயற்சிகளும் வீழ்ச்சியடைந்தன. ஏனெனில், அவர் போராட்டக்காரர்களை வன்முறையில் தாக்கிய மக்ரோனின் காவல்துறையினரை பாராட்டியவர். “மஞ்சள் சீருடையாளர்கள் ஜனநாயகத்தை விரும்பினர், ஆனால் அவை கேட்கவில்லை,” என லு பென் புலம்பினார். காவல்துறையின் மிருகத்தனத்தின் போது 'சட்டபூர்வமான தற்காப்பு அனுமானத்திற்கு' காவல்துறைக்கு உரிமை இருக்க வேண்டும் என்று அவர் முதல் கூறியருந்தார்.

லு பென், பொலிஸை உயர்த்திப் பிடித்ததை மக்ரோன் வலதுபுறத்தில் இருந்து தாக்குவதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்டார். லு பென்னின் செய்தியாளர் மாநாடு ஒன்றில் இருந்து ஒரு எதிர்ப்பாளரை கொடூரமாக வெளியேற்றிய பின்னர், மக்ரோனின் உள்துறை மந்திரியான 'திரு டார்மானன் காவலர்களை' விமர்சித்ததற்காக லு பென்னை, மக்ரோன் கண்டித்தார்.

விவாதம் முடிவடையும் போது, அவர்கள் இருவரும் குடியேற்றம் மற்றும் இஸ்லாம் மீதான தாக்குதல்களுக்கு திரும்பினார்கள். லு பென் புலம்பெயர்ந்தோரை கடுமையாக கண்டனம் செய்தார்: 'உண்மையான காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ளும் நாங்கள் மிருகத்தனத்துக்கு திரும்புகின்றோம். நாங்கள் காயமடைந்துள்ளோம், நாங்கள் கொடுரமாக்கப்பட்டுள்ளோம், மக்கள் எங்கள் தலையில் குதித்து எங்களைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இது இப்படியே தொடர முடியாது” இஸ்லாமிய முக்காடு 'இஸ்லாமியர்களால் திணிக்கப்பட்ட சீருடை' என்றும் அவர் கண்டனம் செய்தார்.

இணையற்ற பாசாங்குத்தனத்துடன், 'உலகளாவிய பிரான்சின்' பாதுகாவலராகக் காட்டிக்கொண்ட மக்ரோன், 'நீங்கள் உள்நாட்டுப் போரைத் தூண்டுகின்றீர்கள்' என்று லு பென்னை எச்சரிப்பதன் மூலம் இதற்கு பதிலளித்தார். 'பொது இடங்களில் மதச் சின்னத்தை தடை செய்த உலகின் முதல் நாடு' பிரான்ஸ் என்றால், அது 'குடியரசைக் காட்டிக் கொடுப்பதாகும்' என்று அவர் அறிவித்தார்.

உண்மையில், கோவிட்-19 தொற்றுநோய் பரவலுக்குப் பின்னர், முஸ்லீம் அமைப்புக்களை தன்னிச்சையாக கலைத்து, அதன் நிர்வாகிகளை அரசால் ஒடுக்குவதை அனுமதிக்கும் 'பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டத்தை' மக்ரோன் திணித்தார். இந்தச் சட்டம் அதி தீவிர வலதுசாரி அமைப்பான ஆக்சன் பிரான்சின் அனுதாபியான ஜெரால்ட் டார்மானனால் திணிக்கப்பட்டது. லு பென், இஸ்லாம் மீது 'மென்மையாக இருக்கிறார்' என்று அவர் பின்பு கண்டனம் செய்தார். அதாவது, மக்ரோன் இனவெறியைத் தூண்டுவதன் மூலம் பெருகிவரும் வர்க்கப் பதட்டங்களிலிருந்து திசைதிருப்ப முயன்றதோடு, இனவெறி மற்றும் தேசியவாதத்தை தூண்டிவிட்டு மற்றும் போலீஸ்-அரசு இயந்திரத்தில் பாசிச சக்திகளை வலுப்படுத்துகிறார்.

பிரான்ஸ் ஏற்கனவே 2010 இல், மதச் சின்னங்களான புர்க்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை முற்றிலுமாக தடை செய்யும் நாடாக மாறிவிட்டது என்பதை மக்ரோனுக்கு எதிராக சேர்க்க வேண்டும். இந்த தடைகள், குடியரசுக்கும் ஜனநாயகத்துக்கும் துரோகம் செய்ததாக மக்ரோன் உண்மையிலேயே நம்பியிருந்தால், 2017ல் அவர் பதவியேற்றபோது இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை அவர் தெளிவாக அறிவித்திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மேலும் லு பென்னுக்கு எதிரான அவரது 'ஜனநாயக' தோரணையானது அரசியல் சூழ்ச்சியாகும்.

1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தினால் கலைக்கப்பட்ட பின்னர், ஆளும் வர்க்கத்தில் வெளிப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான கருத்தொற்றுமைக்கு இந்த விவாதம் பரிசோதனையாக உள்ளது. நேட்டோ ஏகாதிபத்தியப் போர்கள், 1991 ஈராக் மற்றும் யூகோஸ்லாவியாவில் வளைகுடாப் போரில் இருந்து ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, மாலி மற்றும் இப்போது ரஷ்யா வரை ஆளும் வட்டங்களில் இன்னும் ஆழமான ஆதரவைப் பெற்றுள்ளன. அதேபோன்று, நிதியப் பிரபுத்துவத்தால் சமூகம் சூறையாடப்படுவதும், இனவெறி துவேசங்கள் நிரந்தரமாகத் தூண்டப்படுவதும், முழு ஆளும் வர்க்கத்தையும் மேலும் வலது பக்கம் நகர்த்தியுள்ளது.

கோவிட்-19 இல் வெகுஜன மரணக் கொள்கையைச் செயல்படுத்தி, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் பிரச்சாரத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னர், பிரெஞ்சு ஆளும் வட்டங்களில் இருந்த ஜனநாயக உரிமைகளுக்கான எஞ்சியிருந்த நடவடிக்கைகளும் ஆவியாகிவிட்டது.

புதன்கிழமை இரவு, மக்ரோன் விவாதத்தை முடிக்கின்றபோது, அவர் லு பென்னிடம் கூறினார்: 'நான் உங்கள் யோசனைகளுடன் போராடுகிறேன், நான் உங்கள் கட்சியுடன் போராடுகிறேன், [ஆனால்] நான் உங்களை ஒரு நபராக மதிக்கிறேன்.' பிரெஞ்சு முதலாளித்துவம், ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் ஒரு நவ-பாசிசவாதியை ஏற்க தயாராக உள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான சமிக்ஞையாகும். அத்தோடு, மக்ரோனே தீவிர-வலது போக்கில் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு தெளிவான சமிக்ஞையாக இருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி விளக்குவது போல், ஆளும் வர்க்கம் வலதுபுறம் காட்டுமிராண்டித்தனமாக நகர்வதற்கு மாற்றீடாக, தேர்தலை செயலூக்கமாக புறக்கணித்து, மக்ரோன் மற்றும் லு பென் இருவரையும் நிராகரிக்கப் போராட வேண்டும். இப் போராட்டம், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதையும், தொழிலாளர்களிடையே சுயாதீனமான போராட்ட அமைப்புகளை உருவாக்குவதையும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்கும் எதிராக ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை கட்டியெழுப்ப தொழிலாளர்களை தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Loading