உலகம் முழுவதும் முன்நிகழ்ந்திராத நோய்தொற்று வெடிப்புக்கள் உருவெடுக்கும் நிலையில், 10 நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட குரங்கம்மை நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

குரங்கம்மை (Monkeypox) வைரஸின் முன்னோடியற்ற வெடிப்பு ஆபிரிக்காவுக்கு வெளியே ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது என உத்தியோகபூர்வமாக அறியப்பட்டுள்ளது, இந்த கட்டுரையை எழுதும் போது, 107 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான நோய்தொற்றுக்கள் பதிவாகியிருந்தன, அதாவது, இங்கிலாந்தில் 9, போர்ச்சுகலில் 34, ஸ்பெயினில் 32, பிரான்சில் 1, பெல்ஜியத்தில் 2, சுவீடனில் 1, இத்தாலியில் 3, கனடாவில் 22, அமெரிக்காவில் 2, மற்றும் ஆஸ்திரேலியாவில் 1 என்ற எண்ணிக்கைகளில் நோய்தொற்றுக்கள் பரவியுள்ளன.

1958 இல் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, மிகவும் புவியியல் ரீதியாக பரவலாகவும் வேகமாகவும் பரவி வரும் இந்த குரங்கம்மை நோய்தொற்று வெடிப்புக்கான காரணம் பற்றி இதுவரை அதிகம் அறியப்படவில்லை. வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில், இது தொடர்பான அதிகப்படியான தரவுகளும் விஞ்ஞான புரிதலும் வெளிப்படும், ஆனால் சமூக ஊடகங்களில் இதுபற்றி பரந்த வெளிப்பாட்டைக் கண்டறிந்த விஞ்ஞான சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே ஆழ்ந்த கவலை உள்ளது.

பூர்வாங்க பதிவுகளில், விஞ்ஞானிகள், ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவுவதான இந்த வைரஸ் அதிகம் தொற்றக்கூடியதாகவும், மனிதனுக்கு மனிதன் பரவுவதற்கு மிகவும் பொருத்தமானதாகவும் மாறியிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். மேலும், 1980 இல் பெரியம்மை நோய் அழிக்கப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 42 வயதுக்குட்பட்ட அனைத்து மக்களும் பெரியம்மை தடுப்பூசி பெறவில்லை (இது குரங்கம்மை நோய்தொற்றைத் தடுப்பதில் 85 சதவீதம் பயனுள்ளதாகும்). இதன் விளைவாக, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை, மேலும் இளம் பருவத்தினர் கூட குழந்தைகளைப் போல எளிதில் பாதிக்கப்படலாம். 2017 முதல், ஆபிரிக்காவில் குரங்கம்மை நோயாளிகள் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

உண்மை என்னவென்றால், தீவிரமடைந்து வரும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த குரங்கம்மை நோய் பரவுவதானது அதிகரித்தளவிலான மக்களிடையே, குறிப்பாக கோவிட் நோயால் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கப்பட்டவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பெரும்பாலான உலக அரசாங்கங்கள் கடைப்பிடித்த குற்றவியல் அலட்சியமும், பாரிய நோய்தொற்றுக்களை விளைவித்த வேண்டுமென்ற கொள்கைகளும் தேவையில்லாமல் உலகம் முழுவதும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளன. கோவிட்-19 இன் தடுக்கக்கூடிய பரவலைத் தடுக்க முதலாளித்துவ சமூகம் பேரழிவு தரும் வகையில் தோல்வியுற்றால், புதிய அல்லது முந்தைய அரிதான நோய்தொற்றுக்களுடன் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் என்ன நடக்கும்?

ஜனவரியில் ஓமிக்ரோனின் BA.1 மாறுபாட்டின் உலகளாவிய எழுச்சியின் உச்சக்கட்டத்திலிருந்து, சீனாவிற்கு வெளியே உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் கோவிட்-19 இன் பரவலை மெதுவாக்குவதற்கான அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் கைவிட்டதுடன், இந்த வைரஸ் ‘நிரந்தரம்’ ஆகிவிட்டது என பொய்யாகக் கூறி வருகின்றன.

அமெரிக்காவில், பைடென் நிர்வாகம் தற்போது, மிகவும் தொற்றக்கூடிய ஓமிக்ரோன் BA.2 மற்றும் BA.2.12.1 துணை மாறுபாடுகளின் அதிகரித்து வரும் எழுச்சியை தடுக்க எதுவும் செய்யவில்லை, இவை நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரியை மீண்டும் 100,000 க்கு மேலாக அதிகரிக்கச் செய்துள்ளன.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பொது சுகாதாரம் வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டதால், மற்றொரு இணையான உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுக்கக்கூடிய இந்த சமீபத்திய தொற்றுநோய் வெடிப்பை எதிர்கொள்ள உலக சமூகம் முற்றிலும் தயாராக இல்லை.

மே 13 அன்று, உலக சுகாதார அமைப்பு (WHO), இங்கிலாந்தில் ஒரே வீட்டில் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் ஒரு சாத்தியமுள்ள குரங்கம்மை நோய்தொற்றுக்கள் இருப்பதை முதன்முதலில் கண்டறிந்து குறிப்பிட்டது. நைஜீரியாவிற்குப் பயணம் செய்த ஒரு பிரிட்டிஷ் குடிமகன் ஏப்ரல் 29 அன்று ஒரு கடுமையான குரங்கம்மை சொறிக்கு ஆளானார், பின்னர் மே 4 அன்று இங்கிலாந்துக்கு திரும்பினார், இவர் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட தொற்றாக கருதப்பட்டார். அவர் திரும்பியதும், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார், மேலும் தொடர்புத் தடமறிதல் மூலம் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டனர், இருப்பினும் இந்த நோய் தொற்றாளரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்தொற்று பரவுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். நைஜீரியாவில் இந்த தொற்றுநோய்க்கான ஆதாரம் கண்டறியப்படவில்லை.

இங்கிலாந்து நோய்தொற்றுக்கள் பற்றி, உலக சுகாதார அமைப்பு, “நோய்தொற்றுக்கள் பரவியுள்ள நாடுகளுக்கு இடையேயான பயணத் தொடர்புகளால் ஆங்காங்கே உருவெடுக்கும் நோய்தொற்றுக்களுக்கு மாறாக, இந்த நோய்தொற்றின் எந்த ஆதாரமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், இங்கிலாந்தில் தொற்று உள்நாட்டில் இருந்தே பெறப்பட்டதாகத் தெரிகிறது” என்று தெரிவிக்கிறது.

பல்வேறு நாடுகளில் பலதரப்பட்ட நோய்கள் தோன்றுவது மிகவும் சிக்கலானது. அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) உயர் விளைவுகளை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகள் மற்றும் நோயியல் பிரிவின் துணை இயக்குநரான டாக்டர். ஜெனிஃபர் மெக்விஸ்டன் (Dr. Jennifer McQuiston), “போர்ச்சுக்கலில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களையும், ஸ்பெயினில் இருந்து சந்தேகத்திற்கிடமான நோய்தொற்றுக்களையும் நாம் இப்போது கண்டுள்ளது ஒருபுறம் இருக்க, உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான நோய்தொற்றுக்களின் விரிவாக்கத்தை நாம் காண்கிறோம், இந்நிலையில் இந்த நோய் எந்தளவிற்கு பெரியதாகவும் விரிந்ததாகவும் பரவும் என்பதை அறிய எவரும் முயன்று கொண்டிருக்கவில்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் எவ்வளவு பயணங்கள் நடக்கின்றன என்பதைப் பொறுத்தவரை, நாங்கள் அமெரிக்காவில் இந்த நோய்தொற்றுக்களை எதிர்கொள்ளப் போகிறோம் என்று நான் மிகவும் நம்புகிறேன்” என்று STAT News க்குத் தெரிவித்தார்.

மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் இயக்குநரான மிக்கேல் ஓஸ்டர்ஹோம் (Michael Osterholm), தனது கவலைகளை தெரிவித்ததுடன், “போதுமான தொடர்புகளின் காரணமாக இங்கு தீவிரமான பரவல் ஏற்படக்கூடும் என்பதை நாம் எதிராபாராமல் இருக்க முடியாது” என்று கூறுகிறார்.

தொற்றுநோயியல் நிபுணர்களின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பொது அறிக்கையிலும், அவர்கள் அனைவரும் சமூகங்களில் வைரஸ் ஏற்கனவே எவ்வளவு வேரூன்றியுள்ளது என்பதைக் கண்டு குழப்பமடைந்ததாக ஒப்புக்கொண்டனர், இது பொதுவாக மிகவும் அரிதானது என்று குறிப்பிடுகின்றனர். ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் டோம் இங்க்லெஸ்பி (Tom Inglesby), “இது மிகவும் அதிகமான தொடர்புகளால், மிகவும் பரவலாக்கப்பட்ட வழியில் தொடங்கியுள்ளது, மேலும் இது இந்த வலையமைப்புக்குள் எப்படி வந்தது என்பது எங்களுக்குப் புரியவில்லை” என்று STAT News க்குத் தெரிவித்தார்.

குரங்கம்மை வைரஸ் முதன்முதலில் டேனிஸ் வைராலஜிஸ்ட் ப்ரீபென் வான் மேக்னஸால் (Preben von Magnus) 1958 இல் ஆய்வக விலங்குகளாகப் பயன்படுத்தப்படும் நண்டு உண்ணும் மக்காக் குரங்குகளிடமிருந்து அடையாளம் காணப்பட்டது, எனவே நோய் மற்றும் வைரஸூக்கான பெயர் இவ்வாறு உருவானது. கோவிட்-19 நோயை உருவாக்கும் ஒற்றை இழை RNA அடிப்படையிலான SARS-CoV-2 போலல்லாமல், குரங்கம்மை வைரஸ் என்பது இரட்டை இழைகள் கொண்ட DNA விலங்கியல் வைரஸாகும், மேலும் பெரியம்மை நோயை உண்டாக்கும் வேரியோலா (variola) வைரஸை உள்ளடக்கிய மனித எலும்பியல் வைரஸ்களில் இது ஒன்றாகும்.

முதலில், நோயரும்பல் காலம் சுமார் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும், மற்றும் காய்ச்சல், தலைவலி, சோர்வு, தசைவலி, மற்றும் வீங்கிய சுரப்பிகள் ஆகியவற்றுடன் நோய்தொற்றின் வெளிப்படையான அறிகுறிகள் தொடங்குகின்றன. சில நாட்கள் நீடிக்கும் அதிக காய்ச்சலுக்குப் பின்னர், உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதற்கு முன்பாக, முதலில் முகத்தில் தனித்துவமான புண்கள் தோன்றும். புண்கள் தட்டையாகத் தொடங்கி, சலம் மற்றும் சீழ் பிடித்து வீங்கும். பின்னர் அந்த புண்கள் காய்ந்து வடுக்களாக மாறும். நோயின் போக்கு பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் நீடிக்கும்.

லைபீரியாவின் கிராண்ட் கெடே கவுண்டியில் உள்ள போண்டுவாவில் ஒரு பெண் குழந்தையின் கை மற்றும் காலில் ஏற்பட்டுள்ள குரங்கம்மை புண்களின் நெருக்கமான காட்சி. http://phil.cdc.gov (CDC’s Public Health Image Library)

WHO இன் கூற்றுப்படி, மனிதனுக்கு மனிதன் பரவும் வீதம் பொதுவாக குறைவாகவே இருக்கும், சுவாச சுரப்பு அல்லது பாதிக்கப்பட்டவர்களின் தோல் புண்கள் அல்லது சமீபத்தில் அசுத்தமான பொருட்கள் ஆகியவற்றுடனான நெருங்கிய தொடர்பினால் மட்டுமே இந்நோய் பரவுகிறது. உமிழ் நீர் மற்றும் சுவாசத் துளிகள் மூலம் இந்நோய் பரவுவதற்கு சாத்தியமுள்ளது, இது சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்குகிறது. சில ஆய்வுகள், SARS-CoV-2 வைரஸைப் போல குரங்கம்மை வைரஸூம் காற்றுவழி பரவக்கூடும் என்று காட்டுகின்றன, இருப்பினும் இது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.

அறிகுறியற்ற பரவல் தத்துவார்த்த ரீதியாக சாத்தியமாகும். குரங்கம்மை நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்தொற்றுக்கள், சுவாசக் கோளாறுகள், இரைப்பை குடல் தொந்திரவுகள், பார்வை பிரச்சினைகள் மற்றும் மூளை வீக்கம் ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம். என்றாலும், சிகிச்சைகள் பலனளிக்கின்றன.

பெரியம்மை தடுப்பூசி உருவாக்கும் பல கடுமையான பக்க விளைவுகள், பாரிய தடுப்பூசி பிரச்சாரத்தில் அதன் பயன்பாட்டை சிக்கலாக்குகிறது. இருப்பினும், குரங்கம்மை நோய்க்கான நீண்ட நோயரும்பல் காலம் காரணமாக, பெரியம்மை தடுப்பூசி ‘வட்ட தடுப்பூசி’ மாதிரியில் ஒரு பிந்தைய வெளிப்பாடு தடுப்பு மருந்தாக செயல்பட முடியும்.

குரங்கம்மை மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க பகுதிகளில் நிரந்தரமாக பரவும் நோயாக இருப்பதுடன், முக்கியமாக மழைக்காடு பகுதிகளில் காணப்படுகிறது. காங்கோ பள்ளத்தாக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து பொது வம்சாவளியைக் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்ட இரண்டு இயற்கையான வைரஸ் குழுக்கள் உள்ளன. 1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (Democratic Republic of the Congo - DRC, பின்னர் சாயிர் (Zaire) என்று அழைக்கப்பட்டது) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரியம்மை முற்றிலும் நீக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் ஒன்பது வயது சிறுவனுக்கு முதல் மனித பரவல் பதிவானது.

குரங்கம்மை நோய்தொற்று மனிதர்களிடையே பரவத் தொடங்கியதிலிருந்து, முதன்மையாக ஆபிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்பட்டது. DRC இல் 1981 மற்றும் 1986 க்கு இடைப்பட்ட காலத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) மேற்கொண்ட கண்காணிப்பில், காங்கோ பள்ளத்தாக்கு பொது வம்சாவளிக் குழுவில் 338 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களும் மற்றும் 33 இறப்புக்களும் ஏற்பட்டிருந்தன, அதாவது SARS-CoV-2 வைரஸைப் போலவே இந்நோயும் சுமார் 10 சதவிகிதம் இறப்பு விகிதத்தை உருவாக்கியது. SARS-CoV-2 உடன் ஒப்பிடக்கூடிய இறப்பு விகிதத்துடன், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தற்போதைய நோய் தொற்று வெடிப்பை ஏற்படுத்திய பொது வம்சாவளிக் குழு இலேசான மேற்கு ஆபிரிக்க பொது வம்சாவளிக் குழுவாகும்.

ஆபிரிக்காவிற்கு வெளியே முதல் குரங்கம்மை நோய்தொற்று, 2003 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் ஏற்பட்டது. கானாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆபிரிக்க கொறித்துண்ணிகளால் பாதிக்கப்பட்ட செல்லப் பிராணி நாய்கள் தான் இந்நோயின் விலங்கியல் ஆதாரமாக இருந்தது. அப்போதிருந்து, உலகம் முழுவதும் நோய்தொற்றுக்கள் பற்றி அடிக்கடி பதிவு செய்யப்பட்டன.

2017 ஆம் ஆண்டில் நைஜீரியாவில் ஏற்பட்ட நோய்தொற்று வெடிப்பு இன்னும் தொடர்கிறது. இங்கிலாந்து 2018 செப்டம்பரில் ஒரு நைஜீரிய நாட்டவரிடம் முதல் குரங்கம்மை நோய்தொற்றைக் கண்டறிந்ததாக அறிவித்தது, மற்றும் அந்த குளிர்காலத்தில் மேலும் மூன்று நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டன. மே 2019 இல், நைஜீரியாவிலிருந்து வந்த ஒரு நடுத்தர வயது குரங்கம்மை நோயாளி சிங்கப்பூரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், நைஜீரியாவுடன் தொடர்புடைய ஒரு இங்கிலாந்து குடும்பத்தில் மே 24, 2021 அன்று மூன்று நோய்தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன. ஜூலை 16, 2021 அன்று, நைஜீரியாவிலிருந்து பயணித்த அமெரிக்கர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிர்பி நிறுவனத்தைச் சேர்ந்த ரெய்னா மெக்லின்டைர் (Dr. Raina Maclntyre), ஏப்ரல் 2021 இல் CDC இன் Emerging Infectious Diseases இதழில் வெளியிட்ட ஒரு அறிக்கை, நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றுநோயின் தொடக்கம் பற்றி விவரித்ததுடன், “தடுப்பூசி போடப்பட்ட நபர்களிடையே தனிப்பட்ட அளவு நோயெதிர்ப்பு சக்தி குறைவதன் விளைவு, அத்துடன் [பெரியம்மை] தடுப்பூசிக்கு பிந்தைய காலத்தின் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை கடந்த 45 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மக்களிடையேயான நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாகக் குறைத்துள்ளது” எனக் குறிப்பிடுகிறது.

1980 ஆம் ஆண்டில் பெரியம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பின்னர் பாரிய தடுப்பூசித் திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதானது, குரங்கம்மை நோய்தொற்றின் தற்போதைய உலகளாவிய வெடிப்புக்கு முக்கிய காரணமாகும், இது இளம் பருவத்தினருக்கு குரங்கம்மை நோய் எளிதில் பரவச் செய்கிறது.

மெக்லின்டைரும் மற்றும் பலரும், “இந்த சமகால பாதிக்கப்படக்கூடிய மக்களில் முக்கியமாக வேலை செய்யும் பெரியவர்கள் அடங்குவர், இவர்கள் பரந்த சமூகத் தொடர்பை கொண்டிருப்பதுடன், வேட்டையாடுதல், விவசாயம் அல்லது இறைச்சி வியாபாரம் போன்ற விலங்குகளின் பாதிப்புகளை உள்ளடக்கிய செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். மேலும், தடுப்பூசி போடப்படாத மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, குழந்தைகளுக்கு மட்டுமல்லாது இப்போது ஒட்டுமொத்த குடும்பங்களிலும் குரங்கம்மை நோய் எளிதில் பரவக்கூடிய நிலையை உருவாக்குகிறது, இது மனிதனுக்கு மனிதன் நோய்தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது. உண்மையில், 2017 இல் கண்டறியப்பட்ட குறியீட்டு நோய்தொற்று ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்ப நோய்தொற்றுக்களில் ஒரு பகுதியாகும்” என்று குறிப்பிட்டனர்.

நைஜீரிய மக்களுக்கான இந்த அவதானிப்புகள் உலக மக்களுக்கும் பொருந்தும். பயணம் மற்றும் வர்த்தகத்தால் ஒன்றோடொன்று ஆழமாக இணைக்கப்பட்ட உலகில், ஒரு நாட்டில் உருவெடுக்கும் உள்ளூர் நோய் வெடிப்புகள் என்பது இனி தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாக இருக்காது.

கோவிட்-19 தொற்றுநோயைப் போலவே, குரங்கம்மை நோயின் தோற்றமும், மற்றும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சுகாதார அதிகாரிகளின் எந்தவொரு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாததும், முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் தாக்கத்தின் கீழ் பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரந்தளவில் சிதைவதைப் பற்றி பேசுகிறது.

கோவிட்-19 தொற்றுநோயின் கடந்த இரண்டு வருடங்களும் மற்றும் தொழிலாளர்கள் ‘வைரஸூடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற ஆழமான பரப்புரைப் பிரச்சாரமும், இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு எதிராக உலக மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியாத முதலாளித்துவத்தின் இயலாமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

குரங்கம்மை, SARS-CoV-2 மற்றும் உலகளவில் பரவும் எண்ணற்ற பிற நோய்தொற்றுக்களை அழிப்பது சாத்தியமானது மற்றும் அவசியமானது, ஆனால் இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சி, முதலாளித்துவத்தை தூக்கியெறிதல் மற்றும் தனியார் இலாபத்தை விட சமூக தேவைகளை முதன்மைப்படுத்தும் ஒரு உலக சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவது ஆகியவற்றின் மூலம் மட்டுமே நடக்கும்.

Loading