முன்னோக்கு

ஏப்ரல் துப்பாக்கிகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவும் ஐரோப்பாவின் நேட்டோ சக்திகளும் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் சங்கிலித் தொடர் போன்ற சம்பவங்களை இயக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

முதலாம் உலகப் போர் வெடிப்பைப் பற்றிய அவரின் புகழ்பெற்ற படைப்பான The Guns of August இல் பார்பரா துச்மன் விவரிக்கையில், ஏகாதிபத்திய சக்திகள் ஐரோப்பிய தொழிலாளர்களை மாபெரும் போரின் புதைகுழிகளுக்கும் படுகொலைகளுக்கும் இழுத்துச் சென்று கொண்டிருந்த போது, ஒரு சிறிய மற்றும் ஜெயிக்கக்கூடிய மோதலில் எவ்வாறு தவறான கணக்கீடுகளும், எங்கும் பரவிய நம்பிக்கையும், மீளமுடியாத தந்திரோபாய சூழ்ச்சிகளும் —'இவ்வாறு இருந்தால் என்பதும், பிழைகள் என்பதும், கடமைப்பாடுகள் என்பதும்'— ஒன்று திரண்டன என்பதை விவரித்தார்.

ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ மோதலில் இதேபோன்றவொரு இயக்கவியல் கட்டவிழ்ந்து வருகிறது. அமெரிக்கா ஹோவிட்சர்களை (சிறு பீரங்கிகள்) அனுப்புவதும் உக்ரேனுக்குப் பாரியளவில் ஆயுதங்களை அனுப்புவதும் ஏப்ரலின் துப்பாக்கிகளாக ஆகி உள்ளன.

மார்ச் மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடி மோதலை அனுமதிக்க போவதில்லை என்று மீண்டும் மீண்டும் கூறினார், ஏனென்றால் 'அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும்,' என்றார். ஒரு மாதத்திற்குப் பின்னர், பைடென் நிர்வாகம் துல்லியமாக இதைத் தான் செய்து கொண்டிருக்கிறது.

செவ்வாய்கிழமை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செயலர் லாயிட் ஆஸ்டினும் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனும் ஐரோப்பாவில் அமெரிக்க விமானப்படையின் தலைமையகமாகவும் நேட்டோ விமானப்படை கட்டளையகமாக விளங்கும் ஜேர்மனியில் உள்ள அதன் ராம்ஸ்டைன் விமானத் தளத்தில் வாஷிங்டன் கூட்டியிருந்த ஒரு போர் கவுன்சிலில் நாற்பது நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.

அவ்விரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளும், போரில் பாதிக்கப்பட்ட கியேவுக்கு விஜயம் செய்து வந்த கையோடு, ஒருபுறம் உக்ரேன் போரானது அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்கும், மறுபுறம், ரஷ்யாவுக்கும் இடையிலான போர் என்பதை உறுதிப்படுத்தினர். ரஷ்யாவுடனான மோதலை 'ஜெயிப்பதை உறுதிப்படுத்த' —அவர் உக்ரேனிய தொடர்பு குழு என்று குறிப்பிட்ட— உயர்மட்ட இராணுவ பிரமுகர்களைக் கொண்ட ஒப்பீட்டளவில் ஒரு சர்வதேச கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் வாஷிங்டன் ஒன்று கூட்ட இருப்பதாக ஆஸ்டின் அறிவித்தார்.

போரின் நோக்கங்கள் இப்போது தெளிவாக உள்ளன. உக்ரேனில் இந்த இரத்தக்களரியானது நேட்டோவில் இணைவதற்கான அதன் சட்டபூர்வ உரிமையைப் பாதுகாப்பதற்காக தூண்டப்படவில்லை, மாறாக ரஷ்யாவை ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ சக்தி என்பதிலிருந்து அழித்து அதன் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்காக தயாரிக்கப்பட்டது, தூண்டிவிடப்பட்டது மற்றும் பாரியளவில் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த மோதலில் உக்ரேன் ஒரு கைப்பாவை, அதன் மக்கள் பீரங்கிக்குத் தீவனமாக ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தின் அடுத்த கட்டத்தைத் திட்டமிடவே ராம்ஸ்டீன் போர் கவுன்சில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்னரும் பின்னரும், அமெரிக்காவும் மற்ற நேட்டோ சக்திகளும் உக்ரேனுக்கு டாங்கி தகர்ப்பு ஏவுகணைகள், டாங்கிகள் மற்றும் தந்திரோபாய ட்ரோன்கள் உட்பட அதிநவீன ஆயுதங்களை அனுப்புவதாக அறிவித்தன.

இந்த தொடர்பு குழு, 'போரின் வேகத்திற்கு நகர' வேண்டும் என்று ஆஸ்டின் அறிவித்தார். இதே திசையில், ஜேர்மனி செவ்வாய்கிழமை அறிவிக்கையில், எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் Flakpanzer Gepard “விமானந்தகர்ப்பு குழல் பீரங்கிகளை' அனுப்ப இருப்பதாக அறிவித்தது, அதேவேளையில் கனடா M777 குண்டுகள் துளைக்காத கவச வாகனங்களை அனுப்ப இருப்பதாக அறிவித்தது. போரின் முதல் வாரங்களில் இருந்தவாறு, “தீவிரமான ஆயுதங்களை மட்டுப்படுத்தும் பெருந்தன்மை' “உருகி விட்டதாக தெரிகிறது,” என்று Air Force Magazine குறிப்பிட்டது.

அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவுடன் போரில் இல்லை என்ற பாசாங்குத்தனமும் 'உருகிவிட்டது.' அமெரிக்க இராணுவ ஐரோப்பா கமாண்டர் பென் ஹோட்ஜஸ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ரஷ்யாவின் 'முதுகெலும்பை முறிப்பதே' இந்த மோதலில் அமெரிக்காவின் நோக்கம் என்றார்.

இதற்கு விடையிறுத்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், சமாதான பேச்சுவார்த்தையை நாசப்படுத்த உக்ரைன் அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும், உக்ரைனில் பினாமி போரை நடத்தி வருவதாகவும் அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டினார். 'தீவிரமான, உண்மையான' ஓர் அணுஆயுதப் போர் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். லாவ்ரோவின் எச்சரிக்கையை 'ஆபத்தானது, ஒன்றும் செய்யவியலாது' என்று கூறி ஆஸ்டின் நிராகரித்தார்.

என்ன முட்டாள்தனம்! வாஷிங்டன் ஒரு போர் முகாமைக் கூட்டி, ரஷ்யாவின் 'முதுகெலும்பை முறிப்பதே' அதன் நோக்கம் என்று கூறுகிறது. அத்தகைய மொழி மற்றும் இலக்குகள் அணுஆயுதப் போர் அபாயத்தை உயர்த்துவதாக ரஷ்யா பதிலளிக்கும் போது, வாஷிங்டன் இதற்கு … ஒன்றும் செய்யவியலாது என்று அறிவிக்கிறது.

ரஷ்யாவை நசுக்கி அதன் அரசாங்கத்தை கவிழ்ப்பதே அதன் நோக்கம் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது. இத்தகைய உயிர்வாழ்வுக்கான ஓர் அச்சுறுத்தலை முகங்கொடுப்பதால், அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது ரஷ்ய ஆளும் வர்க்கம் எடைபோடும் ஒரு தந்திரமாக மாறுகிறது. இந்த போரை ஜெயிக்க வாஷிங்டன் தீர்மானமாக உள்ளது, அதை நிகழ விடாமல் தடுக்க புட்டின் அரசாங்கம் தீர்மானகரமாக உள்ளது. தீவிரப்படுவதைத் தவிர இருதரப்புக்கும் வேறு எந்த வழியும் இல்லை. உண்மையில் சொல்லப் போனால் லாவ்ரொவ் சரியாகவே கூறுகிறார்: அணுஆயுதப் போர் ஒரு நிஜமான மற்றும் தீவிர அபாயகமாக உள்ளது.

இந்த போருக்குப் பின்னால் உள்ள உண்மையான உந்துசக்திகள் மோதலின் போக்கில் வெளிப்பட்டுள்ளன. உக்ரைனை நேட்டோவில் உறுப்பு நாடாக இணைக்கக் கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்த மறுத்து, அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் ரஷ்யாவை உக்ரைன் மீது படையெடுக்க தூண்டிவிட்டன. ரஷ்யா அதன் படையெடுப்பை ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையாக வரையறுத்து, அப்பிராந்தியத்தில் அதன் நிலையை உறுதிப்படுத்த அதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட, தந்திரோபாய உபாயமாக கருதியதைச் சமிக்ஞை செய்தது.

ஆனால் அமெரிக்கா அத்தகைய மறுசீரமைப்பை அனுமதிக்காது என்பதுடன், ரஷ்யாவை 'ஆக்கிரமித்து அரைத்து' புதைகுழியில் மூழ்கடிக்கவோ அல்லது அதன் தோல்வியை ஏற்பாடு செய்யவோ தான் முயலும். இதனால் தான், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான எல்லா முயற்சிகளுக்கும் வாஷிங்டன் குழிபறித்தது. இந்தக் கொள்கையை நியாயப்படுத்தும் வாஷிங்டனின் வாய்சவுடால் இந்த மோதலை ஆழமாக்கியுள்ளது. பைடென் புட்டினைப் போர் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டினார், பின்னர் இனப்படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டினார், மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார். மீளமுடியாத, தீவிரப்படுத்தும் தன்மையைக் கொண்டிருந்த ஒவ்வொரு புதிய சூத்திரமும், போர் சக்கரத்தைச் சுழற்றி விட்டது.

உக்ரேனுக்குள் பாரியளவில் இராணுவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் —போர் தொடங்கியதில் இருந்து வாஷிங்டன் $3.7 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆயுதங்களை அனுப்பியுள்ளது— கியேவ் ஆட்சியால் ரஷ்யாவின் தீர்க்கமான தோல்வியைக் கொண்டு வர முடியவில்லை. அமெரிக்கா மற்றும் நேட்டோவின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கையில், ஆபத்து என்னவென்றால், கிழக்கு உக்ரைன் மற்றும் கருங்கடல் கடற்கரையில் ரஷ்யா கட்டுப்பாட்டை எடுக்க முடியும். உக்ரேனியப் படைகள் முன்னோக்கிச் செல்லவில்லை என்றால், பின்னர், குறைந்தபட்சம் இராணுவ நிலைப்பாட்டில் இருந்து, ரஷ்யாவே ஆதாயமடைகிறது.

ஓவல் அலுவலகத்தில் நகர்த்தப்பட்டு கிரெம்ளினில் விவாதிக்கப்பட்ட, இந்த மோதலின் வளர்ச்சி, அதிகரித்தளவில் இராணுவத்தினர் கரங்களில் உள்ளது மற்றும் அது திரும்பப் பெற முடியாத ஒரு புள்ளியை எட்டி வருகிறது. இந்த மோதலில் ரஷ்யாவின் தீர்க்கமான தோல்விக்கு, துருப்புகளை அனுப்புவது உட்பட மற்றும் அந்தளவுக்கு, நேட்டோ சக்திகளே நேரடியான ஈடுபட வேண்டியுள்ளது.

ஆயுதங்கள் அனுப்புவது, கடுமையான பிரகடனங்கள் மற்றும் போர் கவுன்சில்கள் ஆகியவற்றுடன், அமெரிக்கா இந்த மோதலில் ரஷ்யாவை தோற்கடிப்பதற்காக அதன் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையையும் பணயத்தில் வைத்துள்ளது. 'உக்ரேனுக்கு அப்பாலும் ஐரோப்பாவுக்கு அப்பாலும் கூட விஷயங்கள் பணயத்தில் உள்ளன' என்று ஆஸ்டின் செவ்வாயன்று அறிவித்தார். சீனாவுக்கு எதிரான அதன் அச்சுறுத்தல்களின் நம்பகத்தன்மை உட்பட அமெரிக்க மேலாதிக்கத்தின் தலைவிதி, அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வாஷிங்டன் எடுத்த பொறுப்பற்ற முடிவுகள், கூடுதலாக தீவிரமடையும் தர்க்கத்தில் முக்கிய முன்மாதிரியாக மாறிவிட்டன.

பேரரசின் பெருமிதத்துடன், ஐரோப்பாவில் வாஷிங்டன் ஒரு போர் முகாமை கூட்டுகின்ற நிலையில், அது அதன் பின்னால் ஐரோப்பாவின் முக்கிய சக்திகளை இழுத்துச் செல்கிறது. தீவிரப்படுத்தப்படும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பிரிட்டன் ஆழமாக உடந்தையாக இருந்து வருகிறது, ஜேர்மனியும் பிரான்சும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரங்களை ஏற்று வருகின்றன. ஒரு காலத்தில் ஆபரேஷன் பார்பரோசாவைத் (Operation Barbarossa) தொடங்கிய நாடான ஜேர்மனியின் அமெரிக்க விமானத் தளத்தில் இராணுவ சதிகாரர்களை ஒன்றுகூட்டும் வாஷிங்டன், ஜேர்மனியர்களை நடைமுறையளவில் துணைநிற்கும் பார்வையாளர்களாக வைத்து, ரஷ்யாவுடன் அதன் போரைத் திட்டமிடுகிறது.

ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் தலைவர்கள், குற்றகரமாக பைத்தியக்காரத்தனத்தின் விளிம்பில் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து வருகிறார்கள். ஆனால் இந்த ஒரு பொறுப்பற்றத்தன்மை, வர்க்க நலன்கள் மற்றும் முதலாளித்துவ நெருக்கடியின் தர்க்கத்தில் இருந்து எழுகிறது. இந்த மோதலை தீவிரப்படுத்துவது புவிசார் அரசியல் நலன்கள் மட்டுமல்ல, மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவில், தீர்க்கவியலா பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாகும்.

முதலாம் உலகப் போரைப் போலவே, ஏகாதிபத்தியப் போரை மேலுயர்த்திய அதே முரண்பாடுகள் உலக சோசலிசப் புரட்சிக்கான உத்வேகத்தையும் அளிக்கின்றன. போர் வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையிலும் கூட, பணவீக்க அதிகரிப்பால் மற்றும் வரலாற்றுரீதியில் முன்பில்லா சமூக சமத்துவமின்மை மட்டங்களின் அதிகரிப்பால் எரியூட்டப்பட்டு, உலகெங்கிலும் வெகுஜன போராட்டங்களும் தொழிலாள வர்க்க போராட்டங்களும் வெடித்து வருகின்றன.

உலகப் போருக்கான திட்டங்கள் முற்றிலும் மக்களின் முதுகுக்குப் பின்னால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆபத்து குறித்து தொழிலாளர்களை எச்சரிக்கைப்படுத்த வேண்டும், உலகெங்கிலும் அதிகரித்து வரும் போராட்டங்களை ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.

Loading