சோசலிசக் கொள்கைகளுக்கு போராட SEP யும் IYSSE யும் தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தை நடத்தின

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 12 அன்று, சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP), சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் (IYSSE), இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தின் ஒரு முக்கிய நகரமான ஹட்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக நடந்துவரும் வெகுஜன இயக்கத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீட்டின் ஒரு பகுதியாகும். தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச முன்னோக்கில் சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக, தொழிலாளர்களின் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதே கட்சி பிரச்சாரத்தின் மையமாக இருந்தது.

கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக ஹட்டன் நகரில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் [WSWS Media]

இராஜபக்ஷ ஆட்சியை அகற்று, எதிர்கால முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை நிராகரி, இலங்கையின் வெளிநாட்டுக் கடனை இரத்து செய் மற்றும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பு போன்ற கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு என்று அழைப்பு விடும் ஏனைய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்கார்ரகள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம், பொதுமக்களின் பரவலான கவனத்தை ஈர்த்தது, அத்தோடு, சில இளைஞர்கள் இணைந்து கொண்டனர் மற்றும் பல பார்வையாளர்கள் ஊக்கம் அளித்தனர். அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக ஒலி எழுப்பின.

நிகழ்வுக்கு முன்னதாக, SEP, IYSSE உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஹட்டன் மற்றும் மஸ்கெலியா பகுதியில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அவர்கள், இராஜபக்ஷ அரசாங்கம் சமூகத் தாக்குதல்களை தீவிரப்படுத்துவது தொடர்பாக கடும் கோபத்தில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து வலுவான ஆதரவைப் பெற்றனர்.

இலங்கையில் காகிதத் தட்டுப்பாடு நிலவி வருகின்ற போதிலும், “இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழி! ஒரு சோசலிச செயல்திட்டத்திற்குப் போராடுவதற்காக நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!” என்று அச்சிடப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் ஏப்ரல் 7 அறிக்கையின் 1,000 க்கு மேற்பட்ட பிரதிகள் சிங்களத்திலும் தமிழிலும் விநியோகிக்கப்பட்டன.

சோசக பிரச்சாரகர்கள் கட்சின் அறிக்கையை ஹட்டன் நகரில் விநியோகித்தனர். [WSWS Media]

தமிழ் பேசும் தொழிலாளர்கள் அதிகம் வாழும் பொகவந்தலாவ மற்றும் ராகலை மற்றும் அதேபோல் ஹட்டன் உட்பட மத்திய தேயிலை தோட்ட மாவட்டங்களில், பல ஆர்ப்பாட்டங்கள் அண்மைய நாட்களில் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருக்கும் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாகவே இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பெருந்தோட்டங்களை பூர்வீகமாக கொண்ட, ஆனால் தற்போது கொழும்பில் பணிபுரியும் பல தமிழ் இளைஞர்கள் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உணவு, எரிபொருள் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் ஒத்துழைப்பதில் பெயர்போன தோட்டத் தொழிற்சங்கங்கள், வளர்ந்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து முதலில் மௌனமாக இருந்தன. ஆனால் தோட்டத் தொழிலாளர்களிடையே அரசியல் அமைதியின்மை வளர்ந்ததால், தொழிலாளர்களின் கோபத்தைக் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் ஏப்ரல் 7 ஆம் தேதி தலவாக்கலையில் ஒரு கூட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை நடத்த தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவை முடிவு செய்தன.

இரண்டு நாட்களுக்கு முன்னர், ஏப்ரல் 5 அன்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தலைவர் ஜீவன் தொண்டமான், இராஜபக்ஷவின் தோட்ட உட்கட்டமைப்பு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

இந்த தொழிற்சங்கங்களின் துரோகக் கொள்கைகளுக்கு மாறாக, கிளனுகி மற்றும் டி பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட சுயாதீன நடவடிக்கைக் குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இராஜபக்ஷ ஆட்சியை அகற்றுமாறு கோரி சுமார் 200 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளனுகி மற்றும் டி பிரிவு தோட்ட நடவடிக்கைக் குழுவானது (GEWAC) முன்னரே, சோசலிச சமத்துவக் கட்சியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

லிந்துலை தோட்டத்தைச் சேர்ந்த நல்லுதம்பி என்ற தோட்டத் தொழிலாளி, ஏப்ரல் 12 ஆர்ப்பாட்டத்திற்கு தயார்ப்படுத்தலுக்கு முன்னதாக WSWS செய்தியாளர்களிடம் பேசினார். உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை அவர் விளக்கினார்.

'தற்போது வாழ்க்கைச் செலவு தாங்க முடியாததாக உள்ளது,' என அவர் கூறினார். “நாங்கள், 200 ரூபாய் ($US75 சென்ட்) செலுத்தி ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை மா வாங்க வேண்டும். ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் என்பன முறையே 450 மற்றும் 1,200 ரூபாய் ஆகும். இந்த சூழ்நிலையில் நாம் எப்படி வாழ முடியும்?”

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார். நாங்கள், 1,000 ரூபாயை சம்பளமாகப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு 20 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்க வேண்டும். அது முடியாவிட்டால், கிலோவுக்கு, 50 ரூபாய் வீதம் வெட்டிக் குறைக்கப்படும்.'' என்றார்.

'விவசாயிகளும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஒரு சாக்கு [50 கிலோ] உரம் ரூ.18,000 என்பதால் அதை வாங்குவது அவர்களுக்கு கடினமாக உள்ளது. விவசாயிகள் எப்படி விவசாயம் செய்ய முடியும்?'' என்று கேட்டார்.

அனைத்து முதலாளித்துவ அரசியல் கட்சிகளையும் நிராகரித்த அவர், எதிர்கால தேர்தல்களுக்காக வாக்குகளை பிச்சை எடுக்க தங்கள் வீடுகளுக்கு வரும் அரசியல்வாதிகளை தடை செய்வது குறித்து தொழிலாளர்கள் தங்களுக்குள் விவாதிப்பதாகவும் கூறினார்.

ஒரு சமூக சேவை செயற்பாட்டாளரான என். தேவபிரியா கூறியதாவது: ”சுமார் 20 ஆண்டுகளாக சமூக சேவகராக பணியாற்றும் நான், இந்த போராட்டத்தில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போராட்டம் பற்றி எனக்கு முன்பே தெரிந்திருந்தால், நான் வேறு சிலருடன் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டிருப்பேன். [இராஜபக்ஷவின்] சர்வாதிகாரத்தை தோற்கடிக்கும் வரை நாங்கள் போராட்டத்தை தொடர வேண்டும் மற்றும் எங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.” என்றார்.

என். தேவப்பிரியா [WSWS Media]

ஏப்ரல் 12 எதிர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, “தொழிலாளர், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் பாரிய எதிர்ப்பு, ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இராஜினாமா செய்யக் கோரி எழுந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இந்தப் பிரச்சாரத்தை ஆதரிக்கிறது, ஆனால் இராஜபக்ஷவின் அரசாங்கம் வீழ்த்தப்பட்டாலும், ஏனைய முதலாளித்துவக் கட்சிகளால் அமைக்கப்பட்டும் அரசாங்கம், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதேபோல், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் எந்த தீர்வையும் வழங்காது.”

“தொழிலாளர் மற்றும் ஏழைகளின் சமூக நிலைமைகளுக்கு எதிரான தாக்குதல்களின் ஆதாரமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை நாம் தூக்கியெறிய வேண்டும். இராஜபக்ஷ அரசாங்கத்தை தூக்கியெறிந்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

'இந்த சமூகப் பேரிடருக்கு மத்தியில் தொழிலாள வர்க்கத்திற்கு அழுத்தமான கேள்விகள் உள்ளன. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போர் உலக மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. இது, ஒரு அழிவுகரமான மூன்றாம் உலகப் போருக்குள் எளிதில் இறங்கலாம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க போராடுகின்றன. நாம் போரின் மூலகாரணமாக உள்ள முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறியப் போராடுகிறோம். உலக சோசலிசப் புரட்சிக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே நாம் போரை நிறுத்த முடியும்.” என அவர் தெரிவித்தார்.

GEWAC செயலாளரும், அப்பகுதியின் முன்னணி சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினருமான கே காண்டீபன் பேசும்போது, “நாங்கள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்காகவும் போராடுகிறோம். ஒவ்வொரு தோட்டத்திலும், தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதில் முன்னணியில் இருக்கும் தொழிலாளர்கள் மீது நிர்வாகம் தாக்குதல் தொடுக்கின்றது. அப்கோட்டில், ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 38 தொழிலாளர்கள், கட்டுகெல்லை தோட்டப் பிரிவைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் மற்றும் ஹட்டன் வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை ஒன்றிணைத்து அவர்களின் உரிமைகளுக்காக போராட, இங்கேயும் மற்றும் ஒவ்வொரு பணியிடத்திலும் தொழிலாளர்களுக்கு நடவடிக்கை குழுக்கள் அவசியம்” என்றார்.

Loading