முன்னோக்கு

நாஜி ஆட்சியின் தோல்வியின் ஆண்டு நிறைவையொட்டி, ஜேர்மன் சான்சிலர் ஷோல்ஸ் போர் உரை நிகழ்த்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரண்டாம் உலகப் போரின் போது வேர்மாஹ்ட் நிபந்தனையற்ற சரணடைந்து எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி) இந்த ஆண்டு விழாவை ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) முன்னோடியில்லாத வகையில் மறுஆயுதமாக்குதலையும் ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போரின் பாரிய விரிவாக்கத்தையும் நியாயப்படுத்த பயன்படுத்தினார். இந்த நோக்கத்திற்காக, அவர் நாஜி ஆட்சியின் குற்றங்களைச் சொல்ல முடியாத விதத்தில் சிறுமைப்படுத்தி மற்றும் முக்கியத்துவமற்றதாக்கி, ஜேர்மன் வல்லரசு அரசியலின் மோசமான மரபுகளை தொடர்ந்தார்.

ஜேர்மன் சான்ஸ்லர்கள் மக்கள்தொகையில் தற்போதைய பிரச்சினைகள் குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றுவது அரிதாகும். மேர்க்கெல் தனது 16 ஆண்டுகால பதவிக் காலத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில் ஒருமுறை மட்டுமே அவ்வாறு செய்தார். ஷோல்ஸ் இப்போது இந்த வழிமுறையை பாசிசத்தில் இருந்து விடுதலை பெற்ற இந்த நாளில் ரஷ்யாவுடன் போருக்கு ஆக்கிரோஷமான உந்துதலுக்கு பிரச்சாரம் செய்வதற்கும் உக்ரேனுக்கு மேலும் ஆயுத விநியோகத்தை அறிவிப்பதற்கும் பயன்படுத்தினார்.

மே 8, 2022 அன்று தனது போர் உரையின் போது ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ் [AP Photo/Britta Pedersen/Pool] [AP Photo/Britta Pedersen/Pool]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது 'காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்' மூலம் 'உக்ரேனை அதன் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை அழித்து அடிபணியச் செய்ய' விரும்புவதாக ஷோல்ஸ் குற்றம் சாட்டினார். இந்த வழியில், ஷோல்ஸின் கூற்றுப்படி, புட்டின் 'போர், இனப்படுகொலை மற்றும் கொடுங்கோன்மை' ஆகியவற்றை ஐரோப்பாவிற்கு மீண்டும் கொண்டு வந்தார். 'நாங்கள் தாக்கப்பட்டவர்களுடன் நின்று சட்டத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறோம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் உக்ரேனை நாங்கள் ஆதரிக்கிறோம். அப்படிச் செய்யாதது வெறும் வன்முறைக்கு சரணடைவதையும், ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிப்பதையுமே அர்த்தப்படுத்தும் என்றார்.

எனவே ஜேர்மனி 'ரஷ்ய கட்டளையிடப்படும் சமாதானத்தை' ஏற்காது என்று ஷோல்ஸ் அறிவித்தார். இதன் மூலம் மோதலில் தன்னை ஒரு போரில் ஈடுபடும் கட்சியாக தான் கருதுவதாக மறைமுகமாக ஒப்புக்கொண்டார். இந்த நிலைப்பாட்டிலிருந்து, ரஷ்யாவை இராணுவ ரீதியாக தோற்கடிக்க உக்ரேனுக்கு மேலும் கனரக ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்தார்.

ஜேர்மன் டாங்கிகளை ரஷ்யாவிற்கு எதிராக மீண்டும் உருள அனுமதிக்கும் வரலாற்று முடிவு, 'பாதுகாப்பு மற்றும் அமைதி' தொடர்பானதோ மற்றும் குறைந்தபட்சம் உக்ரேனிய மக்களின் பாதுகாப்பிற்காகவோ எடுக்கப்பட்டதல்ல. மாறாக, ஜேர்மனியும் மற்ற நேட்டோ சக்திகளும் ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை திட்டமிட்டு தூண்டிவிட்டு, உக்ரேனிய மக்களின் முதுகில் பின்னால் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பினாமி போரை நடத்த அனுமதிக்கின்றன.

2014 ஆம் ஆண்டிலேயே, ஜேர்மன் அரசாங்கம் உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு எதிரான சதியை ஆதரித்து, அந்நாட்டை ரஷ்யாவிற்கு எதிராக அதன் சொந்த செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வந்தது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு Right Sector போன்ற வலதுசாரி தீவிரவாத துணைப்படைகளை அடிப்படையாகக் கொண்டதுடன் அவை, அடுத்துவரும் ஆண்டுகளில் அரசியலில் அதிக செல்வாக்கைப் பெற உதவவிருந்தன.

ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னைய சில மாதங்களில், உக்ரேனிய அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் பாரிய ஆதரவுடன் நாட்டின் கிழக்கில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனது இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் தயாராகிக்கொண்டிருந்தது. கிரிமியாவில் ரஷ்யாவுக்கு எதிரான போரும் முன்னரே திட்டமிடப்பட்டதாகும்.

புட்டின் ஆட்சி இந்த ஆக்கிரமிப்புக்கு நச்சுத்தன்மையான தேசியவாதம் மற்றும் உக்ரேன் மீதான அதன் பிற்போக்குத்தனமான தாக்குதலுடன் பதிலளித்தது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்க திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு போலிக்காரணமாக ஜேர்மனியால் கைப்பற்றப்பட்டது. உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனியின் மீது விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டு, அதன் படையணிகள் மிகப்பெரிய ஐரோப்பிய இராணுவமாக மீண்டும் கட்டமைக்கப்படவுள்ளது.

ஜேர்மனி ஒரு 'கட்டளையிடப்பட்ட சமாதானத்தை' ஏற்காது என்றும் ரஷ்யாவின் இராணுவ தோல்விக்காக போராடுகிறது என்றும் ஷோல்ஸ் அறிவிக்கும்போது, இதன் தர்க்க விளைவு ரஷ்யாவுடன் நேரடி மோதலாகும். இது அணுவாயுத உலகப் போருக்கு வழிவகுக்கும். 'பயம் நம்மை செயலிழக்க செய்யக்கூடாது' என்று நிராகரிக்கும் விதத்தில் அறிவிப்பதற்கு முன், இந்த ஆபத்து பற்றிய கவலையை அவர் சுருக்கமாக குறிப்பிட்டார்.

ஜேர்மன் அரசாங்கம் ஏற்கனவே கிழக்கு ஜேர்மனியின் முன்னாள் கையிருப்புகளிலிருந்து டாங்கிகளை உக்ரேனுக்கு வழங்கியுள்ளதுடன் மற்றும் மேலும் கனரக ஆயுத விநியோகங்களை அறிவித்துள்ளது. இவற்றில் விமான எதிர்ப்பு டாங்கிகள் மற்றும் சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள் ஆகியவை பெரும் அழிவை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. ரஷ்யாவை தோற்கடிப்பதற்காக ஜேர்மனியும் நேட்டோவும் உக்ரேனை அழிவிற்குட்படுத்த தயாராக உள்ளன.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் முன்பு போலவே, இந்த காதடைக்கும் போர்ப் பிரச்சாரம் மற்றும் ரஷ்ய எதிர்ப்பு பேரினவாதம் மற்றும் இனவாதத்துடன் கைகோர்த்து செல்கிறது. எடுத்துக்காட்டாக, 'அனைத்து ரஷ்யர்களும் இப்போது எங்கள் எதிரிகள்' என்பதை Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை உக்ரேனிய தூதர் அந்ரே மெல்னிக் உடனான ஒரு நேர்காணலுக்கு தலைப்பாக இட்டது. மெல்னிக் நாஜிகளுடன் ஒத்துழைத்த ஸ்டீபன் பண்டேராவின் ஆதரவாளராவார்.

அதன் கனரக ஆயுதங்களுடன், ஜேர்மனி அசோவ் பட்டாலியன் மற்றும் பிற நவ-நாஜி பிரிவுகளை ஆயுதமயமாக்குகின்றது. இந்த குழுக்கள் ஆயிரக்கணக்கான உக்ரேனிய யூதர்களின் கொலைக்கு காரணமான பண்டேராவின் உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் (OUN) அரசியல் சந்ததியினராவர்.

'ஐரோப்பாவில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு' பற்றிய ஷோல்ஸின் வாயடிப்பு, சோவியத் ஒன்றியத்தின் மீது ஜேர்மன் படையெடுப்பு தினமான ஜூன் 22, 1941 அன்று ஜேர்மன் மக்களிடம் ஹிட்லர் ஆற்றிய உரையைப் போல் ஒத்துள்ளதாக இருக்கின்றது.

பின்லாந்து மற்றும் ருமேனியா மீதான சோவியத் ஒன்றியத்தின் தாக்குதல்களை தனது போருக்கான நியாயத்தை அடிப்படையாக வைத்து ஹிட்லரும் பின்வருமாறு அறிவித்தார்: 'சூழ்நிலைகள் என்னை மீண்டும் மீண்டும் அமைதியாக இருக்க நிர்ப்பந்தித்திருந்தது, ஆனால் இப்போது செய்யவேண்டிய ஒன்றை புறக்கணித்து தொடர்ந்து பார்த்துக்கொண்டு நிற்காதிருப்பதற்கான தருணம் வந்துவிட்டது. அவ்வாறிருப்பது ஒரு பாவம் மட்டுமல்ல ஜேர்மன் மக்களுக்கு எதிரான குற்றமும், ஆம், ஐரோப்பா முழுமைக்கும் எதிரான குற்றமாகும்”.

நிபந்தனையற்ற சரணடைந்த நாளில் ஷோல்ஸின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி உரையில், 6 மில்லியன் யூதர்கள் தொழில்துறை ரீதியாக அழிக்கப்பட்ட 'யூதப்படுகொலை' மற்றும் நாஜி ஜேர்மனியால் விரிவாக திட்டமிடப்பட்ட 'அழிப்புப் போர்' என்ற சொற்கள் தோன்றவில்லை. அவரது உரையின் தொடக்கத்தில், அவர் 60 மில்லியன் போரில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போர்முனைகளிலும் வதை முகாம்களிலும் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கானவர்களைப் பற்றிய சில பொதுவான சொற்றொடர்களை மட்டுமே சேர்த்திருந்தார்.

மிகுதியான உரை உக்ரேனுக்கு எதிரான ரஷ்யப் போருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹம்பேர்க் நகரில் ஒரு உரையில், ஷோல்ஸ் 'அழித்தல் போர்' மற்றும் 'நாகரீகத்துடன் முறிவு' என்ற சொற்களைப் பயன்படுத்தினார். அவை முன்னர் வேர்மாஹ்ட்டின் முன்னோடியில்லாத குற்றங்களின் விளக்கத்திற்காக ஒதுக்கப்பட்டன. ரஷ்யா 'அழிவுப் போரை' நடத்தி வருவதாகவும், 'நாகரிகத்துடன் முறித்துக் கொண்டிருப்பதாக' ஷோல்ஸ் கூறினார்.

இவ்வாறு ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைச் சிறுமைப்படுத்துவதும் மற்றும் முக்கியத்துவமற்றதாக்குவதும் வரலாற்றை முற்றிலும் பொய்மைப்படுத்தலாகும். உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு அரசியல்ரீதியாக பிற்போக்குத்தனமானதுடன் மற்றும் ரஷ்ய தேசியவாதத்திற்கு அழைப்புவிடுகின்றது. ஆனால் அதை யூதப் படுகொலைகளுடனோ அல்லது வேர்மாஹ்ட்டின் அழிப்புப் போருடனோ ஒப்பிட முடியாது.

1941 இல் ரஷ்யாவிற்கு எதிராக ஹிட்லரால் முன்னெடுக்கப்பட்ட படையெடுப்பின் பலத்துடன் ஒப்பிடுகையில், உக்ரேனுக்கு எதிராக புட்டின் ஆட்சியால் பயன்படுத்தப்பட்ட படைகள் மிகக் குறைவாகும். வரலாற்றாசிரியர் ஸ்டீபன் ஜி. பிரிட்ஸ் அன்றைய படையெடுப்பை பின்வருமாறு விவரித்தார்:

3 மில்லியனுக்கும் அதிகமான ஆட்கள், 3,600 டாங்கிகள், 600,000 மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் (அத்துடன் 625,000 குதிரைகள்), 7,000 பீரங்கிகள் மற்றும் 2,500 விமானங்களுடன் (பிரான்ஸ் மீதான படையெடுப்பின் போது பயன்படுத்தப்பட்டதை விட உண்மையில் சிறியதாக இருந்தது) ஜேர்மானியர்கள் வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை ஏவினார்கள். [கிழக்குயுத்தம்: கிழக்கில் ஹிட்லரின் அழிப்புப் போர்]

ஜேர்மனியின் 'பார்பரோசா நடவடிக்கை' பற்றி பிரிட்ஸ் பின்வருமாறு தொடர்ந்தார்:

இது வரலாற்றில் மிகப் பெரிய இராணுவப் பிரச்சாரம் மட்டுமல்ல, இது இனப்படுகொலை வன்முறையின் முன்னோடியில்லாத பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டது. இதற்கு யூதப்படுகொலை சிறந்த உதாரணமாக உள்ளது. இருப்பினும், இந்த யூதர்களின் கொலை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கொலை அல்ல; மாறாக, இது வேண்டுமென்றே, விரிவான சுரண்டலுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, இன மறுஒழுங்கமைப்பு மற்றும் பரந்த அளவிலான மக்கள் தொகையை மாற்றுவதற்கான கற்பனாவாத திட்டமாகும்.

இந்த வரலாற்றை நன்கு அறிந்த ஒரு ஜேர்மன் சான்சிலருக்கு, உக்ரேன் மீதான படையெடுப்பை நாஜி அழிப்புப் போருடன் ஒப்பிடுவது அரசியல் ரீதியாக இழிவானது. மேலும், ரஷ்ய போர்ப்பிரச்சாரம் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் அமெரிக்க தலைமையிலான மற்றும் ஜேர்மன் ஆதரவுடன் நடந்த போர்களின் மிருகத்தனத்தை கிட்டவும் நெருங்கவில்லை. அங்கு முழு நாடுகளும் தரைமட்டமாக்கப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நியூ யோர்க் டைம்ஸ் கூட இதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. மே 3 அன்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, போரில் ரஷ்யப் படைகளின் 'குறிப்பிடத்தக்க நிதானத்தை' எடுத்துக்காட்டியது.

ஜேர்மன் சான்சிலரின் பேச்சு வரலாற்றின் பரவலான பொய்மைப்படுத்தலின் ஒரு பகுதியாகும். பேர்லின் மாநிலத்தில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சி/இடது கட்சி/ பசுமைக் கட்சி செனட் அரசாங்கம் செம்படையின் நினைவுத் தளங்களில் சோவியத் கொடிகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்தது. அதே நேரத்தில் உக்ரேனுக்கான ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் நவ-நாஜி குழுவான “The Third Way” இனை ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதித்தது.

ஜேர்மன் அரசாங்கம் 2014 இல் ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்து மற்றும் 'ஜேர்மனியின் இராணுவ கட்டுப்பாட்டின் முடிவு' என்று அறிவித்தபோது, இது நாஜி குற்றங்களை அற்பமாக்கியதுடன் ஒன்றிணைந்திருந்தது. பெப்ரவரி 2014 இல் Der Spiegel இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அது இப்போது இறந்துவிட்ட நாஜி ஆதரவாளரான ஏர்ன்ஸ்ட் நோல்டேவை மேற்கோள் காட்டி “இரண்டாம் உலகப் போர் வெடித்ததில் போலந்துக்கும் ஆங்கிலேயருக்கும் இருந்த பங்கு வழக்கத்தில் இருந்ததை விட அதிக கவனத்திற்கெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதை' குறிப்பிட்டது.

அதே கட்டுரையில், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜோர்க் பாபெரோவ்ஸ்கி அறிவித்தார்: “நோல்டக்கு அநீதி இழைக்கப்பட்டது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், அவர் சொல்வது சரிதான். அதற்கான காரணமாக அவர் கூறினார்: 'ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்ல, அவர் தீயவர் அல்ல. அவர் தனது மேஜையில் யூதர்களின் அழிவைப் பற்றி பேச விரும்பவில்லை. கூடுதலாக, அவர் ஹோலோகாஸ்ட்டை ரஷ்ய உள்நாட்டுப் போரில் துப்பாக்கிச் சூடுகளுடன் ஒப்பிட்டு, 'அடிப்படையில் இவை ஒன்றே: தொழில்துறை கொலைகள்' என்று கருத்து தெரிவித்தார்.

பார்பெரோவ்ஸ்கி அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளால் கொண்டாடப்பட்டார். இன்று, அவரது பழிவாங்கும் நிலைப்பாடுகள் உத்தியோகபூர்வ அரசாங்கக் கொள்கையாகும். “மீண்டும் போர் வேண்டாம்!” என்ற முழக்கத்தைப் பயன்படுத்தும் ஷோல்ஸின் முயற்சியில் அவரது போர்க் கொள்கையை நியாயப்படுத்துவதும் வரலாற்றைப் பொய்மைப்படுத்துவதும் குறிப்பாக வெறுக்கத்தக்கதாகும். 'சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு' எங்களால் இயன்றவரை பங்களிப்பது, 'மீண்டும் வேண்டாம்!' என்பதன் சமகால அர்த்தம் என்று ஷோல்ஸ் கூறினார்.

'மீண்டும் வேண்டாம்!' என்ற முழக்கம் ஏற்கனவே முதல் உலகப் போருக்குப் பின்னர் பிரபலமடைந்தது மற்றும் கம்யூனிச கலைஞரான Käthe Kollwitz என்பவரால் மறக்க முடியாத வகையில் சித்தரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்ட மனித வரலாற்றில் மிக மோசமான குற்றங்களுக்குப் பின்னர், இந்த வார்த்தை ஜேர்மனியிலும் உலகம் முழுவதிலும் உள்ள வெகுஜனங்களின் நனவில் ஆழமாக நங்கூரமிடப்பட்டது.

ஷோல்ஸும் மத்திய அரசாங்கமும் இந்த ஆழமான நம்பிக்கையை தங்கள் போர்வெறிக்கான முழக்கத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் அழிக்க முடியாது. இதற்கு மாறாக, ஜேர்மனியின் போர்க் கொள்கையின் தன்மை பெருகிய முறையில் வெளிப்பட்டு வருகிறது. உழைக்கும் மக்களிடையே அது முக்கிய எதிர்ப்பை எதிர்நோக்குகின்றது.

இந்த எதிர்ப்பை நனவான எதிர்ப்பாக மாற்றுவதும், சர்வதேசிய மற்றும் சோசலிச முன்னோக்குடன் அதை ஆயுதபாணியாக்குவதும் இப்போது இன்றியமையாததாக உள்ளது. அனைத்து நாடுகளின் தொழிலாளர்களுடன் சேர்ந்து ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் தீவிர தலையீடு மட்டுமே இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த முடியும்.

Loading