மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
2020 தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், அதிகாரத்தில் நீடிப்பதற்காக மாதக்கணக்கில் ட்ரம்ப் தீட்டிய சதித்திட்டத்தை விவரித்து வாஷிங்டன் போஸ்ட் ஜனவரி 6, 2021 கிளர்ச்சி மீது மூன்று பாகங்களின் விசாரணை அறிக்கை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை பிரசுரித்தது.
'செங்கொடிகள்' (Red Flags) என்ற தலைப்பில் இருந்த அந்த தொடரின் முதல் பகுதி, டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 6 க்கு முந்தைய நாட்களில் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியைத் தயாரிப்பு செய்து வந்ததை ஒட்டுமொத்த அரசு எந்திரமும் அறிந்திருந்தது என்பதை தெளிவுபடுத்துகிறது.
ஜனவரி 6 “பாரிய பாதிப்புக்குரிய நிகழ்வாக' இருக்கும் என்பது உள்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்ததுடன், காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்க கூடுதல் இரத்த வினியோகங்களுக்கு தயாரிப்பாக இருக்குமாறு மருத்துவமனைகளுக்குத் தெரிவித்திருந்ததாக போஸ்ட் விசாரணை விளக்குகிறது. பாசிச துணைப்படைகளின் வலையமைப்புகள் களம் அமைத்ததுடன், தலைமைச் செயலகத்தை எட்டுவதற்கான விரிவான திட்டங்களைத் தயாரித்தன. DHS அதிகாரிகள் டோனெல் ஹார்வின் மற்றும் மைக் சேனா ஆகியோர் வன்முறை அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பது குறித்து ஓர் கூட்டம் ஏற்பாடு செய்ததாகவும், அதில் நாடெங்கிலுமான DHS 'தகவல் இணைவு மையங்களை' சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் ஜனவரி 2 இல் போஸ்ட் அறிவித்தது. முதல் முறையாக, கடற்கரையிலிருந்து கடற்கரை வரை, மையங்கள் செந்நிறத்தில் சிமிட்டுகின்றன,' என்று போஸ்ட் தெரிவிக்கிறது. 'கவலைக்குரிய மணி நேரமும், தேதியும், இடமும் அதே தான்: மதியம் 1 மணி, இடம் அமெரிக்க தலைமைச் செயலகம், ஜனவரி 6.”
இராணுவத்தை நிலைநிறுத்த வேண்டி இருந்தால், ட்ரம்ப் சாதாரண சிப்பாய்களுக்கும் முறையீடு செய்து நடைமுறையளவில் ஆயுதப்படையில் பிளவை உண்டாக்கக் கூடும் என்று உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் அஞ்சினர். வன்முறைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருந்ததால் பணியாளர்களும் அதிகாரிகளும் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அரசின் பல்வேறுதுறை தலைவர்களும் அறிவித்தனர். ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் அன்றைய நிகழ்வுகளுக்கான தயாரிப்பில் இராணுவம் மற்றும் பொலிஸூடன் கலைந்துரையாடி இருந்தனர்.
தேர்வுக்குழு வாக்குகளை அங்கீகரிப்பதை நிறுத்தும் ட்ரம்பின் திட்ட இலக்கை ஏறக்குறைய அது எட்டி இருந்ததை போஸ்ட் கட்டுரை தெளிவுபடுத்துகிறது. ஸ்டீவன் பானன் மற்றும் ஸ்டீபன் மில்லர் போன்ற ஹிட்லரை நேசிப்பவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அது, கூட்டுப்படைகளது தலைமை தளபதியின் ஓவல் அலுவலக கட்டளை மையத்திலிருந்து அவரால் முடுக்கி விடப்பட்டிருந்தது. ஜனவரி 6 இல் அமெரிக்க தலைமை செயலகத்தில் வெடித்த அந்த நன்கு திட்டமிடப்பட்ட வன்முறை ஒப்பீட்டளவில் ஒரு மாகாண அளவிலான முன் ஆயத்தமின்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹிட்லரின் பீர் ஹால் பதவிக் கவிழ்ப்பு சதி விவகாரத்தைப் போல இருந்தது.
அந்த விசாரணையுடன் சேர்ந்து வெளியான ஓர் அறிக்கையில், போஸ்ட் நிர்வாக பதிப்பாதிரியர் Sally Buzbee பின்வருமாறு எழுதினார்: “அன்றைய வன்முறை ஒரு தற்செயலான நடவடிக்கையோ அல்லது ஒரு தனிப்பட்ட சம்பவமோ இல்லை. … அமெரிக்க தலைமைச் செயலகத்தில் ஜனவரி 6 இல் நடந்த கிளர்ச்சி அமெரிக்க வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.”
ஆனால் ஜனநாயகக் கட்சியும் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த ஊடகமும் அந்த பதவிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்கு முன்னர் ஜனவரி 6 ஐ அவ்விதமாக காட்டவில்லை. தொலைக்காட்சியில் தனது திட்டங்களை உரத்தக் குரலில் அறிவித்த ட்ரம்ப், “ஜனவரி ஆறு, உங்களை டி.சி. இல் சந்திக்கிறேன்!” என்று கொட்டை எழுத்துக்களில் ட்வீட் செய்து அவர் ஆதரவாளர்களைச் செயலில் இறக்கிய அதேவேளையில், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த ஊடகமோ அவை எல்லாம் வெறும் வெற்று உளறல்கள் என்று அவற்றை உதறித் தள்ளின. ஜனவரி 6 க்கு முந்தைய நாட்கள் மற்றும் வாரங்களில், நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் சிஎன்என் ஆகியவை, ஜனநாயக ஒழுங்கு 'நெகிழ்வுடன், உண்மையாக, வலுவாக' இருப்பதாகவும், மக்கள் 'அமைதியாக' இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்று வலியுறுத்திய பைடெனின் டிசம்பர் 15 வலியுறுத்தலை எதிரொலித்து மக்களை மயக்கத்தில் வைத்தன.
ஒரேயொரு பிரசுரம், உலக சோசலிச வலைத் தளம் மட்டுந்தான், ட்ரம்ப் சதி முன்வைத்த உயிர்வாழ்வுக்கான அபாயம் குறித்து தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் எச்சரித்ததுடன், சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்ட முனைந்தது.
அந்த எச்சரிக்கைகள் ஜனவரி 6 க்கு பல மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தன என்றாலும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மற்றும் பைடெனின் பதவியேற்புக்கு முன்னரும் ட்ரம்பின் பாசிச மூலோபாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த போது அவை மிகவும் அவசரமாகவும், திட்டவட்டமாகவும் ஆகியிருந்தன.
ஜூன் 1, 2020 இல், வெள்ளை மாளிகைக்கு வெளியே லாஃபாயெட் சதுக்கத்தில் (Lafayette Square) கூடியிருந்த மக்களை காட்டுமிராண்டித்தனமாக வெளியேற்ற டொனால்ட் ட்ரம்ப் இராணுவப் பொலிஸை நிலைநிறுத்திய போது, WSWS எழுதியது, “அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை எட்டப்பட்டு விட்டது. இராணுவ ஆட்சியின் அடிப்படையில் தனிநபர் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகள், அதீத சமூக சமத்துவமின்மை மற்றும் முடிவில்லா போரின் தாக்கத்தின் கீழ், அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த நெருக்கடியின் விளைபொருளாகும்.”
செப்டம்பர் 29 ஜனாதிபதி விவாதத்தின் போது ட்ரம்ப் பாசிச அமைப்பான Proud Boys அமைப்பை அமெரிக்கத் தேர்தலிலும் மற்றும் அதற்குப் பின்னரும் 'பின்புலத்தின் பக்கபலமாக' இருக்க உத்தரவிட்டார். அக்டோபர் 2 இல், உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “ட்ரம்பின் அரசியல் மூலோபாயம் போதுமானளவுக்கு மிகவும் வெளிப்படையாக உள்ளது, 'அழுகை 'நாசம்,” மற்றும் போர் நாய்களைக் கட்டவிழ்த்து விடுதல்'” என்ற இழிவார்ந்த வார்த்தைகளால் தொகுத்தளிக்கலாம்,” என்று எச்சரித்தது.
ட்ரம்புக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டு, அவரைச் சிகிச்சைக்காக வால்டர் ரீட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவர் விமானத்தில் ஏற்றப்பட்ட போது, WSWS எழுதியது, “திங்கட்கிழமை இரவு வால்டர் ரீட் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்புவது என்ற ட்ரம்பின் முடிவு மிகத் தெளிவாக அவரின் அந்தஸ்து மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் பாதிக்கப்படும் என்ற ஆழ்ந்த கவலைகளால் உந்தப்பட்டிருந்தது.”
சில நாட்களுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியின் மிச்சிகன் ஆளுநர் க்ரெட்சன் விட்மரை கடத்திக் கொல்ல சதி செய்ததற்காக ட்ரம்ப் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த சதித்திட்டம் 'டொனால்ட் ட்ரம்ப் ஒரு 'அமைதியான அதிகார மாற்றத்திற்கு' ஒப்புக் கொள்ள மறுக்கும் போது அவர் என்ன அர்த்தப்படுத்துகிறார் என்பது மீதான எல்லா சந்தேகத்தையும் நீக்குகிறது. அமெரிக்க ஜனாதிபதி நவம்பர் 3 தேர்தல் முடிவுகளை மாற்ற ஒரு பரந்தளவிலான மற்றும் வன்முறையான சதியில் வார்த்தைகளிலும் மற்றும் செயல்களிலும் தெளிவாக உடந்தையாய் இருக்கிறார்,' என்று உலக சோசலிச வலைத் தளம் எழுதியது.
வாக்குகளை செல்லுபடி அற்றதாக ஆக்குவதற்கும் அதிகார மாற்றத்தை ஒத்தி வைக்க நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதற்கும் ட்ரம்பின் போலி-சட்ட மூலோபாயம் குறித்து எச்சரிக்கை செய்யும் பல கட்டுரைகளை உலக சோசலிச வலைத் தளம் தேர்தலுக்கும் மற்றும் டிசம்பர் பிற்பகுதிக்கும் இடையே வெளியிட்டது. ட்ரம்ப் ஜனவரி 6 குறித்து பேசத் தொடங்கினார். உலக சோசலிச வலைத் தளம் டிசம்பர் 28 இல் பின்வருமாறு எழுதியது:
232 க்கு 306 என்று பைடென் ஜெயித்துள்ள தேர்வுக் குழுவின் வாக்குகளை காங்கிரஸ் சபை முறைப்படி எண்ணி, அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் தேர்வானதை ஜனவரி 6 இல் சான்றளிக்க உள்ளது. இந்த செயல்முறையைத் தடம் புரளச் செய்ய பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் உள்ள அவரின் குடியரசுக் கட்சி ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ள அதேவேளையில், அவரின் அதிவலது ஆதரவாளர்களை அதே நாளில் வாஷிங்டனின் வீதிகளில் இறங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். “ஜனவரி 6 இல் டி.சி. இல் மிகப் பெரிய போராட்டம். அங்கே இருங்கள், அது மூர்க்கமாக இருக்கும்!” என்றவர் ட்வீட் செய்து, வன்முறை பேராபத்தை அதிகரித்தார்.
ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கான தயாரிப்புகளைக் குறைத்துக் காட்டுவதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சிகள் ட்ரம்பின் பதவிக்கவிழ்ப்பு சதிக்கு ஒத்துழைப்பதைக் குறித்து WSWS ஜனவரி 5 இல் பின்வருமாறு எச்சரித்தது:
ஜனநாயகக் கட்சி தலைமையின் சேதி முற்றிலும் மெத்தனமான ஒன்றாகும். சபாநாயகர் நான்சி பெலோசியின் உயர்மட்ட அதிகாரியும் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வுக் குழு தலைவருமான Hakeem Jeffries திங்கட்கிழமை காலை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், ஜோர்ஜியா தேர்தல் அதிகாரிகளுடன் ட்ரம்பின் தொலைபேசி உரையாடலின் எழுதுப்பிரதியைக் கூட அவர் வாசித்திருக்க வில்லை என்றார். ட்ரம்ப் குற்றம் செய்தவரா, அதற்காக அவர் கணக்கில் கொண்டு வரப்படுவாரா என்று கேட்கப்பட்டதற்கு, Jeffries கூறுகையில், “நாங்கள் பின்நோக்கி பார்க்கவில்லை. நாங்கள் ஜனவரி 20 இல் ஜோ பைடெனின் பதவியேற்பு விழாவை நோக்கி முன்னோக்கி பார்க்கிறோம்,” என்றார். ட்ரம்பின் தொடர்ச்சியான ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிகள் மற்றும் பாசிச சக்திகளை அவர் தூண்டுவது ஆகியவற்றால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஜனநாயக உரிமைகள் மீதான அச்சுறுத்தலின் தீவிரத்தை ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டு குறைத்துக் காட்டுகிறார்கள்.
ஜனாதிபதி தேர்வு குழுவின் ஒப்புதல் வெறுமனே ஒரு சட்ட செயல்முறை அல்ல என்று ஜனவரி 6 காலையில் WSWS எழுதியது:
2020 ஜனாதிபதித் தேர்தலில் தேர்வுக் குழுவின் வாக்குகளை முறைப்படி எண்ணுவதற்காக அமெரிக்க காங்கிரஸ் இன்று கூடுகிறது. சாதாரண நிலைமைகளின் கீழ், இந்த செயல்முறை ஒரு சம்பிரதாயமாக இருக்கும். ஆனால், ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்தி, தேர்தல் முடிவுகளை செல்லுபடியற்றதாக்கி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒரு செயலூக்கமான தொடர் முயற்சியின் நிலைமைகளின் கீழ் இன்றைய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
“ஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி' என்று தலைப்பிட்டு ஜனவரி 7 இல் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு எழுதினார்:
அமெரிக்க காங்கிரஸ் சபையை முற்றுகையிடுவதிலும், பீதியுற்ற பிரதிநிதி சபை உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களைப் பதட்டமாக வெளியேற்றுவதிலும், ஜோசப் பைடெனின் தேர்வுக் குழு பெரும்பான்மையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதை தாமதப்படுத்துவதிலும், பிரதிநிதிகள் சபை அலுவலக சபாநாயகர் நான்சி பெலோசியை முற்றுகையிடுவதிலும் கூட போய் முடிந்த, வாஷிங்டன் டி.சி. பாசிசவாத கிளர்ச்சி அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை குறிக்கிறது.
அமெரிக்க ஜனநாயகத்தின் வெல்ல முடியாத ஆற்றலும் மற்றும் காலத்தால் நிலைத்திருக்கும் தன்மையும் மீதான பழைய பெருமைகள் முற்றிலுமாக வெறும் அரசியல் கட்டுக்கதையாக அம்பலப்பட்டு மதிப்பிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க பாசிசத்தின் மேலெழுச்சி குறித்த சின்கிளேர் லூவிஸின் (Sinclair Lewis) நியாயமான புகழ்வாய்ந்த கற்பனை கதையின் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்ட “இங்கே அது நடக்காது,” என்ற பிரபல வாக்கியத்தையே, சம்பவங்கள் தீர்க்கமான மிஞ்சிவிட்டன. இங்கே ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடக்க முடியும் என்பது மட்டுமல்ல, ஜனவரி 6, 2021 மதியம் இங்கே அது நடந்துள்ளது.
ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பை அம்பலப்படுத்தி எதிர்ப்பதில் உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் பதிவுகள் ஒப்பிட முடியாதவை. கூகிள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற பெருநிறுவனங்களின் தணிக்கை மற்றும் வாசகர் எண்ணிக்கையை ஒடுக்கும் நடவடிக்கைகளை எதிர்கொண்ட போதும், உலக சோசலிச வலைத் தளம் கடந்த 10 மாதங்களாக இரண்டு கட்சிகளின் மூடிமறைப்புகளை முழுமையாக அறிவித்துள்ளதுடன், ட்ரம்ப் மற்றும் அவரின் பாசிசவாத ஆலோசகர்கள் முன்வைக்கும் தொடர்ச்சியான ஆபத்தைச் சாத்தியமானளவுக்கு பரந்தளவில் தொழிலாள வர்க்க புரிதலுக்குக் கொண்டு செல்லப் போராடி வருகிறது.
'உத்தியோகபூர்வ' பத்திரிகைகள் அவற்றின் விசாரணை முடிவுகளைக் குறித்து பெருநிறுவன ஊடகத்தில் பெரிதாக ஒன்றும் குறிப்பிடாமல், ஏற்கனவே போஸ்ட் செய்தியைக் கடந்து சென்று விட்டன.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கருத்துரைப் பக்கங்களில் தேர்தல் மோசடி குறித்த அவரின் பாசிசவாத பொய்களை உமிழ்வதற்கு அது ட்ரம்பை அனுமதிக்கிறது, மேலும் செனட் சபையில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கு தலைமை ஏற்றிருந்த ஜோஸ் ஹாலெ வினியோகச் சங்கிலி குறித்து ஒரு கொள்கை அறிக்கையோடு உயர்மட்ட சமூகத்தில் அவர் மதிப்பை மீளமைக்க நியூ யோர்க் டைம்ஸ் அக்டோபர் 29 இல் அவருக்கு இடம் கொடுத்தது, அது குறித்து டைம்ஸ் கருத்துரைப் பக்க ஆசிரியர் குறிப்பிடுகையில், “டைம்ஸ் வாசிகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமென நம்புவதாக' தெரிவித்தார். ஜனநாயகக் கட்சி சார்பு ஜாக்கோபின் பத்திரிகையும் ஜனவரி 6 நிகழ்வுகளை குறைத்துக் காட்டும் பல கட்டுரைகளை வெளியிட்டு இதே போன்று பங்கு வகிக்கிறது. அம்மாத சம்பவங்களை ஒரு கிளர்ச்சியாக குறிப்பிட்டவர்களை ஏளனப்படுத்தி அது ஜனவரி 26 இல் வெளியிட்ட ஒரு கட்டுரையில், “கண்ணீரின் தடம் ஒரு பேரலையாக அதிகரித்த போது மிகைப்பட்ட பாசாங்குத்தனமாக ஆனது,” என்றும், ஜனவரி 6 'அபத்தமான ஒரு வினோத நாடகம்' என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் குறிப்பிட்டது.
இதற்கிடையே, ட்ரம்பும் அவரின் பாசிச ஆலோசகர்களும் அவர்களின் அடுத்த நடவடிக்கைகளைத் திட்டமிட சுதந்திரமாக விடப்பட்டுள்ளனர். உலக சோசலிச வலைத் தளம் அவர்களின் பாசிச திட்டங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தும் என்பதோடு, சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும்.
