வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் உக்ரேனின் கழுத்தை நெரித்து வருகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த ஆண்டு உக்ரேன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 45 முதல் 50 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் முன்கணித்துள்ள போதிலும், வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் பில்லியன் கணக்கான டாலர் கடனை திருப்பிச் செலுத்தும்படி அதன் கழுத்தை நெரிக்கிறார்கள். பெருமளவிலான ஆயுதங்களும், ஆயுதங்களை வாங்குவதற்கான பணமும் உக்ரேனுக்கு வட்டியில்லாமல் பாய்ச்சப்படும் அதேவேளை, நிதியுதவி கியேவுக்கு தொடர்ந்து நிலைத்திருக்கவும், உள்கட்டமைப்பில் ஏற்பட்ட விரிவான சேதத்தை திருத்தவும், தற்போதைய கடன்களை திருப்பி செலுத்துவதை முக்கியமான நோக்கமாக கொண்ட மற்றும் ஒப்பீட்டளவில் அடிக்கடி செலுத்த வேண்டியுள்ள குறுகிய கால கடன்கள் ஆகியவற்றில் சிறு பகுதியளவு நிதியே தேவையாகும்.

மார்ச் மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) உக்ரேனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவிப் பொதியை அறிவித்தது. படையெடுப்புக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும் உலக வங்கியும் முறையே 1.2 பில்லியன் டாலர் மற்றும் 3 பில்லியன் டாலர் நிதியுதவிகளை வழங்குவதாக உறுதியளித்தன, அந்த நிதிகள் தவணைமுறையில் வழங்கப்பட்டு வருகின்றன.

வாஷிங்டன் டிசி இல் உள்ள சர்வதேச நாணய நிதிய தலைமையகம் (Credit: IMF)

இதுவரை கனடா, போலந்து, மற்றும் ஸ்காண்டிநேவியா மற்றும் பால்டிக் நாடுகள் உட்பட மற்ற நாடுகள் மூலம் சர்வதேச நாணய நிதியம் கூடுதலாக உருவாக்கியுள்ள ஒரு சர்வதேச கணக்கின் மூலம் கியேவுக்கு ‘கடன்களாகவும் மானியங்களாகவும்’ நிதியை வழங்க முடியும். உலக வங்கியும் கூட, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் பிற நாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் வகையில் ‘Multi-Donor Trust Fund’ என்ற நிதியை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் ஒதுக்கப்பட்ட சர்வதேச நாணய நிதிய நிதியில் 2.7 பில்லியன் டாலரைப் பெறவும் உக்ரேன் முயற்சிக்கிறது.

உக்ரேனின் தேவைகளுடன் ஒப்பிடுகையில் இந்த நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் உறுதிமொழிகள் ஒன்றுமே இல்லை. உக்ரேனின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு 220 பில்லியன் டாலரில் இருந்து 600 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேவேளை, தலைநகரில் உள்ள School of Economics அமைப்பு ஒவ்வொரு வாரமும் சுமார் 4.5 பில்லியன் டாலர் சேதம் ஏற்படுவதாக மதிப்பிடுகிறது. ஏப்ரல் நடுப்பகுதியில், செலென்ஸ்கி அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 7 பில்லியன் டாலர் நிதி பெறாமல் அதனால் இனி இயங்க முடியாது என்று அறிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநரான கிறிஸ்டலினா ஜியோர்ஜீவா (Kristalina Georgieva), “முதல் மற்றும் இரண்டாம் மாதத்திற்கான [நிதிக்கான] வழியை நாங்கள் கண்டுபிடித்தோம்,” ஆனால் அடுத்தடுத்த மாதங்களுக்கு அது முடியவில்லை, அதாவது கடன் வழங்கும் நிறுவனமானது போர் மண்டலத்திற்கு வெளியே உக்ரேனின் சில பகுதிகளில் பொருளாதார மீட்புக்காகவும், மேலும் “இப்போது வேறு எங்காவது வேலை செய்பவர்களிடமிருந்து நிதி அனுப்பப்படும்” என்ற நம்பிக்கையிலும் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று BBC செய்திகளுக்குத் தெரிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாததால் உக்ரேனில் இருந்து வெளியேறும் பெரும்பகுதி பெண்கள், குழந்தைகள், மற்றும் முதியவர்கள் உள்ளடங்கலான மில்லியன் கணக்கான அகதிகள் அமெரிக்கா மற்றும் நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட போரில் ஏற்கனவே ஏழ்மை நிலையில் உள்ள நாடு அழிக்கப்பட்டதற்கான செலவை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் குறைந்த ஊதிய தொழிலாளர் படையாக மாறியுள்ளனர்.

ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பே, உக்ரேன் ஏற்கனவே பாரிய வெளிநாட்டு கடன் சுமையைக் கொண்டிருந்தது. இது மூன்று தசாப்தங்களாக முடிவின்றி வாங்கப்பட்ட கடன்களால் உருவானது. அதாவது ஒவ்வொரு புதிய கடன் வாங்குவதற்கான சுழற்சியிலும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க நேரிட்டது. அது மில்லியன் கணக்கானவர்களை ஒன்றிற்கும் வழியற்றவர்களாக்கி, மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய இலாபம் ஈட்டும் வாய்ப்பைத் திறந்து விட்டது.

உலக வங்கியின் தரவுகளின்படி, உக்ரேன் வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடம் பெற்ற 129 பில்லியன் டாலர் அளவிலான போருக்கு முந்தைய கடன் சுமையைக் கொண்டிருந்தது. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 78.8 சதவீதத்திற்கு சமமானதாகும். கியேவ் இந்த ஆண்டு 16 பில்லியன் டாலரை திருப்பிச் செலுத்த எதிர்பார்க்கிறது. நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் அதன் மீது குவிந்த வட்டிக்குக் கூடுதலாக, உக்ரேன் சர்வதேச கடன் வழங்குநர்களால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை நிறைவேற்றத் தவறியதற்காக பல்வேறு அபராதங்களையும் கட்டணங்களையும் செலுத்த வேண்டிய நிலையை எதிர்கொள்கிறது. 2022 ஆம் ஆண்டில், உக்ரேன் சர்வதேச நாணய நிதியத்திற்கு 178 மில்லியன் டாலருக்கு அதிகமான கடனுக்கு மேலதிகமான கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

Deutsche Welle செய்தி ஊடகத்தில் ஏப்ரல் 20 கட்டுரையில், உக்ரேனிய பொருளாதார நிபுணர் Oleksandr Kravchuk, “[சர்வதேச கடன் வழங்குநர்களிடமிருந்து] பெறப்படும் கடன் தொகை நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு தெளிவாக போதுமானதாக இல்லை,” என்ற உண்மை நிலைமையைப் பற்றி குறைகூறியதுடன், வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தாலும் “நாட்டின் கடன் சார்பு தன்மையும் கடன் சுமையும் மட்டுமே அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டார். மேற்கில் உள்ள வேறு சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் வர்ணனையாளர்களைப் போலவே, உக்ரேனின் கடன்களை இரத்து செய்ய அவர் அழைப்பு விடுத்தார். அப்படி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

உக்ரேன் உடனான தற்போதைய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களின் விதிமுறைகள், அனைத்து கடன்களும், ‘முன்னெச்சரிக்கை மற்றும் பணப்புழக்க வழிகள்,’ ‘சார்பு ஒப்பந்தங்கள்,’ ‘நிதிக் கடன் வழிகள்,’ மற்றும் பிற கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தேவைகளுக்கு உட்பட்டவை என்பதை தெளிவாகக் கூறுகின்றன. கடனாளி குறிப்பிட்ட டாலர் வரம்புகள் மற்றும் காலக்கெடுவை மீறுகையில், அதிகரித்தளவில் தொடர்ச்சியான நிதி அபராதங்களை அனுபவிப்பதும் இதில் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால், கடன் தொகை வளரும் போது வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்பதுடன், கடனாளி அதைத் திருப்பிச் செலுத்த எடுத்துக்கொள்ளும் காலமும் நீட்டிக்கப்படுகிறது. கடன் பெறுபவர் தனது கடனை அடைக்க அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியம் சில நாட்களுக்கு முன்பு உக்ரேனிய பொருட்களின் இறக்குமதியை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும், அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் ஒரு முயற்சியாக தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த வேலை செய்வதாகவும் அறிவித்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதியாகக் குறைந்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உக்ரேன் எதனை விற்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தனிநபர்கள் மற்றும் தனிப்பட்ட நிறுவனங்கள் உட்பட தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்படும் கடன்களால் உக்ரேனின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. இதுவரை கியேவ் 1 பில்லியன் டாலர் அளவிற்கு போர் பத்திரங்களை விற்றுள்ளது. அவற்றிற்கு 11 சதவீத வட்டியுடன் ஓராண்டுக்குள் தொகை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். CNN Business செய்திகளின்படி, செலென்ஸ்கி அரசாங்கம் இப்போது டிஜிட்டல் நாணய நன்கொடைகளுக்கு மேல்முறையீடு செய்து ‘நிதி சாராத அலகுகள்’ (‘non-financial tokens) மூலம் நிதியுதவி பெறுகிறது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பிற முக்கிய கடன் வழங்குநர்கள் என அனைவரும், உக்ரேனின் வளங்கள் மீது தங்கள் கட்டுப்பாட்டை பெரியளவில் விரிவுபடுத்துவதற்கான, மற்றும் சமூக செலவினங்களை குறைக்கவும் அதன் பொருளாதாரத்தை வெளி முதலீட்டாளர்களுக்கு திறக்கவும் நாட்டை கட்டாயப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக மட்டுமே போரை பார்க்கின்றனர். உதாரணமாக, உக்ரேன் உலகின் ‘கருப்பு பூமி’ மண்ணில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இது மிகவும் வளமான நிலங்களில் ஒன்றாகும்.

ஏப்ரல் 11 அன்று Atlantic இதழில் எழுதுகையில், நன்கு அறியப்பட்ட அரசியல் விமர்சகரும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் முன்னாள் உரையாசிரியருமான, டேவிட் ஃப்ரம், உக்ரேனுக்கு உதவ மேற்கத்திய நாடுகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் “தொண்டுக்கு நிகரான ஒரு பரிசு அல்ல, மாறாக பரஸ்பர நன்மைக்கான முதலீடாகும் என்பதை நிரூபிக்கின்றன” என்று வலியுறுத்தினார். மேலும், உக்ரேன் ‘உள்நாட்டு ஊழல்’ மற்றும் ‘கொள்ளையடித்தலுக்கு’ ஒரு தீர்வு காண வேண்டும், இதற்கு அந்நாடு “சர்வதேச சம்பளத்தைப் பெறும், ஆனால் உக்ரேனிய சட்டத்தைப் பயன்படுத்தும் வெளிநாட்டு நீதிபதிகளை நியமித்து புதிய வர்த்தக நீதிமன்றங்களைத் திறந்து அதன் நீதித்துறையின் குறைபாடுகளை சமாளிக்க வேண்டும்” என்பதான முன்னணி பொருளாதார நிபுணர் ஆண்டர்ஸ் அஸ்லண்டின் ஆலோசனையை ஆமோதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர், ஜோர்ஜியா மற்றும் கஜகஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க தூதராக இருந்தவரும், தற்போது RAND நிறுவனத்தின் உறுப்பினருமான வில்லியம் கோர்ட்னி, இதேபோன்ற கருப்பொருள்களை அடிக்கோடிட்டு American newswire UPI இல் உள்ள சக ஊழியர் Khrystyna Holynska உடன் ஒரு பகுதியை எழுதினார். முதலீட்டாளர்களைத் தடுப்பதற்காகவும், உக்ரேனின் பொருளாதாரத்தை தாராளமயமாக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு அளித்த முந்தைய வாக்குறுதிகளில் இருந்து அது ‘பின்வாங்கி’ இருப்பதற்காகவும் ஆசிரியர்கள் உக்ரேனைக் கண்டித்தனர். அதாவது, ‘தனியார் நிலத்திற்கான திறமையான சந்தையை’ விரிவுபடுத்துவதுடன், 3300 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை விரைவுபடுத்தி மறுகட்டமைப்பு செயல்முறையை தொடங்க அவர்கள் கோரினர். அவர்கள் ‘எரிவாயு விலை சீர்திருத்தத்தை’ முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தினர். இது வீட்டை சூடாக்குதல் மற்றும் சமையல் எரிபொருட்கள் மீதான அனைத்து விலைக் கட்டுப்பாடுகளையும் முற்றிலுமாக கியேவ் நிறுத்த வேண்டும் என்று கோரும் ஒரு இடக்கரடக்கல் பேச்சாகும்.

உக்ரேனுக்கான பொருளாதார உதவிக்கு கிடுக்குப்பிடி போடும் அதேவேளை, நேட்டோ நாடுகள் அந்நாட்டிற்கு இன்னும் அதிக அளவில் கொடிய ஆயுதங்களை அனுப்புவதை கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, மார்ச் நடுப்பகுதியில், ஜனாதிபதி பைடென் பதவியேற்றதிலிருந்து வாஷிங்டன் மட்டும் கியேவுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ‘பாதுகாப்பு உதவியை’ அனுப்பியுள்ளது. காங்கிரஸ் இப்போது வெள்ளை மாளிகையின் மற்றொரு 33 பில்லியன் டாலர் உதவிக்கான கோரிக்கையை அங்கீகரிக்கும் விளிம்பில் உள்ளது, இதில் 20 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகை இராணுவ ரீதியிலான உதவிக்காக ஒதுக்கப்படும். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிற அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றும் ரஷ்யாவின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கும் ஆயுதங்களை விரைந்து அனுப்புகின்றன. அதேவேளை இந்தப் பகுதியை தரிசு நிலமாக மாற்றுவது குறித்து அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. அதாவது, ‘நிபந்தனைக்குட்படாத’ (‘no-strings-attached’) பணத்தின் ஒரு பெருமளவை கியேவ் அரசாங்கத்திடம் ஒப்படைப்பது தான் புத்திசாலித்தனம் என்ற அவர்களின் இந்த கணக்கீடுகளுக்கு இது ஒரு காரணியாக இருக்கலாம்.

Loading