மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு சதிக் குறித்த பிரதிநிதிகள் சபையின் தேர்வுக் குழுவின் தொடர்ச்சியான பொது விசாரணைகள் வியாழக்கிழமை மாலைத் தொடங்கியது.
விசாரணைகளுக்கான அவரின் முதல் அறிக்கையில், பிரதிநிதி பென்னி தாம்சன் (மிசிசிப்பியின் ஜனநாயகக் கட்சியாளர்) அப்பட்டமாகப் பின்வருமாறு கூறினார், 'ஜனவரி 6 ஒரு முயற்சிக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் உச்சக் கட்டமாகும், அரசாங்கத்தைக் கவிழ்க்க நடந்த… ஓர் ஆணவமான முயற்சி.” 'மக்கள் விருப்பத்தைச் சீர்குலைப்பதற்கான அந்தச் சதி', 'முடிந்து விடவில்லை… இரண்டரை நூற்றாண்டு கால அரசியலமைப்பு ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது,' என்று தாம்சன் தொடர்ந்து கூறினார்.
காங்கிரஸ் சபை விசாரணையில் இத்தகைய ஒரு கருத்து கூறப்படுவது, அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயக மரண வாயிலில் உள்ளது என்ற உண்மைக்குச் சாட்சியமாகும்.
அவரின் தொடக்க அறிக்கையில், அக்குழுவின் துணைத் தலைவரான குடியரசுக் கட்சியின் லிஸ் செனி, ஜனவரி 6 சம்பவத்திற்கு இட்டு வந்த நிகழ்வுகளின் காலவரிசையை மதிப்பாய்வு செய்தார். தேர்தல் களவாடப் பட்டதாக ட்ரம்பின் தொடர்ச்சியான மற்றும் ஆதாரமற்ற அறிக்கைகளும், தேர்தல் அதிகாரிகள் பொய்யான வேட்பாளர்களை உருவாக்க அழுத்தம் அளிப்பதற்கான அவர் முயற்சிகள் ஆகியவையும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சான்றிதழ்களை அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி கொடுத்து விட வேண்டும் அங்கே அவர்கள் ட்ரம்பைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற அவரின் கோரிக்கையும் அதில் உள்ளடங்கி இருந்தன.
விசாரணைகள் தொடர்வதால் வரும் வாரங்களில் சந்தேகத்திற்கு இடமின்றிக் கூடுதல் தகவல்கள் வெளி வரும். இருப்பினும் சில குறிப்பிட்டப் புள்ளிகளைக் குறிப்பிட்டாக வேண்டும்.
முதலாவதாக, ட்ரம்ப் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்தி, தன்னை சர்வாதிகாரியாக நிலைநிறுத்தி, அரசியலமைப்பை தூக்கியெறிய முயன்றார் என்பதற்கான பெரும் ஆதாரங்களை இந்த விசாரணை சேர்த்துக் கொண்டிருந்தாலும், வியாழக்கிழமை இரவு முன்வைக்கப்பட்ட இந்த விவரிப்புகளின் முக்கிய கூறுபாடுகள் ஜனவரி 6 அன்றும், அதற்கு முன்னரும் கூட, அறியப்பட்டிருந்தன.
பின்வரும் தவிர்க்கவியலாத கேள்விகள் உள்ளன: இந்த விசாரணை தொடங்க ஏன் 18 மாதங்கள் ஆனது? ட்ரம்ப் 'ஒரு சதி முயற்சியில்' ஈடுபட்டார் என்றால், ஏன் அவர் கைது செய்யப்படவில்லை?
இரண்டாவதாக, அரசு எந்திரம் மற்றும் குடியரசுக் கட்சியின் மேலோங்கிய பிரிவுகளுக்குள் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு இருந்த ஆதரவை மூடிமறைத்து, இந்த விசாரணைகள், Proud Boys மற்றும் Oath Keepers அமைப்பின் கீழ்மட்ட பாசிச அடிவருடிகளைச் சேர்த்து, கிட்டத்தட்ட மொத்த பொறுப்பையும் ட்ரம்ப் மீதே சுமத்த வடிவமைக்கப்படுகின்றன. இது குறிப்பாக முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனியின் மகள் செனியின் கருத்துக்களில் தெளிவாக இருந்தது, இந்த விசாரணையில் அவருக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட்டது. ஏறக்குறைய எல்லா ட்ரம்ப் ஆலோசகர்களின் எதிர்ப்பு இருந்த போதும் அதை மீறி அதிகாரத்தில் நீடிப்பதற்கான ட்ரம்ப் வேட்கையின் விளைவே அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி என்பதாக செனி அதை முன்வைத்தார்.
ஜனவரி 6 இல் நடந்த மற்றும் அந்த நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்ற சம்பவங்களைக் குறித்த விபரங்களில், தலைமைச் செயலக பொலிஸ் நடைமுறையளவில் ஒதுங்கி நின்றுக் கொண்டிருந்ததன் மீதும், இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் கன்னைகள் அதில் சம்பந்தப்பட்டிருந்தது குறித்தும், ட்ரம்பின் பொய்களைச் சட்டப்பூர்வமாக்குவதில் குடியரசுக் கட்சியின் ஒட்டுமொத்த தலைமையும் வகித்த பாத்திரம் குறித்தும், மற்றும் தலைமைச் செயலகம் ஜனாதிபதி தேர்வுக் குழு முடிவுகளை அங்கீகரித்து காங்கிரஸின் கூட்டு அமர்வு மீண்டும் தொடங்கிய பின்னரும் கூட, பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஜனாதிபதி தேர்வுக் குழு முடிவுகளை அங்கீகரிக்க முடியாதென வாக்களித்தனர் என்பதைக் குறித்தும் அங்கே எந்த குறிப்பும் இல்லை.
மூன்றாவதாக, இந்த விசாரணைகளின் தொனியை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட பைடெனின் நீதித் துறையின் இரண்டு நடவடிக்கைகள் இந்த விசாரணைகளுக்கு முன்னர் இருந்தது: அதாவது, “தேசத் துரோக சதிக்காக' Proud Boys அமைப்பின் உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது மற்றும் உயர்மட்ட ட்ரம்ப் உதவியாளர்களான மார்க் மெடொஸ் மற்றும் டான் ஸ்காவினோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருக்கும் முடிவு ஆகியவை ஆகும்.
Proud Boys மற்றும் Oath Keepers அமைப்புகள் ஒரு மிகப் பெரிய சதியில் ஒரு சிறிய பாத்திரம் வகித்ததைத் தவிர கூடுதலாக வேறொன்றுமில்லை என்றாலும் கூட, இந்த விசாரணைகளின் முதல் நாளின் பெரும்பகுதி அந்த அமைப்புகள் வகித்த பாத்திரம் மீதே ஒருமுனைப்பட்டிருந்தது. ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் சபை தலைமையும் பைடெனும் குடியரசுக் கட்சியின் மேலோங்கிய கன்னைகளைத் தங்களின் 'சக நண்பர்களாக' குறிப்பிட ஒருபோதும் சளைக்காத நிலையில், அவர்கள் வகித்த பாத்திரம் மீதிருந்து கவனத்தைத் திசை திருப்புவதே நோக்கமாக உள்ளது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் தெளிவாக மையப் பாத்திரம் வகித்த மெடொஸ் மற்றும் ஸ்காவினோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை என்ற முடிவு, இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு உதவுவதில் குடியரசுக் கட்சியின் பங்கைப் பற்றிய எந்தவொரு பரந்த ஆய்வையும் தடுப்பதற்கான பைடென் நிர்வாக முயற்சிகளது பாகமாக உள்ளது.
நான்காவதாக, விசாரணைகளைப் பார்க்கும் போது, அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்கு ஜனநாயகக் கட்சி முற்றிலும் தயாராக இருந்திருக்கவில்லை என்பதே உண்மை என்று ஒருவர் நினைக்கக் கூடும். ட்ரம்ப் அணித் திரட்டிய Proud Boys, Oath Keepers மற்றும் பிற சக்திகளின் தாக்குதலுக்குத் தலைமைச் செயலகம் ஏறக்குறைய முற்றிலும் நிராயுதபாணியாக விடப்பட்டிருந்தது.
ஆனால் ஜனவரி 6 நிகழ்வுகள் முன்கூட்டியே எதிர்பார்க்கக் கூடியதாக இருந்தன என்பது மட்டுமல்ல, எதிர் நோக்கப்பட்டன. அந்த தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமாக நாட்களுக்கு முன்னரே, அக்டோபர் 1, 2020 இல் உலக சோசலிச வலைத் தளம்பதிவிட்ட ஒரு முன்னோக்கில், “ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் வெள்ளை மாளிகை மிகவும் முன்னேறிய சதியின் அரசியல் நரம்பு மண்டலமாக உள்ளது,” என்று குறிப்பிட்டது.
செப்டம்பர் 24, 2020 இல், WSWS எழுதியது, 'அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம், அவருக்கு எதிராக செல்லும் எந்த வாக்கெடுப்பு முடிவையும் அவர் ஏற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள டொனால்டு ட்ரம்பின் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டமாக மாற்றப்பட்டு வருகிறது,” என்றது. அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிடுகையில், “ட்ரம்ப் ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவில்லை. அவர் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக ஒரு சதித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்,” என்றது.
உலக சோசலிச வலைத் தளம் இந்த எச்சரிக்கைகளைத் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தொடர்ந்தது. ஜனவரி 6 கிளர்ச்சிக்கு 12 மணி நேரத்திற்கு முன்னர், 'ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்தவும், தேர்தல் முடிவுகளை இரத்து செய்யவும் மற்றும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவவும் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செய்து வரும் முயற்சி' குறித்து WSWS எச்சரித்தது.
அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு முன்னரும், அதன் போதும், அதற்குப் பின்னரும், ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்போ, அந்த சதித்திட்டங்களை விட, அரசியலமைப்பைக் கவிழ்க்கும் சதிகளை அம்பலப்படுத்துவதைக் குறித்து அது அதிகமாக பயப்படுகிறது என்ற உண்மையால் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனநாயகம் அழுகி போயிருப்பது எவ்விதத்திலும் அம்பலப்படுவது அடிமட்டத்தில் இருந்து எதிர்ப்பை ஊக்குவிக்கும் என்பதே அதன் நிரந்தர பயமாக உள்ளது.
'எங்களுக்கு ஒரு வலுவான குடியரசுக் கட்சி தேவை' என்பது தான் ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்குப் பின்னர் பைடெனும், பெலோசி மற்றும் பிற முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்த பல்லவியாக இருந்தது. கோவிட் பரவலைத் தடுக்க எஞ்சியிருந்த எந்தவொரு நடவடிக்கைகளையும் முறையாக கலைத்து விடுவது மற்றும் 'வல்லரசு மோதலுக்கு' தயாரிப்பு செய்வது என வெள்ளை மாளிகையின் கொள்கைகளை முன்னெடுக்க பைடெனுக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் ஒரு 'பலமான' குடியரசுக் கட்சி தேவைப்பட்டது, இப்போது இது உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா உடனான அமெரிக்க போராக வெடித்துள்ளது.
ட்ரம்ப் அரசியலமைப்பை கலைக்க முயன்றார் என்பதற்கு பெருவாரியாக ஆதாரம் இருந்த போதும், அவர் மீது குற்றப் பத்திரிகை கொண்டு வர பைடென் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. அவர், அதற்கு பதிலாக, 2024 இல் ட்ரம்புக்கு எதிராக போட்டியிட்டால் அவர் 'மிகவும் அதிருஷ்டசாலி' என்று அறிவித்தார். இதற்கிடையே ட்ரம்ப் இந்த வாரம் அறிவிக்கையில், “அமெரிக்காவை மீண்டும் தலையாயதாக மாற்ற [ஜனவரி 6] நம் நாட்டு வரலாற்றில் மிகப் பெரிய இயக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது' என்றும், குடியரசுக் கட்சியினர் 2022 தேர்தலில் காங்கிரஸ் சபையைக் கட்டுப்பாட்டில் எடுக்கும் நிலையில் இருப்பதாகவும் அறிவித்தார்.
இறுதியாக, அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி மற்றும் குடியரசுக் கட்சியின் பாசிச மாற்றத்தின் உண்மையான சமூக, அரசியல் மற்றும் வரலாற்றுச் சூழலைப் பற்றி ஆய்வு செய்வதைத் தவிர்க்க, அரசியல் ஸ்தாபகத்திலும் ஊடகங்களிலும் எழுதப்பட்ட மற்றும் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் வேண்டுமென்றே அழிப்பதற்கான முயற்சி உள்ளது.
ஜனவரி 6 ஒரு 'தனிப்பட்ட சம்பவமாக' சித்தரிக்கப்படுகிறது, அமெரிக்க ஜனநாயகத்தின் ஈடன் தோட்டத்தில் ஊடுருவிய ஒருவித பயங்கரமான நபர் ட்ரம்ப் என்பதாக காட்டப்படுகிறது. உண்மையில், ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதியானது, முடிவில்லா போரிலும் மற்றும் அதீத சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியிலும் வேரூன்றிய அமெரிக்க ஜனநாயக ஆட்சி வடிவங்களின் நீடித்த நெருக்கடியின் உச்சக் கட்டமாகும்.
அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகளது பாதுகாப்பை, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் கொடுமையான அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திடம் விட முடியாது. இதற்கு, சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு ஆணி வேராக விளங்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்பின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியுள்ளது.
மேலும் படிக்க
- ட்ரம்பின் தலைமை தளபதி ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை முடுக்கிவிட்டார் என்பதை குறுஞ்சேதிகள் அம்பலப்படுத்துகின்றன
- ஜனவரி 6தாக்குதலுக்கு முன்னதாக, ட்ரம்ப் வழக்கறிஞர்கள் இராணுவத்திடம் வாக்குச்சீட்டுக்களைக் கைப்பற்ற கோரும் உத்தரவை எழுதியிருந்தனர்
- இரு கட்சி அமைப்புமுறையின் மீது நம்பிக்கையை மீட்டெடுக்க ஜனநாயகக் கட்சியினருக்கு உதவுவதற்காக ஜாக்கோபின் ஆசிரியர் பாஸ்கர் சங்கரா ஒரு மிதமான முன்மொழிவை செய்கிறார்
