நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் முடிவு ரஷ்யா உடனான அமெரிக்க தலைமையிலான போர் முனைவின் மிகப் பெரிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்லாந்தின் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ (Sauli Niinisto) மற்றும் பிரதம மந்திரி சன்னா மரின் (Sanna Marin) ஆகியோர் வியாழக்கிழமை விடுத்த ஒரு கூட்டறிக்கையில், இந்நாடு 'தாமதமின்றி' அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர வேண்டும் என அறிவித்தனர். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக பின்லாந்தின் உத்தியோகபூர்வ நடுநிலைமையை முடிவுக்குக் கொண்டு வரும் இந்த முடிவு, ரஷ்யாவுடனான முழுமையான போரை நோக்கி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய முனைவில் ஒரு மிகப்பெரிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

பின்லாந்து அதில் உறுப்பு நாடாக ஆவது, ரஷ்யாவை ஒட்டி உள்ள நேட்டோவின் எல்லையை இரண்டு மடங்குக்கும் அதிகமாக விரிவாக்கும். அந்நாடு ரஷ்யாவுடன் 1,300 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, அதன் தலைநகரான ஹெல்சிங்கிக்கு (Helsinki) செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிலிருந்து இரயிலில் வெறும் மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும். நேட்டோவில் உறுப்பு நாடாக ஆவதற்கு அடுத்த வாரம் முறைப்படி விண்ணப்பம் சமர்ப்பிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தேவைப்படுகிறது என்பது வெறும் ஒரு சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் வியாழக்கிழமை கூறுகையில், பின்லாந்து அக்கூட்டணியில் இணையும் நிகழ்ச்சிப்போக்கு 'சுமூகமாகவும் விரைவாகவும்' இருக்கும் என்றார். அதைத் தொடர்ந்து அண்டை நாடான சுவீடனும் விரைவில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினர் நேட்டோவில் இணைவதற்குத் தசாப்த காலமாக இருந்து வரும் எதிர்ப்பை ஞாயிற்றுக்கிழமை முறியடிக்க உள்ளனர். அதன் பின்னர் அரசாங்கம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பை வெளியிடும் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஜனவரி 24, 2022 திங்கட்கிழமை, பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், பின்லாந்து வெளியுறவு மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ, இடது மற்றும் சுவீடன் வெளியுறவு மந்திரி ஆன் லிண்டே ஆகியோருடன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்கிறார். (AP Photo/Olivier Matthys, File)

நேட்டோ சிப்பாய்கள், டாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் ரஷ்யாவின் இரண்டாவது நகரத்திலிருந்து ஒரு சில மணி நேர தாக்குதல் தூரத்தில் நிலைநிறுத்தப்படும் சாத்தியக்கூறு கருதி, ரஷ்யா, ஆச்சரியத்திற்கு இடமின்றி, போர் அபாயத்தின் ஒரு மிகப்பெரிய தீவிரப்படுத்தல் குறித்து எச்சரித்து விடையிறுத்தது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அந்த முடிவை 'நிச்சயமான' ஓர் அச்சுறுத்தல் என விவரித்ததுடன், ரஷ்யா திட்டமிட்ட நடவடிக்கைகளுடன் விடையிறுக்கும் என எச்சரித்தார். விளாடிமிர் புட்டினின் நெருங்கிய கூட்டாளியான முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே நேட்டோ விரிவாக்கம் என்பது 'நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அவற்றின் 'பினாமி போருக்கு' பதிலாக ஒரு நேரடியான பகிரங்க மோதல் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். … அதுபோன்றவொரு மோதல் எப்போதுமே முழு அளவிலான அணுஆயுதப் போராக திரும்பும் அபாயம் உள்ளது, இது அனைவருக்கும் ஒரு பேரழிவுகரமான சூழலாக இருக்கும்,” என்று டெலிகிராம் பதிவில் எச்சரித்தார்.

ஒரு பிரத்யேக அறிக்கையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிடுகையில், மாஸ்கோ 'அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களைத் தடுக்க இராணுவ-தொழில்நுட்பரீதியாகவும் மற்றும் பிற தன்மைகளிலும் இரண்டு விதத்திலும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கப்படும்' என்று குறிப்பிட்டது.

பின்லாந்து மற்றும் சுவீடனின் ஆளும் உயரடுக்குகள், அவற்றின் ஏகாதிபத்திய எஜமானர்கள் மற்றும் உலகெங்கிலுமான பெருநிறுவன-கட்டுப்பாட்டு ஊடகங்களும், ஸ்காண்டிநேவிய நாடுகள் நேட்டோவில் இணைய முடிவெடுத்திருப்பது உக்ரேனில் 'ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு' காட்டும் ஒரு 'தற்காப்பு' எதிர்வினை என மோசடியாகக் கூறுகின்றன. ரஷ்யா, உக்ரேனை ஆக்கிரமித்த அந்தத் தருணத்திலேயே நேட்டோவில் இணைவது என்ற 'உடன்பாடு ஏற்பட்டுவிட்டது' என்று பின்லாந்தின் முன்னாள் பிரதம மந்திரி அலெக்சாண்டர் ஸ்டப் வலியுறுத்தினார். ஸ்டாக்ஹோம் நேட்டோவில் இணையாது என்று கடந்த நவம்பரில் பகிரங்கமாக அறிவித்த சுவீடன் பாதுகாப்புத்துறை மந்திரி பீட்டர் ஹோல்ட்க்விஸ்ட் கூறுகையில், புட்டினை 'கணிக்க முடியாது மற்றும் நம்ப முடியாது' என்பதை இந்தப் படையெடுப்பு நிரூபித்துள்ளது, இது சுவீடன் அதன் நிலைப்பாட்டை மறுபரிசீலனைச் செய்ய நிர்பந்தித்தது என்றார்.

'விளாடிமிர் புட்டினின் நடவடிக்கைகள் வடக்கு ஐரோப்பாவின் நீண்ட கால ஸ்திரத்தன்மையை சிதைத்து விட்டன, இதனால் சுவீடனும் பின்லாந்தும் பாதிக்கப்படலாம் என்று உணர்கின்றன,' என பிபிசி குறிப்பிட்டது.

இது சுயநல பிரச்சாரமேயன்றி வேறொன்றுமில்லை. யதார்த்தம் என்னவென்றால், சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது ஒரு பாரிய ஆத்திரமூட்டலாகும், இது ஹெல்சின்கி மற்றும் ஸ்டாக்ஹோமில் முடிவு செய்யப்பட்டதை விட வாஷிங்டன், பேர்லின் மற்றும் இலண்டனில் முடிவு செய்யப்பட்டது என்பதே உண்மை. கடந்த மூன்று தசாப்தங்களாக நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவுபடுத்தியதன் மூலம் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்க அதைத் தூண்டிவிட்டு, பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து பேசுவதற்கான கிரெம்ளின் முயற்சிகளை நிராகரித்ததன் மூலம், அமெரிக்க, ஜேர்மன் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரஷ்யாவை அரை-காலனித்துவ அந்தஸ்துக்கு அடிபணிய செய்து புட்டின் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்கான அவற்றின் போர் முனைவில் ஒரு புதிய முன்னணியைத் திறக்கப் பேரார்வத்துடன் உள்ளன.

ஹெல்சின்கி மற்றும் ஸ்டாக்ஹோமில் உள்ள ஆளும் உயரடுக்குகள் சமீபத்திய தசாப்தங்களில் ஏகாதிபத்திய சக்திகளுடன் அவற்றின் இராணுவ-மூலோபாய உறவுகளை முறையாக ஆழப்படுத்தி உள்ளன. 1990 களின் நடுப்பகுதியில் நேட்டோவின் 'அமைதிக்கான பங்காண்மை' திட்டத்தின் உறுப்பினர்களான பின்னர், இத்திட்டம் அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணியை கிழக்கு ஐரோப்பாவில் விரிவாக்க உதவும் ஒரு முக்கிய இயங்குமுறையாக இருந்த நிலையில், பின்லாந்து மற்றும் சுவீடன் துருப்புக்கள் தொடர்ச்சியாகப் பல இராணுவ ஒத்திகைகள் மற்றும் நேட்டோ திட்டங்களில் பங்கேற்றன. சுவீடன் மற்றும் பின்லாந்து துருப்புக்கள் ஆப்கானிஸ்தான் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பில் இணைந்தன, அதே சமயம் சுவீடனின் Saab-Gripen போர்விமானங்கள் 2011 இல் ஏகாதிபத்திய சக்திகள் லிபியாவை அழித்த போது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தின.

முழுமையான நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பதை அவை தாமதப்படுத்தின என்றால், அது எல்லாவற்றிற்கும் மேலாக ஆக்ரோஷ இராணுவக் கூட்டணிக்கு அவ்விரு நாடுகளிலும் நிலவும் பரந்த மக்கள் எதிர்ப்பே காரணமாக இருந்தது. உக்ரேனில் புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அரசாங்கங்களும் ஊடகங்களும் தூண்டிவிட்ட ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரமும் போர்க் காய்ச்சலும் கருத்துக் கணிப்புகளில் கூர்மையான மாற்றத்தைக் காட்டின, நீண்ட காலத்திற்கு முன்னரே தயாரிக்கப்பட்டு வெறுமனே ஒரு சாக்குபோக்குக்காக காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த, நேட்டோவில் இணைவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த, பின்லாந்து மற்றும் சுவீடன் அரசாங்கங்கள் இதைச் சாதகமாக பற்றிக் கொண்டன.

இராணுவ ஆக்கிரமிப்புக்கு உழைக்கும் மக்களிடையே நிலவும் பலமான எதிர்ப்பை உணர்ந்து, நினிஸ்டோவும் மரினும் அவர்கள் எடுத்த முடிவை வியாழக்கிழமை அறிக்கையில் 'தேசிய பாதுகாப்பு' என்ற வார்த்தைகளில் சித்தரிக்க முனைந்தனர். அவர்கள் அறிவிக்கையில், “நேட்டோவில் உறுப்பினர் ஆவது பின்லாந்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தும். ஒரு நேட்டோ உறுப்பினராக, பின்லாந்து அந்த ஒட்டுமொத்த பாதுகாப்பு கூட்டணியையும் பலப்படுத்தும்,” என்றனர்.

இது ஒரு பொய். பின்லாந்து மற்றும் சுவீடனை நேட்டோவில் இணைப்பது சொல்லப் போனால் ஒட்டுமொத்த நோர்டிக் பிராந்தியத்தையும் ரஷ்யாவுடனான இராணுவ மோதலுக்கான மற்றொரு களமாக மாற்றும். ரஷ்யா மீது சுமத்தப்பட்ட நாசங்களைப் பொருட்படுத்தாமல் 'ரஷ்யாவின் முதுகெலும்பை முறிக்கும்' நோக்கில் ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனுக்குள் பத்து பில்லியன் கணக்கில் பயங்கர ஆயுதங்களைப் பாய்ச்சுவதைப் போலவே, அதேபோல பின்லாந்தும் சுவீடனும் முன்னணி காவலரண் நாடுகளாக மாறும் மற்றும் போர் மண்டலங்களாக கூட மாறலாம். இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக போரும் நான்காம் அகிலமும் என்பதில் ட்ரொட்ஸ்கி எழுதியது போல், “முறையான நடுநிலைமை ஓர் ஏகாதிபத்திய உடன்படிக்கைகளின் அமைப்பால் எவ்வாறு இயல்பாகவே பிரதியீடு செய்யப்படுகிறது என்பதையும், 'தேசிய பாதுகாப்புக்கான' போர் தவிர்க்கவியலாமல் எப்படி ஓர் இணைப்புவாத சமாதானத்திற்கு (annexationist peace) இட்டுச் செல்கிறது என்பதையும் (நா)ம் பார்க்கிறோம்.” ஹெல்சின்கியைப் பொறுத்தவரை, அத்தகைய 'இணைப்புகள்' சந்தேகத்திற்கு இடமின்றி 1945 க்குப் பின்னர் அது சோவியத் ஒன்றியத்திடம் இழந்த இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய 10 சதவீத எல்லையை உள்ளடக்கி இருக்கும்.

நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை இணைப்பது ரஷ்யாவுடனான போர் முனைவில் மற்றொரு முன்னணியைக் கொண்டு வருவதாக ஏகாதிபத்திய சக்திகளின் பார்க்கின்றன என்பது, அவ்விரு நாடுகளுக்கான பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் புதன்கிழமை விஜயத்தால் எடுத்துக்காட்டப்பட்டது, அவர் ஹெல்சின்கி மற்றும் ஸ்டாக்ஹோம் உடன் பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கைகளை முடித்தார். சுவீடன் பிரதம மந்திரியின் அரசு மாளிகை பத்திரிகையாளர் கூட்டத்தின் போது, சுவீடன் மற்றும் பின்லாந்தின் இறையாண்மையைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிராகரிக்க ஜோன்சன் மறுத்துவிட்டார். அவ்விரு நாட்டில் ஏதேனும் ஒன்று கோரினாலும் அதை அவர் 'மிகவும் தீவிரமாக' பரிசீலிப்பதாக ஜோன்சன் தெரிவித்தார். 'நாங்கள் உறுதியாக கூறுவது என்னவென்றால், ஒரு பேரழிவுகரமான சம்பவத்திலோ அல்லது சுவீடன் மீது ஒரு தாக்குதல் நடந்தாலோ, பின்னர் சுவீடன் என்ன கேட்கிறதோ அதற்கு உதவ பிரிட்டன் முன்வரும்.'

பின்லாந்து மற்றும் சுவீடன் நேட்டோவில் இணைவதை ஏற்க மாட்டோம் என்ற ரஷ்யாவின் நிலைப்பாட்டை வைத்துப் பார்த்தால், கணக்கிட முடியாத விளைவுகளுடன் ரஷ்யாவுடனான போருக்கு நடைமுறையளவில் ஜோன்சன் பிரிட்டனைப் பொறுப்பாக்கி உள்ளார். அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் ஜனநாயக ஆட்சியிலும் துர்நாற்றம் வீசுவதைப் போலவே, பிரிட்டனின் ஜனநாயக ஆட்சியின் துர்நாற்றத்தை வெளிக்காட்டும் வகையில், இந்த பயங்கர நிகழ்வுகளைக் குறித்து மக்களிடையே அங்கே ஒரு விவாதம் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், நாடாளுமன்றத்தில் கூட எந்த விவாதமும் ஒழுங்கமைக்கப்படவில்லை.

நேட்டோவில் அவ்விரு நாடுகளும் உறுப்பு நாடுகளாக ஆவதற்கான திட்டங்களைத் தீர்மானிப்பதற்காக, மரின் மற்றும் ஸ்வீடன் பிரதம மந்திரி மாக்டலெனா ஆண்டர்சனை (Magdalena Andersson) ஷ்லோஸ் மெசெபேர்க்கில் ஓர் அரசாங்க விருந்துக்கு ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் கடந்த வாரம் அழைத்திருந்தார். அந்த கூட்டத்திற்குப் பின்னர் ஷோல்ஸ் தெரிவிக்கையில், 'நேட்டோ கூட்டணியில் இருக்க வேண்டுமென இவ்விரு நாடுகளும் தீர்மானித்தால், அவை எங்கள் ஆதரவைச் சார்ந்திருக்கலாம்,” என்றார்.

அமெரிக்க இராணுவம் அதன் பங்குக்கு, சமீபத்திய ஆண்டுகளில் பின்லாந்து இராணுவத்துடன் அதன் இருதரப்பு இராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்கி உள்ளது, வாஷிங்டன் தசாப்தங்களாக சுவீடனுடன் உளவுத்தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் உறவைப் பேணுகிறது.

ரஷ்யாவுடனான பின்லாந்தின் நீண்ட எல்லையானது ரஷ்யாவுக்கு எதிராக ஆத்திரமூட்டல்களை தொடங்குவதற்கும், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கை விரைவாக அச்சுறுத்துவதற்கும் நேட்டோவுக்கு வாய்ப்பளிக்கும் அதே வேளையில், பால்டிக் கடலின் மேற்கு கடற்கரையில் சுவீடன் மூலோபாயரீதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சுவீடிஷ் இராணுவம் பனிப்போர்க் காலத்திலிருந்து பல தசாப்தங்களாக ஒரு குறிப்பிடத்தக்க பிரசன்னத்தைப் பராமரித்து வரும் கோட்லாந்து தீவு (Gotland island), மாஸ்கோவின் பால்டிக் கடற்படையின் தாயகமான கலினின்கிராட் ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து வடமேற்கில் வெறும் 300 கிலோமீட்டரில் அமைந்துள்ளது.

நேட்டோவில் இணைவதற்கான அவர்களின் முனைப்புடன், பின்லாந்து மற்றும் சுவீடிஷ் முதலாளித்துவ வர்க்கங்கள் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் நடந்த போர்களின் போது மிகவும் பிற்போக்குத்தனமான ஏகாதிபத்திய சக்திகளுக்கு அவர்கள் அர்ப்பணித்த அவர்களின் அடிமைத்தனமான அர்ப்பணிப்பை மீண்டும் தொடங்குகின்றன. நவீன சகாப்தத்தில் சோவியத் அரசாங்கத்தால் முதன்முறையாக சுதந்திரம் வழங்கப்பட்ட உடனேயே, பின்லாந்து ஆளும் உயரடுக்கு, அந்நாட்டு உள்நாட்டுப் போரின் போது ஜேர்மன் துருப்புக்களின் உதவியோடு பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களைக் கொன்று குவித்தது. ரஷ்ய உள்நாட்டுப் போரின் போது எதிர்புரட்சிகர வெண் படைகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்லாந்து எல்லையை அவர்கள் திறந்து விட்டார்கள், சோவியத் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து ரஷ்யாவை ஒரு காலனியாக மாற்றும் நோக்கம் கொண்ட ஓர் ஏகாதிபத்திய தலையீட்டை அவர்கள் ஆதரித்தனர்.

1917 இல் போல்ஷிவிக்குகளை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு அதிகாரத்துவத்தின் ஆழ்ந்த விரோதத்தைப் பிரதிபலித்த வகையில், 1939-40 குளிர்காலப் போரில் (Winter War) பின்லாந்து மீது ஸ்ராலினின் பிற்போக்குத்தனமான படையெடுப்புக்குப் பின்னர், பின்லாந்து ஆளும் உயரடுக்கு அந்நாட்டை நாஜி ஜேர்மனியுடன் அணிசேர்த்தது. பின்லாந்து படைகள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜிகளின் நிர்மூலமாக்கல் போரான 'ஆபரேஷன் பார்பரோசாவில்' (Operation Barbarossa) இணைந்தன, இது 27 மில்லியன் உயிர்களைப் பறித்ததுடன், யூத இனப்படுகொலைக்கு (Holocaust) வழிவகுத்தது. சுவீடிஷ் ஆளும் வர்க்கம் அவர்களின் பங்கிற்கு, அந்த போர் நெடுகிலும் நாஜி ஜேர்மனியின் மூலப்பொருட்களுக்கான, எல்லாவற்றிற்கும் மேலாக இரும்பு உலோகத் தாதுக்கான, மிக முக்கியமான ஆதார வளங்களில் ஒன்றாக சேவையாற்றியது.

நாஜி ஜேர்மனியின் தோல்வி மற்றும் பனிப்போரின் தொடக்கம் ஆகியவை, பின்லாந்து மற்றும் சுவீடிஷ் ஆளும் உயரடுக்குகளை அணிசேரா நடுநிலை கொள்கையை ஏற்க நிர்பந்தித்தன. 1948 இல் சோவியத் ஒன்றியத்துடனான சமாதான உடன்படிக்கையின் கீழ் குறிப்பாக பின்லாந்து நடுநிலை வகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து, முதலாளித்துவத்தை மீட்டமைத்ததால், இது அடிப்படையிலேயே அரசியல் மற்றும் புவிசார் மூலோபாய சூழலை மாற்றியது, பின்லாந்து மற்றும் சுவீடனின் ஆளும் உயரடுக்குகள் ஏகாதிபத்திய சக்திகளுடன் இன்னும் நேரடி இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வாய்ப்பை இது வழங்கியது. நேட்டோவில் இணைவதற்கான அவற்றின் முடிவு, இந்த நிகழ்வுபோக்கை முடுக்கிவிடுவதுடன், ரஷ்யா உடனான அமெரிக்க-நேட்டோ போர் உக்ரேனின் எல்லைகளுக்கு அப்பால் பரவி, கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அதிகரித்து வரும் அபாயத்தைத் தீவிரப்படுத்துகிறது.

Loading