மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனவரி 6 சம்பந்தமாகப் பிரதிநிதிகள் சபைத் தேர்வுக் குழுவின் பொது விசாரணையை தொடங்கி உள்ள நிலையில், இந்த நிகழ்வைப் பற்றிய எந்தவொரு விவாதமும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஓர் ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை ஒழுங்கமைத்து, அரசியலமைப்பை அகற்றி, ஒரு தனிநபர் சர்வாதிகாரத்தை நிறுவ முயன்றார் என்ற மறுக்க முடியாத மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையோடு தொடங்க வேண்டும். மேலும் அவர் அதில் ஜெயிப்பதற்கு மிகவும் நெருக்கமாக வந்திருந்தார்.
அக்குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவரான பிரதிநிதி பென்னி தாம்சன், வியாழன் அவரின் வகைப்படுத்தலை நேரடியாகக் கூறினார்: “ஜனவரி 6 சம்பவம் ஓர் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சியின் உச்சக்கட்டமாக இருந்தது' என்றார். தாம்சன் தொடர்ந்து கூறினார், தலைமைச் செயலகம் மீதான வன்முறைத் தாக்குதல் தற்செயலானது இல்லை. “அது அதிகாரம் கை மாறுவதைத் தடுக்க, ட்ரம்பின் கடைசி, மிகவும் அவநம்பிக்கையான வாய்ப்பைப் பிரதிநிதித்துவம் செய்தது,” என்றார்.
இந்த உண்மை மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. பதவியில் இருந்த ஒரு ஜனாதிபதியால் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி நடத்தப்பட்டதும் இப்போது அமெரிக்க வரலாற்றில் உள்ளடங்குகிறது. நவீன காலத்தில், எந்தவொரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை.
விசாரணைகள் வெறுமனே தொடங்கி உள்ளன, ஆனால் முதல் நாளில் முன் வைக்கப்பட்ட உண்மைகள் கூட பல்வேறு பதில் அளிக்கப்படாத கேள்விகளை எழுப்புகின்றன: தலைமைச் செயலகம் மீதான தாக்குதல் ஏன் ஏறக்குறைய எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை? மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, அதைத் தடுக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? தேர்தல்கள் பின்னர் இருந்தே ட்ரம்ப் அதன் சட்டபூர்வத் தன்மையைக் குறைக் கூறியிருந்தார் என்ற உண்மையை வைத்துப் பார்த்தால், இதற்கான தயாரிப்புகள் செய்வதற்குப் பதிலாக, தலைமைச் செயலகத்தைப் பாதுகாப்பதற்கான எல்லா வழிவகைகளும் வெளிப்படையாகவே ஏன் திறம்பட செயலிழந்து இருந்தன? அனைத்திற்கும் மேலாக, இந்த நேரத்தில் ஜனநாயகக் கட்சி என்ன செய்து கொண்டிருந்தது? பைடென் ஏன் அமைதியாக இருந்தார்? விசாரணைகள் நடத்துவதற்கும் கூட ஏன் 18 மாதங்கள் ஆனது?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இரண்டு முக்கிய சிக்கல்கள் உள்ளன.
முதலாவதாக, இத்தகைய ஒரு சம்பவத்தைச் சமூக, அரசியல் மற்றும் வர்க்க ரீதியாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஓர் அடிப்படையான அர்த்தத்தில், அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்கான அந்த முயற்சியானது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதி ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது. பெடரல் மட்டத்திலும், மாநில மற்றும் உள்ளாட்சி மட்டத்திலும் பொலிஸ் துறைகளுக்கு உள்ளேயும், இராணுவம் மற்றும் அரசுக்கு உள்ளேயும் இருந்த கணிசமான ஆதரவுடன் சேர்ந்து, ட்ரம்பின் நடவடிக்கைகளுக்குக் குடியரசுக் கட்சிக்கு உள்ளேயும் பெருவாரியான ஆதரவு இருந்தது என்ற உண்மையால் இது ஊர்ஜிதம் ஆகிறது.
ஜனவரி 6 க்கு முந்தைய மாதங்களில், செனட் சபையின் பெரும்பான்மை அணி தலைவர் மிட்ச் மெக்கானெல் உட்பட உயர்மட்ட குடியரசுக் கட்சியினர், களவாடப்பட்ட ஒரு தேர்தல் பற்றிய ட்ரம்பின் கூற்றுக்களை நியாயப்படுத்தினர். பைடென் வெற்றி பெற்ற மாநிலங்களில் நியமிக்கப்பட்ட தேர்தல் வெற்றியாளர்களுக்குக் குடியரசுக் கட்சியினரின் ஆட்சேபணைகள் உட்பட, தலைமைச் செயலகம் அடித்து நொருக்கப்பட்டமை ஒரு திட்டத்தின் வெறும் ஒரு பகுதி தான். அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சிக்குப் பின்னரும் கூட, ஜனவரி 7 அதிகாலையில், குடியரசுக் கட்சியினரில் மூன்றில் இரண்டு பங்கினர் தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதற்கு எதிராக வாக்களித்தனர்.
அனைத்திற்கும் மேலாக, ட்ரம்பும் அவரின் சக-சதிகாரர்களும் இராணுவம் மற்றும் பொலிஸ் எந்திரத்திற்குள் குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்டிருந்தனர். மார்ச் 2021 இல், டி.சி. நேஷனல் கார்ட் கமாண்டர் வில்லியம் வாக்கர் விளக்கம் அளிக்கையில், தேசிய பாதுகாப்புத் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான உயர்மட்ட இராணுவக் கட்டளையகத்திற்கு அவர் முதல் கோரிக்கை அனுப்பியதற்கும் அது இறுதியில் அங்கீகரிக்கப்பட்டதற்கும் இடையே மூன்று மணி நேரம் 19 நிமிடங்கள் கால இடைவெளி இருந்ததாக விளக்கம் அளித்தார்.
இரண்டாவதாக, அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு ஜனநாயகக் கட்சியின் அலட்சியமான விடையிறுப்பு, முதலாளித்துவ ஜனநாயகத்திற்காக ஆளும் வர்க்கத்திற்குள் எந்த குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பும் இல்லாததை எடுத்துக் காட்டியது. பதவியில் நீடிப்பதற்கான ட்ரம்ப் திட்டங்களைக் குறித்து ஜனநாயகக் கட்சியினர் தெளிவாக அறிந்திருந்தனர். ஜூன் 2020 இல், பைடென் கூறுகையில், “இந்த ஜனாதிபதி இத்தேர்தலைக் களவாட முயற்சிக்கப் போகிறார்' என்பதே அவரின் 'ஒரே மிகப் பெரிய கவலையாக' இருப்பதாக தெரிவித்தார்.
ஆனாலும் ஜனநாயகக் கட்சியினர் அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை எதிர்கொள்ளவோ அல்லது என்ன நடக்கிறதோ அதைக் குறித்து பொதுமக்களை எச்சரிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பைடென், ஜனவரி 6 இல், எதையும் பேசுவதற்கு முன் பல மணி நேரம் தாமதித்தார். இறுதியில் அவர் ஓர் அறிக்கை வழங்கிய போது, அந்த கிளர்ச்சியை ட்ரம்ப் தான் ஒழுங்கமைத்திருந்தார் என்ற நிலையில், அதை கைவிடக் கோரி ட்ரம்ப் தேசியளவில் தொலைக்காட்சியில் உரையாற்ற 'முன்' வர வேண்டும் என்று அவரிடமே பைடென் அசாதாரணமாக முறையீடு செய்தார்.
மக்களிடையே பரந்த எதிர்ப்பைத் தூண்டும் எதையும் செய்ய ஜனநாயகக் கட்சியினர் பீதி அடைந்திருந்தனர், மற்றும் பீதி அடைந்துள்ளனர். ட்ரம்ப் நிர்வாகம் முழுவதும், ட்ரம்ப் உடனான அவர்களின் கருத்து வேறுபாடுகள் பிரதானமாக வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளைச் சுற்றியே இருந்தன, குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிராக அதிக ஆக்ரோஷமான நடவடிக்கைகளை எடுக்க கோருவதாக இருந்தன.
ஜனவரி 6 விசாரணைகளிலும் கூட, ஜனநாயகக் கட்சியினரின் எல்லா நடவடிக்கைகளும், கிட்டத்தட்ட அலட்சியமான விதத்தில், வலதை நோக்கி உள்ளன: அதாவது, அந்த குழுவின் பிரதான செய்தி தொடர்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனியின் மகள் குடியரசுக் கட்சியின் லிஸ் செனியை முன்நிறுத்துவது; மைக் பென்ஸ், வில்லியம் பார் மற்றும் ஏனைய குடியரசுக் கட்சி நடவடிக்கையாளர்களைப் பெருமைப்படுத்துவது மற்றும் இன்னும் இதர பிற நடவடிக்கைகளும் உள்ளன.
இதற்கிடையே, இந்த விசாரணைகள் குறித்து பைடென் மௌனமாக இருந்து வருகிறார், ஆறு மாதங்களுக்கு முன்னர் அவரின் ஆண்டுவிழாவில் பேசியதற்குப் பின்னர் ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்புச் சதி குறித்து அவர் எதுவும் கூறியதில்லை. வெள்ளை மாளிகை தகவல்படி, பைடென் இந்த விசாரணையை அவரின் சொந்த ஜனாதிபதி பதவிக்கு எதிரான பாசிசக் கிளர்ச்சி முயற்சியாக 'அரசியலாக்க' விரும்பவில்லை என்பதே இதற்குக் காரணம்!
நமக்கு இப்போது என்ன தெரிய வந்துள்ளதோ அதன் அடிப்படையில் பார்த்தால், இந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி வெற்றி பெற்றிருந்தால், ஜனநாயகக் கட்சி அதை எதிர்த்திருக்கும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. இராணுவம் அல்லது உச்ச நீதிமன்றம் தலையீடு செய்யுமாறு கோரும் பெரும்பாலான மேல்முறையீடுகளுடன், அதுவும் இந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியின் பிரதான சதிகாரர்களில் ஒருவரின் கணவரான கிளாரன்ஸ் தாமஸ் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் நிலையில், அந்த புதிய உண்மைகளின் அடித்தளத்தை அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஜனநாயகக் கட்சியின் தலைமையகங்களில் வாட்டர்கேட் அலுவலக கட்டிடத்தை நொருக்கியதில் நிக்சன் நிர்வாகம் சம்பந்தப்பட்டிருந்தது என்பது, விரிவான விசாரணைகள் மற்றும் வழக்குகள் கோருவதற்குப் போதுமானளவில் தீவிரமானதாக பார்க்கப்பட்டது, இது நிக்சனின் இராஜினாமாவில் உச்சத்தை எட்டியது.
ஜனவரி 6, 2020 இல் நடந்த சம்பவங்கள், பண்புரீதியில் வித்தியாசமானவை, அதாவது அரசியலமைப்பை அகற்றி ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் முயற்சியாகும். ஆனாலும் அதில் முக்கியமாக சம்பந்தப்பட்டவர்கள் எவருமே கைது செய்யப்படவில்லை. காங்கிரஸ் சபையில் இந்த விசாரணைகளின் நோக்கம் என்ன என்பதைக் கூட ஜனநாயகக் கட்சி கூறவில்லை அல்லது ட்ரம்ப் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவர் மீது அவர்கள் வழக்குத் தொடுக்க விரும்புகிறார்கள் என்றும் அவர்கள் அறிவுறுத்தவில்லை. அதற்கு முரணாக, ட்ரம்பின் உயர்மட்ட உதவியாளர்கள் மார்க் மெடோஸ் மற்றும் டான் ஸ்காவினோ மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில்லை என்று இந்த விசாரணைகளுக்கு முன்னரே நீதித் துறை முடிவு செய்து விட்டது.
நிலைமை மிகவும் ஆபத்தாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, தீவிர சமூக சமத்துவமின்மை அதிகரிப்பில் வேரூன்றிய அமெரிக்க ஜனநாயகத்தின் இந்த நீடித்த மற்றும் இறுதி நெருக்கடியில் இருந்தே ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்புச் சதி மேலெழுந்தது. அதைக் கொண்டு வந்த எல்லா நிலைமைகளும் விரிவடைந்துள்ளன. பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வருவதால், பொருளாதார நெருக்கடி மற்றும் பொறிவுக்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களால் இந்த பெருந்தொற்று புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது.
வெளிநாட்டில் உலகப் போரை நடத்தியவாறு உள்நாட்டில் அதிகரித்து வரும் உள்நாட்டு எதிர்ப்பை எதிர் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கம், சர்வாதிகார வடிவங்களுக்குத் திரும்புகிறது. அமெரிக்க ஜனநாயகம் பொறிவின் விளிம்பில் உள்ளது என்பது இப்போது பரவலாக உணரப்படுகிறது. சர்வதேச பத்திரிகைகளில், உள்நாட்டுப் போர் குறித்தும் நாட்டின் சிதைவுக்கான வாய்ப்புகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன.
ஆளும் வர்க்கத்தின் மிகவும் ஈவிரக்கமற்ற பிரிவுகளுக்காக பேசும் குடியரசுக் கட்சி, வளைந்து கொடுக்காமல் விடாப்பிடியாக ஆக்ரோஷமாக உள்ளது. இன்று வரை, குடியரசுக் கட்சி ட்ரம்பைப் பெருமளவில் ஆதரிக்கிறது மற்றும் இடைக்காலத் தேர்தல்களில் காங்கிரஸ் சபை மீது கட்டுப்பாட்டை எடுக்கத் தயாராகி வருகிறது.
ஜனநாயகக் கட்சியோ, எதிர்ப்பை ஒன்று திரட்டாமல், 'நல்லிணக்கம்' மற்றும் 'இருகட்சிகளின் ஒருமனதான' சகிப்புத்தன்மைக்காக மன்றாடுகிறது. அது, எப்போதும் போலவே, இப்போதிருக்கும் இந்த அமைப்பு முறைக்கு எதிரான சமூகக் கோபத்தை மூடிமறைக்கவும், நிலை தடுமாறச் செய்யவும் மற்றும் போருக்குக் கூடுதலாக பிற்போக்குத்தனமான வழிகளில் அதை திசை திருப்பவும் முயல்கிறது.
ஜனநாயகக் கட்சியுடன் அரசியல்ரீதியில் இணைந்த தொழிற்சங்க அமைப்புகள், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்கி அடிபணியச் செய்ய அவற்றால் ஆன அனைத்தையும் செய்கின்றன. உயர்மட்ட நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புக்கள் இன மற்றும் பாலின அரசியலை ஊக்குவிப்பதன் மூலம் தொழிலாளர்களை அந்நியப்படுத்தி குழப்பம் ஏற்படுத்த செயல்படுகின்றன. இந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியின் தீவிரத்தன்மையைக் குறைத்துக் காட்டுவதற்கும், அதை முக்கியத்துவம் அற்றதாக கையாள்வதற்கும் மற்றும் ட்ரம்புடன் தன்னை இணக்கப்படுத்திக் கொள்வதற்கும் கூட முயன்ற அவற்றின் முயற்சிகளால் போலி இடதின் மற்றொரு பிரிவு முற்றிலும் அம்பலப்பட்டுள்ளது.
ஜனவரி 6 சம்பவங்கள் மற்றும் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்ச்சி பற்றிய ஒரு பகுப்பாய்வில் இருந்து என்ன தெரிய வருகிறது என்றால் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பும் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதுவொரு சிறிய பிரச்சினை இல்லை. ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது, இந்த பெருந்தொற்று மற்றும் போரின் சமூக மற்றும் பொருளாதார விளைவுகளால் அது மிகப் பெரியளவில் தீவிரமடைந்துள்ளன.
ஆனால் இந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்கு, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த அரசியல் எந்திரத்திற்கு எதிராகவும் ஒரு நனவான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டி எழுப்புவதே இதன் அர்த்தமாகும்.
