சட்டமன்றத் தேர்தல்கள் மக்ரோனுக்கு தோல்வியையும், பெரும்பான்மை இல்லாமல் ஒரு தொங்கு பாராளுமன்றத்தையும் உருவாக்குகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று நடந்த பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தலின் இரண்டாவது சுற்றில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் Ensemble (“ஒன்றாக”) கூட்டணி பிரான்சின் தேசிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வெல்லத் தவறிவிட்டது. பணவீக்கத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் அலைகளுக்கு மத்தியில் வரும் முடிவு, மக்ரோனுக்கு ஒரு கடுமையான தோல்வியாகும். 1988 க்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து உடனடியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் 577 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஜனாதிபதியின் கட்சி 289 இடங்களை அறுதிப் பெரும்பான்மையாகப் பெறத் தவறியது இதுவே முதல் முறையாகும்.

மார்ச் 17, 2022 வியாழக்கிழமை, பிரான்சின் பாரிஸுக்கு வடக்கே ஒபேர்வில்லியே இல் நடந்த ஜனாதிபதி பிரச்சார செய்தி மாநாட்டின் போது பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உரையாற்றுகிறார். (AP Photo/Thibault Camus)

இன்று அதிகாலை உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, Ensemble 246 இடங்களையும், ஜோன்-லூக் மெலோன்சோனின் NUPES (புதிய ஜனரஞ்சக, சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒன்றியம்) 142, மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய பேரணி (NR) 89 மற்றும் வலதுசாரி குடியரசுக் கட்சி (LR) 64 இடங்களையும் வென்றன. வாக்களிக்காமை 54 சதவிகிதம் என்ற மட்டத்தை எட்டியது.

ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்தல், நலன்புரி உதவிகள் (RSA) பெறுபவர்களை வேலை செய்ய கட்டாயப்படுத்தல், பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தை உயர்த்தல் போன்ற தொழிலாளர் விரோத வேலைத்திட்டங்களை மக்ரோன் முன்மொழிந்துள்ளார். விமான நிலையங்கள், மருத்துவமனைகள், லாரி ஓட்டுனர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அதிக வாங்கும் சக்தியைக் கோரும் வேலைநிறுத்தங்களின் பின்னணியில், விளைவு பேரழிவை ஏற்படுத்தியது.

முன்னணி Ensemble வேட்பாளர்கள் அவமானகரமான தோல்விகளை சந்தித்தனர். மக்ரோனின் முன்னாள் உள்துறை அமைச்சரும், LREM கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கிறிஸ்தோப் காஸ்டனேர், Alpes-de-Haute-Provence இல் NUPES வேட்பாளர் லெயோ வால்டரிடம் தோற்றார். முன்னாள் தேசிய சட்டமன்ற சபாநாயகரும் LREM தலைவருமான ரிச்சார்ட் ஃபெரோன் பிரிட்டானியின் Finistère பகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

ஏப்ரல் 24 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் மக்ரோன் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறத் தவறிவிட்டனர். சுகாதார அமைச்சர் பிரிஜிட் பூர்கினியோன், கடல்வள அமைச்சர் ஜஸ்டின் பெனான் மற்றும் சூழலியல் அமைச்சர் அமெலி டு மொன்சலான் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர், அவர்கள் இப்போது அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும். பிரதம மந்திரி எலிசபெத் போர்ன், NUPES இன் இளம் மற்றும் அறியப்படாத வேட்பாளர் வோவே கோஷார்ட் இன் சவால்களுக்கு எதிராக 52 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்றார்.

முன்னாள் சுகாதார மந்திரி ஒலிவியே வெரோன் TF1 தொலைக்காட்சியில், பெரும்பான்மையை வெல்லத் தவறிய போதிலும், மக்ரோன் தனது சமூக வெட்டுக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பார் எனக் கூறினார். 'நாங்கள் மிக விரைவாக பெரும்பான்மையை உருவாக்குவோம், எனவே அது தேசிய சட்டமன்றத்தில் முழுமையானதாக மாறும், அதில் உள்ள நிபந்தனைகள் என்ன என்பதை நாங்கள் பார்ப்போம்,' என்று வெரோன் கூறினார்: 'மற்ற பாராளுமன்ற குழுக்கள் சீர்திருத்தங்களை முன்வைத்து அவற்றை நிறைவேற்ற போதுமான வாக்குகளை எங்களுக்கு வழங்கும்.'

LR பாராளுமன்றக் குழுவின் தலைவர் கிறிஸ்டியான் ஜாக்கோப் தனது பிரதிநிதிகள் மக்ரோனின் நிகழ்ச்சி நிரலை ஆதரிக்க மாட்டார்கள் என அறிவித்தார். 'எங்களைப் பொறுத்த வரை, நாங்கள் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தோம், நாங்கள் ஒரு எதிர்க்கட்சியாக இருக்கிறோம், நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்போம்' என்று ஜாக்கோப் கூறினார்.

மெலோன்சோனின், NUPES கூட்டணி இப்போது பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியாக உள்ளது, 'ஜனாதிபதி கட்சியின் தோல்வி' 'முற்றுமுழுதானது' என்று கூறினார்.

மக்ரோனின் 'தாராளவாதிகள்', தீவிர வலதுசாரிகள் மற்றும் அவரது சொந்த 'ஜனரஞ்சக' கட்சிக்கு இடையே, பிரான்ஸ் இப்போது மூன்று முகாம்களாக துருவப்படுத்தப்பட்டுள்ளது என்று மெலோன்சோன் தனது வாதத்தை மீண்டும் கூறினார். அவர் கூறினார், 'பிரான்ஸ் தன்னை வெளிப்படுத்தியது, போதுமானதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனெனில் வாக்களிக்காத நிலைகள் இன்னும் அதிகமாக உள்ளன, அதாவது பிரான்சின் பெரும்பகுதி எங்கு திரும்புவது என்று தெரியாதுள்ளது, மேலும் மூன்று முகாம்களும் ஒரே மட்டத்தில் உள்ளன.'

RN வேட்பாளர்களுக்கு எதிராக NUPES க்கு வாக்களிக்குமாறு மக்ரோனின் கட்சி தெளிவாக அழைப்பு விடுக்கவில்லை என்றும் இதனால் RN தனது சாதனை அளவை தேர்தலில் அடைய உதவியது என்றும் மெலோன்சோன் விமர்சித்தார். 'இது மக்ரோனிசத்தின் தோல்வி, விரிவுரை வழங்கிய அனைவருக்கும் தார்மீக தோல்வி. அவர்கள் RN இன் அணிகளை வலுப்படுத்தினர். மக்ரோனிஸ்டுகள் எங்களுக்கு விரிவுரை வழங்கினர், ஆனால் அவர்களால் 52 மாவட்டங்களில் தெளிவான வாக்கெடுப்புக்கு அறிவுறுத்தலை வழங்க முடியவில்லை, அது இப்போது யாருக்கும் தார்மீக பாடங்களை வழங்குவதற்கு தகுதியற்றது.

ஓய்வுபெறும் வயதை மீண்டும் 60 ஆகக் கொண்டு வரவும், விலைகளை முடக்கவும், மக்ரோனின் சமூக விரோத நிகழ்ச்சி நிரலை எதிர்ப்பதாகவும் உறுதியளித்து மெலோன்சோன் பெரும் வாக்குகளைப் பெற்றார். எவ்வாறாயினும், பாராளுமன்றத் தேர்தல்களுக்கான அவரது முழு முன்னோக்கும், வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணிப்பது மற்றும் அவரது மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க வாக்காளர்களை வெகுஜன எதிர்ப்புகள் அல்லது வேலைநிறுத்தங்களில் அணிதிரட்ட எந்த முயற்சியும் எடுக்காததன் அடிப்படையில் தோல்வியடைந்துள்ளது என்பதும் தெளிவாகிறது. சட்டசபையில் பெரும்பான்மையை வென்று பிரதமராக வருவதன் மூலம் தனது சமூக நிகழ்ச்சி நிரலை திணிக்க முடியும் என அறிவித்திருந்தார்.

NUPES பெரும்பான்மையைப் பெறாது என்று கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து காட்டிய போதிலும், மெலோன்சோன் தனது பாராளுமன்ற நடவடிக்கைகள் மக்ரோனின் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை நிறுத்தி முற்போக்கான அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்று கூறினார்.

தொங்கு பாராளுமன்றம், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் அரசியல் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. மக்ரோன் தனது சட்டமியற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவைத் திரட்டத் துடிக்கும்போது, ஒருவேளை LR அல்லது மெலோன்சோனின் NUPES க்கு இது ஒரு நீடித்த நெருக்கடியைக் குறிக்கிறது. அதே நேரத்தில், ஆளும் வர்க்கம், உள்நாட்டு அடக்குமுறையை செயல்படுத்த பிரான்சில் இராணுவத்தை நிலைநிறுத்த அழைப்பு விடுத்துள்ள நவ-பாசிஸ்டுகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டுக் கூறுகளை முன்னிலைப்படுத்த ஆளும் வர்க்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

லு பென் தனது RN இன் பாராளுமன்றக் குழுவைப் பாராட்டினார், அது 'நமது அரசியல் போக்கின் வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கையாகும். … மக்கள், தேசிய பேரணியில் இருந்து சட்டமன்றத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளனர். மக்ரோனின் பதவிக்காலம் முடிந்த பின்னர் தான் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் வெளிப்படையாக அறிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட RN பிரதிநிதிகளை 'மக்ரோன் சாகசம் முடிவடையும் போது அதிகாரத்தை கையிலெடுக்கும் புதிய அரசியல் உயரடுக்கின் முன்னணி' என்று அவர் கூறினார்: 'நாம் நிர்ணயித்த மூன்று இலக்குகளை நாங்கள் அடைந்துவிட்டோம். அவை: இமானுவல் மக்ரோனை சிறுபான்மை ஜனாதிபதியாக்குவது; … அத்தியாவசிய அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முயலுதல்; … மேலிருந்து மக்ரோனிஸ்டுகள் மற்றும் கீழிருந்து குடியரசு எதிர்ப்பு தீவிர இடதுசாரிகள் ஆகிய இரண்டிற்கும் ஒரு தீர்க்கமான எதிர்ப்புக் குழுவை உருவாக்குதல்.”

தொங்கு பாராளுமன்றம், மக்ரோனின் கட்சியின் சரிவு மற்றும் தீவிர வலதுசாரி மற்றும் மெலோன்சோனின் கட்சி இரண்டின் விரைவான வளர்ச்சியும் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் சமரசம் செய்ய முடியாத அரசியல் மற்றும் வர்க்க மோதல்கள் அதிகரித்து வருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

பிரான்சும் முழு நேட்டோ கூட்டணியும் உக்ரேனில் ரஷ்யாவுடன் பொறுப்பற்ற முறையில் போரை நடத்தி வருகின்றன, மேலும் மக்ரோன் பிரெஞ்சு தொழிற்துறைக்கு கோரிக்கைகளை விடுக்க மற்றும் தொழிலாளர்கள் மீது 'போர் பொருளாதாரத்தை' திணிக்க அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில், பணவீக்கத்தின் வெடிக்கும் வளர்ச்சியானது, அப்பகுதி முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் எழுச்சியைத் தூண்டுகிறது. துனிசியா மற்றும் இத்தாலியில் நாடு தழுவிய பொதுத்துறை வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன, இன்று மொராக்கோ மற்றும் பெல்ஜியத்தில் இதேபோன்ற தேசிய வேலைநிறுத்தங்கள் நடைபெறும், மேலும் விமான நிலையங்கள் ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தத்தில் உள்ளன. பிரான்சில், லாரி ஓட்டுனர்களும் பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்களும் அடுத்த இரண்டு வாரங்களில் வேலைநிறுத்தங்களை நடத்த தயாராகி வருகின்றனர்.

மெலோன்சோன் அவர் அறிவித்தது போல் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை அல்லது பிரதம மந்திரி ஆகவில்லை என்பதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள வர்க்கப் போராட்டத்தின் வெடிக்கும் எழுச்சிக்கு மத்தியில், ஆளும் வர்க்கம் மக்ரோன் போன்ற சட்டம்-ஒழுங்கு நபர்களையும் லு பென் போன்ற தீவிர வலதுசாரி அடக்குமுறையின் ஆதரவாளர்களையும் முன்வைத்து பதிலடி கொடுக்கிறது. ஜெனரல் பியர் டு வில்லியே மற்றும் அவரது பரிவாரங்களின் ஆட்சிக் கவிழ்ப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மௌனமாக இருந்த மெலோன்சோன், அவர்களுக்கு எதிரான போராட்டத்தை அணிதிரட்டுவதற்கான தெளிவான முன்னோக்கைக் கோடிட்டுக் காட்டவில்லை.

அதற்கு பதிலாக, மக்ரோன் கியேவிற்கு உக்ரேன் இராணுவ உதவியை உறுதியளித்து, ரஷ்யாவுடன் போரைத் தொடர பிரான்சை ஒரு 'போர் பொருளாதாரத்தில்' சேர்த்தபோது, மெலோன்சோன் அவருக்கு ஆதரவளித்தார். மெலோன்சோன் France Bleu வானொலியிடம் கூறினார்: “நான் முதலில் உக்ரைனுடனான அவரது [மக்ரோனின்] ஒற்றுமையின் செய்தியுடன் என்னை இணைத்துக் கொள்வதுடன் தொடங்குகிறேன். முழு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போதும் நான் இதைச் செய்தேன், பிரெஞ்சு மக்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதி நினைவுபடுத்துவது நல்லது என்று நான் நினைக்கிறேன் - அவர்கள் அனைவரும், விதிவிலக்கு இல்லாமல்.” ஏகாதிபத்தியப் போருக்கான மக்ரோனின் வாதங்களுக்கு இந்த அடிபணிதல், மக்ரோனிடம் சரணடைவதற்கான களத்தை அமைக்கிறது.

முதலாளித்துவத்தின் பெருகிவரும் நெருக்கடிக்கான தீர்வு, பிரெஞ்சு பாராளுமன்றத்திலோ, அல்லது மெலோன்சோன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிகளிலோ காணப்பட முடியாதது, மாறாக உலகளாவிய வர்க்கப் போராட்டத்தில்தான் காணப்பட முடியும். ஒரு சக்திவாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கம், பணவீக்கத்தின் மூலம் பாரிய வறுமையை எதிர்க்கும் மற்றும் பெரிய அணுசக்தி சக்திகளுக்கு இடையிலான முழுப் உலகப் போராக வளர்ந்து வரும் அபாயத்தையும் எதிர்க்கும்.

ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் அவசியத்தையும், அரசு அதிகாரத்திற்கான போராட்டத்தை சோசலிசமாக மாற்றுவதற்கான தேவையையும் தொழிலாள வர்க்கத்தின் இந்த வளர்ந்துவரும் இயக்கத்திற்குள் தெளிவுபடுத்துவதே முன்னோக்கிய வழியாகும்.

Loading