முன்னோக்கு

ரஷ்யாவின் "முதுகெலும்பை முறித்தல்": உக்ரேனில் அமெரிக்க போர் நோக்கங்கள் வெளிப்படுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனும் பாதுகாப்புத்துறை செயலர் லாயிட் ஆஸ்டினும் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியைச் சந்திக்க உக்ரேனின் கியேவுக்குச் சென்றனர், போர் வெடித்ததற்குப் பின்னர் இதுவே உக்ரேனிய தலைநகருக்கான உயர்மட்ட அமெரிக்க தலைவர்களின் உத்தியோகபூர்வ விஜயமாக இருந்தது.

போர்விமானம், ட்ரோன்கள், பீரங்கி மற்றும் குண்டுதுளைக்காத கவச வாகனங்கள் உட்பட உக்ரேனுக்கு 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் அனுப்பப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்து, வெறும் பத்து நாட்கள் இடைவெளியில் இந்த பயணம் வருகிறது.

பிளின்கெனும் ஆஸ்டினும் செலென்ஸ்கிக்கு அவரின் அணிவகுப்பு உத்தரவுகளை வழங்க கியேவுக்குச் சென்றனர். செலென்ஸ்கியின் அரசாங்கம் ஒரு கைப்பாவையாகச் செயல்படும் நிலையில், போர் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உத்தரவுகளை வழங்கி வருகிறது. ரஷ்யாவுடனான மோதலில் உக்ரேனிய மக்களைப் பீரங்கிக்கு இரையாக்குவதற்காக உக்ரேனின் தன்னலக்குழுக்கள் பில்லியன் கணக்கான டாலர்களில் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜோன் கோலாஷெஸ்கி உக்ரேன் எல்லைக்கு அருகே போலந்தில் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 24, 2022 அன்று செய்தியாளர்களிடம் பேசுகிறார் (AP Photo/Alex Brandon, Pool)

குறைந்தபட்சம் 2014 உக்ரேனிய ஆட்சிக் கவிழ்ப்பிலிருந்து, பின்னோக்கி பார்த்தால் 2004 'ஆரஞ்சுப் புரட்சி' இல் இருந்தே கூட இருக்கலாம், “உக்ரேனிய எல்லையில் 'அனல்பறக்கும் போர்' நடத்துவதே அமெரிக்க ஏகாதிபத்திய திட்டமிடலின் மைய இலக்காக இருந்துள்ளது. இந்த மோதலுக்கான அமெரிக்க இராணுவ தயாரிப்புகள் மிகவும் முக்கியமானவை, முந்தைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்களுடன், அவை அமெரிக்க வரலாற்றில் ஒரு ஜனாதிபதியின் மூன்றாவது பதவிநீக்க குற்றவிசாரணைக்கு இட்டுச் சென்றது.

ரஷ்யாவுக்கு எதிராக பல ஆண்டுகளாக உக்ரேனை ஓர் அமெரிக்க/நேட்டோ கோட்டையாக கட்டியெழுப்பியமை பெப்ரவரி 24 இல் வாஷிங்டன் விரும்பிய விளைவை —அதாவது, அந்நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்பை— கொண்டு வந்தது, இதில் அந்நாட்டின் 'வெள்ளை இனத்தவரை' இரத்தம் சிந்த வைத்து, 'ரஷ்யாவின் ஆப்கானிஸ்தானாக' அது மாறுமென அமெரிக்க மூலோபாயவாதிகள் நம்பினார்கள்.

போர் வெடித்து இரண்டு மாதங்களில், இப்போது, அமெரிக்க அதிகாரிகள் முன்னர் எதை இரகசியமாக ஒப்புக்கொண்டார்களோ அதை பகிரங்கமாகக் கூறுகிறார்கள்: அதாவது, உக்ரேனிய உயிர்களை விலை கொடுத்தாலும் பரவாயில்லை, ரஷ்யாவை முடக்கி அடிபணியச் செய்வதையும் மற்றும் அதன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதையும் இலக்காகக் கொண்ட போரில் அமெரிக்கா உந்து சக்தியாக உள்ளது.

CBS உடனான ஒரு பேட்டியில், முன்னாள் அமெரிக்க இராணுவ ஐரோப்பா தளபதி பென் ஹோட்ஜஸ் கூறுகையில், 'உங்களுக்கே தெரியும், இங்கே நாங்கள் உக்ரேனுக்காக ஆரவாரம் செய்யும் வெறும் பார்வையாளர்கள் இல்லை,' என்றார். 'நாம் வெற்றி பெற விரும்புகிறோம்' என்பதை அமெரிக்கா அறிவிக்க வேண்டுமென ஹோட்ஜஸ் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறினார், “இதன் அர்த்தம் அனைத்து ரஷ்யப் படைகளும் பெப்ரவரி 24 க்கு முன்னர் இருந்ததைப் போல திரும்ப செய்வது … உக்ரேனிய இறையாண்மையை —இதன் அர்த்தம் கிரிமியா மற்றும் டொன்பாஸை— முழுமையாக மீட்டமைப்பதற்கான நீண்ட கால பொறுப்புறுதி, பின்னர் இறுதியில் ரஷ்யாவுக்கு வெளியே ஜோர்ஜியாவை அச்சுறுத்த, மோல்டோவாவை அச்சுறுத்த, நம் பால்டிக் கூட்டாளிகளை அச்சுறுத்த அதன் பலத்தை வெளிப்படுத்தும் ரஷ்ய ஆற்றலின் முதுகெலும்பை முறிப்பது,” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனக்கு சொந்தமானது என்று ரஷ்யா உரிமைகோரும் பகுதியான கிரிமியாவைத் திரும்பப் பெறுவது மட்டுமல்ல, மாறாக ரஷ்ய இராணுவத்தின் சண்டையிடும் திறனை அழிப்பதும் அமெரிக்காவின் இலக்குகளாக உள்ளது.

வெள்ளிக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் ஒரு தலையங்கத்தில் 'ரஷ்யாவை மண்டியிட செய்ய' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியது, 'குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகள் இப்போது பரிசீலிக்க விரும்பும் எந்தவொரு தடையாணைகளும் மட்டுமே ரஷ்யாவை விரைவில் மண்டியிட செய்துவிடாது,” என்று அது குறிப்பிட்டது.

'ரஷ்யாவை மண்டியிட செய்வது' மற்றும் ரஷ்யாவின் 'முதுகெலும்பை முறிப்பது' ஆகிய இந்த சொற்றொடர்களை வேண்டுமென்றே பயன்படுத்துவது, ஊடகங்களில் போர் குறித்து பொது நுகர்வுக்காக முன்வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ சொல்லாடலை, அதாவது பெயரிட்டு கூறுவதானால் அது வறிய மற்றும் நிராதரவான உக்ரேனுக்கு எதிராக பலம் வாய்ந்த ரஷ்யா தொடுத்த தூண்டுதலற்ற தாக்குதல் என்ற சொல்லாடலை அம்பலப்படுத்துகிறது.

சாத்தியமானால் உக்ரேனிலும், ரஷ்ய எல்லைகளுக்கு உள்ளேயும், அல்லது இரண்டு இடங்களிலும் அமெரிக்க படைகளை நிலைநிறுத்துவது உள்ளடங்கலாக, ரஷ்ய எல்லைக்குள் போரை விரிவாக்குவதே இத்தகைய அறிக்கைகளின் தெளிவான உள்நோக்கமாகும்.

பைடென் 'வெளியுறவுத்துறையின் பின்புல செயலர்' (Shadow Secretary of State) என்று Politico இல் குறிப்பிடப்பட்ட, ஜனநாயகக் கட்சியின் செனட் பிரதிநிதி கிறிஸ் கூன்ஸ், CBS இன் 'Face the Nation' நிகழ்ச்சியில் கூறுகையில், உக்ரேனுக்கு அமெரிக்க துருப்புகளை அனுப்புவது குறித்த ஒரு விவாதத்திற்கான அவரது முறையீட்டை திறம்பட இரட்டிப்பாக்கினார்.

'இந்த வாரம் சில பொதுக் கருத்துக்களில், நாடு எப்போது உக்ரேனுக்குத் துருப்புக்களை அனுப்ப விரும்பும் என்பதைப் பேசுவது நாட்டுக்கு அவசியம் என்று கூறினீர்களே,” என்று கூன்ஸிடம் கேட்கப்பட்ட போது, “நாம் அவரைத் தடுத்து நிறுத்தும் போது மட்டுமே புட்டின் நிற்பார்,” என்று கூன்ஸ் விடையிறுத்தார்.

NBC இன் 'Meet the Press' பேட்டியில், அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறையின் துணை ஆலோசகர் ஜோன் ஃபின்னெரிடம், “ரஷ்யாவைத் தோற்கடிப்பதே உக்ரேனுக்கான இப்போதைய அமெரிக்க கொள்கை நோக்கமா? இதை நீங்கள் திட்டவட்டமாக கூற முடியுமா?' என்று நேரடியாக கேட்கப்பட்ட போது, ஃபின்னெர் பட்டவர்த்தனமாக ஆமாம் என்று பதிலளித்தார். “ரஷ்யா உலகில் அதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது… இந்த போக்கைத் தொடர்வதே எங்கள் நோக்கமாக இருக்கப் போகிறது,” என்றார்.

இது வெறுமனே வாஷிங்டன் விரும்பிய ஒரு போர் அல்ல. இது அமெரிக்கா தூண்டிவிட்ட ஒரு போராகும். கடந்த மூன்று ஜனாதிபதிகளின் கீழ் உக்ரேனுக்கு பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் அனுப்பப்பட்டன, ரஷ்யாவின் 'எச்சரிக்கைக் கோடுகளை' அவர் ஏற்கவில்லை என்ற பைடெனின் பிரகடனமும், உக்ரேன் நேட்டோவில் உறுப்பு நாடாக ஆகக்கூடும் என்பது மீது பேச்சுவார்த்தைகள் நடத்த மறுத்தமையும் — இவை அனைத்தும் தற்போதைய போரைத் தூண்டுவதற்குக் கணக்கிடப்பட்டிருந்தன.

போர் வெடித்தவுடன், அமெரிக்கா எந்தவொரு இராஜாங்க தீர்வையும் துண்டிக்க சாத்தியமான எல்லாவற்றையும் செய்துள்ளது. ரஷ்யாவின் இராணுவத் தோல்வியே அமெரிக்கக் கொள்கை என்று பகிரங்கமாக அறிவிக்க அமெரிக்க அதிகாரிகளைச் சீண்டிவிட்டதற்குப் பக்கவாட்டில், ஞாயிற்றுக்கிழமை உரையாடல் நிகழ்ச்சிகளில், போருக்கு இராஜாங்கரீதியில் தீர்வு காணும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் மீதும் கண்டனங்கள் நிரம்பி இருந்தன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்திப்பதன் மூலம் போருக்கு அமைதியான ஒரு தீர்வு காண ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்க செய்தி ஒளிபரப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். NBC இன் கிறிஸ்டின் வெல்கர் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பினார், 'உக்ரேனிய அரசாங்கத்தின் சார்பாக பேச ஐ.நா. பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உண்டா?' என்றார்.

உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கி அலுவலகத்தின் துணைத் தலைவர் இகோர் சோவ்க்வா, குட்டெரெஸின் முயற்சிகளைக் கண்டித்து பதிலளித்தார். 'மாஸ்கோவுக்குப் பயணிப்பது நல்ல யோசனையல்ல. மாஸ்கோவுக்குச் சென்று ஜனாதிபதி புட்டினுடன் பேசுவதற்கான அவரது நோக்கம் எங்களுக்குப் புரியவில்லை,” என்றார்.

போருக்கான பொது ஆதரவை பறைசாற்றும் வகையில், அமெரிக்க செய்தி ஊடகம் அதிகரித்தளவில் இனவாத தொனியில் ரஷ்யர்கள் மீதான வெறுப்பை உருவாக்கும் நோக்கில், ரஷ்யாவினால் போர்க்குற்றங்கள், படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகள் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி, வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.

எதையும் வரலாற்று உள்ளடக்கத்தில் பார்க்க இலாயக்கற்ற, கல்வியாளர்களின் நோக்குநிலைப் பிறழ்ந்த அடுக்குகள் உட்பட, அமெரிக்க முதலாளித்துவத்திற்கான தாராளவாத மற்றும் போலி-இடது அனுதாபிகள், ரஷ்யாவுக்கு எதிராக இராணுவவாத விஷமப் பிரச்சாரத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஓர் எச்சரிக்கை செய்யப்பட வேண்டும்: இந்த போரில் அமெரிக்காவினால் அதிகரித்தளவில் வெளிப்படையாகப் பின்பற்றப்படும் நோக்கங்கள் தவிர்க்கவியலாமல் மோதல் விரிவாவதை உள்ளடக்கி உள்ளது. அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவுடன் போரில் ஈடுபடவில்லை என்று இனி கற்பனை செய்ய எதுவும் மிச்சமில்லை. ஆட்சி மாற்றம், ரஷ்யாவைத் துண்டாடுதல் மற்றும் அதன் பரந்த வளங்களைச் சூறையாடுதல் ஆகியவற்றைப் பின்தொடர்வதில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அணுஆயுதப் போர் ஆபத்திற்குத் துணிந்துள்ளது.

Loading