ரஷ்யா மீதான அமெரிக்க தலைமையிலான போர் விரிவாக்கப்படும் நிலையில், பின்லாந்துடன் சுவீடனும் நேட்டோவில் இணைய உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்லாந்து 'தாமதமின்றி' நேட்டோவில் இணைய இருப்பதாக உறுதியளித்து ஒரு நாளுக்குப் பின்னர், சுவீடனின் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்து வரும் ஒரு நாடாளுமன்ற அறிக்கையையும் ஏற்றுக் கொண்டனர். பெப்ரவரியில் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததில் இருந்து நேட்டோ தொடுத்துள்ள ரஷ்யா மீதான போரில் ஸ்கேன்டிநேவியா மற்றும் ஒட்டுமொத்த பால்டிக் கடல் பகுதிகளையும் இரண்டாவது போர் முகப்பாக மாற்ற நேட்டோ அச்சுறுத்தி வருகிறது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வெறும் 150 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள எஸ்தோனியாவில் அடுத்த வாரம் நடக்க உள்ள நேட்டோவின் 'ஹெட்ஜ்ஹாக்' (Hedgehog) போர்ப் பயிற்சிகளில் பின்லாந்து மற்றும் சுவீடன் துருப்புகள் அமெரிக்க மற்றும் உக்ரேனியப் படைகளுடன் இணைகின்றன. 15,000 துருப்புக்களை உள்ளடக்கிய இந்தப் பயிற்சியானது எஸ்தோனியாவில் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை உருவகப்படுத்துவதாக இருக்கும். ரஷ்யா உடனான பின்லாந்தின் பரந்த 1,300 கி.மீ. எல்லையானது ஒரு போர் மண்டலமாக மாறக்கூடும் என்பதை இது அடிக்கோடிடுகிறது.

நேட்டோவில் பின்லாந்து இணைவது குறித்து வியாழக்கிழமை கேட்ட போது, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்: 'இது சம்பந்தமாக எழும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்க, இராணுவ-தொழில்நுட்பரீதியாகவும் மற்றும் பிற இயல்புகளிலும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா நிர்பந்திக்கப்படும்,” என்றார். சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைந்தால், கலினின்கிராட்டில் உள்ள ரஷ்யாவின் பால்டிக் துறைமுகத்தில் அணுஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்துவதன் மூலம் அவை பிராந்திய அதிகாரச் சமநிலையைப் பேண முயலும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாரம் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், ஐரோப்பா முழுமையான போரை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதை ஒப்புக் கொண்டார். 'நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்புகின்றன, மேற்கத்திய உபகரணங்களைப் பயன்படுத்த துருப்புக்களைப் பயிற்றுவிக்கின்றன, கூலிப்படைகளை அனுப்புகின்றன மற்றும் எங்கள் எல்லைகளுக்கு அருகில் அந்த கூட்டணி நாடுகள் நடத்தும் இராணுவப் பயிற்சிகள் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு பகிரங்கமான நேரடி மோதலுக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன' என்றவர் கூறினார். 'அத்தகைய மோதல் எப்போதும் ஒரு முழுமையான அணுஆயுதப் போராக திரும்பும் அபாயம் உள்ளது,' என்றார்.

எவ்வாறிருப்பினும் சுவீடன் பிரதம மந்திரி மாக்டலேனா ஆண்டர்சன் (Magdalena Andersson) நேட்டோவில் இணைவது குறித்து நாளை ஒரு விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்து பின்லாந்து கடைப்பிடித்து வந்த நடுநிலைமையை அது விட்டுவிட்ட நிலையில், 1814 இல் முடிந்த நெப்போலிய போர்களுக்குப் பின்னர் இருந்து இரண்டு நூற்றாண்டுகளாக வெளிநாட்டுப் போர்களில் அணிசேராமல் இருக்கும் சுவீடனின் கொள்கையை, மலைப்பூட்டும் அளவுக்குப் பொறுப்பற்ற தன்மையோடு, சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சியினர் கைத்துறந்து வருகின்றனர்.

நேற்று இரவு ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுவீடனின் பாதுகாப்புத்துறை மந்திரி பீட்டர் ஹல்ட்க்விஸ்ட் (Peter Hultqvist) பேசுகையில், சுவீடனின் அறிவிப்பு ரஷ்யாவுடன் போரைத் தூண்டக் கூடும் என்று ஒப்புக் கொண்டார் என்றாலும், அதன் ஆபத்தை அவர் நிராகரித்தார்: 'சுவீடன் நேட்டோ உறுப்பினர் பதவியை நாடினால், ரஷ்யாவிடம் இருந்து எதிர்வினை வரும் அபாயம் உள்ளது. … அப்படியான சந்தர்ப்பத்தில், எந்த எதிர் விடையிறுப்பையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில், சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன் லிண்டே கூறுகையில், 'சுவீடன் நேட்டோ உறுப்பு நாடாவது இராணுவ மோதல்களுக்கான வரம்பை அதிகரிப்பதுடன், அவ்விதத்தில் ஒரு மோதல்-தடுப்பு விளைவைக் கொண்டிருக்கும்,' என்றார்.

நேட்டோவில் இணைவதற்கான சுவீடன் அரசாங்கத்தின் விஷயம் அரசியல் பொய்கள் மற்றும் சுய-மாயையின் கலவையாக உள்ளது. லிண்டே வாதிடுவது போல, நேட்டோவில் இணைவதன் மூலம், மாஸ்கோவுக்கு நேட்டோவுடன் ஓர் இராணுவ மோதல் ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பைத் தெளிவுபடுத்துவதால், அதைத் தாக்குவதில் இருந்து ரஷ்யாவைத் தடுப்பதாக இல்லை. மாறாக ஏற்கனவே வாஷிங்டன், இலண்டன் மற்றும் பேர்லின் தலைமையில் ரஷ்யாவுக்கு எதிராக நடந்து வரும் நேட்டோ போர் முனைவில் சுவீடனும் கையெழுத்திடுவதாக உள்ளது.

சுவீடஷ் அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து வரும் 'எந்தவொரு எதிர் நடவடிக்கைக்கும்' தயாராக உள்ளது என்ற ஹல்ட்க்விஸ்டின் அறிவிப்பு வியப்பூட்டுகிறது. ரஷ்யாவிடம் 6,000 க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதைச் சுவீடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மறந்து விட்டதாகத் தெரிகிறது: நேட்டோ-ரஷ்யா போர் பெரியளவில் விரிவடையும் போது, ரஷ்யாவின் 'எதிர் நடவடிக்கையும்' சுவீடனை அழித்து விடக் கூடும்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் விரிவாக்கம், ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து அப்பாவி உக்ரேனைப் பாதுகாப்பதற்காக என்ற நேட்டோ பிரச்சாரத்தைத் தகர்க்கிறது. பெப்ரவரி 2022 இல் கிரெம்ளின் உக்ரேன் மீது படையெடுத்தது. ஆனால் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள், 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பின் விளைவுகளைச் சாதகமாக்கி, உலக அரசியலை வேகமாக மாற்றி அமைக்கும் முயற்சியில், ஆத்திரமூட்டலில் அவை முக்கிய பாத்திரம் வகித்துள்ள ஒரு மோதலைக் கைப்பற்றி வருகின்றன.

2014 இல் உக்ரேனிய தேசியவாத ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த, கியேவ் அதிவலது பதவிக் கவிழ்ப்பு சதியை ஆதரித்ததில் இருந்தே, நேட்டோ பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடைய ஆயுதங்கள் மற்றும் இராணுவ ஆலோசகர்களை உக்ரேனுக்குள் பாய்ச்சி உள்ளது. பிரிந்து சென்று ரஷ்யாவுடன் இணைய வாக்களித்ததன் மூலம் அந்தப் பதவிக் கவிழ்ப்பு சதிக்கு விடையிறுத்த ரஷ்ய மொழிப் பேசும் பகுதியான கிரிமியாவை மீட்க சூளுரைத்து கிரிமியன் தளம் (Crimean Platform) என்றழைக்கப்படும் திட்டத்தை கியேவ் கடந்த ஆண்டு ஏற்றது. கிரிமியன் தளத்திற்கு வாஷிங்டனின் ஆதரவு, ரஷ்யாவின் எல்லையைப் பலவந்தமாக உடைப்பதை நேட்டோ ஏற்கிறது என்பதைச் சமிக்ஞைச் செய்தது.

உக்ரேன் மீதான கிரெம்ளினின் படையெடுப்பு, ரஷ்யாவை இலக்கு வைக்கும் நேட்டோ தளமாக அதை உருவாக்குவதில் இருந்து தடுக்க வேண்டும் என்ற ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் பெரும்பிரயத்தன முயற்சியாக இருந்தது. இப்போது, பிரதான ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவைத் துண்டாடி கொள்ளையடிக்கும் மேசையிலிருந்து எச்ச சொச்சங்கள் கிடைக்கும் வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டு, சுவீடனும் பின்லாந்தும் வெளிநாட்டில் ஏகாதிபத்திய போர்த் தொடுக்கவும் உள்நாட்டில் வர்க்கப் போர்த் தொடுக்கவும் நேட்டோவில் இணைய கையெழுத்திடுகின்றன.

நேட்டோவில் சுவீடனும் பின்லாந்தும் உறுப்பு நாடுகளாக ஆவதற்கான திட்டங்களை ரஷ்யா மட்டும் விமர்சிக்கவில்லை, மாறாக துருக்கி மற்றும் சீனாவும் விமர்சித்துள்ளன. துருக்கி நேட்டோவில் இருப்பதால், அந்தக் கூட்டணியில் இணைவதற்கான மற்ற நாடுகளின் விண்ணப்பங்களை வீட்டோ அதிகாரம் கொண்டு தடுக்கும் உரிமை உத்தியோகபூர்வமாக அதன் உறுப்பு நாடுகளுக்கு உண்டு என்கின்ற நிலையில், இது நேட்டோவில் இணைவதற்கான சுவீடன்-பின்லாந்து விருப்பத்தைத் தடம் புரளச் செய்யலாம்.

'சுவீடன் மற்றும் பின்லாந்து தொடர்பான அபிவிருத்திகளை நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம், ஆனால் எங்களுக்கு சாதகமான கண்ணோட்டம் இல்லை,' என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் நேற்று தெரிவித்தார். துருக்கிய அரசாங்கம் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) போன்ற குர்திஷ் தேசியவாத குழுக்களுடன் சுவீடன் தொடர்பு வைத்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார், 'ஸ்கேன்டினேவிய நாடுகள், துரதிருஷ்டவசமாக, ஏறக்குறைய பயங்கரவாத அமைப்புகளுக்கான விருந்தினர் மாளிகைகள் போல உள்ளன. PKK, DHKP-C ஆகியவை நெதர்லாந்திலும் சுவீடனிலும் அமைந்துள்ளன. இன்னும் கூற வேண்டுமானால், அவை அங்கே நாடாளுமன்றங்களிலும் பங்கேற்கின்றன,” என்றார்.

அமெரிக்க இராஜாங்கத் துறையின் ஆதார நபர்கள் நேற்றிரவு கூறுகையில், எர்டோகனின் நிலைப்பாட்டை மாற்ற முடியுமா என்று பார்க்க அவர்கள் அவர் கருத்துக்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயன்று வருவதாகத் தெரிவித்தனர்.

சீனாவின் அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ், நேட்டோவில் சுவீடனும் பின்லாந்தும் உறுப்பு நாடுகளாக ஆவது உலக சமாதானத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்று விமர்சித்தது. ஜூன் மாதம் மாட்ரிட்டில் நடக்க உள்ள நேட்டோ உச்சி மாநாட்டுக்கு ஜப்பான் மற்றும் தென் கொரியாவையும் அழைக்கும் அமெரிக்கத் திட்டங்களைக் குறிப்பிட்டு, அது எழுதியது: “[இது] தொடர்ந்து கொண்டிருக்கும் உக்ரேன் நெருக்கடியைச் சிக்கலாக்குவது மட்டும் அல்லாமல், ஐரோப்பாவின் நிலையான பாதுகாப்பு அடித்தளத்தையும் சிதைத்து விடும், நேட்டோவின் தொடர்ச்சியான விரிவாக்கம்—கிழக்கு, வடக்கு திசைகளில் மற்றும் 'ஆசியமயமாக்கலும்' கூட, உலகையே ஆபத்திற்கு உட்படுத்துகிறது.”

கோவிட்-19 பெருந்தொற்றை உத்தியோகபூர்வமாகவே தவறாகக் கையாண்ட விதம் மீதும் மற்றும் சமூகச் சமத்துவமின்மை மீதும் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில், அரசியல் வாழ்வை முடிந்த வரை வலதை நோக்கி மாற்றுவதற்கான ஆளும் வர்க்கங்களின் முயற்சிகளில் இருந்து நேட்டோவின் இந்தப் பலப்படுத்தும் நடவடிக்கையைப் பிரிக்கப் பார்க்க முடியாது உள்ளது.

பல பால்டிக் நாடுகளில், உக்ரேன் மீதான கிரெம்ளின் இந்தப் படையெடுப்பானது, பின்லாந்து மீது சோவியத் அதிகாரத்துவத்தின் பிற்போக்குத்தனமான 1939 படையெடுப்பின் ஒரு எதிரொலியாகப் பார்க்கப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஸ்ராலினிச ஆட்சி, பெரும் களையெடுப்பில் (Great Purges) சோவியத் ஒன்றியத்திற்குள் மார்க்சிச இயக்கத்தின் ஓர் அரசியல் இனப்படுகொலையை நடத்தி, சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர முறையீடு செய்யும் எந்தவொரு திறனையும் இழந்த பின்னர் அந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. நாஜி ஜேர்மனி மற்றும் அதன் நேச நாடான பின்லாந்தால் சோவியத் ஒன்றியம் மீது படையெடுப்பு நடத்தப்படும் சாத்தியக்கூறை மிருகத்தனமான இராணுவப் படைகளைக் கொண்டு தடுத்து விட அது நோக்கம் கொண்டிருந்தது.

ஆனால் இன்றோ நேட்டோவை மிகவும் உத்வேகத்துடன் ஆதரிக்கும் பால்டிக் நாடுகளில் பல நாஜி-பின்லாந்து கூட்டணிக்கு அவை வரலாற்றுரீதியிலும் அரசியல்ரீதியிலும் அனுதாபமாக இருந்ததைப் பெரிதாக மறைக்க முயலவில்லை. 1941 இல் சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்பில் பின்லாந்து இணைந்தது, அதில் 27 மில்லியன் உயிர்கள் பலி ஆயின மற்றும் ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலைக்கு வழிவகுத்தது; குறிப்பாக (இன்று செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் எனப்படும்) லெனின்கிராட்டை முற்றுகையிட பின்லாந்து நாஜிகளுக்கு உதவியது. சுவீடிஷ் முதலாளித்துவத்தைப் பொறுத்த வரை, அது இரண்டாம் உலகப் போர் முழுவதும் நாஜி ஆட்சிக்கு இரும்புத் தாது மற்றும் பிற முக்கிய மூலப்பொருட்களை வழங்கியது.

நாஜி ஆட்சியில் இருந்து சோவியத் லாத்வியா விடுதலை அடைந்ததைக் குறிக்கும் ஒரு நினைவுச்சின்னத்தை அகற்றுவதற்கு அதிகாரிகளின் திட்டங்களை எதிர்த்து, நேற்று, லாத்விய தலைநகர் ரிகாவில் போராட்டங்கள் வெடித்தன. நாஜிசத்திற்கு எதிரான சோவியத் வெற்றியின் ஆண்டு நினைவு தினமான மே 9 இல் அந்த நினைவுச் சின்னத்தின் முன்னால் ரஷ்யப் பேச்சாளர்கள் வைத்துச் சென்ற மலர்களை நீக்கிய பின்னர் ரிகா நகரக் கவுன்சில் இந்த முடிவை எடுத்தது.

நேற்று, லாத்விய பொலிஸ் ரஷ்ய மொழிப் பேசும் போராட்டக்காரர்களை கைது செய்தனர். உக்ரேனில் ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக ஆதாரமற்ற பொய்யான கூற்றுக்களை மேற்கோளிட்டு, அவர்கள் கூறுகையில், சோவியத் ஒன்றியத்தை ஆதரித்தோ அல்லது ரஷ்யாவை ஆதரித்தோ கொடிகளை அசைப்பது அல்லது அடையாளங்களைக் காட்டுவது, 'இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்கும்,” “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும்', 'சமாதானம் மற்றும் போர்குற்றங்களுக்கு எதிரான குற்றங்களுக்கும்' நிகரானதாகும் என்றனர்.

நேட்டோவில் இணைவது என்ற சுவீடன் மற்றும் பின்லாந்து அரசாங்கங்களின் தீர்மானத்தை தொழிலாளர்கள் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்: இராணுவவாதம், ரஷ்ய-விரோத வெறுப்பு மற்றும் அதிவலது சக்திகளை ஏகாதிபத்திய சக்திகள் ஊக்குவிப்பது ஆகியவை உலகை ஒரு போர் மற்றும் ஓர் அணுஆயுத மோதலைக் கொண்டு அச்சுறுத்துகிறது. ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் இன்றும் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் போல்ஷிவிக் புரட்சியின் மரபுகளின் அடிப்படையில், வடக்கு ஐரோப்பா எங்கிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமே முக்கியமான கேள்வியாகும்.

Loading