முன்னோக்கு

ஜூலியன் அசான்ஜ் நாடுகடத்தலையும் அரசு கொலையையும் எதிர்கொள்ளும் அதேவேளை, அவர் அம்பலப்படுத்திய போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை அன்று, பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தார். அசான்ஜின் மனைவி ஸ்டெலா மோரிஸ் உட்பட அவரது குடும்பத்தினர், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் மேலும் சட்டபூர்வ மேல்முறையீடு செய்வது உட்பட, இந்த முடிவை எதிர்த்துப் போராடுவோம் என்று உடனடியாக அறிவித்தனர்.

ஜூலியன் அசான்ஜ் [Photo by David G. Silvers, Cancillería del Ecuador / CC BY-SA 2.0]

அசான்ஜ் நாடுகடத்தப்பட்டால், உளவுச் சட்டத்தின் கீழ் 18 குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்கொள்வதுடன், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை அம்பலப்படுத்தும் உண்மையான தகவல் என்று அமெரிக்க அரசாங்கமும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களும் ஒப்புக்கொண்ட தகவல்களை வெளியிட்டதற்காக 175 ஆண்டுகள் சிறைதண்டனையையும் அவர் எதிர்கொள்வார்.

உக்ரேனைப் பொறுத்தவரை, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்ய ‘சர்வாதிகாரத்திற்கு’ எதிராக ஜனநாயகத்தை பாதுகாப்பதாக தொடர்ந்து முழங்குகின்றன. இந்த வலியுறுத்தல்களின் அடிப்படையில், பைடென் நிர்வாகம் உக்ரேனிய அரசாங்கத்திற்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வாரி வழங்கியுள்ள நிலையில், அது ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போராக மாறியுள்ளது.

ஆசிய-பசிபிக் பகுதியில், சீன ‘எதேச்சதிகாரத்திற்கு’ எதிராக ‘சுதந்திரத்தை’ பாதுகாப்பதாக வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் இதேபோல் வலியுறுத்துகின்றனர்.

அசான்ஜின் துன்புறுத்தல் இந்த அறிக்கைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு இராணுவவாதம் மற்றும் போருக்கான திட்டத்தை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் முழுமையான பொய்கள் என அம்பலப்படுத்துகிறது.

பிரிட்டனின் மையப்பகுதியில், ஒரு ஊடகவியலாளரான அசான்ஜ், எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் உச்சபட்ச பாதுகாப்புள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தனது போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அவரை நாடுகடத்த அமெரிக்கா முயல்கிறது.

அசான்ஜின் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. அசான்ஜ் இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் அரசியல் அகதியாக இருந்தபோது, அவருக்கு எதிராக ஒரு பாரிய உளவு நடவடிக்கையை அமெரிக்கா மேற்பார்வையிட்டது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இதில், வழக்கறிஞர்களுடனான அவரது சலுகை பெற்ற தகவல்தொடர்புகள் சட்டவிரோதமாக கண்காணிக்கப்பட்டதும் அடங்கும்.

2017 ஆம் ஆண்டில், ட்ரம்ப் நிர்வாகமும் சிஐஏ உம் இலண்டனில் அசான்ஜை நாடுகடத்துவது அல்லது படுகொலை செய்வது குறித்து விவாதித்ததாக Yahoo!செய்திகள் கடந்த செப்டம்பரில் தெரிவித்தன. அதன் கட்டுரை 30 முன்னாள் அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் வெளியேறும் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர், அமெரிக்காவும் பிரிட்டிஷூம் அசான்ஜை நடத்தும் விதத்தை சித்திரவதை என்று பலமுறை முத்திரை குத்தியுள்ளார். நூறாயிரக்கணக்கான மருத்துவர்கள் அசான்ஜை விடுவிக்கக் கோரியுள்ளதோடு, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.

இவை அனைத்தையும் மீறி, பைடென் நிர்வாகம் அசான்ஜ் மீதான வழக்கை தொடர்ந்தது, மற்றும் பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் அதை எளிதாக்கியுள்ளன. உக்ரேனில் ‘சுதந்திரத்திற்காக’ என்று கூறப்படும் அமெரிக்கத் தலைமையிலான பிரச்சாரத்திற்கும், அசான்ஜை அடைத்து வைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கும் இடையே உள்ள முரண்பாடு ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சியாகும்.

அசான்ஜ் ஏன் குற்றம்சாட்டப்பட்டார்? அதாவது, அவர் மீதான அமெரிக்க குற்றச்சாட்டுக்களானது, அமெரிக்க இராணுவத்தின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பதிவுகள், அதன் குவாண்டனாமோ விரிகுடா கைதிகளின் கோப்புகள் மற்றும் 250,000 இராஜதந்திர இரகசியங்கள் ஆகியவை பற்றிய விக்கிலீக்ஸின் 2010 மற்றும் 2011 வெளியீடுகளை உள்ளடக்கியதாகும்.

ஒட்டுமொத்தமாக, இந்த ஆவணங்கள் சமீபத்திய வரலாற்றில் ஏகாதிபத்திய போர் பற்றிய மிக சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்கள் ‘ஜனநாயகம்’ மற்றும் ‘மனித உரிமைகள்’ பற்றியது என்பதான அனைத்து பொய்களையும் அவை அம்பலப்படுத்தின. அதற்கு மாறாக, இந்தப் போர்கள் தினசரி கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாரிய ஒடுக்குமுறைகளை உள்ளடக்கிய இரத்தக்களரியான நவ-காலனித்துவ நடவடிக்கைகளாக மாறிவிட்டன.

ஆப்கானிய போர் பதிவுகள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் திருமண விழாக்கள் மீதான நேட்டோவின் குண்டுவீச்சுகள் முதல், ஆக்கிரமிப்புக்கு எதிரானவர்களை படுகொலை செய்வதற்கு பொறுப்பான ஒரு அமெரிக்க கமாண்டோவின் இருப்பு வரை, இதுவரை யாரும் வெளிச்சத்திற்கு கொண்டு வராத அட்டூழியங்களை விவரிக்கின்றன.

ஈராக் போர் பதிவுகள், 109,000 ஈராக்கியர்களின் மரணங்களை பதிவு செய்துள்ளன, இதில் 66,081 பேர் பொதுமக்கள் என அமெரிக்க இராணுவம் விவரித்தது. அசான்ஜ் இல்லை என்றால், இவர்களில் 15,000 பேர் வரலாற்றில் எந்தத் தடயத்தையும் விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் கொலைகள் அமெரிக்காவாலும் அதன் நட்பு நாடுகளாலும் முழுமையாக மறைக்கப்பட்டன.

அமெரிக்க சிப்பாய்கள் இராணுவ சோதனைச் சாவடிகளில் பொதுமக்களை சுட்டுக் கொன்றது, அவர்களின் ஒப்பந்தக்காரர்கள் நெரிசல் மிக்க சந்தைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவது, ஆயிரக்கணக்கான கைதிகள் அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தால் சித்திரவதை செய்யப்படுவது ஆகிய அனைத்தும் வழமைபோல் எதுவும் விடுதலின்றி பதிவு செய்யப்பட்டிருந்தது.

குவாண்டனாமோ வளைகுடா கைதிகளின் கோப்புகள், உலகளாவிய ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்ற மூடிமறைப்பை அம்பலப்படுத்தியது. கோப்புகள், அதிகரித்தளவில் அப்பாவி பொதுமக்கள் தான் மிகக் கொடூரமான சிறைவாசத்திற்கு உட்படுத்தப்படுவதைக் காட்டின, உதாரணமாக நினைவாற்றல் திறன் இழந்த 89 வயது ஆப்கான் விவசாயி, ஒரு 14 வயது சிறுவன் ஆகியோர் கைதிகளாக இருந்ததை குறிப்பிடலாம்.

இராஜதந்திர வெளிப்பாடுகள், உலகம் முழுவதுமாக சட்டவிரோதமான போர்களில் ஈடுபடுவதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலையான செயல்பாடாகும் என்பதை வெளிப்படுத்தின. அதன் பக்கங்களில், எண்ணற்ற சர்வாதிகாரங்களுக்கு அமெரிக்கா துணைநின்றது, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளைத் தீட்டியது, ‘நட்பு’ மற்றும் எதிரி நாடுகளின் அரசாங்கங்களில் முகவர்களை வளர்த்தது, மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளை உளவுப் பார்த்தது ஆகியவற்றுக்கான நிரூபணங்கள் இருந்தன.

அனைத்து வெளிப்பாடுகளும் கூட்டுக் கொலை (Collateral Murder) காணொளியில் சுருக்கமாக பதிவு செய்யப்பட்டள்ளன, ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டரில் இருந்த அமெரிக்க சிப்பாய்கள் ஈராக் குடிமக்களையும், இரண்டு ராய்ட்டர்ஸ் நிருபர்களையும் மகிச்சியுடன் சுட்டுக் கொன்ற காட்சிகளின் பதிவும் அதில் உள்ளது. சமீபத்திய தசாப்தங்களில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாரிய போர்-எதிர்ப்பு உணர்வை தூண்டுவதில் வேறு எந்த காணொளியும் இந்தளவிற்கு தீவிர பங்கைக் கொண்டிருக்கவில்லை.

இந்த அனைத்து குற்றங்களுக்காகவும், சிறையில் இருக்கும் ஒரே நபர், அவர்களின் முகமூடியை அவிழ்த்த அசான்ஜ் மட்டுமே. இதற்கிடையில், போர் குற்றவாளிகள் சுதந்திரமாக உள்ளனர்.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பேரழிவுகர ஆயுதங்களைப் பற்றி பொய் சொன்னார், மற்றும் அவரது கைகளில் ஒரு மில்லியன் ஈராக்கியர்களின் இரத்தம் படிந்துள்ளது. ஆனால் அவர் ஜனநாயகக் கட்சியினராலும் பெருநிறுவன ஊடகங்களாலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு, மேலும் அவர் அமெரிக்க அரசியலின் மூத்த அரசியல்வாதியாக சித்தரிக்கப்படுகிறார்.

ஈராக் படையெடுப்பில் பிரிட்டனின் பங்களிப்பை மேற்பார்வையிட்ட முன்னாள் தொழிற் கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயர், பாரிய மக்கள் வெறுப்புக்கு ஆளானார். ஆனால் இந்த மாதம், பிளேயருக்கு மாவீரர் விருது வழங்கப்பட்டது.

அசான்ஜ் மீது வழக்குத் தொடரும் முயற்சியானது, ஏகாதிபத்திய பொய்களை அவர் அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கும் நடவடிக்கையாகும். மேலும், இது புதிய மற்றும் இன்னும் கடுமையான குற்றங்களுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாகும்.

விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய நவ-காலனித்துவப் போர்கள் அணு ஆயுதப் போருக்கு அச்சுறுத்தும் உலகளாவிய மோதலாக மாற்றமடைந்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் ஒரு பினாமிப் போரை நடத்தி வருகிறது, மற்றும் ஆசிய-பசிபிக் பகுதியில் சீனாவை எதிர்க்கிறது.

உலகப் போருக்கு அச்சுறுத்தும் இந்த வேலைத்திட்டம் ஜனநாயகத்தின் பொறிகளுடன் கூட பொருந்தாது. ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளர்களை குறிவைத்து அவர்கள் மீது பரந்தளவிலான போலி குற்றச்சாட்டுக்களை சுமத்துவது, மற்றும் அவர்களை பழிவாங்குவது ஆகியவற்றுக்கான ஒரு முன்னுதாரணமாக அசான்ஜின் துன்புறுத்தல் கருதப்படுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அசான்ஜின் சுதந்திரத்திற்காக தீவிரமாகப் பங்கெடுப்பதும் போராடுவதும் முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அவசரமானது.

இந்த போராட்டத்தில், அசான்ஜை துன்புறுத்துபவர்களிடம் விடுக்கப்படும் தார்மீக மேல்முறையீடுகள், அவர் மீதான அவர்களின் தசாப்த கால தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர, அவர்களை நம்பவைக்கும் என்ற மாயையை விட ஆபத்தானது எதுவுமில்லை.

அசான்ஜை விடுதலை செய்வதற்கும், அவர் அம்பலப்படுத்திய போர்க்குற்றவாளிகளை பொறுப்புக் கூறு வைப்பதற்கும் தேவைப்படுவது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான்.

உலகெங்கிலும், அசான்ஜின் துன்புறுத்தலுக்கு தலைமை தாங்கும் அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரிய நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் விளைவித்து வந்த ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கோவிட் கொள்கைகளுக்கு பிரிட்டன், அமெரிக்கா மற்றும் எல்லா இடங்களிலும் பாரிய எதிர்ப்பு உள்ளது. மேலும், பாரியளவிலான விலைவாசி உயர்வு, தொடர்ச்சியான ஊதிய வெட்டுக்கள் மற்றும் சமூகச் செலவின வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு எதிராக பாரிய வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தற்போது உருவெடுத்து வருகின்றன.

பிரிட்டனில், இந்த வாரம் 50,000 இரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். அவர்களில் பலர் அசான்ஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் இருப்பார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ளது போல், அமெரிக்காவிலும் வாகனத் தொழிலாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பிரிவினரிடையே போராட்டங்கள் பெருகி வருகின்றன.

இந்த வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் இயக்கமானது, அசான்ஜின் விடுதலைக்கான போராட்டம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைகிறது. உங்களின் அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, அசான்ஜை பாதுகாப்பதற்கும் போராட அனைத்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.

Loading