முன்னோக்கு

ஜனவரி 6தாக்குதலுக்கு முன்னதாக, ட்ரம்ப் வழக்கறிஞர்கள் இராணுவத்திடம் வாக்குச்சீட்டுக்களைக் கைப்பற்ற கோரும் உத்தரவை எழுதியிருந்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை, பொலிட்டிகோ என்ற செய்தி இணைய தளம் டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர்களால் எழுதப்பட்ட வரைவு ஆணையின் முழு உரையையும் வெளியிட்டது. நாடு முழுவதும் இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி அவற்றுடன் 2020 ஜனாதிபதி தேர்தலில் மில்லியன் கணக்கான வாக்குகளை கைப்பற்ற என எண்ணியிருந்தது.

President Donald Trump speaks during a campaign rally at Cecil Airport, Thursday, Sept. 24, 2020, in Jacksonville, Fla. (AP Photo/Evan Vucci)

அந்த வரைவு உத்தரவாணை மீதான ஒரு பகுப்பாய்வு பின்வருவதைத் தெளிவுபடுத்துகிறது: அது ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் ஒரு சாசனமாக இருந்தது. அது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, ஜனநாயக உரிமைகளை நீக்கி, வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்து, நாட்டை இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்கும்.

“2020 பொதுத் தேர்தல் சம்பந்தமாக தேசிய பாதுகாப்பு தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்வதற்கான ஜனாதிபதி ஆய்வு முடிவுகள்' என்று தலைப்பிட்டிருந்த அந்த வரைவு ஆணை, ஜோ பைடென் மற்றும் 'வெளிநாட்டு விரோதிகளால்' 2020 தேர்தல் களவாடப்பட்டது என்றும், மில்லியன் கணக்கான வாக்குகள் டொமினியன் வாக்கு முறை (Dominion Voting Systems) போன்ற வாக்குப்பதிவு கருவி உற்பத்தியாளர்களின் உதவியுடன் மோசடியாக பைடெனுக்குச் செலுத்தப்பட்டன என்றும் பெரும் பொய்யின் அடிப்படையில் உள்ளது.

“நவம்பர் 3, 2020 தேர்தலில் வெளிநாட்டு மற்றும் சர்வதேச தலையீடு இருந்ததற்கான ஆதாரத்தை' மேற்கோளிட்டுள்ள அந்த வரைவு, 'உடனடியாக... எந்திரங்கள், சாதனங்கள், மின்னணுரீதியில் சேமிக்கப்பட்ட தகவல்கள், [தேர்தல் சம்பந்தப்பட்ட] ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி, சேகரித்து, தக்க வைத்து, ஆய்வு செய்ய' நாடெங்கிலும் இராணுவத்தை நிலைநிறுத்த உத்தரவிட்டிருக்கும். உள்நாட்டு சட்ட அமலாக்கத்தை இராணுவம் நடத்த முடியாது என்ற ஜனநாயக கோட்பாட்டுக்காக, இதைச் செய்ய, posse comitatus அமலாக்க ஆணையத்தைக் கலைக்க வேண்டி இருந்திருக்கும். பின்னர் சமூக போராட்டங்கள் மற்றும் கைது செய்யப்படும் எதிர்ப்பாளர்களை நசுக்க இராணுவம் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

வாக்குச்சீட்டுக்களைப் பாதுகாக்க ஜனநாயகக் கட்சியின் ஆளுநர்கள் மாநில தேசிய பாதுகாப்புப் படைக்கு உத்திரவிடும் சாத்தியக்கூறை எதிர்நோக்கி, அந்த ஆணை 'பெயர் அல்லது அலகு மூலம்' தேசிய பாதுகாப்புப் படையை கூட்டாட்சிமயப்படுத்தும் அதிகாரத்தை இடைக்கால பாதுகாப்புத்துறை செயலர் கிறிஸ்டோபர் மில்லருக்கு வழங்கி இருக்கும், ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் இருந்த மாநிலங்களில் பாதுகாப்புப் படைகளைக் கட்டுப்பாட்டில் எடுக்கவோ, அல்லது அவருக்கு விசுவாசமான படைப்பிரிவுகள் இருந்த மாநிலங்களில் அவற்றை கூட்டாட்சிமயப்படுத்தவோ ட்ரம்ப் திட்டமிட்டார் என்பதை இந்த மொழியே சுட்டிக் காட்டுகிறது.

பின்னர் அந்த வரைவு ஆணை தேர்தல் களவாடப்பட்டதா என்பதை மதிப்பீடு செய்து, அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதில் இருந்து ஏழு நாட்களுக்குள், ட்ரம்ப் விரும்பிய தீர்மானத்தை எட்டுவதற்காக முன்-தீர்மானிக்கப்பட்ட ஒரு மதிப்பீட்டை வழங்க, ட்ரம்பின் விசுவாசியும், தேசிய உளவுத்துறையின் அதிவலது இயக்குனருமான ஜோன் ராட்க்ளிஃபுக்கு உத்தரவிட்டிருக்கும்.

பின்னர் இந்த தீர்மானங்கள் 'உளவுத்துறை சமூகத்தின்' முடிவாக முன்வைக்கப்பட்டிருக்கும், அந்த தருணத்தில் அந்த ஆணை ட்ரம்ப் எதிர்ப்பாளர்களை ஒடுக்க 'அவசியமான நடப்பிலுள்ள அனைத்து ஆதாரவளங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உரிய முறையில் அனைத்து வகை குற்றவியல் மற்றும் பொதுச் சட்ட நடைமுறைகளை நடைமுறைப்படுத்தி, இந்த நடைமுறைகளை மேற்பார்வை செய்ய' ஒரு சிறப்பு குழுவையும் நிறுவி இருக்கும். இது தேசதுரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களைக் கொண்டு ட்ரம்ப் அவர் அரசியல் எதிர்ப்பாளர்களையும் ஜனநாயகக் கட்சியின் சட்ட வல்லுனர்களையும் வழக்கில் இழுத்து, சிறையில் அடைத்து அல்லது மரண தண்டனை வழங்க பயன்படுத்தும் நீதி விசாரணையற்ற இயங்குமுறையாக ஆகி இருக்கும். தேர்தலில் வெளிநாட்டு தலையீடு இருந்தது என்ற வாதத்தைச் சுற்றி சுழலும் இந்த திட்டத்தை வைத்து பார்த்தால், உள்நாட்டு எதிர்ப்பை நசுக்குவதுடன் வெளிநாட்டு இராணுவ சாகசங்களும் இணைக்கப்பட்டு இருக்கலாம்.

இத்தகைய அசாதாரண நடவடிக்கைகளின் சட்ட அதிகாரமாக, இந்த ஆணை நிர்வாக உத்தரவுகளை மேற்கோளிடுவதுடன், அவசரகால நிலையின் கீழ் ஜனாதிபதி மற்றும் உளவுத்துறை முகமைகளுக்குச் சர்வாதிகார அதிகாரங்களை வழங்குகிறது.

அது நிர்வாக உத்தரவு 12333 ஐ மேற்கோளிடுகிறது, ரீகன் சகாப்த உத்தரவான இது நிர்வாகத்துறைக்கு மக்களை உளவுபார்க்க ஏறக்குறைய கட்டுப்பாடில்லாத அதிகாரத்தை வழங்குகிறது. நிர்வாக உத்தரவு 12333 பெருந்திரளான மக்கள் மீது NSA உளவுபார்ப்பதற்கு அடித்தளமாக இருந்ததை எட்வார்ட் ஸ்னோவ்டன் அம்பலப்படுத்தினார். ட்ரம்பின் உத்தரவு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி சுற்றறிக்கை 13 ஐயும் மேற்கோளிடுகிறது, இந்த உள்அலுவலக இரகசிய சுற்றறிக்கை (இதன் துல்லியமான உள்ளடக்கம் தெரிய வரவில்லை) முன்-ஒப்புதல் இல்லாமலேயே இராணுவத்திற்கு இணையவழி போர்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்குவதுடன், தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி சுற்றறிக்கை 21 மிகவும் இரகசியமானது, அது இருப்பதே 'பொதுவாக அறிவிக்கப்படவில்லை,” என்று Politico எழுதியது. இணையம் மற்றும்/அல்லது தொலைக்காட்சி நிலையங்களைத் தணிக்கை செய்யவும் முடக்கவும் பென்டகனுக்கு உத்தரவிட ட்ரம்ப் திட்டமிட்டு வந்ததை இந்த சுற்றறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

சட்டரீதியான அதிகாரத்தைப் பொறுத்த வரையில், இந்த வரைவு ஆணை தேசிய அவசரகால சட்டம் (NEA) மற்றும் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) ஆகியவற்றை மேற்கோளிடுகிறது. இந்த NEA சட்டம் ஜனாதிபதி தேசியளவில் அவசரகால நிலையை அறிவிக்கவும் மற்றும் கட்டுப்பாடில்லா நிர்வாக அதிகாரத்தைப் பெறவும் அனுமதிக்கிறது. இந்த சட்டம் தான் Rex84 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான ரீகன் நிர்வாகத்தின் திட்டத்திற்கு போலி-சட்ட அதிகாரமாக சேவையாற்றியது, இது அரசியலமைப்பையே இடைநீக்கம் செய்து, “நிலைகுலைப்பவர்களை' காலவரையின்றி கடுங்காவலில் வைக்க அனுமதிக்கும். IEEPA சட்டம் 'தேசிய பாதுகாப்புக்கு வழமைக்கு மாறான மற்றும் அசாதாரண அச்சுறுத்தல்' ஏற்படும்பட்சத்தில் தேசிய அவசரகால நிலைகளை அறிவிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதுடன், ஜனாதிபதி யாரை அச்சுறுத்தலில் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கிறாரோ அவர்களின் மற்றும் அமைப்புகளின் சொத்துக்களைக் கைப்பற்றி பறிமுதல் செய்ய ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குகிறது.

இந்த வரைவு ஆணை வெளியிடப்பட்டிருப்பது நவம்பர் 3, 2020 இல் இருந்து ஜனவரி 6, 2021 வரையில் ட்ரம்பின் மூலோபாயத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த வரைவு ஆணை டிசம்பர் 16 என்று தேதியிடப்பட்டுள்ளது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், டிசம்பர் 14 இல், தேர்வுக் குழு உறுப்பினர்கள் மாநில தலைநகரங்களில் சந்தித்து, தேர்வுக் குழுவின் முறையான ஜனவரி 6 எண்ணிக்கைக்காக வாஷிங்டன் டி.சி. க்கு எந்தெந்த வேட்பாளர்களை அனுப்புவது என்று வகைப்படுத்தி இருந்தார்கள்.

ஜனவரி 6 இல் வாஷிங்டனுக்கு அனுப்புவதற்காக ட்ரம்ப் ஆதரவு வேட்பாளர்களை அங்கீகரிக்க குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களை அணித்திரட்ட இழுபறியில் இருந்த ஏழு மாநிலங்களில் ரூடி கிலானி முயற்சி செய்து வந்ததை CNN கடந்த வாரம் அறிவித்தது. “கிலானியும் அவர் கூட்டாளிகளும் மாநிலம் மாநிலமாக இந்த நிகழ்முறையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஏற்பாடு செய்தனர்,” என்று குறிப்பிட்ட CNN, ஓர் ஆதாரநபரை மேற்கோளிட்டு, “ட்ரம்ப் தேர்தல் பிரச்சார அதிகாரிகளுக்கும் குடியரசுக் கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கும் இடையே திட்டமிடுவதற்காக பல்வேறு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டன' என்று எழுதியது. ட்ரம்ப் 'தேர்ந்தெடுப்பவர்களின் இடத்தை நிரப்ப ஆதரவாளர்களை வரிசைப்படுத்தியதுடன், டிசம்பர் 14, 2020 இல் சந்திக்க போலி தேர்ந்தெடுப்பாளர்களுக்காக மாநில சபைகளின் கூட்ட அறைகளை ஏற்பாடு செய்தார், இறுதியில் தேசிய ஆவணங்களுக்கு அனுப்பப்பட்ட போலி சான்றிதழ்களின் வரைவுக்களையும் அவர் அனுப்பி இருந்தார்.”

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 14 இல் வேறு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க தவறிய பிரச்சினையின் போது, ட்ரம்ப் தேர்தல் குழு அதன் அடுத்த தெரிவை நாடியது. வாக்குச்சீட்டுக்களைக் கைப்பற்றுவதற்கான இந்த வரைவு நிர்வாக ஆணை மிகவும் அதீத வடிவமாக இருந்தது. அந்நேரத்தில் இது உத்தரவிடப்படவில்லை, ஏனென்றால், சதிகாரர்களுக்கு இராணுவத்திற்குள் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு குறித்து தடுமாற்றம் இருந்தது.

வாக்குச்சீட்டுக்களைக் கைப்பற்றும் நிர்வாக உத்தரவைப் பையில் வைத்திருந்த ட்ரம்பும் அவர் ஆலோசகர்களும் ஜனவரி 6 இல் வாஷிங்டனில் தேர்வுக் குழு அங்கீகரிப்பதைத் தொந்தரவு செய்ய திட்டமிட்டனர்.

முதலாவதாக, பைடென் ஜெயித்த மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பூர்வ வேட்பாளர்களை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரிக்க முடிவெடுக்க முடியும். இரண்டாவதாக, உச்ச நீதிமன்றம் சான்றிதழை தாமதப்படுத்த தலையீடு செய்ய முடியும். இதற்காக, ஜனவரி 5 இல் ட்ரம்ப் வழக்குரைஞர் சிட்னி பாவல் நீதிபதி சாமுவெல் அலிடோவிடம் சட்டச் சிக்கல்களுக்காக ஜனவரி 6 நடைமுறைகளை நிறுத்த தடை ஆணையைப் பிறப்பிக்குமாறு கோரி விண்ணப்பித்திருந்தார். மூன்றாவதாக, குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் சேர்ந்து ஜனவரி 6 க்குப் பின்னர் தேர்வுக் குழு அங்கீகரிப்பைத் தாமதப்படுத்த முடியும். இந்த மூன்று சூழ்நிலைகளிலும், ஒரு மாநில பிரதிநிதிகளுக்கு ஒரு வாக்கு மற்றும் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையைப் பெற்றிருப்பதன் மூலம், பிரதிநிதிகள் சபைக்கு தேர்தலைத் திரும்பப் பெறுவதில் தாமதத்தை ஏற்படும்.

ஜனவரி 6 இல், இந்த மூன்று முயற்சிகளும் கையாளப்பட்டன. ட்ரம்பின் சூழ்ச்சியை பென்ஸ் ஆதரிக்க மறுத்து, அவர் சட்டபூர்வ வேட்பாளர்களுக்கு சான்றளிக்க போவதாக அறிவித்த போது முதல் வாய்ப்பு தோல்வியடைந்தது. இரண்டாவது முயற்சி சிரமமில்லாததாக இருந்தது, அதற்கு ஒரு நீதிபதியின் ஆதரவு, புஷ்ஷால் நியமிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான அலிட்டோ, மட்டுமே தேவைப்பட்டார்.

ஜனவரி 5 மற்றும் 6 முழுவதும், சான்றிதழை தாமதப்படுத்துவதற்கான பவலின் கோரிக்கைக்கு அலிட்டோ இணங்க மறுத்தார். அலிட்டோ தாமதப்படுத்தியது தான் ஜனவரி 6 இரவில் பெலோசி கூட்டு அமர்வை மீண்டும் கூட்ட நிர்பந்தித்தது என்பதை பவல் அவரே பின்னர் ஒப்புக் கொண்டார். இது ஊடகங்களில் குறிப்பிடப்பட்டவாறு வெறுமனே ஒரு அடையாள நகர்வாக இருக்கவில்லை. “நாங்கள் எங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்த போது அவர் கவனத்தில் கொண்டிருந்தார்,” என்று பவல் கூறினார். “நீதிபதி அலிட்டோ ஒரு தடை ஆணையைப் பிறப்பிப்பதற்கு முன்னதாக வாக்கெடுப்பை நடத்தியாக வேண்டுமென அவர் காங்கிரஸ் மீண்டும் கூட்டுவதை வேகப்படுத்தி இருந்தார்.” அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தெளிவாக தோல்வியடைந்த பின்னர், ஜனவரி 7 காலை வரையில், அலிட்டோ உத்தியோகபூர்வமாக பவலின் விண்ணப்பத்தை மறுத்திருந்தார்.

சட்டபூர்வமாக தாமதப்படுத்துவது மற்றும் வன்முறை ஆர்ப்பாட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலான மூன்றாவது காட்சி, முழுமையாக பார்வைக்கு முன்னால் நடந்தது, அது மூச்சடைக்கும் வகையில் வெற்றி அடையும் நெருக்கத்திற்கு வந்திருந்தது. பாசிசவாத அமைப்பான Oath Keepers இன் ஆயுதமேந்திய தாக்கும் குழுக்கள் முன்னிலையில் இருக்க அந்த கும்பல், ஜனநாயகக் கட்சியினரைக் கடத்தவும், பலவந்தமாக அங்கீகரிப்பைத் தள்ளிப் போட செய்யவும் தயாரிப்புடன் இருந்தது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறை குறைபாடுகளால் மட்டுமே தோல்வியடைந்தது, பென்ஸ் மற்றும் காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சியினர் சில நொடிகள் அல்லது நிமிட நேர அவகாசத்தில் தப்பித்தார்கள். சர்வாதிகார அபாயம் குறித்து மக்களை எச்சரிக்கையூட்டுவது நாடெங்கிலும் பாரிய சமூக மேலெழுச்சியைத் தூண்டும் என்ற அச்சத்தில், ஜனநாயகக் கட்சி சர்வாதிகார முயற்சியை எதிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜனவரி 6 சம்பவங்கள் அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் மையப்பகுதியே அழுகி இருப்பதை அம்பலப்படுத்தியது. சமத்துவமின்மையால் இந்தளவுக்குப் பிளவுபட்ட ஒரு சமூகத்தில் ஜனநாயகம் வாழ முடியாது, இங்கே நாட்டின் ஆதாரவளங்கள் அரசியல் அமைப்புமுறை மற்றும் இரண்டு வலதுசாரி கட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய நிதிய பிரபுத்துவத்தால் குவித்துக் கொள்ளப்படுகின்றன. ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் போன்ற பாசிசவாத குப்பைகள் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அரசு அதிகாரத்திற்கு வரும் அளவுக்கு, நிரந்தரமான போரின் முப்பதாண்டுகள் அரசியல் சூழலை நஞ்சூட்டியுள்ளன. ஜனவரி 6 இல் அவர்கள் சதி தோல்வியடைந்தாலும், முக்கிய சதிகாரர்கள் அவர்களின் அடுத்த நகர்வுகளைச் சூழ்ச்சி செய்ய சுதந்திரமாக விடப்பட்டிருக்கிறார்கள். சர்வாதிகார அச்சுறுத்தலில் இருந்து ஜனநாயகத்தை உடனடியாக காப்பாற்ற, பாசிசத்தின் மூலாதாரமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகரமாக அணித்திரட்டுவது அவசியமாகும்.

Loading