முன்னோக்கு

"வெற்றி பெறும் வரை" போர் நடத்த பெலோசி சூளுரைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரயிறுதியில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும், ஜனாதிபதி பதவிக்கான வரிசையில் இரண்டாவது நபராக இருப்பவருமான நான்சி பெலோசி, உக்ரைனின் கியேவ் போர்ப் பகுதிக்கு இரகசியமாகப் பயணம் செய்து வந்ததுடன், ரஷ்யாவுக்கு எதிரான 'வெற்றியை' உறுதி செய்ய அமெரிக்கா பொறுப்பேற்றிருப்பதாக வாக்குறுதி அளித்தார்.

House Speaker Nancy Pelosi visits the 82nd Airborne Division stationed in Rzeszów, Poland. (Credit: @SpeakerPelosi)

ரஷ்யாவுடனான போரில் அமெரிக்கா ஈடுபடுவது போர் நடத்தும் ஒரு கூட்டாளியான உக்ரேனுக்கு உதவுவதற்காக என்ற பொய்யான மூலக்கருத்தையே மீண்டும் கூறிய பெலோசி, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியிடம், 'சண்டை முடியும் வரை உங்களுக்காக இருப்பது எங்கள் பொறுப்பு' என்றார். 'ஜெயிக்கும் வரை நாங்கள் உக்ரேனுடன் நிற்கிறோம்,' என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

உக்ரேனுக்கான அவர் பயணத்தில் பெலோசியுடன் சென்ற ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ஜேசன் க்ரோ, அமெரிக்கா போரில் தரப்பில் இருப்பதாக வலியுறுத்துவதில் இன்னும் விடாப்பிடியாக இருந்தார், போலந்தில் ஒருசெய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், 'அமெரிக்கா இதில் வெற்றி பெறுவதற்காக உள்ளது, ஜெயிக்கும் வரை நாங்கள் உக்ரைனுடன் நிற்போம்,” என்று அறிவித்தார்.

பாதுகாப்புத்துறை செயலர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனின் இதேபோன்ற உறுதிமொழிகளுக்குப் வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர் வந்துள்ள பெலோசியின் உறுதிமொழி, பைடென் எதை 'உலகப் போர்' என்றழைத்தாரோ அதில் அமெரிக்காவை உள்ளிழுக்க அச்சுறுத்தும் பகிரங்கமான பயங்கரமான போர் நோக்கங்களைப் பின்தொடர்வதற்காக, மட்டுப்பாடில்லா இரத்தவேட்கைக்குப் பொறுப்பேற்பதற்கு நிகராக உள்ளது.

உக்ரேன் 'வெற்றி' என்ன அர்த்தப்படுத்துகிறது? வெறும் ஒரு வார கால இடைவெளியில், பைடெனும், ஆஸ்டினும் மற்றும் ஜனாதிபதியின் அரசியல் கட்சியினது முன்னணி உறுப்பினர்களும் அனைவரும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா என்ன சாதிக்க முயன்று வருகிறது என்பதைக் குறித்தது ஒன்றுக்கொன்று முரண்பட்ட இணக்கமற்ற பதில்களை வழங்கி உள்ளனர்.

ஒருபுறம் அமெரிக்கா ரஷ்யாவுடன் ஒரு பினாமி போரில் ஈடுபட்டுள்ளது என்பது 'உண்மையல்ல' என்று பைடென் கூறினார். மறுபுறம், கடந்த வாரம் போலந்து செய்தியாளர் கூட்டத்தில் ஆஸ்டின் கூறுகையில், அமெரிக்கா ரஷ்யாவை 'பலவீனப்படுத்த' முயன்று வருவதாக கூறினார். நியூயார்க் டைம்ஸ் 'ரஷ்யாவை மண்டியிட வைப்பதற்கான' சாத்தியக்கூறை முன்னுயர்த்திய அதேநேரத்தில், அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் ஐரோப்பிய தளபதி பென் ஹோட்ஜஸ் ரஷ்யாவின் 'முதுகெலும்பை முறிக்க' அழைப்பு விடுத்தார்.

இந்த இலக்குகளில் எதை நோக்கி பெலோசி அமெரிக்காவைப் பொறுப்பாக்குகிறார்?

பெலோசியின் அறிக்கைகளை மிகவும் மட்டுப்பட்ட விதத்தில் மற்றும் மிகவும் நேரடியான அர்த்தத்தில் ஒருவர் எடுத்துக் கொண்டாலும் கூட, ரஷ்யா விஷயத்தில் அதன் இராணுவ நோக்கங்களை அடைவதற்காக அமெரிக்கா உக்ரைனுக்கு உதவும் என்றே அவை அர்த்தப்படுத்துகின்றன. ஆனால் அமெரிக்க இராணுவ திட்ட வகுப்பாளர்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட உக்ரைனின் சொந்த இராணுவ இலக்குகள் மிகவும் கடுமையாக உள்ளன.

மார்ச் 24, 2021 இல், '[கிரிமியன்] தீபகற்பத்திலிருந்து ஆக்கிரமிப்பை நீக்குவதையும் மற்றும் மீண்டும் அதை ஒருங்கிணைப்பதையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த' உறுதியளிக்கும் ஓர் ஆவணத்தில் செலென்ஸ்கி கையெழுத்திட்டார். ரஷ்யா தனக்குச் சொந்தமானதாக உரிமை கோரும் கிரிமியாவை, இராணுவ வழிவகைகள் மூலம் கைப்பற்றுவதற்கு உக்ரைன் முறைப்படி பொறுப்பேற்கிறது என்பதே இதன் அர்த்தமாகும்.

தாக்கும் ரஷ்யப் படைகளை முறியடித்து, அதை ரஷ்ய எல்லைக்குள் தள்ளி, டொன்பாஸில் ரஷ்ய தாக்குதலை முறியடிப்பதில் உக்ரைன் வெற்றி பெறுவதற்காக, இந்த 'சண்டையில்' உக்ரைனை ஆதரிக்க அமெரிக்கா 'பொறுப்பேற்று' உள்ளதா?

மற்றொரு சூழலில், ரஷ்யப் படைகள் உக்ரேனிய இராணுவத்தின் முக்கிய இடங்களைச் சுற்றி வளைத்து, அதன் சிதைவுக்கு வழிவகுத்து, மேற்கு உக்ரேனை நோக்கி தொடர்ந்து முன்னேறினால் அமெரிக்கா என்ன செய்யும்? உக்ரேன் மூலோபாய தோல்வியால் அச்சுறுத்தப்பட்டால், ரஷ்யாவுக்கு எதிரான 'வெற்றிக்கு' பெலோசியின் வெளிப்படையான பொறுப்பேற்பு என்ன அர்த்தப்படுத்துகிறது?

அமெரிக்கா அதன் 'பொறுப்பைக்' கைவிடும் சாத்தியக்கூறுக்கும் மற்றும் துருப்புக்களை அனுப்புவதற்கும் இடையே — அல்லது அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கும் கூட — இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்பட்டால், அமெரிக்கா இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கும் என்பதை பெலோசியின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

கடந்த வாரம், ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் கூன்ஸ், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதன் மீது ஒரு 'உரையாடலுக்கு' அழைப்பு விடுத்தார்.

கூன்ஸின் அறிக்கைகளைப் பற்றி கேட்ட போது, 2016 இல் ஹிலாரி கிளிண்டனின் துணை ஜனாதிபதியாக போட்டியிட்ட டிம் கெய்ன், இந்த நடவடிக்கையை வெறுமனே 'முதிர்ச்சியற்றதாக' குறிப்பிட்டார், நடைமுறையளவில் இது திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதை ஒப்புக் கொள்வதாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் சபையில் உள்ள குடியரசுக் கட்சியின் உறுப்பினர் ஆடம் கிஞ்சிங்கர், ரஷ்யாவுடன் முழு அளவிலான ஒரு போரில் பைடென் அமெரிக்க துருப்புகளை நிலைநிறுத்துவதை அனுமதிக்கும் வகையில் இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதை அவர் அங்கீகரிக்கும் சட்டமசோதாவை அவர் கொண்டு வந்திருப்பதாக அறிவித்தார்.

வியட்நாம் போரின் போக்கில், அமெரிக்கா அது முன்வைத்திருந்த இராணுவப் பொறுப்புறுதிகளது தர்க்கத்தால் இன்னும் அதிக இரத்தக்களரியான மற்றும் கொடூரமான போருக்குள் இழுக்கப்பட்டது.

ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் கீழ் 1960களின் முற்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமில் அதன் தலையீட்டை மாற்றியது, அது வரையில் 'மட்டுப்படுத்தப்பட்ட அபாய சூதாட்டமாக' அழைக்கப்பட்டதை ஒரு 'பரந்த பொறுப்பு' என்பதாக மாற்றியது என்பதை 1971 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட பென்டகன் ஆவணங்கள் அம்பலப்படுத்தின.

பென்டகன் ஆவணங்களின் மிகவும் அதிர்ச்சியூட்டும் அம்சங்களில் ஒன்று என்னவென்றால், 1965 இல் தயாரிக்கப்பட்ட ஓர் உள்அலுவலக பாதுகாப்புத் துறை குறிப்புரையானது, அமெரிக்காவின் 'கடமைப்பாட்டை' நிலைநிறுத்துவதே அமெரிக்க தலையீட்டுக்கான முக்கிய காரணம் என்றும், இதை மீறுவது 'அவமானகரமான அமெரிக்க தோல்விக்கு' வழிவகுக்கும் என்றும் தீர்மானித்திருந்தது. அமெரிக்க இலக்குகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டன:

  • 70% - (உத்தரவாளம் அளித்தவராக நம் கௌரவத்திற்காக) ஓர் அவமானகரமான அமெரிக்க தோல்வியைத் தவிர்ப்பது
  • 20% - சீனக் கரங்களில் இருந்து [தெற்கு வியட்நாம்] மற்றும் (பக்கவாட்டு) பிராந்தியங்களை விலக்கி வைப்பது
  • 10% - [தெற்கு வியட்நாம்] மக்கள் ஒரு சிறந்த, சுதந்திரமான வாழ்க்கை முறையை வாழ அனுமதிப்பது.
  • செய்ய வேண்டியதில்லை - நண்பருக்கு உதவுவது

போருக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்காவின் உலகளாவிய அந்தஸ்தை பலப்படுத்துவதில், 58,220 அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்தனர், நூறாயிரக்கணக்கானோர் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர், மேலும் 1 மில்லியனுக்கும் அதிகமான வியட்நாமிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை எந்தளவுக்கு இரகசியமாக உருவாக்கப்படுகிறது என்பதை பென்டகன் ஆவணங்கள் வெளிப்படுத்தின. மோதலை முன்நகர்த்தும் உண்மையான இலக்குகளுடன் தொடர்பில்லாத பல்ல உண்மைகளும் வாதங்களுமே பொதுமக்களின் முன்வைக்கப்படுகின்றன. ஊடக விவாதத்தின் நோக்கமே, வெளியுறவுக் கொள்கை நடத்தையை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்துவதற்கு மக்களை அனுமதிப்பது அல்ல, மாறாக அமெரிக்க அரசு எந்திரம் விரும்பும் முடிவை ஏற்க பொதுக் கருத்தை நிர்பந்திப்பதாகும்.

தற்போதைய போரில் பணயம் வைக்கப்பட்டிருப்பவை, வியட்நாமில் பணயம் வைக்கப்பட்டிருந்ததை விட பரந்தளவில் அதிகமானவை. 'ரஷ்ய வெள்ளை இனத்தவரை இரத்தம் சிந்தம் வைப்பதை' இலக்காகக் கொண்ட அமெரிக்கப் பினாமி போராக தொடங்கியுள்ள, இந்த உக்ரேன் மோதல் இரண்டு அணுஆயுதமேந்திய நாடுகளுக்கு இடையிலான முழு அளவிலான போராக வேகமாக சுழன்று வருகிறது.

ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும், இந்த போர் எதைப் பற்றியது என்பதை விளக்க எந்த தீவிர முயற்சியும் இல்லை. ஓர் அணுஆயுத மூன்றாம் உலகப் போர் வெடிப்பின் மூலம் மனித நாகரிகத்தையே முடிவுக்குக் கொண்டு வர அச்சுறுத்தும் ஒரு பொறுப்பற்ற மற்றும் பைத்தியக்காரத்தனமான கொள்கைக்கு அங்கே எந்த எதிர்ப்பும் இல்லை.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்களை WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த், 2022 மே தின இணையவழி பேரணியில், 'நேட்டோ-ரஷ்ய போரும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்' என்ற அவரின் ஆரம்ப அறிக்கையில் குறிப்பிட்டார்:

ரஷ்யா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்காகி இருப்பது புட்டின் ஆட்சியின் எதேச்சாதிகார தன்மையால் அல்ல, மாறாக, முதலாவதாக, சீனாவுடனான அதன் போர் தயாரிப்புகளின் மத்தியில் உள்ள உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்புடன் மோதும் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை புட்டினின் ஆட்சி பாதுகாப்பதாகும்; இரண்டாவதாக, ரஷ்ய பிராந்தியத்தின் பரந்து விரிந்த நிலப்பரப்பு பெரும் மதிப்புமிக்க மற்றும் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட கச்சா பொருட்களுக்கான (ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிடுவதானால், தங்கம், பிளாட்டினம், பல்லாடியம், துத்தநாகம், பாக்சைட், நிக்கல், பாதரசம், மாங்கனீஸ், குரோமியம், யுரேனியம், இரும்புத் தாது, கோபால்ட், மற்றும் இரிடியம்) மூலவளமாக இருப்பதால் அதனைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ரஷ்யாவின் 'முதுகெலும்பை முறிக்க' விரும்புகிறது என்றும், 'ரஷ்யாவை அதன் கால்களில் மண்டியிட வைக்க' விரும்புகிறது என்பதையும் அமெரிக்க அதிகாரிகள் அதிகரித்தளவில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு வருகிறார்கள். 'வெற்றியை' முடிவு செய்யும் போரை நடத்த சூளுரைத்து, அமெரிக்கா பேரழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

உலகப் போருக்கான இந்த பைத்தியக்காரத்தனமான உந்துதலை நிறுத்த அணிதிரட்டப்பட வேண்டிய சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும். நோர்த் அவர் அறிக்கையை நிறைவு செய்கையில் கூறியதைப் போல, 'சர்வதேச தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போரைப் பிரகடனம் செய்ய வேண்டும்.'

உலகம் முழுவதிலும் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகள் உரையாற்றிய மே தினப் பேரணி, இந்தப் போராட்டம் எந்த சர்வதேச சோசலிச முன்னோக்கின் மீது நடத்தப்பட வேண்டும் என்பதை விரிவாக எடுத்துரைத்தது.

Loading