முன்னோக்கு

ட்ரம்பின் தலைமை தளபதி ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை முடுக்கிவிட்டார் என்பதை குறுஞ்சேதிகள் அம்பலப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் பாதுகாப்புத்துறை தலைமை தளபதி மார்க் மெடோஸ் அனுப்பிய மற்றும் பெற்ற 2,319 குறுஞ்சேதிகளின் சில பகுதிகளை CNN திங்கட்கிழமை வெளியிட்டது, இவை நிர்வாகத்துறை மற்றும் குடியரசுக் கட்சியின் ஒரு கணிசமான பிரிவு ஜனவரி 6, 2021 தேர்தலை அங்கீகரித்து சான்றளிப்பதை முடக்கவும் மற்றும் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவவும் பல மாதங்களாக பாசிஸ்டுகளுடன் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்துகின்றன.

தலைமை செயலகம் மீதான தாக்குதலின் போது என்ன நடந்ததோ அவை திட்டமிட்டவை அல்ல, தன்னியல்பாக நடந்தது மற்றும் முக்கியத்துவமற்றது என்ற ஏற்கனவே கூறப்பட்ட இற்றுப்போன பொய்யை இந்த குறுஞ்சேதிகள் அம்பலப்படுத்துகின்றன.

உண்மையில், CNN இன் கட்டுரை விளக்குவது போல, “தேர்தல் மோசடி பற்றிய ஆதாரங்களை ட்ரம்ப் குழு எவ்வாறு மூலைமுடுக்கெல்லாம் தேடியது மற்றும் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்தது என்பதைக் காட்டும் காலவரிசையை இந்த குறுஞ்சேதிகள் வழங்குகின்றன. தேர்தல் நாளில் தொடங்கி, சதிக் கோட்பாடுகளை முன்நகர்த்திய ஆர்வலர்களை இணைத்ததில் இருந்து, GOP சட்ட வல்லுனர்களுடன் வியூகம் அமைப்பது மற்றும் ஜனவரி 6 இல் பேரணி ஒழுங்கமைப்பாளர்களைத் தயார் செய்வது வரையில் இவை எல்லாவற்றிலும் மெடோஸ் மத்தியில் இருந்தார்.”

அலபாமா குடியரசுக் கட்சியின் மொ புரூக்ஸ் மற்றும் ஜோர்ஜியா குடியரசுக் கட்சியின் மார்ஜோரி டெய்லர் கிரீன் போன்ற பாசிச பிரதிநிதிகளும், டெக்சாஸ் குடியரசுக் கட்சியின் டெட் குரூஸ் போன்ற செனட்டர்களும் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் காங்கிரஸ் சபை முன்னணி செயல்பாட்டாளர்களாக செயல்பட்ட அதேவேளையில், குடியரசுக் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த திட்டத்திற்கு முறையாக 'சேதி அனுப்புவதை' விவாதித்ததுடன் அவர்களின் வலையமைப்புகளுடன் செயல்பட்டனர்.

விஷயத்தைக் குறித்த சொல்லாடலை முன்நகர்த்தவும் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர்களை முடுக்கிவிடவும், மெடோஸ், வலதுசாரி பத்திரிகையாளர்கள் மற்றும் சீன் ஹனிட்டி போன்ற தொலைக்காட்சி பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்தார். அவர் நவ-நாஜி குழுக்கள் மற்றும் பாசிச கூலிப்படைகளுடன் தொடர்பில் இருப்பவர்களாக அறியப்படும் பிரமுகர்களின் ஒரு வலையமைப்புடனும் தொடர்பில் இருந்தார். அந்த ஜனவரி 6 பேரணி பேச்சாளர்களின் வரிசையை அமைப்பதிலும் கூட மெடோஸ் ஈடுபட்டிருந்தார் என்பதை குறுஞ்சேதிகள் எடுத்துக்காட்டுகின்றன.

தேர்தல் முடிவுகளை நீதிமன்றங்கள் மாற்றாது என்பது தெளிவான உடனேயே சம்பவத்திற்கு சில வாரங்களுக்கு முன்னரே, ட்ரம்ப் ஆதரவாளர்கள், ஜனவரி 6 ஐ — அதாவது, ஜனாதிபதி தேர்வுக் குழு அரசியலமைப்பின்படி சான்றளித்து ஒப்புதல் வழங்கும் தேதியை — தேர்ந்தெடுத்திருந்தனர்.

CNN இன் கட்டுரை விளக்குகிறது, 'அலபாமாவின் காங்கிரஸ் சபை உறுப்பினர் ப்ரூக்ஸ், 'நமது ஜனவரி 6 வியூகங்களை நெறிப்படுத்துவது' பற்றி ஊடகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமா என்று கேட்டு, டிசம்பர் 21 இல், மெடோஸ் மற்றும் மற்றவர்களுக்கு ஒரு குழு சேதியை அனுப்பினார்.

டிசம்பர் 26 இல், முன்னாள் டெக்சாஸ் ஆளுநர் ரிக் பெர்ரி, “மார்க், தொடர்ந்து நேரம் வீணாகிக் கொண்டிருப்பதைக் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1/6 க்கு 11 நாட்களே உள்ளன, பதவியேற்புக்கு 25 நாட்களே உள்ளன. நாம் களத்தில் இறங்க வேண்டும்!” என்று மெடோஸிற்கு சேதி அனுப்பினார். “புரிந்து கொண்டேன். புரிந்து கொண்டதாக நினைக்கிறேன்,” என்று மெடோஸ் பதிலளித்தார்.

டிசம்பர் 31, 2020 இல் கிரீன் பின்வருமாறு மெடோஸுக்கு எழுதினார்: “காலை வணக்கம் மார்க், நான் DC இல் இருக்கிறேன். நாம் 6 ஆம் தேதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.” 'நான் ரூடி கிலியாணியை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். அவருடன் நீண்ட காலமாக பேச முடியவில்லை. மேலும் உதவக்கூடிய எவர் உடனும் பேச விரும்புகிறேன். குழுவில் நிறைய பேர் சேர்ந்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் [தேர்தல் முடிவை அங்கீகரிக்கும் ஒப்புதலைத் தடுக்க] சிறந்த நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.”

காங்கிரஸ் சபை உறுப்பினர்களை அல்லது துணை ஜனாதிபதி மைக் பென்ஸைக் கலகக்காரர்கள் பிடிக்க அல்லது கொல்ல சற்று தவறிய பின்னரும் கூட, சதிகாரர்களின் ஒரு பிரிவு இராணுவத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தது. ஜனவரி 17 இல் கிரீன் பின்வருமாறு எழுதினார்: “ட்ரம்ப் இராணுவச் சட்டத்திற்கு அழைப்பு விடுப்பதே நம் குடியரசைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்று, [காங்கிரஸ் சபையின்] வெறும் [குடியரசுக் கட்சி] உறுப்பினர்கள் உடனான நமது தனிப்பட்ட சேதியில் பலரும் கூறுகிறார்கள்.”

ஜனவரி 6 புலனாய்வுக்காக ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டில் இருந்த பிரதிநிதிகள் சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டியிடம் இந்த குறுஞ்சேதிகள் மாதக்கணக்கில் இருந்தன, ஆனால் இப்போது வரையில் அது பொதுமக்களிடம் இருந்து அவற்றை மறைத்திருந்தது. இந்த குறுஞ்சேதிகளில் வெடிப்பார்ந்த மற்றும் தெளிவாக குற்றகரமான உள்ளடக்கம் இருந்தாலும், பைடெனின் நீதித்துறையோ இன்னும் 1,000 குறுஞ்சேதிகளை வெளியிட மெடோஸை நிர்பந்திக்கும் வகையில் அவமதிப்பு மீது அவரைக் கைது செய்ய இன்னமும் கூட மறுக்கிறது, அவரோ அந்த குறுஞ்சேதிகள் மீது நிர்வாக விலக்கீட்டுரிமை பொருந்தும் என்று தவறாக வாதிடுகிறார். இந்த குறுஞ்சேதிகள் இன்னும் சேதப்படுத்துவதாகவும், ஏறக்குறைய ட்ரம்புடனேயே மேற்கொள்ளப்பட்டிருந்த சில குறிப்பிட்ட தகவல் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம்.

அதிகரித்து வரும் பாசிச சதித்திட்டத்தின் அபாயம் குறித்து மக்களை எச்சரிப்பது சமூக எதிர்ப்பைத் தூண்டி, அதன் குடியரசுக் கட்சி 'சகாக்களை' அன்னியப்படுத்தி, அவ்விதத்தில் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அதன் ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய போர் முனைவைக் கீழறுக்கும் என்று ஜனநாயகக் கட்சி அஞ்சுகிறது.

ட்ரம்ப் ஜனாதிபதி காலம் முழுவதும், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் சர்வாதிகார அச்சுறுத்தல்களின் அபாயத்தையும், புலம்பெயர்ந்தோர் மீதான அவரது தாக்குதல்கள் மற்றும் Proud Boys அமைப்பைப் போன்ற பாசிச குழுக்களுக்கு அவர் விடுத்த முறையீடுகளையும் குறைத்துக் காட்டியதுடன், அதற்கு பதிலாக குடியரசுக் கட்சியினருடன் 'நல்லிணக்கத்துக்கு' முறையீடு செய்து வந்தனர். ட்ரம்ப் ரஷ்யாவை நோக்கி போதுமானளவுக்கு ஆக்ரோஷமாக இல்லை என்றும், உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமீர் ஜெலென்ஸ்கிக்கான இராணுவ உதவிகளை நிறுத்தினார் என்றும் இந்த அடித்தளத்தில் தான் 2018 இல் ஜனநாயகக் கட்சியினர் அவர் மீது பதவிநீக்க குற்றவிசாரணையைக் கொண்டு வர முயன்றனர். போருக்குச் சார்பாக பொதுக் கருத்தைத் தயாரிப்பதற்கான ஒரு நீண்ட கால முயற்சி இருந்துள்ளது என்பது இப்போது தெளிவாகிறது.

பல ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியினர் இந்த பாத்திரம் தான் வகித்து வருகிறார்கள். ஜனவரி 6, 2021 க்கு பின்னர் உடனடியாக குடியரசுக் கட்சியின் உயர் நிர்வாகிகள் நடத்திய கட்சி விவாதங்களின் விவரங்களை நியூ யோர்க் டைம்ஸ் சமீபத்தில் வெளியிட்டது, ஜனவரி 6 க்குப் பின்னர் ட்ரம்பின் குற்றவியல் தன்மை இன்னும் அப்பட்டமாக இருக்கும் என்று நம்புவதாகவும், “ஜனநாயகக் கட்சி நமக்காக ஒரு வேசியின் மகனைக் கவனித்துக் கொள்ளும்' என்றும் செனட் சபையின் குடியரசுக் கட்சி தலைவர் மிட்ச் மெக்கொன்னெல் (R-KY) அவரது அரசியல் ஆலோசகர்களுக்குக் கூறியதும் அதில் உள்ளடங்கும்.

ஆனால் ட்ரம்பைக் 'கவனித்துக் கொள்ள', ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை எதிர்த்த பெருந்திரளான மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு தீவிரமாக முறையீடு செய்ய வேண்டியிருக்கும், இதைத் தவிர்க்கத் தான் ஜனநாயகக் கட்சியினர் பெரும் பிரயத்தனம் செய்தனர். எந்தவொரு முறையீடும் வெகுஜன போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தூண்டிவிடும், அது சமூக சமத்துவமின்மை மீதான தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த கோபத்தைத் தட்டியெழுப்பி, பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஒரு சவாலைக் கொண்டு வந்துவிடுமென ஜனநாயகக் கட்சியினர் அஞ்சினர். ஆகவே தான் பைடெனின் சேதி சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலைக் குறித்ததாக இருக்கவில்லை, மாறாக 'தேச ஒற்றுமை' மற்றும் போர் தயாரிப்புக்கான முறையீடாக இருந்தது.

ட்ரம்புக்கு எதிராக மக்களைத் அணித்திரட்டுவது மீதான ஜனநாயகக் கட்சியின் பயம், அதன் இரண்டாவது பதவிநீக்க குற்றவிசாரணையைப் பயனற்றதாக ஆக்கியதுடன், குடியரசுக் கட்சியின் பாசிச கூறுபாடுகளைப் பெரிதும் பலப்படுத்தியது, அது எதிர்தாக்குதலுக்குச் சென்றது. இதன் விளைவாக தான், ஜனநாயகக் கட்சி 'நமக்காக ட்ரம்பைக் கவனித்துக் கொள்ளும்' என்ற மெக்கொன்னெலின் நம்பிக்கை தகர்ந்தது.

டைம்ஸ் எழுதுகிறது, “அவராலும் அவர் அரசியல் இயக்கத்தாலும் பழிவாங்கப்படுவோம் என்று அவர்கள் அஞ்சியதால், அவர்கள் இருவரும் ஒரு சில வாரங்களுக்குள் திரு. ட்ரம்ப் உடனான முற்றுமுதலான மோதலில் இருந்து பின்வாங்கினார்கள். அதன் அர்த்தம் கடினமாக வாக்குகள் என்பதும், அவர்களின் பெரும்பாலான சக நண்பர்களுடன் அவர்களைக் கடுமையாக கொண்டு வந்து நிறுத்தும் என்பதால், அவர்களின் முனைவு விரைவிலேயே வேகம் குறைந்தது.” இப்போது பணவீக்கம் அதிகரித்து வருவதால், பாசிசவாத குடியரசுக் கட்சியினர் வரவிருக்கும் இடைத் தேர்தல்களில் வெகுஜனங்களின் சமூக அதிருப்தியை மூலதனமாக்கி ஆதாயமடைய பார்க்கிறார்கள்.

இந்த சமீபத்திய வெளிப்பாடுகள் முதலாளித்துவ அரசியல் ஒழுங்கின் ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்தத்தன்மை மீதான அனைத்து தவறான பிரகடனங்களையும் அம்பலப்படுத்துகின்றன. யதார்த்தத்தில், அமெரிக்க அரசியல் அமைப்பு அளப்பரிய உள்நாட்டு சமூக பதட்ட அழுத்தத்தின் கீழ் உடைந்து கொண்டிருக்கிறது, இரண்டு கட்சிகளும் சமூகப் புரட்சி குறித்த பயத்தால் வழிநடத்தப்படுகின்றன. பைடெனும், தளபதிகளும் மற்றும் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் சிற்பிகளும் ரஷ்யாவுடனான போருக்கு அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் ஆர்வம் இருப்பதாக ஆழ்ந்து தவறாக மதிப்பிட்டுள்ளனர், அது முன்னோடியில்லாத வகையில் தொழிலாள வர்க்க வெறுப்பின் வெடிப்புகளுக்கு மட்டுமே வழி வகுத்து வருகிறது.

அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளதும், இப்போது ஆகக் குறைந்த கட்டுப்பாடுகள் கூட இல்லாமல் பரவி வரும் ஒரு பெருந்தொற்றுக்கு மத்தியில், வெறும் ஒரு சில வாரங்களில், இந்த போர் சமூக கஷ்டங்களை அதிகப்படுத்தி உள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட ஹாரிஸ் கருத்துக் கணிப்பு, 61 சதவீதம் முதல் 30 சதவீத வரையிலான அமெரிக்கர்கள் பொருளாதாரம் தவறான பாதையில் இருப்பதாக நம்புகிறார்கள், அதேவேளையில் 48 சதவீதம் பேர் அவர்களின் சொந்த நிதி நிலைமையே மோசமாகி வருவதாகக் கூறுகிறார்கள்—இது மார்ச் 2021 இல் கூறிய 21 சதவீதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.

கலிபோர்னியாவில் செவிலியர்கள், எண்ணெய்த்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், இலினோயில் பட்டதாரி மாணவர்கள், விஸ்கான்சினில் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் வாஷிங்டன் மாநிலத்தில் கப்பல் கட்டுபவர்கள் ஆகியோரிடையே வெடித்த சமீபத்திய வேலைநிறுத்தங்கள், தொழிலாள வர்க்கத்தின் வசந்தகால தாக்குதலில் முதல் மோதல்களைக் குறிக்கின்றன. இலங்கை, பெரு, சூடான், இந்தோனேசியா மற்றும் எண்ணற்ற பிற நாடுகளின் தொழிலாளர்கள் ஏற்கனவே சகிக்க முடியாத வாழ்க்கை செலவினங்கள் மீது இந்த போர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு எதிராகப் போராடுகின்ற நிலையில், இந்த இயக்கம் நடைபெறுகிறது. இந்த இயக்கங்களை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான, சர்வாதிகாரம் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான ஒரு பொதுவான, சுய-நனவுப்பூர்வமான ஒரு சர்வதேசப் போராட்டத்திற்குள் கொண்டு செலுத்துவதே சோசலிஸ்டுகளின் பணியாகும்.

Loading