ஐரோப்பா முழுவதும் ரையனேர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கையில் ஸ்பெயினின் PSOE-Podemos அரசாங்கம் வெளிநடப்பு செய்வதற்கு தடை விதித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பா முழுவதும் பெருகிவரும் போராட்ட அலையில் விமான மற்றும் விமான நிலையத் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்கையில், ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) - பொடேமோஸ் (Podemos) கடுமையான குறைந்தபட்ச சேவைகளை சுமத்தியதன் மூலம் ஐரோப்பிய ரையனேர் விமான பணிக்குழுவினர் மூன்று நாள் வேலைநிறுத்தம் வெடித்தது, இதன் மூலம் பெரும்பாலான ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது.

ஜூன் 20, 2022 திங்கட்கிழமை, பிரஸ்ஸல்ஸில் நடந்த பொது வேலைநிறுத்தத்தின் போது, பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் மண்டபத்தில் இரத்து செய்யப்பட்ட விமானங்களுடன் புறப்படும் பலகையின் கீழ் ஒரு ஊழியர் நிற்கிறார். பெல்ஜியத்தில் வாழ்க்கைச் செலவு மற்றும் ஊதியங்களுக்கு எதிரான பொது வேலைநிறுத்தத்தின் பின்னர் விமான நிலையத்திலிருந்து அனைத்து புறப்பாடுகளும் திங்களன்று இரத்து செய்யப்பட்டன [AP Photo/Olivier Matthys] [AP Photo/Olivier Matthys]

வெள்ளியன்று, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் உள்ள விமான பணிக்குழுவினர் தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிபந்தனைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர். மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் இது முதல் நாளாகும். மூன்று நாள் வேலைநிறுத்தத்தின் போது நிறுவனம் புரூசெல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் 315 விமானங்களை இரத்து செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது. ரையனேர் 1,900 பேரைப் பயன்படுத்தும் ஸ்பெயினில், பெல்ஜியத்திற்குச் செல்லும் விமானங்களைத் தவிர வேறு எந்த விமானங்களும் இரத்து செய்யப்படவில்லை, மேலும் போர்ச்சுகலில் இருந்து புரூசெல்ஸுக்கு இரண்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

பிரான்சில் இன்றும் நாளையும் விமான பணிக்குழு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தாலியில் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. ஸ்பானிய தொழிலாளர்களும் ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த கோடையில் வேலைநிறுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பல விமான நிறுவனங்களில் ரையனேர் ஒன்றாகும். புரூசெல்ஸ்ஸில் ஏர்லைன்ஸ் விமானிகள் மற்றும் விமான பணிக்குழு பணியாளர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி இன்று முடிவுக்கு கொண்டுவந்தனர். பிரான்சில், எயர் பிரான்ஸ் விமானிகள், சுறுசுறுப்பான கோடைகாலத்தில் திறனை அதிகரிப்பதால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களுக்கு எதிராக இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ஸ்பெயினில், ஈஸிஜெட் விமான பணிக்குழு பணியாளர்கள் அதிக ஊதியங்களைக் கோருவதற்காக ஜூலையில் (1-3, 15-17 மற்றும் 29-31) இடைவிடாமல் ஒன்பது நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். விமானப் பணிப்பெண்கள் தங்களுடைய அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவிகிதம் அதிகரிப்பைக் கோருகின்றனர், இது 950 யூரோக்கள் ($1,000) ஆகும்.

வடக்கு ஐரோப்பாவில், டென்மார்க், நோர்வே மற்றும் சுவீடனின் ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த சுமார் 900 விமானிகள் ஜூன் மாத இறுதியில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.

ஐரோப்பா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தரைக் குழு ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வார இறுதியில், மார்சையை மையமாகக் கொண்ட பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தம் செய்து, கடுமையாக தாமதப்படுத்தி, பிரெஞ்சு வான்வெளியைக் கடக்கும் விமானங்களை பாதிக்கின்றனர். இந்த வேலைநிறுத்தங்கள் பாரிஸில் உள்ள சார்லஸ் டு கோல் விமான நிலையத்தில் தரைக் குழு ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு சில வாரங்களுக்கு பின்னர் வந்துள்ளன. இது விமான நிலையத்தின் வழியாக செல்லும் கால் பகுதி விமானங்களை இரத்து செய்ய கட்டாயப்படுத்தியது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மாதந்தோறும் 300 யூரோக்கள் உயர்த்த வேண்டும் என்று கோருகின்றனர், மேலும் ஜூலை 2ம் தேதி அடுத்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

திங்களன்று, புரூசெல்ஸ் ஸாவென்டெம் (Zaventem) விமான நிலையம் பாதுகாப்பு பணியாளர்களின் நடவடிக்கையால் புறப்படும் அனைத்து விமானங்களையும் இரத்து செய்ய வேண்டியிருந்தது. வியாழன் அன்று, ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் ஏயர்வேஸ் தொழிலாளர்கள், தொற்றுநோய் உச்சக்கட்டத்தின் போது சுமத்தப்பட்ட 10 சதவீத ஊதியக் குறைப்பை மீண்டும் கொடுக்குமாறு கோரி இந்த கோடையின் பிற்பகுதியில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

விமானத் தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள்தொகையில் ஒரு மூலோபாயப் பிரிவாக உள்ளனர், அதன் அணிதிரட்டல் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பரந்த சமூக மற்றும் தொழில்துறை சக்தியை சுட்டிக்காட்டுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை உத்தியோகபூர்வ பேரழிவுகரமாக கையாண்டதன் விளைவுகள் ஆகியவற்றின் மீது வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. தேசிய எல்லைகள் மற்றும் வெவ்வேறு வேலை பதவிகள் முழுவதும் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட, அவர்கள் விரைவாக ஐரோப்பாவின் வான்வெளியை மூடி பொருளாதாரத்தை அவர்களின் முழங்காலுக்கு கொண்டு வர முடியும்.

இத்தகைய நடவடிக்கைகள் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளிடையே சக்திவாய்ந்த ஆதரவை வெல்லக்கூடும், சுகாதாரப் பாதுகாப்பு, உலோகம், இரயில் மற்றும் லாரி தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் பணவீக்கத்திற்கு, தொற்றுநோய் குறித்த உத்தியோகபூர்வ கொள்கைகளுக்கு, பாரிய வளங்களை நேட்டோ இராணுவ கட்டமைப்பிற்கு திசை திருப்புதற்கு மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்திற்கான அடிப்படையை அமைக்க முடியும். இங்கிலாந்தில் உள்ள போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் அரசாங்கம், 50,000க்கும் அதிகமான தொழிலாளர்களை உள்ளடக்கிய ஒரு தலைமுறையில் மிகப்பெரிய தேசிய இரயில் வேலைநிறுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் இது நடைபெறுகிறது.

எவ்வாறாயினும், அத்தகைய போராட்டத்திற்கு தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான முறிவு தேவைப்படுகிறது. தற்போது, பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை தேசிய மற்றும் தொழில்துறை வழிகளில் பிளவுபடுத்தவும், வெவ்வேறு நாட்களில் வேலைநிறுத்தங்களை திட்டமிடவும் மற்றும் ரையனேர் மற்றும் அதன் கூட்டணி அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் தங்கள் முழு பலத்தை அணிதிரட்டுவதை தடுக்கவும் செயல்படுகின்றன.

தற்போது, ஐரோப்பா முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் ஆதரவை நம்பி வேலைநிறுத்தத்தை வெளியேற்ற ரையனேர் துணிச்சலாக திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய விமான பணிக்குழு பணியாளர்களின் வேலைநிறுத்தங்களால் அதன் 3,000 விமானங்களில் 2 சதவீதத்திற்கும் குறைவான விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரையனேர் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்தின் தொடக்கத்தில், ரையனேர் தலைமை நிர்வாக அதிகாரி எடி வில்சன் ஆணவத்துடன் கூறினார்: 'நிறுத்தங்கள் ஒரு பாரிய பின்தொடர்தலைக் கொண்டிருக்கப்போவதில்லை, அதன் தாக்கம் குறைவாவே இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.' அவர் மேலும் கூறுகையில், 'விமான பணிக்குழுக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், அவர்கள் சட்டப்படி அந்த விமானங்களை இயக்க வேண்டும்.”

வேலைநிறுத்தத்தின் முதல் நாளுக்கு முன்னர் ஸ்பெயினின் PSOE-Podemos அரசாங்கம் விதித்த கடுமையான வேலைநிறுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை வில்சன் குறிப்பிடுகிறார். போக்குவரத்து அமைச்சகம், 73 முதல் 82 சதவீத ரையனேர் விமானங்கள் 'குறைந்தபட்ச சேவைகள்' சட்டங்களால் பாதுகாக்கப்பட்டிருப்பதாக அறிவித்தது - அதாவது ஸ்பானிய பொருளாதாரத்திற்கு அவை மிகவும் மூலோபாயமாக இருப்பதால், அவற்றின் நடவடிக்கைக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையை அரசாங்கம் தடை செய்ய முடியும். இதனடிப்படையில், ஸ்பெயினில் உள்ள ரையனேர் தொழிலாளர்கள் நேற்று பெருமளவில் வேலைக்கு வந்துள்ளனர்.

இது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மீது போலி-இடது Podemos கட்சியின் மற்றொரு தாக்குதலைக் குறிக்கிறது. நவம்பரில், அது காடிஸில் வேலைநிறுத்தம் செய்யும் உலோகத் தொழிலாளர்களுக்கு எதிராக கவச வாகனங்கள் மற்றும் கலகத் தடுப்புப் பொலிஸை நிலைநிறுத்தியது, ஏப்ரலில் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு மத்தியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் நடாத்திய வேலைநிறுத்தத்தை நசுக்க 23,000 பொலிஸைத் திரட்டியது. PSOE அல்லது Podemos உடன் இணைந்த ஸ்பெயினின் முக்கிய தொழிற்சங்கங்கள், இரண்டு போராட்டங்களிலும் வேலைநிறுத்தக்காரர்களை தனிமைப்படுத்தி, காடிஸ் தொழிலாளர்கள் மீது சலுகை ஒப்பந்தத்தை (concessions contract) திணித்தன.

ரையனேர் வேலைநிறுத்தம் விதிவிலக்கானதல்ல: வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தவும் மூடவும் தேசிய அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் நிர்வாகம் நேரடியாக செயல்படுகிறது. தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் இருந்தே, 'குறைந்தபட்ச சேவை' தேவைகளுக்கு இணங்குவதன் மூலம் வேலைநிறுத்தத்தை நாசப்படுத்த தயாராக இருப்பதாக சமிக்ஞை செய்தன. ஸ்பெயினில், uso (Unión Sindical Obrera) மற்றும் SITCPLA (Sindicato Independiente de Tripulantes de Cabina de Pasajeros de Líneas Aéreas) ஆகிய தொழிற்சங்கங்கள் 25 முதல் 50 சதவிகிதம் வரையிலான குறைந்தபட்ச சேவைகளுக்காக ரையனேர் உடன் பேச்சுவார்த்தை நடத்தின.

ஸ்பெயினில் உள்ள போடெமோஸ் உடன் இணைக்கப்பட்ட Workers Commissions (CCOO) மற்றும் போர்த்துகீசிய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் (STTAMP) ஆகிய எந்தவொரு ரையனேர் தொழிலாளர்களையும் கூட பிரதிநிதித்துவப்படுத்தாத தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரிவுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதையும் ரையனேர் நிர்வாகம் நாடியுள்ளது. தொழிலாளர் சட்டத்தை காலடியில் போட்டு மிதித்த ரையனேர் இப்போது இந்த ஒப்பந்தங்களை தொழிலாளர் மீது திணிக்க முயற்சிக்கிறது.

விமானிகள், விமான பணிக்குழு பணியாளர்கள் மற்றும் தரைப்பகுதி பணியாளர்களின் போராட்டங்களின் மீதான இந்த தொழிற்சங்கங்களின் பிடியை உடைக்க வேண்டும், இதனால் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கும், ரையனேர் போன்ற நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிராக தங்கள் கூட்டு வலிமையைக் கொண்டுவருவதற்கும் முடியும். இதற்காக, தொழிலாளர்களுக்கு தேசிய எல்லைகளைத் தாண்டி தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், சர்வதேச அளவில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஆதரவைக் கோரி முறையிடவும் புதிய சாமானிய தொழிலாளர் அமைப்புகள் தேவை.

இதுவே ஏப்ரல் 2021 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) தொடங்கப்பட்ட சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியின் (IWA-RFC) செயல்பாடாகும். பிற்போக்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போடெமோஸ் போன்ற போலி-இடது கட்சிகள் தங்கள் போராட்டங்களை நாசப்படுத்துவதை எதிர்க்கும் அதே வேளையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும் ஒருங்கிணைக்கவும் கூடிய ஒரு சர்வதேச கட்டமைப்பை வழங்குவதில் IWA-RFC முக்கிய பங்கு வகிக்கும்.

Loading