அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக ஸ்பெயின் முழுவதும் வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயினில் வர்க்கப் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் ஒவ்வொரு தொழில்துறைகளிலும் வெடித்துள்ளன. இப்போராட்டங்கள் அதிகரிக்கும் பணவீக்கத்தின் மத்தியில் அதிக ஊதியத்தை கோருதல், சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் தற்காலிக வேலைகளை முழுநேர வேலைகளால் மாற்றகோருகின்றது.

தொழிற்சங்கங்கள், பொடேமோஸுடன் இணைக்கப்பட்ட தொழிலாளர் ஆணையங்கள் (CCOO) மற்றும் சமூக ஜனநாயகத் தொழிலாளர்களின் பொதுச் சங்கம் (UGT) மற்றும் ஸ்பெயின் முதலாளிகளின் கூட்டமைப்பு (CEOE) ஆகியவற்றுக்கு இடையே வேலைவாய்ப்பு மற்றும் கூட்டு பேரம் பேசுதலுக்கான ஐந்தாவது ஒப்பந்தத்தின் (AENC) பேச்சுவார்த்தை உடைந்த பின்னர் இந்த வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன.

AENC என்பது ஒரு வகையான 'கூட்டு உடன்பாடுகள் மீதான ஒப்பந்தம்' ஆகும், அது வேலை ஒப்பந்தங்கள் மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான நாடு தழுவிய கட்டமைப்பை அமைக்கிறது. தற்போது தொழிற்சங்கங்களும் ஸ்பெயின் முதலாளிகளின் கூட்டமைப்பும் ஊதியங்கள் தற்போதைய 8.3 சதவீத பணவீக்க அளவை விட குறைவாக அதிகரிக்க வேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளது. தொழிற்சங்கங்கள் 2022 இல் 3.5 சதவிகிதம், 2023 இல் 2.5 சதவிகிதம் மற்றும் 2024 இல் 2 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும் எனக் கோருகின்றன. அதே நேரத்தில் ஸ்பெயின் முதலாளிகளின் கூட்டமைப்பு தொழிலாளர்களின் வாங்கும் சக்தியை இன்னும் வேகமாக இல்லாதொழிக்க பணவீக்கத்தை அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறது.

இதன் அர்த்தம் தொழிற்சங்கங்கள் உண்மையில் ஒரு சமூக வெடிப்பைத் தூண்டாமல் தங்கள் உறுப்பினர்கள் மீது எவ்வளவு உண்மையான ஊதியக் குறைப்பைச் சுமத்தலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தொழிற்சங்கங்கள் தங்கள் வாங்கும் சக்தியில் இந்த வெட்டுக்களுக்கு எதிராக 'போராட', 'ஒவ்வொரு நிறுவனத்திற்கும்' வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களால் அச்சுறுத்தினர். தற்போது, ஸ்பெயினில் 9 மில்லியன் தொழிலாளர்கள் வேலை நேரம், வேலைக்காலம் மற்றும் சம்பளம் ஆகியவை பற்றிய காலாவதியான கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் வேலை செய்கிறார்கள்.

எவ்வாறாயினும், 'ஒவ்வொரு நிறுவனத்திற்கு' என்ற மூலோபாயம், பல்வேறு தொழில்கள், பிராந்தியங்கள் மற்றும் ஊதிய விகிதங்களில் தொழிலாளர் போராட்டங்களை ஒன்றிணைக்கும் எந்தவொரு முயற்சியையும் முற்றாக நாசமாக்குகிறது. ஏற்கனவே வெடித்த வேலைநிறுத்தங்களில் இது தெளிவாகிறது.

ஒரு கொருனா (Coruña) மாகாணத்தில், 16,000 உலோகத் தொழிலாளர்கள் மே 5, 12 மற்றும் 18-19 ஆகிய தேதிகளில் CCOO மற்றும் UGT தொழிற்சங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வாங்கும் சக்தியை மீட்டெடுக்க வேண்டும், வாங்கும் சக்தியைப் பாதுகாக்க சம்பள மறுஆய்வு ஷரத்துகள், துணை ஒப்பந்த நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு இந்த உரிமைகளை நீட்டிக்க வேண்டும், தற்காலிக வேலையின் வரம்பு மற்றும் நச்சுத்தன்மையான, வேதனையான மற்றும் ஆபத்தான வேலைகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரினர்.

UGT மற்றும் CCOO ஆகியவை 20,000 உலோகத் தொழிலாளர்களுக்கு ஜூன் 2 முதல் அருகிலுள்ள கான்டாப்ரியாவில் (Cantabria) காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அவர்கள் கொருனா மற்றும் கான்டபிரியாவில் உள்ள எஃகுத் தொழிலாளர்களை ஒன்றிணைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கான்டாப்ரியாவில், உலோகத் துறையில் பிராந்தியத்தின் பெரிய வணிகக் கூட்டமைப்பான Pymetal க்கு 'அழுத்தம் கொடுப்பது' ஆகும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. Pymetal 2021 இல் 2 சதவிகிதம், 2022 இல் 2 சதவிகிதம் மற்றும் 2023 இல் 2.25 சதவிகிதம் ஊதிய உயர்வை விரும்புகிறது. இது தற்போதைய 8.3 பணவீக்க மட்டத்திற்குக் கீழே உள்ளது.

தொழிற்சங்கங்கள் பணவீக்கத்திற்கு சமமான ஊதிய உயர்வுகளைக் கோருகின்றன. ஆனால் தங்கள் சொந்தக் கொள்கைகளை 'அதிகமானது' என்று அழைத்து மற்றும் கூடிய விரைவில் அதைக் காட்டிக் கொடுக்கத் தயாராகின்றன. கான்டாப்ரியா வேலைநிறுத்தத்தில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டது, இது கொருனா வேலைநிறுத்தத்துடன் குறுக்கிடுவதைத் தடுக்கும் நோக்கில், தொழில்துறையின் 'அநீதியை' நிவர்த்தி செய்ய Pymetal க்கு '15 நாட்களுக்கு மேல் வரம்பை' அளிக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

மே 13 அன்று, 30 மணி நேர வாரத்திற்கு சராசரி மாத ஊதியம் €800 ($845) இருக்கும் ஒரு துறையில், ஊதிய உயர்வுக்காக call centre தொழிலாளர்களின் தேசிய வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. தொழிற்சங்கங்களின்படி, 120,000 தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில், இத்துறையில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வாங்கும் திறனில் 16 சதவீதத்தை இழந்துள்ளனர். இதன் பின்னர், புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை மாதத்தில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் போவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்த போதிலும், அடையாள சம்பள உயர்வை மாத்திரமே கோருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதே நாளில், பாஸ்க் மாநிலத்தில் ஜவுளி, பொதுத்துறை மற்றும் தோல் மற்றும் காலணித் துறைகளில் சுமார் 11,000 தொழிலாளர்கள் பாஸ்க்-தேசியவாத தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிராந்தியத்தின் தலைநகரான பில்பாவோ இல் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்கார்கள் அணிவகுத்துச் சென்றனர். ஜவுளித் துறைக்கு 2015 இலிருந்தும், தோல் துறைக்கு 2018 இலிருந்தும் மற்றும் காலணித்துறைக்கு 2007 முதல் கூட்டு ஒப்பந்தங்கள் எட்டப்படவில்லை.

கடந்த புதன்கிழமை பார்சிலோனாவில், நூற்றுக்கணக்கான வாடகைக்கார் ஓட்டுநர்கள் தெருக்களில் இறங்கி, கட்டலோனியாவில் புதிய உடனடியாக வாடகைக்கு அமர்த்தும் ride-hailing துறையின் வரலாற்றில் மிக முக்கியமான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 4,000 வாகனங்கள் ஒன்றிணைந்தன. வாடகைக்கார் தொழிற்சங்கங்கள் தமது வாடகைகார்களுக்கும் சவாரி-பகிர்வு சேவை (ride-hailing) வாகனங்களுக்குமான விகிதத்தை 30 க்கு 1 என அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றன. பார்சிலோனாவின் Gran Via மையத்தில் உள்ள மூன்று மையப் பாதைகளை டஜன் கணக்கான வாடகைக்கார்கள் நிரப்பி மெதுவாக ஊர்ந்து கட்டலோனியாவின் நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்றன.

மேலும் கட்டலோனியாவில், ஆசிரியர்கள் பல தசாப்தங்களாக பொதுக் கல்வி அமைப்பில் தொடர்ந்து பதவிக்கு வந்த கட்டலான்-தேசியவாத பிராந்திய அரசாங்கங்களின் வெட்டுக்களுக்கும் மற்றும் 25 சதவீத வகுப்புகள் ஸ்பானிய மொழியில் நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய பிற்போக்குத்தனமான முடிவிற்கும் எதிராக ஆசிரியர்கள் வாரந்தோறும் வேலை நிறுத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

மாட்ரிட் பிராந்தியத்தில், 11,000 மருத்துவர்கள் தற்காலிக ஒப்பந்தங்களுக்கு எதிரான 10 நாள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இது மொத்த வேலையினங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும். CCOO மற்றும் UGT ஏற்கனவே வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தன. ஆனால் மற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் மருத்துவ சங்கங்கள் 3,000 நிலையான ஒப்பந்தங்களைக் கோரி வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தன. இறுதியில், அதன் கோரிக்கைகள் வெற்றிபெறும் வரை வேலைநிறுத்தத்தைத் தொடர விரும்பிய வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களிடையேயான பரந்த கோபத்திற்கு மத்தியில், பிராந்திய அரசு 2,500 பேரை ஏற்றுக்கொண்ட பின்னர் வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டது.

சமீபத்திய வாரங்களில், நாடு முழுவதும் சிறிய வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் பாஸ்க் மாநிலத்தில் உள்ள Osakidetza மருத்துவமனைகள் மற்றும் மனநல மருத்துவமனைகள், Navarre இல் உள்ள முதியோர் இல்லங்கள், Bizkaia வில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள், Terrassa மற்றும் Ourense இல் உள்ள பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் Cordoba வில் உள்ள LGC தொழிற்சாலையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர். பார்சிலோனாவில், 200 H&M உடை விற்பனை தொழிலாளர்கள் பொதிகளுக்கான மேலதிக ஊதியத்திற்காக பல வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிட்டனர்.

புதிய வேலைநிறுத்தங்களுக்கான அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த கோடையில் ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் Ryanair விமானிகள் மற்றும் விமான பணிக்குழுவினர் வேலைநிறுத்தம் செய்யலாம்.

Correos இல், ஸ்பானிய அரசுக்கு சொந்தமான அஞ்சல் சேவையில் CCOO மற்றும் UGT ஆகியவை ஜூன் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பொது அஞ்சல் சேவையை அகற்றுவதற்கு எதிராக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஸ்பெயினில் வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சியானது, ரஷ்யா மீதான நேட்டோ-ஐரோப்பிய ஒன்றியப் போர் மற்றும் நடந்து கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றுநோயால் துரிதப்படுத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவில், சகிக்க முடியாத சமூக நிலைமைகள் மற்றும் சமூக சமத்துவமின்மையின் மூச்சடைக்கக்கூடிய நிலைகளுக்கு எதிராக பல்வேறு தொழிற்துறைகளில் தொடர்ச்சியான சக்திவாய்ந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக எதிர்ப்புகள் வெடித்துள்ளன. இலங்கையில், பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் நாட்டின் அடக்குமுறை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றுவதற்கு அழைப்பு விடுக்கின்றன.

WSWS குறிப்பிட்டது போல்: 'உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் முதலாளிகள் அல்லது தனிப்பட்ட நிறுவனங்களை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், காவல்துறை மற்றும் இராணுவங்களால் ஆதரிக்கப்படும் சக்திவாய்ந்த உலகளாவிய நிதி நிறுவனங்களையும் எதிர்கொள்கிறார்கள்.'

ஸ்பெயினில், தொழிலாளர்கள் சோசலிஸ்ட் கட்சி (PSOE)- பொடேமோஸ் (Podemos) அரசாங்கத்தை எதிர்கொள்கின்றனர். இது வேலைநிறுத்தங்களை வன்முறையாக ஒடுக்குகிறது. கடந்த ஆண்டு காடிஸ் நகரில் 22,000 உலோகத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில், அரசாங்கம் கலகத் தடுப்புப் போலிஸ் மற்றும் கவச வாகனங்களை அனுப்பியது. கடந்த மாத ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்திற்கு எதிராக, அரசாங்கம் ஒரு மிருகத்தனமான அடக்குமுறையைத் தொடங்கி, நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தக்காரர்களை கைது செய்து அபராதம் விதித்ததுடன் மற்றும் 23,000 பொலிஸாரை பயன்படுத்தியது. இது ஸ்பெயினில் நடந்த வேலைநிறுத்தத்திற்கு எதிராக இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

ஆனால் பொலிஸ் மற்றும் இராணுவத்தைத் தவிர, வர்க்கப் போராட்டத்திற்கு எதிரான PSOE-Podemos இன் முக்கிய ஆயுதம் தொழிற்சங்கங்கள் ஆகும். அவை வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி, உண்மையான ஊதிய வெட்டுக்களை ஏற்று, உற்பத்தியைத் தொடர வழியமைக்கின்றன.

தொழிற்சங்கங்களால் திணிக்கப்பட்ட தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற, தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் பொடேமோஸ் போன்றவற்றிலிருந்து சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும். அதே நேரத்தில், தொழிற்சங்கங்களின் திவால்நிலையும், ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற தன்மையும், தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியது போல், சுரண்டல் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான சோசலிசக் கொள்கைகளுக்கான போராட்டத்தில் அணிதிரட்டப்பட்ட, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைக் கட்டமைப்பதே இதற்கு மாற்றீடாகும்.

Loading