முன்னோக்கு

ஜனவரி 6 விசாரணையும், ஜனநாயகத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வரும் சதித் திட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டொனால்டு ட்ரம்ப் 2020 தேர்தல் முடிவுகளை மாற்றிச் சர்வாதிகாரியாக அதிகாரத்தில் நிலைத்திருக்க ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை முயற்சித்தார் என்பதைத் தவறுக்கிடமின்றித் தெளிவுபடுத்தும் விதத்தில், ஜனவரி 6 விசாரணைகளுக்கான பிரதிநிதிகள் சபைக் குழு, ஆதாரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

முன் உதாரணமற்ற வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடைய இந்த விசாரணைகளில் சாதாரணமானதோ அல்லது வழக்கமானதோ எதுவும் இல்லை: அதாவது, நவ-நாஜி குழுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் குடியரசுக் கட்சியின் 147 காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி முழு சக்தியுடன் அரசியலமைப்பை மாற்ற சதி செய்தார்.

குறைந்தபட்சப் பார்வையாளர்களை உறுதி செய்யும் வகையில், வேலை நாளின் நடுவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட அதன் மூன்றாவது விசாரணையின் போது, அந்தக் குழு, பைடென் ஜெயித்த மாநிலங்களின் தேர்தல் வேட்பாளர்களை நிராகரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸை நிர்பந்திப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்பது ட்ரம்ப் மற்றும் ட்ரம்ப் வழக்குரைஞர் ஜோன் ஈஸ்ட்மேனுக்குத் தெரியும் என்பதற்கான ஆதாரத்தை முன்வைத்தது. அந்தத் தருணம் வரையில் தேர்தல் மோசடி பற்றிய ட்ரம்பின் ஆதாரமற்ற வாதங்களை ஆதரித்திருந்த பென்ஸ், தேர்தல் முடிவுகளை அவர் அங்கீகரிக்கப் போவதாகத் தகவல் தெரிவித்த உடனே, ட்ரம்பும் அவரின் சக-சதிகாரர்களும் அவருக்கு எதிராக வன்முறையில் இறங்கினர்.

பென்ஸை ட்ரம்ப் பகிரங்கமாகத் தாக்கத் தொடங்கிய பின்னர், அவர் ஆதரவாளர்கள் துணை ஜனாதிபதியைப் பிடிக்க 40 அடி தூரத்தில் இருந்ததாக அந்த விசாரணை வெளிப்படுத்தியது. அதிவலது கைக்கூலியாக இருந்து நம்பகமான சாட்சியாக மாறிய ஒருவர் விளக்கம் அளிக்கையில், ஆயுதமேந்திய பாசிசவாதிகள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி உட்பட முன்னணி தலைவர்களையும் துணை ஜனாதிபதியையும் கொல்ல உத்தேசித்திருந்ததாகக் கூறினார்.

ஓய்வுபெற்ற பழமைவாத பெடரல் நீதிபதி ஜான் மிக்கெல் லுட்டிக் வியாழக்கிழமை அந்தக் குழுவிடம் கூறுகையில், ட்ரம்ப் மற்றும் 'அவரது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஒரு தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்து' என்றார்.

இன்னும் அப்பட்டமான மொழியில், லுட்டிக் கூறுகையில், அந்த சதி கடந்த கால விஷயம் அல்ல, மாறாக ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக தொடர்ந்து கொண்டிருக்கும் சதி என்றார்:

முன்னாள் ஜனாதிபதியோ அல்லது குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராகக் கௌரவமாக அவர் இடத்தில் வருபவரோ 2024 ஜனாதிபதி தேர்தலில் தோற்றால், 2020 தேர்தல் முடிவை மாற்ற முயன்றதைப் போலவே அதே விதத்தில் 2024 தேர்தல் முடிவுகளையும் மாற்ற முயற்சிப்போம், 2020 இல் தோல்வி அடைந்திருந்தாலும் 2024 இல் அதில் வெற்றி பெறுவோம் என்று, இன்று வரையில், முன்னாள் ஜனாதிபதியும், அவரின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்களும் சூளுரைக்கின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் குடியரசுக் கட்சியின் நீதிபதிகள் அந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் முக்கியப் பங்காற்றினர் என்பதை நிரூபிக்கும் தகவலையும் அந்தக் குழு வெளிப்படுத்தியது, இருப்பினும் நீதிமன்றத்தின் அமைப்பு ரீதியான ஒருமைப்பாடு சேதமடையாமல் இருப்பதாக வலியுறுத்த அக்குழு பெரும்பாடுபட்டது.

ஜனவரி 6 க்கு முன்னதாக, ஜோன் ஈஸ்ட்மேன் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நபர்களுடன் பின்புலத் தொடர்பைக் கொண்டிருந்தார் என்பதோடு, ஒன்பது நீதிபதிகளில் குறைந்தது இரண்டு பேர் அரசியலமைப்பு ரீதியில் தேர்வுக் குழு அங்கீகாரம் வழங்குவதை நிறுத்தும் போலிச் சட்ட முயற்சிகளை ஆதரிக்கும் பக்கம் இருந்தனர் என்பதை அறிந்திருந்தார்.

வியாழக்கிழமை விசாரணைக்கு முன்னர், நீதிபதி கிளாரன்ஸ் தோமஸின் மனைவி வேர்ஜீனியா தோமஸ் ஈஸ்ட்மேனின் தொடர்பில் இருந்தார் என்பதைக் காட்டும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. ஈஸ்ட்மேன் முன்னதாகத் தோமஸிற்காக அலுவல் பணிகள் செய்திருந்தார் என்பதோடு தோமஸ் அரசியல் வட்டாரத்தின் பாகமாக இருந்தார். வேர்ஜீனியா தோமஸ் அவரது கணவருக்குத் தெரியாமலோ அல்லது அவரது தலையீடு இல்லாமல் தான் செயல்பட்டார் என்று அரசியல் ரீதியில் அப்பாவியால் மட்டுமே நம்ப முடியும்.

அந்தச் சதித் திட்டத்தை முடக்குகிறார்கள் என்ற அடித்தளத்தில் ட்ரம்பின் அரசியல் எதிர்ப்பாளர்களைச் சித்திரவதைச் செய்ய 'குவாண்டனாமோ விரிகுடாவுக்கு' அனுப்புமாறு ட்ரம்பின் பாதுகாப்புத் துறைத் தலைமை தளபதி மார்க் மெடொவ்ஸை வேர்ஜீனியா தோமஸ் வலியுறுத்திய குறுஞ்செய்திகளைப் பிரதிநிதிகள் சபைக் குழு வெளிப்படுத்தியது. தேர்வுக் குழுவின் அங்கீகரிப்பை அவர் முடக்கப் போவதில்லை என்று பென்ஸ் அறிவித்த பின்னர், பென்ஸ் மீது மெடொவ்ஸிற்கு தோமஸ் 'வெறுப்பை' வெளிப்படுத்தி இருந்தார் என்பதும் இதில் வெளிப்படையாக உள்ளடங்கி இருந்தது.

ட்ரம்பின் அதிவலது வழக்கறிஞரான சிட்னி பவலை முன்னிறுத்துவதற்கும், இந்த நடவடிக்கையில் அவர் அதிக முக்கியப் பங்கு வகிக்க அனுமதிக்குமாறும் வேர்ஜீனியா தோமஸ் மெடொவ்ஸை ஊக்குவித்தார்.

ஜனவரி 6 இல், டெக்சாஸ் குடியரசுக் கட்சியாளரும் ட்ரம்பின் கூட்டாளியுமான லூயி கோமெர்ட் சார்பாகவும் மற்றும் அம்மாநிலத்தின் இன்னும் பல அதிவலது அரசியல்வாதிகள் சார்பாகவும் 'அவசர கால முறையீடு' என்று அழைக்கப்படுவதைப் பவல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் வாக்கு எண்ணிக்கைச் சட்டத்தில் (Electoral Count Act) “பிரச்சினைத் தீர்க்கும் செயல்முறையை' பயன்படுத்துவதன் மூலம் பென்ஸ் அரசியலமைப்பை மீறி வருவதாக அந்த அவசர கால முறையீடு வாதிட்டது, தேர்தல் வேட்பாளர்களிடையே சவால் விடுக்கப்பட்டால், எந்தத் தேர்தல் வேட்பாளர் சரி என்பதைத் தீர்மானித்துப் பிரச்சினையைத் தீர்க்க துணை ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியில் அதிகாரம் உள்ளது என்று அந்தத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைச் சட்டம் குறிப்பிடுகிறது. இத்தகைய 'அவசர கால முறையீடுகள்' தொடர்புடைய நடைமுறை விதிகள் காரணமாக, அந்த விஷயத்தை மொத்த நீதிமன்றத்திற்கு முன்னால் கொண்டு வராமல் அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ ஒரு நீதிபதிக்கு, அதாவது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சாமுவேல் அலிட்டோவுக்கு அதிகாரம் இருந்தது.

அந்த அவசரக் கால முறையீடு காலையில் இருந்து பிற்பகலுக்குள் ஏதோவொரு நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது, அப்போது அந்தக் கும்பல் காங்கிரஸ் சபையைச் சூறையாடிக் கொண்டிருந்தன. மதியம் 3.15 க்கு உச்ச நீதிமன்றத்தால் உத்தியோகபூர்வமாகக் காங்கிரஸ் சபை மூடப்பட்டது, அந்த 199 நிமிடங்களின் போது தான், கிளர்ச்சியாளர்களைக் கலைக்க தேசிய பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதைப் பாதுகாப்புத் துறைத் தாமதித்தது.

அந்த அவசரகால முறையீடு 2020 தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான அரசியலமைப்புக்கு விரோதமான ஓர் அப்பட்டமான கோரிக்கையாக இருந்தது என்ற போதும், அலிட்டோ அவசரகால முறையீட்டை உடனடியாக நிராகரிக்கவில்லை. அது தாக்கல் செய்யப்பட்டதைக் குறித்து அலிட்டோ ஊடகத்திற்கும் கூறவில்லை, அது பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்படாமலேயே கடந்து செல்லப்பட்டது. தலைமைச் செயலகச் சம்பவங்களின் முடிவுகளை நிலுவையில் வைக்கும் வகையில், அவர் அந்த அவசரக் கால முறையீட்டை அவர் பையில் வைத்துக் கொண்டார்.

அது தாக்கல் செய்யப்பட்டதைக் குறித்து ஜனநாயகக் கட்சிக்கு நன்கு தெரியும் என்றாலும், ஒரு வலதுசாரி நீதிபதி ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு ஒரு போலி-சட்ட மூடிமறைப்பை வழங்கும் விளிம்பில் இருப்பதைக் குறித்து தகவல் வழங்க அது எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்த அவசரக் கால முறையீடு காரணமாகத் தான் — இதை அலிட்டோ இது வரையில் நிராகரிக்கவில்லை — அலிட்டோ இந்த முறையீட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னதாகத் தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதற்காக, பெலோசி ஜனவரி 6 இரவு 8 மணிக்குக் காங்கிரஸ் சபையை மீண்டும் கூட்ட நிர்பந்திக்கப்பட்டார். ஜனவரி 7 மதியம் 1 மணி வரையில் பவலின் தாக்கலை நிராகரித்து ஒரு கையெழுத்திடாத உத்தரவை அலிட்டோ வழங்காமலேயே இருந்தார், அந்தத் தருணம் வரையில் அந்த முறையீடு முந்தைய இரவின் அங்கீகரிப்பின் மீது விவாதத்தை ஏற்படுத்த கூடியதாக இருந்தது.

ட்ரம்ப் நடத்திக் கொண்டிருந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியைத் தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மக்களிடையே பாரிய எதிர்ப்பைத் தூண்டும் என்று அஞ்சி ஜனநாயகக் கட்சியினர் ஜனவரி 6 இல் எதுவும் செய்யவில்லை. பகுதியாகக் குடியரசுக் கட்சியைக் காப்பாற்றுவதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சியின் காரணமாக என்றாலும் அங்கே எந்த ஜனநாயகக் கட்சியினரும் இல்லை என்பதாலும் இந்த மாத விசாரணைகள் குடியரசுக் கட்சியினரை 'மாவீரர்களாக' மட்டுமே காட்டியுள்ளது. இந்த அர்த்தத்தில், இந்த விசாரணைகள் ட்ரம்ப் என்ன செய்தார் என்பது குறித்தது மட்டுமல்ல மாறாக ஜனநாயகக் கட்சியினர் என்ன செய்யவில்லை என்பதும் சம்பந்தப்படுகிறது.

மைக் பென்ஸின் வழக்கறிஞர் கிரெக் ஜேக்கப்ஸ் வியாழக்கிழமை சாட்சியம் அளிக்கையில், ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்ததாகவும், அதிகாரப் பிரச்சினையைப் 'பின்னர் வீதிகளில் தான் தீர்மானிக்க வேண்டி இருந்திருக்கும்' என்றார். இது உண்மை இல்லை. ஒரு தேர்தல் முடிவுகளை மாற்றுவதன் மீது வெகுஜன மக்கள் சீற்றமாக இருந்த வேளையில், ஜனநாயகக் கட்சியோ அதுபோன்ற ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கவும் அதற்குப் பதிலாக ட்ரம்புடன் பேரம்பேசி தீர்வு காணவும், இது அவரை அதிகாரத்திற்குக் கொண்டு வந்திருக்கும் என்ற நிலையில், அக்கட்சி அதனால் ஆன மட்டும் அனைத்தையும் செய்தது.

ஜனநாயகக் கட்சியினரின் அலட்சியமான ஆரம்ப விடையிறுப்பு தான் தொனியை அமைத்தது. பைடெனின் 'குடியரசுக் கட்சி சகாக்களுடன்' ஒரு மனதான இருகட்சி முறை என்ற பெயரில், இந்த நிர்வாகம் பிரதான ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகாரர்களைச் சுதந்திரமாக விட்டு வைக்க அனுமதித்துள்ளதுடன், தேர்வு செய்வதை அங்கீகரிப்பதற்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் சபையின் 100 குடியரசுக் கட்சி உறுப்பினர்களைக் காங்கிரஸிலே இருக்க வைத்துள்ளது, மேலும் அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் கிளாரன்ஸ் தோமஸ் பாத்திரம் வகித்த போதும் அவர் மீது குற்ற விசாரணை கொண்டு வர வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரும் அதிகரித்த அழைப்புகளை அது எதிர்க்கிறது. இந்த மோசடிக்கு விடையிறுப்பாக, நீதிபதி Sonia Sotomayor ஒரு பொதுக் குறிப்பை வெளியிட்டார் —நீதிபதிகளுக்கு அரியதான இது— 'நீதிமன்றத்தை ஓர் அமைப்பாக ஆழமாக அக்கறைக் காட்டும் ஒரு மனிதராக' தோமஸைப் பாராட்டுகிறது.

ஜனநாயகக் கட்சியின் பரந்த மூலோபாயம், ஹிட்லர் போன்ற தலைவர்கள் (Führers) தழைத்தோங்கும் நிலைமைகளை உருவாக்கி வருகிறது என்பதை வரலாறு அவசரமாக தெளிவுபடுத்துகிறது. பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட பணத்தை அச்சிட்டுப் புழக்கத்தில் விடும் கொள்கை மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புகளுக்குப் பின்னர் பணவீக்கம் கூரையைத் தொட்டுள்ளது. அமெரிக்கர்களின் கடன் சுமைகளும் கடன் வாங்கும் செலவுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. பல மில்லியன் கணக்கானவர்கள் உயிர் வாழ்வதற்கு எதை நம்பி இருக்கிறார்களோ அந்த சமூகத் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை சலுகைகளை வெட்டும் அதேவேளையில் உக்ரேன் இராணுவத்தை ஆயுதமயப்படுத்துவதற்கு 50 பில்லியன் டாலர் தேவைப்படுவதாக ஜனநாயகக் கட்சி அமெரிக்கர்களுக்கு கூறுகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று மில்லியன் கணக்கான குடும்பங்களை நாசமாக்கி வருகிறது, ஆனால் நிர்வாகமோ இந்த பெருந்தொற்று முடிந்து விட்டதாக அவர்களுக்குக் கூறுகிறது.

உண்மையில் சொல்லப் போனால், வியாழக்கிழமை விசாரணைக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர், 2024 இல் இழுபறி ஏற்படக் கூடிய நெவாடா மாநில தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கப் பொறுப்பாக இருக்கும் பதவியான, அம்மாநில வெளியுறவுத் துறை செயலர் பதவிக்கான போட்டி உட்பட, நாடெங்கிலும் முக்கிய குடியரசுக் கட்சி வேட்பாளர் பதவிகளுக்கான போட்டியில் ட்ரம்ப் ஆதரிக்கும் வேட்பாளர்கள் மிகவும் மிதமான எதிர்ப்பாளர்களைக் கூட தோற்கடித்தனர். பல மாநில அரசாங்கங்களிலும் அத்துடன் காங்கிரஸ் சபையிலும் செயல்படும் முக்கிய பதவிகளை ஆக்கிரமிக்க அதிவலது நல்ல இடத்தில் இருப்பதாக தெரிகிறது.

ட்ரம்பும் அவரின் சக-சதிகாரர்களும் அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று, அவர்களின் அடுத்த நகர்வுகளைத் திட்டமிட்டு வருகின்றனர். ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு சதி தோல்வி அடைந்தது என்றால் அது இராணுவம், நீதிமன்றங்கள் மற்றும் குடியரசுக் கட்சிக்குள் அமைப்பு ரீதியிலான ஆதரவு கிடைக்காததாலோ, ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாகவோ அவ்வாறு நடக்கவில்லை. அதை நடத்தியவர்களுக்கு அனுபவம் இல்லாததாலும் துரதிருஷ்டத்தாலும் அது தோல்வி அடைந்தது.

சகிக்க முடியாத சமூக நிலைமைகள், அதிகரித்து வரும் விலைவாசி ஆகியவற்றுக்கு எதிராகவும், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகம் மீது நிலவும் பரவலான வெறுப்பாலும் தொழிலாள வர்க்கத்தில் ஓர் இயக்கம் உருவாகி வருகிறது. மேலெழுந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் இந்த சமூக பலம் மட்டுமே சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கக் கூடிய ஒரே சக்தியாகும். தங்களின் பொதுவான ஆதாரத்தை, அதாவது முதலாளித்துவ அமைப்புமுறையைத் தாக்குவதன் மூலம் அதை அது செய்ய முடியும்.

Loading