ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்று முன்னேற்றம்: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சோசலிச சமத்துவக் குழுவை துருக்கியில் அதன் பிரிவாக நிறுவுவதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஜூன் 19 அன்று கூடியபோது சோசலிச சமத்துவக் குழுவை (Sosyalist Eşitlik Grubu -SEG) துருக்கியில் அதன் பிரிவாக ஸ்தாபிப்பிதற்கான விண்ணப்பித்ததற்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.

உலக சோசலிச வலைத் தளத்தின் துருக்கிய மொழிப் பதிப்பை வெளியிடுவதிலும் அதன் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதிலும், விநியோகிப்பதிலும் சோசலிச சமத்துவக் குழுவின் தோழர்கள் அனைத்துலகக் குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர். SEG இன் முன்னணி தோழர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் பற்றிய விரிவான அறிவையும், உறுதியான நம்பிக்கையையும் பெற்றுள்ளனர்.

ஜூன் 19 இல் எடுத்த முடிவானது, துருக்கி மற்றும் ஏஜியன் மற்றும் கருங்கடல் பகுதிகளில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தின் அபிவிருத்தி குறித்து இஸ்தான்புல்லில் உள்ள அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகளுடன் நடந்த விரிவான கலந்துரையாடலை தொடர்ந்து எடுக்கப்பட்டதாகும்.

சோசலிச சமத்துவக் குழுவின் விண்ணப்பத்தை ஏற்று, அனைத்துலகக் குழு தனது அகால மரணத்திற்கு முந்தைய ஆண்டுகளில், துருக்கியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழுவின் ஒரு பிரிவை நிறுவுவதற்கான அடித்தளத்தை இட்ட ட்ரொட்ஸ்கிசத்திற்காக அயராது போராடிய தோழர் ஹலில் செலிக்கின் (1961-2018) நினைவுக்கு அஞ்சலி செலுத்தியது.

சோசலிச சமத்துவக் குழு இப்போது அதன் ஸ்தாபக காங்கிரஸை ஒழுங்கமைப்பதை முன்னெடுக்கின்றது.

ஜூன் 15, 2022 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஒரு பிரிவாக அதை ஏற்குமாறு கோரிய சோசலிச சமத்துவக் குழுவின் தலைமையால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை கீழே வெளியிடுகிறோம்.

***

1. சோசலிச சமத்துவக் குழு (Socialist Eşitlik Grubu) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) நெருங்கிய அரசியல் ஒத்துழைப்புடன் செயல்படுவதுடன் அதன் அரசியல் ஆளுமையை அங்கீகரித்து, அதனுடன் இணைய விண்ணப்பிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது.

2. இது, சோசலிச சமத்துவக் கட்சியை (சோ.ச.க.) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கிய பிரிவாக ஸ்தாபிக்க எடுத்த முடிவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இரண்டு முடிவுகளும் ஊகங்களினாலோ அல்லது தேசியக் கணிப்பெடுப்புகளின் அடிப்படையில் அல்ல. மாறாக வரலாறு, கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் பற்றிய கேள்விகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் சோசலிச சமத்துவக் குழு கொண்டுள்ள உடன்பாட்டின் அடிப்படையில் அமைந்தவை. எந்தவொரு நாட்டிலும் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டுவது என்பது ஒரு சர்வதேச முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் கட்சியின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும். உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் ஒரு முக்கியமான நிலையில் இருக்கும் துருக்கியின் முக்கிய பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சர்வதேச சோசலிச புரட்சி மட்டுமே. சோசலிச சமத்துவக் கட்சியின் (துருக்கி) ஸ்தாபகமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலகளாவிய விரிவாக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும். ICFI மாபெரும் வரலாற்றுப் பிரச்சனைகளை தீர்க்கும் பணியை ஏற்கும் ஒரேயொரு அரசியல் போக்காகும்.

3. 1928 இல் லியோன் ட்ரொட்ஸ்கி தனது கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத்திட்டத்தின் விமர்சனத்தில் எழுதியது போல்:

''எமது சகாப்தத்தில் -இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில்- அதாவது உலகப் பொருளாதாரமும், உலக அரசியலும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள நிலையில், எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாகவும், பிரதானமாகவும் தனது சொந்த நாட்டினுள் உள்ள நிலைமைகளின், போக்குகளின் வளர்ச்சிகளில் இருந்து ஆரம்பிப்பதன் மூலம் தனது வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. இது சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளே அரசு அதிகாரத்தை திறமையாகப் பயன்படுத்தும் ஒரு கட்சிக்கும் கூட முற்றிலும் பொருந்தும். 1914 -ஆகஸ்ட் 4ம் திகதி அனைத்துக் காலங்களுக்குமாக தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி தற்போதைய சகாப்தத்திற்கு, முதலாளித்துவத்தின் அதியுயர்ந்த வளர்ச்சியும், வீழ்ச்சியும் கொண்ட சகாப்தத்தின் தன்மையுடன் தொடர்புடையதான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் என்பது ஒரு பொழுதும் தேசிய வேலைத் திட்டங்களின் ஒட்டுமொத்தமோ அல்லது அவற்றின் பொதுத்தோற்றங்களின் கலவையோ அல்ல. சர்வதேச வேலைத்திட்டம், உலகப் பொருளாதார உலக அரசியல் அமைப்பை முழுமையாகக் கொண்டதாகவும் நிலைமைகளின் போக்குகளின் அவற்றின் அனைத்துத் தொடர்புகளையும் முரண்பாடுகளையும் அதாவது அதன் தனிப் பகுதிகள் பரஸ்பர ரீதியாகப் பகைமையுடன் ஒன்றிலொன்று தங்கியுள்ள நிலைமைகள் பற்றிய ஆய்விலிருந்தே நேரடியாக ஆரம்பிக்க வேண்டும். தற்போதைய சகாப்தத்தில் கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஒரு உலக நோக்குநிலையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்க முடியும், எதிர்மாறாக அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான பிரதானமான வேறுபாடு இருக்கின்றது.''

4. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே உலக மார்க்சிச/ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தேசியவாத ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்காக 1923ல் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இடது எதிர்ப்பை ஸ்தாபித்தது வரை இந்தத் தொடர்ச்சி செல்கிறது. இந்த மூலோபாயமும் வேலைத்திட்டமும் தான் விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ரஷ்யாவில் போல்ஷிவிக் கட்சியின் தலைமையிலான 1917 அக்டோபர் புரட்சிக்கு வழிகாட்டியது.

5. 1933 இல் ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்த கம்யூனிச அகிலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் 1938 இல் நான்காம் அகிலம் நிறுவப்பட்டது. மிஷேல் பாப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான திருத்தல்வாத-கலைப்புப் போக்கிற்கு எதிராக அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) ஜேம்ஸ் பி. கனெனின் தலைமையிலான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் 1953 இல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது, ஜெரி ஹீலி தலைமையிலான பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் அரசியல் போராட்டம் மற்றும் பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தேசிய-சந்தர்ப்பவாத சீரழிவுக்கு எதிராகவும், மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் அனைத்துலக் குழுவின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கும் 1982-86ல் டேவிட் நோர்த் தலைமையிலான அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் போராட்டமும் இந்த அரசியல் தொடர்ச்சியின் முக்கியமான திருப்புமுனைகளாக அமைந்தன.

6. இந்த உள்ளடக்கத்தில், சோசலிச சமத்துவக் குழு, அனைத்துலக் குழுவுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளின் 'வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்' என்ற ஆவணங்களுடன் முழுமையாக உடன்படுவதாக வலியுறுத்துகிறது.

7. ட்ரொட்ஸ்கி 1938 இல் எழுதினார்:

பெரும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புரட்சிகர அரசியல் குழுவை பராமரிக்கவும் வளர்க்கவும் முடியும். நான்காம் அகிலம் மட்டுமே இந்தக் கொள்கைகளை உள்ளடக்கி பிரதிநிதித்துவம் செய்கிறது. உலகெங்கிலும் உள்ள சக சிந்தனையாளர்களுடன் ஒரு அமைப்பில் உறுதியாக இணைந்திருந்தால் மற்றும் அவர்களுடன் நிலையான அரசியல் மற்றும் தத்துவார்த்த ஒத்துழைப்பைப் பேணினால் மட்டுமே ஒரு தேசிய குழு ஒரு நிலையான புரட்சிகர போக்கை பேணுவது சாத்தியமாகும். நான்காம் அகிலம் மட்டுமே அத்தகைய அமைப்பாக உள்ளது. அனைத்து முற்றுமுழுதான தேசிய குழுக்களும் மற்றும் சர்வதேச அமைப்பு, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை நிராகரிப்பவர்கள் அனைவரும் அவற்றின் சாராம்சத்தில் பிற்போக்குத்தனமானவர்கள்.

இந்த அணுகுமுறைதான் சோசலிச சமத்துவக் குழு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சேரும் முடிவுக்கு வழிவகுத்தது.

8. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சேர்வதற்கான சோசலிச சமத்துவக் குழுவின் தீர்மானம், கொள்கை மற்றும் வரலாறு பற்றிய கேள்விகளில் கடந்த ஆண்டுகளில் அனைத்துலகக் குழுவுடன் எங்கள் குழுவின் படிப்படியான ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கும் மிகவும் நனவான அரசியல் முடிவாகும். 2018 ஆம் ஆண்டின் இறுதியில் மறைந்த தோழர் ஹலீல் செலிக், சர்வதேச அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிலையை அடைவதில் தீர்க்கமான பங்காற்றினார்.

9. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நோக்கிய இன்றைய சோசலிச சமத்துவக் குழுவின் முன்னோடிக் குழுவின் அரசியல் நோக்குநிலை 2000களின் முற்பகுதியில் இருந்து ஆரம்பித்த்துள்ளது. நவம்பர் 2007 இல், ஹலீலின் குழு அந்த நேரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு பின்வருமாறு எழுதியது:

உலக சோசலிச வலைத் தளத்தின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நெருக்கமாகப் பின்பற்றி வருவதையும், அதன் சில ஆவணங்களை துருக்கியில் மொழிபெயர்த்து உள்நாட்டில் விவாதித்து வருவதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் நடத்திய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம், எங்களிடம் இருந்த பல கேள்விகளுக்கு விடை காண முடிந்தது. சுருக்கமாகச் சொல்வதானால், இஸ்தான்புல்லில் நாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள், நமது தோழர்கள் மற்றும் அனுதாபிகளால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடிப்படை நிலைப்பாடுகளை புரிந்துகொள்ளும் செயல்முறையை விரைவுபடுத்தியுள்ளன.

2007 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் தோழர்கள் இஸ்தான்புல்லுக்கு விஜயம் செய்து, எங்கள் குழுவுடன் ஆழமான விவாதங்களில் ஈடுபட்டனர்.

10. 2014 இல், அனைத்துலக் குழுவின் பேரவை ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பேரவை, துருக்கியில் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவை நிறுவும் நோக்கத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க சமூக சமத்துவக் குழு (Toplumsal Esitlik) அமைப்பின் சார்பாக தோழர் ஹலீலின் விண்ணப்பத்தை முறையாக ஏற்றுக்கொள்கிறது. ஒரு ஸ்தாபக மாநாட்டின் அரசியல் மற்றும் தத்துவார்த்த தயாரிப்பில் அவர்களுக்கு உதவ துருக்கிய தோழர்களுடன் அனைத்துலக் குழு நெருக்கமாக பணியாற்றும்.

11. இந்தத் தீர்மானமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பும் 2014 க்குப் பின்னர் எங்கள் குழுவின் அரசியல் செயல்பாட்டை வடிவமைத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான நமது அரசியல் ஒருங்கிணைப்பில் ஒரு முக்கியமான படியாக, 2018 இல் எங்கள் குழுவின் பெயரை “சோசலிச சமத்துவம்” என்று மாற்றினோம். அந்த தீர்மானம் பின்வருமாறு குறிப்பிட்டது:

சோசலிச சமத்துவம் ஆனது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்து உத்தியோகபூர்வ பிரிவுகளின் (Socialist Equality Party, Sozialistische Gleichheitspartei, Parti de l'égalité socialiste) பெயருக்கு ஏற்ப ஒரு பெயரைப் பெறுகிறது மற்றும் அதன் மூலம் நான்காம் அகிலத்தின் துருக்கியப் பிரிவாகுவதற்கான அதன் உறுதியை வலியுறுத்துகிறது.

12. 2017 இன் இறுதியில் Mehring Yayıncılık நிறுவப்பட்டது மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சில முக்கிய படைப்புகள் துருக்கியில் வெளியிட்டது. இது சோசலிச சமத்துவக் கட்சியை (துருக்கி) கட்டியெழுப்புவதில் ஒரு பெரிய படியை பிரதிநிதித்துவப்படுத்தியது. தோழர் ஹலீலின் முற்கணிப்பு நிரூபிக்கப்பட்டது:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) துருக்கிய பிரிவைக் கட்டியெழுப்புவதற்கான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளத்தை அமைப்பதற்கு உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் தயாரிக்கப்பட்ட சமகால மார்க்சிச இலக்கியங்களை துருக்கியில் வெளியிடுவது பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

13. 2020 இல், சோசலிச சமத்துவக் குழுவானது உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கும் உலக சோசலிச வலைத் தளத்தில் பிரத்தியேகமாக அதன் வெளியீட்டை தொடர்வதற்கும் எடுத்த முடிவு, உலக கட்சியின் துருக்கிய பிரிவை நிறுவுவதற்கான மற்றொரு முக்கியமான படியாகும்.

14. சோசலிச சமத்துவக் கட்சியை (துருக்கி) நிறுவி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சேர விண்ணப்பித்தது தொடர்பாக முடிவெடுக்க நடந்த கடைசி முக்கியமான கூட்டம் ஜூன் 2022 தொடக்கத்தில் இஸ்தான்புல்லுக்கு அனைத்துலகக் குழுக் குழுவின் வருகையாகும்.

15. இந்த விஜயத்தின் போது நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க கூட்டங்களில், உலகின் புறநிலை நிலைகளின் முதிர்ச்சி மற்றும் வேலைத்திட்டம், கொள்கைகள் மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகள் குறித்த சோசலிச சமத்துவக் கட்சியின் உடன்பாடு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் ஒருமனதாக ஆதரிக்கப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலகளாவிய விரிவாக்கத்தின் வெளிப்பாடாக சோசலிச சமத்துவக் கட்சியை (துருக்கி) நிறுவுவதில் இனியும் தாமதிக்க முடியாது. சோசலிச சமத்துவக் கட்சியின் (துருக்கி) ஸ்தாபகமானது மத்திய கிழக்கிலும் உலகம் முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளை நிறுவுவதற்கு ஊக்கமளிக்கும்.

16. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை தீவிரப்படுத்திய கோவிட்-19 தொற்றுநோய், ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகையில், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போர் அணுவாயுதங்களுடனான மூன்றாம் உலகப் போரை அச்சுறுத்துகிறது. உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஆகியவை அனைத்து நாடுகளிலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் விரைவான வீழ்ச்சியுடன் சேர்ந்துள்ளன. எவ்வாறாயினும், இந்த நெருக்கடிகளை தோற்றுவிக்கும் முதலாளித்துவத்தின் உள் முரண்பாடுகளே உலக சோசலிசப் புரட்சியின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்றன. முதலாளித்துவ பூகோளமயமாக்கல் மற்றும் அதனுடன் இணைந்த தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் உலகப் பொருளாதாரத்தையும் தொழிலாள வர்க்கத்தையும் புறநிலையாக ஒரு மகத்தான அளவிற்கு ஒருங்கிணைத்துள்ளன. வர்க்கப் போராட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சர்வதேச தன்மையை எடுத்து வருகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியடைந்து வரும் இயக்கம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நனவான அரசியல் நடவடிக்கைகளுடன் பெருகிய முறையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு வருகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பாரிய வரலாற்றுப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் உலகளாவிய புரட்சிகர வேலைத்திட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே கொண்டுள்ளது.

17. அனைத்து உலகளாவிய புறநிலை முன்னேற்றங்களும் 2020 இன் தொடக்கத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு மற்றும் கணிப்பை உறுதிப்படுத்துகின்றன: 'சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது' அந்த அறிக்கை விளக்கியது போல், “தொழிலாளர்களின் தன்னியல்பான போராட்டங்களும் சோசலிசத்திற்கான அவர்களின் உள்ளார்ந்த முயற்சியும் இன்னும் போதுமானதாக இல்லை. வர்க்கப் போராட்டத்தை சோசலிசத்திற்கான ஒரு நனவான இயக்கமாக மாற்றுவது அரசியல் தலைமை ஒரு தொடர்பான கேள்வியாகும். சோசலிச சமத்துவக் கட்சியை (துருக்கி) ஸ்தாபித்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சேர விண்ணப்பிக்கும் சோசலிச சமத்துவக் குழுவின் இந்த முடிவு, இந்த அரசியல் தலைமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

18. இந்த அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைவதற்காக விண்ணப்பிக்க எடுத்த தீர்மானத்தின்படி, சோசலிச சமத்துவக் குழுவின் அதன் ஸ்தாபக ஆவணங்களான 'கொள்கைகளின் அறிக்கை' மற்றும் 'வரலாற்று மற்றும் அரசியல் முன்னோக்குகள்' ஆகியவற்றை அனைத்துலகக் குழுவின் அரசியல் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க முடிவு செய்தது. இந்த தயாரிப்பு, கலந்துரையாடல் மற்றும் அனைத்துலகக் குழுவின் ஒப்புதல் ஆகியவற்றின் பின்னர் கட்சியின் உத்தியோகபூர்வ ஸ்தாபகம் நடைபெறும்.

19. அதே நேரத்தில், சர்வதேச தோழர்களுடன் தினசரி நடைமுறை ஒத்துழைப்புடன் உலக சோசலிச வலைத் தளத்தின் துருக்கிய பதிப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவை சோசலிச சமத்துவக் குழு உற்சாகத்துடன் ஆதரிக்கிறது. உலக சோசலிச வலைத் தளமானது, உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதற்கும், உலக சோசலிசப் புரட்சியின் வளர்ச்சிக்கும் முக்கியமானதொரு அரசியல் கருவியாகும்.

Loading