பாரிய ரஷ்ய எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரிட்டன் 8,000 துருப்புக்களை அனுப்புகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பனிப்போருக்குப் பிந்தைய மிகப்பெரிய இராணுவ தயாரிப்புகளில் ஒன்றாக, ஐரோப்பா முழுவதும் 8,000 இராணுவத்தினரை அனுப்பி அடுத்த மாதம் முதல் ஒரு தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகளில் அவற்றை ஈடுபடுத்தப்போவதாக பிரிட்டன் அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 2021 நிலவரப்படி, பிரிட்டிஷ் இராணுவத்தில் 86,240 சிப்பாய்கள் நிரந்தரமானவர்களாக பணியாற்றுகின்றார்கள். இதன்படி பார்த்தால் ஒட்டுமொத்த படையில் சுமார் 10 சதவிகிதம் ரஷ்யாவை எதிர்கொள்ள அனுப்பப்படுகிறது.

கூடுதல் பிரிட்டிஷ் துருப்புக்கள் மற்றும் இராணுவ தளபாடங்களின் ஒரு பகுதியாக இராணுவ பாரவண்டி தளங்களில் எரிபொருள் நிரப்பப்பட்ட டாங்கிகள், பெப்ரவரி 25, 2022, வெள்ளிக்கிழமை, எஸ்தோனியாவின் டாப்பா நகரில் உள்ள எஸ்தோனியாவின் நேட்டோ போர்க் குழு தளத்தை வந்தடைகின்றன. (AP Photo/Sergei Stepanov)

இந்த துருப்புகளை நகர்த்துதல் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் உத்வேகத்தை அதிகரிக்க, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் உண்மையான போரின் ஒரு பகுதியாக பிரிட்டன் மேற்கொண்ட சமீபத்திய இராணுவ விரிவாக்கம் ஆகும். இந்த அறிவிப்பானது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாரிய ஆயுத ஏற்றுமதிக்கு கையெழுத்திட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர் வெளியானது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) செய்தி வெளியீட்டில், தரைப்படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரால்ப் வூட்டிஸ் இவ்வாறு “ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும் இங்கிலாந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. பிரிட்டிஷ் இராணுவத்தின் தொடர் பயிற்சிகள் இந்த இரண்டுக்கும் அடிப்படையானது. நேட்டோவை ஆதரிப்பதற்கு சக்திவாய்ந்த, திறமையான மற்றும் ஆயத்தப் படைகளை வழங்குவதன் மூலம் எங்கள் கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் ஒருபுறம் சண்டைப் பயிற்சிகளை நடத்தி, பால்டிக் முதல் ஏஜியன் வரை ஐரோப்பா முழுவதுமாக நாங்கள் தொடர்ந்து படைகளை நிலைநிறுத்துகிறோம்” எனக்கூறினார்.

துருப்புக்கள் முக்கியமாக Arrow, Hedgehog, Defender மற்றும் Swift Response எனப்படும் நான்கு தனித்தனி நேட்டோ போர் பயிற்சிகளின் பயன்படுத்தப்படும்.

சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்கும் துருப்புக்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் பாதுகாப்பு அமைச்சகம், “நேட்டோ மற்றும் கூட்டு நகரும்நடவடிக்கை படை (Joint Expeditionary Force-JEF) கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளின் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன” என்று மட்டும் குறிப்பிட்டது.

பிரிட்டன் தலைமையிலான கூட்டு நகரும் நடவடிக்கை படை (JEF), டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, ஐஸ்லாந்து, லாத்வியா, லித்துவேனியா, நெதர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய மற்ற ஒன்பது “உயர் வடக்கு, வடக்கு அட்லாண்டிக் மற்றும் பால்டிக் கடல்” நாடுகளை உள்ளடக்கியது. இக்கூட்டு 2014 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி டேவிட் கமரூனின் பழமைவாத அரசாங்கத்தினதும் மற்றும் அமெரிக்கா/நேட்டோவினதும் கூட்டு முயற்சியால் நிறுவப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு அறிக்கை, “Queen’s Royal Hussars கவச படைப்பிரிவின் B Squadron அணியின் துருப்புக்கள் Arrow பயிற்சியில் பங்கேற்க இந்த வாரம் பின்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அமெரிக்கா, லாத்வியா மற்றும் எஸ்தோனியா உள்ளிட்ட பிற பங்காளிகளின் பங்கேற்புடன், பின்லாந்து கவசப்படைகளுடன் இணைக்கப்படுவார்கள். இந்தப் பயிற்சியானது, ஸ்காண்டிநேவியா மற்றும் பால்டிக் நாடுகளில் ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுத்து, கூட்டு நகரும் நடவடிக்கை படையின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து மற்றும் பின்லாந்து துருப்புக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றும் திறனை மேம்படுத்தும்” என்று கூறுகிறது.

நேட்டோவின் Swift Response பயிற்சி இந்த வாரம் தொடங்கியது, மேலும் “வடக்கு மசிடோனியாவில் பிரெஞ்சு, அமெரிக்க, இத்தாலிய மற்றும் அல்பேனிய சகாக்களுடன் இணைந்து 16 விமானத் தாக்குதல் போர் பயிற்சிக் குழு (Air Assault Brigade Combat Team) மற்றும் 1 வான்வழி போர் பயிற்சிக் குழு (Aviation Brigade Combat Team) ஆகியவற்றின் பிரிவினரின் செயல்பாட்டை மேற்பார்வையிடுகிறது. பயிற்சியில் 2,500 பிரிட்டிஷ் துருப்புக்கள் உட்பட 4,500 பணியாளர்கள் உள்ளனர். இந்த பயிற்சி பாராசூட் தரையிறக்கம், ஹெலிகாப்டர் வான் தாக்குதல்களில் ஈடுபடுவதுடன், 2 பாராசூட் படையணி போர்க்குழுவில் ஒருங்கிணைக்கப்பட்ட பிரெஞ்சு பாராசூட் படையினரின் ஒரு படையணியையும் மற்றும் பிரிட்டிஷ் தொடர் கட்டளையகத்தில் பணியாற்றும் ஒரு இத்தாலிய போர்க்குழுவையும் மேற்பார்வையிடுகிறது.

மே மாதத்தில், Hedgehog பயிற்சியில், “ராயல் வெல்ஷ் போர்க்குழுவும் (Royal Welsh Battlegroup) ராயல் டேங்க் படையணியும் (Royal Tank Regiment) எஸ்தோனியா-லாத்வியா எல்லையில், பிரிட்டிஷ் தலைமையிலான நேட்டோவின் முன்னோக்கிய பிரசன்னத்தின் ஒரு பகுதியாகவுள்ள பிரெஞ்சு மற்றும் டேனிஷ் உட்பட 18,000 நேட்டோ துருப்புக்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. Hedgehog என்பது எஸ்தோனியாவின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியாகும், இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழமையாக நடைபெறுகிறது.”

Hedgehog பயிற்சி நடந்து கொண்டிருக்கும் அதேவேளை, “போலந்தில் Defender பயிற்சி மே இறுதி வரை நடைபெறுகிறது. இதில், போலந்து, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 11 கூட்டாளி நாடுகளின் துருப்புக்களுடன் பிரிட்டனின் King’s Royal Hussars போர்க்குழு மற்றும் Light Dragoons குதிரைப் படையின் C Squadron படையணி ஆகியவற்றில் இருந்து 1,000 சிப்பாய்கள் ஈடுபடுகின்றனர். இந்த பயிற்சியில், ஜேர்மனியின் சென்னலாகர் நகரில் உள்ள NATO Forward Holding Base இல் இருந்து Challenger 2 டாங்கிகளும் பிற கவச வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த இராணுவ அணிதிரட்டல் பிரிட்டனில் இருந்து ஐரோப்பாவில் உள்ள தளங்களில் செயல்படும் 104 Theatre Sustainment படையணியால் ஆதரிக்கப்படுகிறது.”

பிரிட்டன் பல ஆண்டுகளாக நேட்டோ நடவடிக்கைகளில் பங்கேற்று சில சமயங்களில் தலைமை தாங்கி, ரஷ்யாவை சுற்றி வளைப்பதை ஆதரித்தது. கடந்த ஆண்டில், Queen Elizabeth விமானம் தாங்கி கப்பலின் தலைமையில் நேட்டோவின் விமானம் தாங்கி கப்பல் குழுவான 21 அர்மாடா மே 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இது தீவிரமடைந்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில், Cold Response 2022 பயிற்சியில் பிரிட்டனின் பங்களிப்பாக 3,000 க்கும் மேற்பட்ட மாலுமிகளும் மற்றும் ராயல் கடற்படையினரும் ஆர்டிக் பிராந்தியம், கரையோரம், கடல் மற்றும் நோர்வேயின் வான் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். இதில், 27 நேட்டோ கூட்டாளிகள் மற்றும் ‘பங்காளிகளின்’ சுமார் 30,000 துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டன. ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் இரண்டு வார காலம் நடத்தப்பட்ட போருக்கான நேரடி துப்பாக்கிச்சூடு ஒத்திகை, பனிப்போருக்குப் பின்னர் நோர்வேயில் நடந்த மிகப்பெரிய இராணுவப் பயிற்சியாகும். கூட்டுப் படைகளின் வலைத் தளம், “HMS Prince of Wales என்ற பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல் கடற்படை கப்பல்படையை வழிநடத்தி அது நேட்டோ கட்டளையக கப்பலாகச் செயல்படக்கூடிய திறனை வெளிப்படுத்தியது. மேலும் இது 2022 ஆம் ஆண்டு முழுவதும் அதன் பங்கை வகிக்கும். ராயல் கடற்படையின் Queen Elizabeth வகை விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று இதுவரை வடக்கு நோக்கி வருவது இதுவே முதல் முறையாகும்” என்று குறிப்பிட்டது. பயிற்சியில் கப்பலின் பங்கு, F-35B ரக லைட்னிங் இரகசிய போர்விமானங்கள் முதல் அமெரிக்கர்களின் தனித்துவமான Osprey MV22 விமானங்கள் மற்றும் Sea Stallion ஹெலிகாப்டர்கள் வரை பிரிட்டிஷ் மற்றும் அதன் நட்பு நாடுகளின் விமானப்படை சக்திகளுடன் இணைந்து இயங்குவதாகும்.”

நோர்வே ரஷ்யாவுடன் 200 கிலோமீட்டர் (124 மைல்) தரை எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ரஷ்யாவில் இருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் 200 விமானங்கள் மற்றும் 50 கப்பல்களை உள்ளடக்கிய செயல்பாட்டு பயிற்சிகள் நடைபெறுகின்றன.

திங்களன்று உக்ரேனில் பாதுகாப்பு மந்திரி பென் வாலஸின் அறிக்கை மூலம் பிரிட்டனின் இராணுவக் கட்டமைப்பு பற்றி முன்னுரைக்கப்பட்டது. பிரிட்டன் ஏற்கனவே “5,000 க்கும் மேற்பட்ட டாங்கி-எதிர்ப்பு ஏவுகணைகள், 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளுடன் கூடிய 5 வான் பாதுகாப்பு அமைப்புக்கள், 1,360 கட்டமைப்பு எதிர்ப்பு வெடிமருந்துகள் மற்றும் 4.5 டன் பிளாஸ்டிக் வெடிபொருட்கள்” ஆகியவற்றை உக்ரேனிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் பெருமை பீற்றினார். மேலும் அவர், போர் தொடங்கி சில வாரங்களுக்குப் பின்னர் பிரிட்டன் உக்ரேனுக்கு “Starstreak உயர் வேகம் மற்றும் குறைந்த வேகம் கொண்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கி ஆயுத உதவி செய்தது. இவை 3 வாரங்களுக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் பயன்படுத்தப்பட்டன. மேலும் உக்ரேனியப் படைகள் தங்களையும் தங்கள் பிராந்தியத்தையும் பாதுகாக்க அவற்றைப் பயன்படுத்தின என்பதை நான் இப்போது சபையில் தெரிவிக்கிறேன்” என்றார்.

பாராளுமன்றம் ஈஸ்டர் விடுமுறையில் இருந்தாலும், “எனது மந்திரி குழு… மேலதிக தளபாடத்தேவைகளை பற்றி ஆராய்வதற்காக உக்ரேனிய அரசாங்க தூதுக்குழுவை சாலிஸ்பரி சமவெளி பயிற்சிப் பகுதியில் வரவேற்றது. இதைத் தொடர்ந்து, மேலும் 100 மில்லியன் யூரோ மதிப்பிலான உயர்தர இராணுவ தளபாடங்கள், 120 கவச வாகனங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் துல்லியமான தாக்குதலுக்கான உயர் தொழில்நுட்ப சுற்றிதிரிந்து தாக்கும் ஆயுதங்கள் ஆகியவற்றை வழங்க பிரதம மந்திரி உடனடியாக அறிவித்தார்.”

பிரிட்டன் இப்போது 'British Challenger 2 Tanks ஐ போலந்துக்கு அனுப்புகிறது. இது போலந்து உக்ரைனுக்கு டாங்கிகளை நன்கொடையாக வழங்குவதற்கும், அவற்றின் மாற்றீடுகள் மூன்றாவது நாட்டிலிருந்து வருவதற்கும் இடையே உள்ள காலஇடைவெளியைக் குறைக்கும்”.

பிரிட்டன் தனது ஆயுதப் படைகளின் முழுத் திறனையும் ஆர்க்டிக்கிலிருந்து மத்திய தரைக்கடல் வரை நிலைநிறுத்துகிறது என்று வாலஸ் பெருமை பேசினார். அதாவது “நாங்கள் எஸ்தோனியாவில் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக இரட்டிப்பாக்கியுள்ளோம். லிதுவேனிய உளவுத்துறையின் தகவல்துறை பின்னடைவு மற்றும் உளவு முயற்சிகளுக்கு ஆதரவாக இராணுவப் படையினரை அனுப்பியுள்ளோம். போலந்துக்கு நூற்றுக்கணக்கான ராயல் கடற்படையினரை அனுப்பியுள்ளோம், மேலும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு கடல் ரோந்து கப்பல்களையும் கடற்படை அழிப்புக் கப்பல்களையும் அனுப்பியுள்ளோம். ருமேனியாவை தளமாகக் கொண்ட நான்கு கூடுதல் அதிரடிப் படையுடன் (Typhoons) தென்கிழக்கு ஐரோப்பாவின் வான் பகுதியில் எங்கள் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்துள்ளோம். அதாவது, நேட்டோ பணியை ஆதரிக்க தயாராக இருக்கும் வகையில், நாம் இப்போது தெற்கு ஐரோப்பாவில் RAF போர் விமானங்களின் முழுப் படைப்பிரிவைக் கொண்டுள்ளோம்.

ஒரு Daily Telegraph கட்டுரை, “கிரெம்ளினுக்கு மேலும் ஒரு செய்தி அனுப்புவதற்காகக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து பெறப்பட்ட அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் இங்கிலாந்தின் மூலோபாய தடுப்பு மையமான Clyde[ஸ்காட்லாந்தில்] உள்ள பிரிட்டனின் Faslane கடற்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தது.

“இந்த வார தொடக்கத்தில், ராயல் கடற்படையின் Astute-class என்ற வேட்டையாடும்-கொலைகார கப்பலான HMS Audacious, ஜிப்ரால்டரில் உள்ள கடற்படை பிரிவில் Tomahawk ஏவுகணைகளை ஏற்றிக்கொண்டிருந்தது. நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் வடக்கு அட்லாண்டிக்கில் எதிர்வரும் நாட்களில் தொடங்கப்படவுள்ள கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்கத் தயாராகி வருகின்றன.”

கடந்த கோடையில், ஒரு பிரிட்டிஷ் போர்க்கப்பல் கிரிமியாவிற்கு அருகே கடலுக்குள் நுழைந்தபோது, கருங்கடலில் ரஷ்யாவிற்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு ஆயுத மோதலைத் தூண்டியதன் பின்னர், கருங்கடலில் ரஷ்யா முற்றுகையிடுவதைத் தடுப்பதற்காக கப்பல் எதிர்ப்பு Brimstone ஏவுகணைகளை இங்கிலாந்து குறிப்பாக உக்ரேனுக்கு அனுப்பும் என்று வாலஸ் வியாழக்கிழமை கூறினார்.

மேலும், ‘கருங்கடலைக் கட்டுப்படுத்த’ ரஷ்யாவை அனுமதிக்க முடியாது. ‘இனி இது அவர்களுடையது அல்ல’ என்று வாலஸ் அச்சுறுத்தினார். டெலிகிராஃப் செய்தியிதழ், “பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய உளவுத்துறை மதிப்பீடு கருங்கடலில் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 20 ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் நிற்பதாகக் கூறுகிறது” என்று தெரிவித்துள்ளது.

Loading