2022 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களின் அரசியல் படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவ-பாசிச வேட்பாளரான மரீன் லு பென்னுக்கு எதிராக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது, தேர்தலில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்வைக்கப்பட்ட அரசியல் பிரச்சினைகள் எதையும் தீர்க்கப்போவதில்லை. அதனால் தீவிர வலதுசாரி சர்வாதிகாரத்தின் வளர்ந்து வரும் ஆபத்தையும் நிறுத்தமுடியாது அதேபோல தொழிலாள வர்க்கத்தின் இடது பக்கம் நோக்கிய நகர்வையும் போராட்டத்திற்குள் நுளைவதையும் நிறுத்த முடியாது.

பிரெஞ்சு முதலாளித்துவத்தின் ஜனநாயக-விரோத பரிணாம வளர்ச்சியின் ஒரு அறிகுறியாக, லு பென்னுக்கான 42 சதவீத வாக்குகள், மக்ரோனுக்கு ஊடகங்கள் பயன்படுத்திய 'தாராளவாத' முத்திரையைக் காட்டிலும் அதிக எடையைக் கொண்டுள்ளன. லு பென் பிரெஞ்சு வரலாற்றின் தீவிர வலதுசாரிகளில் மிகப் பெரிய வாக்குகளைப் பெற்றார், முந்தைய 2017 தேர்தல்களில் இருந்து தனது வாக்குப் பங்கை 9 சதவீதம் அதிகரித்தார். மக்ரோனின் இரண்டாவது பதவிக்காலத்தில் அதே செயல்திறனை அவர் அடைந்தால், லு பென் 2027 இல் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, மக்ரோன் இறுதிப் பகுப்பாய்வில் வங்கிகளில் உள்ள அதே தீவிர வலதுசாரி சக்திகள் மற்றும் லு பென்னைப் போலவே போலீஸ் எந்திரத்தை நம்பியிருக்கிறார். சக சர்வாதிகாரியான பிலிப் பெத்தானைப் பாராட்டிய முதல் ஜனாதிபதியான மக்ரோன், 'மஞ்சள் சீருடை' போராட்டங்களை தாக்க கலகப் போலீஸை அனுப்பினார், இஸ்லாத்தை இலக்காகக் கொண்டு 'பிரிவினைவாத-எதிர்ப்பு' சட்டத்தை உருவாக்க, பெத்தானிச Action française இன் அனுதாபியான ஜெரால்ட் டார்மானன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அவர் வகுத்துள்ள கடுமையான சிக்கன நடவடிக்கை திட்டத்தைப் பின்பற்றுகையில், மக்ரோன் தீவிர வலதுசாரி சக்திகளையும் தேசியவாதத்தையும் மேலும் தூண்ட முயற்சிப்பார். அவர் ஓய்வு பெறும் வயதை மூன்று வருடங்கள் கூட 65 ஆக உயர்த்தவும், சமூக நலன்களைப் பெறுபவர்களை (RSA பயனாளிகள்) பலன்களுக்காக வேலை செய்ய கட்டாயப்படுத்தவும், பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தை உயர்த்தவும் மற்றும் வேலையின்மை காப்பீட்டைக் (l’assurance-chômage) குறைக்கவும் அவர் இலக்கு வைத்துள்ளார். மே தினப் போராட்டங்களுடன் ஞாயிற்றுக்கிழமை வன்முறை மோதலுக்கு கலகத் தடுப்புப் போலீஸார் தயாராகி வருவதாக செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன; எலிசே ஜனாதிபதி மாளிகையிலிருந்து நேராக தொழிலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதலுக்கான உத்தரவுகளின் அசல் பதிப்பை பொலிஸ் தலைமை பொறுப்பாளர்கள் படித்து வருகின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste PES) இரண்டாவது சுற்றுப் போட்டியைப் புறக்கணிக்க தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை இது உறுதிப்படுத்துகிறது. மக்ரோன் மற்றும் லு பென் இருவரையும் சமரசம் செய்ய முடியாத வகையில் நிராகரிப்பது, இரண்டு தீவிர வலதுசாரி வேட்பாளர்களுக்கு இடையே ஒரு மோசடியான தேர்தலுக்கு எதிராக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவது மட்டுமே, அடுத்த ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்யும் என்று PES விளக்கியது. உண்மையில், மக்ரோன் இப்போது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.

PES இன் ஒரு செயலூக்கமான அழைப்பு, மக்ரோன், லு பென் இருவரையும் வெறுக்கும் கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கு ஒரு கொள்கையையும், தொழிலாளர்களிடையே பரவலாக நிலவும் உணர்வுகளை பேசுவதற்கான ஒரு வழியையும் முன்மொழிந்தது. குறிப்பிடத்தக்க வகையில், ஏப்ரல் 24 அன்று 3 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வெற்று அல்லது செல்லாத வாக்குகளை செலுத்தினர்.

தொழிலாள வர்க்கத்தில் ஆழ்ந்த சமூகக் கோபம் பெருகி வருகிறது, அது சர்வதேச அளவில் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியால் உந்தப்படுகிறது. உலகெங்கிலும், வாங்கும் சக்தி மற்றும் சமூக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்கள், உத்தியோகபூர்வ அரசியலில் பாசிச திருப்பம், கோவிட்-19 தொற்றுநோயின் அழிவுகள் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவின் தலையீட்டைச் சுற்றியுள்ள அணு ஆயுதப் போரின் அச்சம் ஆகியவை தீவிரமயமாக்கப்படுகின்றன. பிரான்சில் மக்ரோன் மற்றும் லு பென் இருவராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வர்க்க சக்திகளுக்கு எதிராக சர்வதேச அளவில் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் எவ்வாறு ஐக்கியப்படுத்துவது என்பதுதான் தீர்க்கமான கேள்வி.

ஏப்ரல் 10 அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில், 22 சதவீத வாக்காளர்கள் ஜோன்-லூக் மெலன்சோனுக்கு வாக்களிப்பதன் மூலம் அரசியல் ஸ்தாபகத்திற்கு இடதுசாரி எதிர்ப்பைப் பதிவு செய்ய முயன்றனர். லு பென்னின் 23 சதவீத வாக்குகளுக்கு சற்றுப் பின்னால் வந்து, மெலோன்சோன் இரண்டாம் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவரது வாக்குகள், பெரும்பாலும் இளைஞர்கள், மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் பெரிய நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சுற்றுப்புறங்களில் குவிந்திருந்தது, மெலோன்சோன் மற்றும் அவரது கட்சியான அடிபணியா பிரான்ஸ் (LFI) ஐ மிகவும் சக்திவாய்ந்த நிலையில் நிறுத்தியது.

மக்ரோன்-லு பென் சுற்றுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் போராட்டங்கள் வெடித்த நிலையில், PES செயலில் ஒரு இடதுசாரிக் கொள்கையை முன்னெடுத்தது. மெலோன்சோன் தனது வாக்காளர்களுக்கு மக்ரோன்-லு பென் சுற்றில், இளைஞர்களின் போராட்டங்களுக்கு எதிராக மக்ரோன் நடத்திய போலீஸ் அடக்குமுறை மற்றும் போரின் உடனடி ஆபத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்க முடியும். பெரிய நகரங்களின் தொழிலாள வர்க்க மாவட்டங்களை LFI வென்றிருந்த நிலையில், இத்தகைய வேலைநிறுத்தங்கள் பிரான்சின் பொருளாதாரத்தை முடக்குவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பணவீக்கம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டியிருக்கும்.

ஆனால் மெலோன்சோன் தனது வாக்காளர்களை அணிதிரட்டுவதன் மூலமாக அல்ல மாறாக அணிதிரட்டாமல் விடுவதன் மூலம் எதிர்வினையாற்றினார். சில வாரங்களுக்குள் வெடித்த அவரது சொந்த ஆதரவைக் கண்டு ஆச்சரியமடைந்த மெலன்சோன், முதல் சுற்றின் மாலையில், தான் இனி ஒருபோதும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமாட்டேன் என்றும், மக்ரோனை மறைமுகமாக ஆதரித்து, ஒரு LFI வாக்கு கூட லு பென்னுக்குப் போகக்கூடாது என்று கோஷமிட்டார். சில நாட்களுக்குப் பின்னர், அவர் தன்னைத்தானே மாற்றிக்கொண்டார். மக்ரோன் அல்லது லு பென்னின் கீழ் அவர் பிரதம மந்திரியாக பணியாற்ற ஜூன் மாதம் சட்டமன்றத் தேர்தல்களில் LFI க்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தார்; இதன்மூலம் ஜனாதிபதிக்கு எதிரான முற்போக்கான கொள்கைகளுக்காக போராட முடியும் என்று அவர் கூறினார்.

ஒரு நவபாசிச ஆட்சியின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரு முற்போக்கான கொள்கையை செயல்படுத்த முடியும் என்ற அரசியல் பொய்யை சோசலிச சமத்துவக் கட்சி திட்டவட்டமாக நிராகரிக்கிறது. லு பென் அல்லது மக்ரோனின் கீழ் மெலோன்சோன் ஒரு 'குடிமக்கள் புரட்சியை' (révolution citoyenne) வழிநடத்தலாம் என்ற அடிபணியா பிரான்ஸ் இன் முன்மொழிவு மார்க்சிசத்தையும் 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றின் அடிப்படை படிப்பினைகளையும் காலில் போட்டு மிதிக்கின்றது.

இதற்கு முன்பு மெலன்சோன் எதிர்ப்பதாகக் கூறிய, பிரான்சின் ஐந்தாவது குடியரசின் ஊழல் நிறுவனங்கள், ஜனாதிபதிக்கு வெளியுறவுக் கொள்கையின் மீது பிரத்தியேக அதிகாரத்தை அளிக்கிறது. சர்வதேச அளவில் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு இணங்கிக்கொண்டு தேசிய மண்ணில் தொழிலாளர்களை பாதுகாக்க முடியாது. தொழிலாளர்களின் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கு, பெரும் பணக்காரர்களின் பாரிய வங்கி பிணையெடுப்புகளை நிறுத்துதல், COVID-19 உடனான பாரிய தொற்றுநோயை மறைமுகமாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வது மற்றும் சர்வதேச அளவில் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளாலும் தொடரப்படும் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான உந்துதல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.

சோசலிசப் புரட்சிக்கான போராட்டம் மட்டுமே, நிதியப் பிரபுத்துவத்தை அபகரிக்கும் இந்தக் கொள்கைகளுக்கான ஒரே வழி, இது சர்வதேச அளவில் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் பிரான்சின் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துதை அவசியமாக்குகிறது.

சோசலிசத்திற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு, 'மக்கள் புரட்சி' என்ற தேசியவாத வேலைத்திட்டத்தால் மெலோன்சோன் மாற்றியமைப்பதை PES நிராகரிக்கிறது. இது ஸ்ராலினிசத்தின் பிற்போக்குத்தனமான அரசியல் மரபும், பிரெஞ்சு தொழிலாள வர்க்கஇயக்கத்திற்கு எதிராகஅதன் அரசியல் கூட்டாளிகளை அணிதிரட்டுவதற்கான முயற்சியுமாகும். இது இன்று மக்ரோனுக்கு மட்டுமன்றி, லு பென்னின் பேரினவாத சமூக வார்த்தைஜாலங்களுக்கும் இடமளிக்கிறது.

பிரெஞ்சு மூலதனத்தின் தீவிர வலதுசாரிப் பிரதிநிதிகளுடன் மெலோன்சோனின் ஈர்ப்புக்கு எதிராக, நாஜிக்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முந்தைய ஆண்டுகளில், ஏர்ன்ஸ்ட் தால்மான் தலைமையிலான ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள ஸ்ராலினிச சக்திகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியின் அவசர எச்சரிக்கைகளை மேற்கோள் காட்ட வேண்டும்:

'பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முழக்கத்தை மக்கள் புரட்சியின் முழக்கத்துடன் மாற்றிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சரணாகதியை விட கொள்கையளவில் மிகவும் வெட்கக்கேடான சரணாகதியை கற்பனை செய்வது கடினம். … நிச்சயமாக, ஒவ்வொரு மாபெரும் புரட்சியும் ஒரு மக்கள் புரட்சி அல்லது ஒரு தேசியப் புரட்சியாகும், அது புரட்சிகர வர்க்கத்தைச் சுற்றி தேசத்தின் அனைத்து வீரியம் மற்றும் படைப்பாற்றல் சக்திகளையும் ஒருங்கிணைக்கிறது, மேலும் அது ஒரு புதிய மையத்தைச் சுற்றி தேசத்தை மீண்டும் கட்டமைக்கிறது. ஆனால் இது ஒரு முழக்கம் அல்ல, இது புரட்சியின் ஒரு சமூகவியல் விளக்கம், மேலும், துல்லியமான மற்றும் உறுதியான வரையறை தேவைப்படுகிறது. ஒரு முழக்கமாக, இது அநாகரீகம், பாசிஸ்டுகளுடனான சந்தைப் போட்டி, தொழிலாளர்களின் மனதில் குழப்பத்தைப் புகுத்த விலை கொடுத்து வாங்கப்படுகிறது. 95 சதவீத மக்கள் புரட்சியில் ஆர்வமாக உள்ளனர் என்று பாசிச ஸ்ட்ராசர் கூறுகிறார். எனவே இது வர்க்கப் புரட்சி அல்ல மக்கள் புரட்சி. தால்மன் அவருடன் கோரஸில் பாடுகிறார்.

மெலோன்சோனின் ஜனரஞ்சக வாய்வீச்சுக்கு எதிராக, பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர திறனில் சோசலிச சமத்துவக் கட்சி (PES) முழு நம்பிக்கை கொண்டுள்ளது. பெரும்பாலும் அவநம்பிக்கை மற்றும் வெறுப்புடனும் கூட, ஒரு வர்க்க பிளவு தொழிலாளர்களை அவர்கள் வாக்களிக்கும் மெலோன்சோன் அல்லது லு பென் போன்ற வேட்பாளர்களிடமிருந்து பிரிக்கிறது. சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வென்றெடுப்பதில் உள்ள முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதும், மெலோன்சோனுக்கும் மற்றும் அவருடன் கூட்டணியில் இருக்கும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற போலி-இடது கட்சிகளும் மாற்றாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பது பிரான்சில் உள்ள முக்கிய பணியாக உள்ளது.

Loading