பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோன், முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சியுடனான ஒரு ‘புதிய மக்கள் முன்னணி’ பற்றி அறிவித்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை மாலை, France2 தொலைக்காட்சி செய்தியில், ஜோன்-லூக் மெலோன்சோன் தனது அடிபணியா பிரான்ஸ் கட்சிக்கும் (La France Insoumise - LFI), சோசலிஸ்ட் கட்சிக்கும் (Parti socialiste - PS) இடையே, புதிய மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக முன்னணி (New Popular Ecological and Social Union - NUPES) உருவாக்கப்பட்டுள்ளதை அறிவித்தார். இது, LFI மற்றும் பிரான்சின் பாரம்பரிய முதலாளித்துவ ஆளும் கட்சிகளான பசுமைக் கட்சி, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு நீடித்த கூட்டணி என அவர் அறிவித்தார்.

ஜோன்-லூக் மெலோன்சோன் (Wikimedia Commons)

மெலோன்சோன் NUPES ஐ, மக்ரோனால் தொடங்கப்பட்ட சமூக தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு கருவியாக முன்வைக்க முயன்றார். அவர் அதை, “சமூகநல உதவி (RSA) பெறுவதற்கு வாரத்திற்கு 20 மணிநேர கட்டாய உழைப்பு, 65 வயதில் ஓய்வு, மற்றும் பல சமூக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அணிதிரட்டப்படும் பதில் என விவரித்தார்.” ஆனால், ஐரோப்பிய ஒன்றிய சார்பு கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) உடனான கூட்டணியை நிரந்தரமாக்குவதே NUPES இன் நோக்கம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார், மக்ரோன் கூட இந்த கட்சியில் இருந்து தான் உருவானார்.

PS மற்றும் LFI கட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் அவை நெருக்கமாக ஒன்றுபட்டு வேலை செய்வதைத் தடுக்கும் அளவிற்கு ஆழமானவை அல்ல என மெலோன்சோன் விளக்கினார். PS உடனான கூட்டுறவு நிலையானதாக இருக்குமா என்று France2 செய்தியாளர் கேட்டதற்கு, அவர், “ஆம், நாம் அனைவரும் அதைத்தான் செய்ய விரும்புகிறோம். நல்ல செய்தி என்னவென்றால், நாங்கள் பேசத் தொடங்கியபோது, நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பற்றி கொண்டிருந்த கேலிச்சித்திரத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதை உணர்ந்தோம்.

பிரான்சுவா ஹாலண்ட் ஜனாதிபதியாக இருந்தபோது மக்ரோன் பொருளாதார மந்திரியாக இருந்த முதலாளித்துவக் கட்சியான PS உடன் கூட்டணி அமைப்பதன் மூலம், மெலோன்சோன் தனது வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குகிறார். ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில், அவர் 22 சதவீத வாக்குகளை அல்லது கிட்டத்தட்ட 8 மில்லியன் வாக்குகளைப் பெற்றார், குறிப்பாக பெரிய நகரங்களைச் சுற்றியுள்ள தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வாக்குகளைப் பெற்றார். அவர் மக்ரோனை கண்டித்தார், முஸ்லீம்கள் மீதான அவரது அடக்குமுறையை விமர்சித்தார், மேலும் 60 வயதில் ஓய்வு மற்றும் குறைந்தபட்ச ஊதியங்களில் உயர்வு போன்ற பிரபலமான கோஷங்களை முன்வைத்தார்.

தற்போது மெலோன்சோன், அவர் பெற்ற பாரிய வாக்குகளின் காரணமாக பலம் வாய்ந்த ஒரு நிலையை கொண்டுள்ளார் என சோசலிச சமத்துவக் கட்சி (PES) விளக்கியது. மெலோன்சோனின் இடத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சி இருந்தால், அது தேசிய தொழிற்சங்க அமைப்புகளுக்கு அப்பால் சென்று, தொழிலாளர்களை போராட்டத்தில் அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தீவிரமான கொள்கையை செயல்படுத்தும். மக்ரோன் விரும்பும் போர் மற்றும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக LFI வாக்காளர்களின் வேலைநிறுத்தம், பிரெஞ்சு பொருளாதாரத்தின் மையங்களை ஸ்தம்பிக்க வைப்பதுடன், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு எதிராக தொழிலாளர்களின் சர்வதேச அணிதிரட்டலைத் தூண்டியிருக்கும்.

ஆனால் மெலோன்சோன் இந்தக் கொள்கையை மறுத்து, முதல் சுற்று வாக்குப்பதிவில் இருந்து, தனது படைகளை பலவீனப்படுத்த முயற்சித்து வருகிறார். மக்ரோன் அல்லது லு பென் யார் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரின் கீழ் பிரதம மந்திரியாக பணியாற்ற தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார், இது வெளியுறவுக் கொள்கையில் அந்த ஜனாதிபதியின் கட்டளையை ஏற்றுக்கொள்வதற்கு சமமாகும். ஆயினும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து முக்கியமான கேள்விகளும் சர்வதேச அளவினதாக உள்ளன: அதாவது, நேட்டோ-ரஷ்யா போர், கோவிட்-19 தொற்றுநோய், மற்றும் உலகம் முழுவதும் நிலவும் அதிகப்படியான விலை, பணவீக்கம் போன்றவையாகும்.

PS உடன் ஒரு கூட்டணியை உருவாக்குவதன் மூலம், மெலன்சோன் தனது வாக்காளர்களுக்குப் புறமுதுகு காட்டி ஐரோப்பிய ஒன்றியத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கான தனது முடிவை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். France2 இல் பேசுகையில், PS உடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவிற்கு ஆதரவாக இருந்தது என மெலோன்சோன் வலியுறுத்தினார். அவர் இவ்வாறு கூறினார்: “உதாரணமாக, ஐரோப்பா குறித்து, இதுபோன்ற ஒரு ஆணையிலும் மற்றும் தற்போதைய சூழலிலும் ஐரோப்பா அல்லது யூரோவை விட்டு வெளியேறுவது குறித்து எந்த கேள்வியும் இல்லை என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். பிரச்சினை அதுவல்ல. மறுபுறம், ஒரு திட்டம் குறித்து பிரெஞ்சு மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்தால், நாங்கள் அதை நிச்சயம் கடைபிடிப்போம்.”

இந்த முன்னோக்கு தொழிலாளர்களுக்கு ஒரு அரசியல் பொறி மட்டுமே.
உண்மையில், மெலோன்சோன் பிரதம மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு: பெரிய நகரங்களில் அதிக வாக்குகளைக் கொண்ட NUPES, சட்டமன்றத்தில் உள்ள 577 இடங்களில் அதிகபட்சம் நூறு இருக்கைகளையே வெல்லும் என கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, LFI-PS கூட்டணி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றாலும், அது தவிர்க்க முடியாமல் அதன் வாக்காளர்களை ஏமாற்றிவிடும்.

உண்மையில், NUPES ஐ உருவாக்கிய LFI-PS உடன்படிக்கை இராணுவவாதம் மற்றும் சிக்கன கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கிறது. முதலாவதாக, பாரிய செலவினங்களை உள்ளடக்கியதும் மற்றும் ஒரு அணுசக்தி மோதலுக்கு உலகை அச்சுறுத்துவதுமான, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் அது தன்னை இணைத்துக் கொள்கிறது. 'ஐரோப்பிய கண்டத்தில் நிலவும் பதட்டங்கள் மற்றும் போரின் ஒரு சர்வதேச சூழலில் மற்றும் விளாடிமிர் புட்டின் முடிவு செய்த அட்டூழியங்களை எதிர்கொண்டு, நாங்கள் உக்ரேனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கிறோம்' என அது அறிவிக்கிறது.

“ஐரோப்பிய உடன்படிக்கைகள் மக்களால் சட்டபூர்வமாக்கப்பட்ட நமது சமூக மற்றும் சூழலியல் இலட்சியத்துடன் பொருந்தவில்லை” என்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அதன் ஆதரவை அறிவிக்கிறது: “ஐரோப்பிய ஒன்றிய ஸ்தாபக நாடான பிரான்ஸ் இந்த கட்டமைப்பில் அதன் பொறுப்புக்களை ஏற்கும். இந்த சட்டமன்றத்துக்காக நாம் அமைக்கும் அரசாங்கம், ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதையோ, அதன் சிதைவையோ, ஒற்றை நாணயத்தின் முடிவையோ கொள்கையாகக் கொண்டிருக்காது.”

மெலோன்சோன் ஐரோப்பிய ஒப்பந்தங்களுக்கு 'கீழ்ப்படியவில்லை' என்று உறுதியளித்தால், ரஷ்யாவுடனான போர் அச்சுறுத்தல் மற்றும் ஐரோப்பிய சிக்கன நடவடிக்கையின் கட்டமைப்பை அவர் அங்கீகரிக்கிறார். தொற்றுநோய்களின் போது நிதியப் பிரபுத்துவத்திற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை வழங்குவதற்காக பிரெஞ்சு அரசு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 115 சதவிகிதம் கடனில் மூழ்கியுள்ளது. எனவே மெலோன்சோன் குறிப்பிட்டுள்ள சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு பெரும் செல்வங்களுக்கு எதிரான ஒரு தாக்குதல் தேவைப்படும், ஆனால் அதை PS உம் NUPES உம் நிராகரிக்கும்.

மெலோன்சோனுக்கு நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து கிடைத்த மகத்தான வாக்குகள், தொழிலாள வர்க்கம் பாரியளவில் தீவிர வலதின் பக்கம் நகர்கிறது என்ற பிரெஞ்சு அரசியலின் கட்டுக்கதைகளை தகர்த்தெறிந்துள்ளது. உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த கோபமும், தீவிரமயமாக்கலும் எழுந்துள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் ஆளும் உயரடுக்கு போர், பரந்த கோவிட் தொற்று மற்றும் சிக்கன கொள்கைகளை தீவிரப்படுத்துவதை விட வேறெதையும் வழங்காத கட்சிகளை முன்வைக்கிறது.

பிரான்சில் ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளில், மக்ரோன் குறித்து அதிருப்தியில் உள்ள தொழிலாளர்கள் விஷம் கலந்த தேர்வை எதிர்கொள்கின்றனர், அதாவது ஒருபுறம், ‘தீவிரவாத’ இடதுசாரிகள் என்று ஊடகங்களால் முன்வைக்கப்படும் கட்சிகள், உண்மையில் இவை PS க்கு நெருக்கமானவை; மறுபுறம், குறிப்பாக PS இன் சிக்கனக் கொள்கையால் வெறுப்படைந்த புறநகர் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு, மரின் லு பென்னின் வாய்வீச்சு சமூகப் பிரச்சாரம்.

ஒரு வெடிக்கும் அரசியல் நெருக்கடி இருந்தபோதிலும், இந்தத் தேர்தல்களில் மெலோன்சோனின் பாத்திரம், தொழிலாளர்களை அணிதிரட்டுவதைத் தடுப்பதில், ஆளும் உயரடுக்கு இன்னும் வெற்றிபெறும் வழிமுறைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் 'பிரபலமானவை' அல்லது 'இடதுசாரிகள்' என முன்வைக்கும், ஆனால் தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலை நிராகரிக்கும் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளுடன் வலதுசாரி சமரசங்களை நோக்கி நகரும் கட்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான PES இன் அரசியலை, மெலோன்சோன், NUPES மற்றும் அதன் பல்வேறு சுற்றுவட்டங்களின் அரசியலில் இருந்து ஒரு வர்க்கப் பிளவு பிரிக்கிறது. PES, தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டவும், தேசிய தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-FRC) ஆகியவற்றை உருவாக்கவும், தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தையும் பரிந்துரைக்கிறது. ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்கு எதிராக, LFI உம் முழு NUPES உம் ஏகாதிபத்திய போருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சரணடைகின்றன.

மே 68 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் குட்டி முதலாளித்துவ இளைஞர்களிடம் இருந்து எழுந்த சக்திகளால் ட்ரொட்ஸ்கிசம் நிராகரிப்படுவதோடு இது இணைக்கப்பட்டுள்ளது. 1971 இல் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI), ICFI உடன் முறித்துக்கொண்ட சிறிது காலத்திலே, மெலோன்சோன் முதன்முதலில் பியர் லம்பேர் இன் OCI இல் சேர்ந்தார். பிரான்சில் PS முதலாளித்துவ அரசாங்கத்தை அமைக்கும் தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் PS மற்றும் PCF க்கு இடையேயான இடதுகளின் ஐக்கியத்தை OCI ஆதரித்தது. 1976 இல், மெலன்சோன் PS இல் சேர்ந்தார், அது 1981 இல் ஆட்சிக்கு வந்த பின்னர், 1982 இல் அதன் 'சிக்கனத் திருப்பத்தை' நடைமுறைப்படுத்தியது; அடுத்து அவர் ஒரு செனட்டரானார், பின்னர் 1997-2002 இல் PS இன் அமைச்சரானார்.

மெலோன்சோன் 2009 இல் PS ஐ விட்டு வெளியேறினார், ஆனால் ஹாலண்டின் தலைமையின் கீழான PS இன் தீவிர பிற்போக்குத்தனத்திற்குப் பின்னரும் கூட, PS உடனான ஐக்கியத்தின் முதலாளித்துவ முன்னோக்கை கைவிடாமல் இருந்தார். மக்ரோனால் திட்டமிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளில் இருந்து உருவான தொழிலாளர் சட்டத்தையும், மற்றும் பொலிஸ் அடக்குமுறையின் இராணுவமயமாக்கலுடன் அவசரகால நிலையையும் ஹாலண்ட் திணித்தவராவார். யூதர்கள் நாடுகடத்தப்படுவதையும், விச்சியின் கீழ் எதிர்ப்பு ஒடுக்கப்படுவதை நியாயப்படுத்தும் ஒரு நடவடிக்கையான தேசியத்தை பறிப்பதையும் அரசியலமைப்புச் சட்டமாக்க முயற்சித்ததன் மூலம், ஹாலண்ட் தீவிர வலதுசாரிகளுக்கு தனது அனுதாபங்களை வெளிப்படுத்தினார்.

இன்று, ஹாலண்ட் தன்னை மெலன்சோனின் கூட்டாளியாக NUPES இல் காண்கிறார், இது ஆளும் உயரடுக்கின் வலதுசாரி மாற்றத்திற்கு தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை நசுக்க முயற்சிக்கிறது. ஜனாதிபதி மரின் லு பென்னிடம் பிரதம மந்திரியாக பணியாற்ற சம்மதிப்பதாக இரண்டு சுற்றுகளுக்கு இடையே மெலன்சோனின் பிரகடனம், லு பென் தலைமையிலான தீவிர வலதுசாரிகளின் 'அரக்கத்தனத்தை குறைத்துக்காட்டும்' நிறுவனத்தில் அவர் பங்கேற்பதைக் குறிக்கிறது.

மறுபுறம், PES, லு பென் மற்றும் மக்ரோன் இடையேயான இரண்டாவது சுற்றுப் போட்டியைப் புறக்கணிப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலின் போது தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது. மக்ரோன் தீவிர வலதுசாரிகளுக்கு ஒரு முழுத் தடையாக இருப்பார் என்ற தவறான வாதத்தை அது நிராகரித்தது மற்றும் இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான சமரசமற்ற எதிர்ப்பை கொண்டிருந்தது. இது, சகித்துக்கொள்ள முடியாத விலைவுயர்வுகள், தொற்றுநோயினால் விளைந்த பாரிய மரணம், மற்றும் ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே வெளிப்படையாக வளர்ந்து வரும் போர் அபாயம் ஆகியவற்றுக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் பெருகி வரும் கோபத்தின் பக்கம் திரும்பியது.

ஒரு சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க இயக்கம் உருவாகி வருகிறது. மெலோன்சோன் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பை கழுத்தை நெரிக்க முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் அதே வேளையில், NUPESல் இப்போது குழுவாக ஒருங்கிணைந்துள்ள அனைத்து மார்க்சிஸ்ட்-விரோதக் கட்சிகளின் கட்டமைப்பிற்கு வெளியே தொழிலாளர்கள் நகர்வதற்கான சூழ்நிலையையும் அவர் உருவாக்குகிறார். மெலோன்சோன் மற்றும் PS ஆல் உருவாக்கப்பட்ட முட்டுக்கட்டைக்கு மாற்று என்பது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் (ICFI), மற்றும் பிரான்சில் அதன் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியையும் (PES) தொழிலாளர்கள் கட்டமைப்பதாகும்.

Loading