முன்னோக்கு

ஜூலை நான்கில் இருந்து ஜனவரி ஆறு வரை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1775-1783 அமெரிக்க புரட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் பால் ரெவரேவின் (Paul Revere) எச்சரிப்பதற்கான நள்ளிரவுச் சவாரியும் ஒன்றாகும். ஏப்ரல் 18, 1775 இரவு, 40 வயதான அந்த விடுதலைப் பெருமகன் (Son of Liberty) மாசசூசெட்ஸின் மிடிலெக்ஸ் உள்ளாட்சி வழியாக அவர் குதிரையில் சவாரி செய்து, லெக்சிங்டன் மற்றும் கான்கார்ட் ஆயுதக் கிடங்குகள் மீது பிரிட்டிஷ் இராணுவம் அடுத்த நாள் தாக்குதல் நடத்த தயாராகி வருவதை வழி நெடுகிலும் புரட்சியாளர்களுக்கு எச்சரித்தார். அதற்கடுத்து நடந்த சண்டைகளின் முடிவைத் தீர்மானிப்பதில் ரெவரேயின் எச்சரிப்பதற்கான சவாரி என்ன பாத்திரம் வகித்திருந்தாலும், அது எதை அடையாளப்படுத்தியதோ அந்த அர்த்தத்தை அது பெற்றது: அதாவது, மக்களுக்குச் சரியான நேரத்தில் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டு, சண்டைக்குத் தயாராக இருக்கச் செய்தது.

இந்த ஜூலை 4 இல், மில்லியன் கணக்கானவர்கள் சுதந்திரப் பிரகடனம் மற்றும் புரட்சிகரப் போரின் ஜனநாயக மற்றும் சமத்துவ மரபுகளை கௌரவிக்கின்ற நிலையில், தற்போது இந்த நேரத்தில் நடந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் உயிர்பிழைப்புக்கான அபாயத்தைக் குறித்து மற்றொரு அவசர எச்சரிக்கை விடுத்தாக வேண்டும். இந்த அச்சுறுத்தல் தரை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ தாக்குதல் நடத்த வரும் ஓர் அன்னிய படையெடுப்பு பற்றியதல்ல, மாறாக இந்த அச்சுறுத்தல் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் இருந்து அதிகார வளாகங்கள் வழியாக வருகிறது.

டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அரசு எந்திரத்துடன் ஆழ்ந்த தொடர்புகள் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த, அதிவலது வலையமைப்பு அமெரிக்க மண்ணில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கத் தொடர்ந்து ஒரு சதியில் ஈடுபட்டுள்ளது. ட்ரம்ப் மட்டும் தனியாகச் செயல்பட்டிருக்கவில்லை மாறாக இந்த முதலாளித்துவ அரசின் எல்லா முக்கிய துறைகளின் சக-சதிகாரர்களுடன் ஒருங்கிணைந்து அந்தச் சதித் திட்டம் தீட்டுவதற்கு உதவிய பல சக்தி வாய்ந்த அரசியல் மத்தியஸ்தர்களுடன் சேர்ந்து அவர் செயல்பட்டு இருந்தார்.

பாதுகாப்புத் துறைத் தலைமை தளபதி மார்க் மெடோஸ் மூலமாக, ட்ரம்ப், தேர்வுக் குழு அங்கீகரிப்புக்கு எதிராக வாக்களித்த 146 செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் சதியில் ஈடுபட்டார். ஸ்டீபன் பானன் மூலமாக, ட்ரம்ப், அவரின் தசையாகச் சேவையாற்றிய பாசிசக் குழுக்களுடன் சதியில் ஈடுபட்டிருந்தார். கின்னி தாமஸ் மூலமாக, ட்ரம்ப், உச்ச நீதிமன்றத்தின் பல நீதிபதிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டிருந்தார். Flynn சகோதாரர்கள் மற்றும் பிற அதிவலது இராணுவப் பிரமுகர்கள் மூலமாக, ட்ரம்ப், அவரின் பதவிக் கவிழ்ப்புச் சதி முயற்சியில் 199 நிமிட அவகாசம் பெற்றார். ஜெஃப்ரி கிளார்க் மூலமாக, அவர் நீதித்துறை மற்றும் பெடரல் உளவுத் துறையை உள்ளிணைக்கவோ அல்லது குறைந்தபட்சம் ஓரங்கட்டவோ முயன்றார். சீன் ஹன்னிட்டி போன்ற ஊடக வாய்க்கால்கள் மூலமாக, அவர் தேர்தல் மோசடி பற்றிய அவர் பொய்களைப் பரப்பினார். அவரின் தனிப்பட்ட ட்வீட்டர் கணக்கு மூலமாக, அவர் பாசிசக் குண்டர்களைத் தூண்டிவிட்டு, அவர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்தார்.

ஜனவரி 6 குறித்து விசாரித்து வரும் பிரதிநிதிகள் சபைக் குழுவின் சமீபத்திய விசாரணையில், வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் கசிடி ஹட்சின்சன் வாக்குமூலம் அளிக்கையில், அன்றைய தினம் கூடியிருந்த கூட்டம் ஆயுதமேந்தி இருக்க வேண்டும் என்று ட்ரம்ப் விரும்பியதாகவும், தேர்வுக் குழுவின் ஒப்புதலை அங்கீகரித்ததற்காகத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தூக்கிலிடப் பட வேண்டும் என்ற அவர்களின் அழைப்புகளுக்கு ஒப்புதல் அளித்திருந்ததாகவும், காங்கிரஸ் சபை ஒத்தி வைக்கப்பட்டது மற்றும் அவரே ஜனாதிபதியாக நீடிப்பார் என்று அறிவிக்கப் பிரதிநிதிகள் சபை வளாகத்தில் ஓர் உரை வழங்கத் திட்டமிட்டு, அவர் தலைமைச் செயலகத்திற்கு உள்ளே செல்ல முயற்சித்ததாகவும் சாட்சியம் அளித்தார்.

ட்ரம்ப் கிட்டத்தட்ட வெற்றிப் பெற்றிருந்தார். வழக்கத்திற்கு மாறாக லேசான பொலிஸ் பிரசன்னமும் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஒதுங்கி இருந்ததையும் கண்ட அந்தக் குண்டர் கும்பலால் பென்ஸைப் பிடிப்பதற்காக அவருக்கு 40 அடிக்கு அருகில் வர முடிந்திருந்தது.

ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை எதிர்க்க, அது நடப்பதற்கு முன்னரும் சரி அல்லது அது நடந்து கொண்டிருந்த போதும் சரி, ஜனநாயகக் கட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக் கட்டவிழ்ந்து கொண்டிருந்த போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடென் தொலைக்காட்சியில் நேரடியாகத் தேசத்திற்கு ஓர் உரை நிகழ்த்துமாறு அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகாரத் தலைவரை ஊக்குவித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். ஜனநாயகத்தின் பாதுகாவலர்களை வாஷிங்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்து எந்த முன்னணி ஜனநாயகக் கட்சியாளரும் ஒரு ட்வீட் செய்தி கூட வெளியிடவில்லை. இது கடந்து போய் விடாது (This Will Not Pass) என்ற 2022 நூலில், செய்தியாளர்கள் ஜொனாதன் மார்டீன் மற்றும் அலெக்ஸ்சாண்டர் பேர்ன்ஸூம், இராணுவம் இல்லாத நிலையில் அந்தக் கும்பலைக் கலைக்க அருகில் இருந்த பிலடெல்பியாவில் இருந்து ஆயிரக் கணக்கான ஆயுதமேந்தியக் கட்டுமானத் துறை தொழிலாளர்களை அனுப்புவதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் முன் வந்ததை ஜனநாயகக் கட்சி மறுத்ததைத் தொடர்பு படுத்துகின்றனர்.

அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் ஜனநாயக மரபுகள் மீது பல ஆண்டு காலமாக ஜனநாயகக் கட்சி நடத்தும் அரசியல் தாக்குதல் ஜனநாயக நனவைப் பலவீனப்படுத்தி, ட்ரம்பின் நிலைப்பாட்டை வலுப்படுத்தி வருகிறது. இனம் மற்றும் பாலின அரசியலுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், ஜனநாயகக் கட்சியும் ஜனநாயகக் கட்சியுடன் அணி சேர்ந்த ஊடகங்களும் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் முதலாளித்துவ புரட்சியாளர்களை இனவாதிகள் என்றும் பெண் வெறுப்பாளர்கள் என்றும், அவர்களின் சாதனைகள் பாதுகாக்கத் தகுதியற்றவை என்றும் சித்தரித்தன. இந்த தேர்தலுக்கு முந்தைய ஆண்டில் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்புச் சதித் திட்டங்கள் அபிவிருத்தியாகி கொண்டிருந்த போது, நியூ யோர்க் டைம்ஸ் அதன் '1619 திட்டத்தை' (1619 Project) ஊக்குவித்தது, அது அமெரிக்கப் புரட்சியை அடிமைத்தனத்தை அமெரிக்காவில் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'அடிமை உரிமையாளர்களின் கிளர்ச்சி' என்று கண்டிக்கிறது.

ஜனநாயகக் கட்சியினர் அவரைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப் பயப்படுகிறார்கள் என்ற புரிதலில் இருந்து பலமடைந்த ட்ரம்ப், 2024 குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அவர் நிற்பதை அறிவிக்கும் திட்டங்களைத் தீட்டி வருவதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

2024 இல் மற்றொரு ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சிக்கு ட்ரம்ப் தயாராகி வருகிறார் என்பது தான் இதன் அர்த்தமாகிறது. இதற்காக, அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஆதரவைக் கோரியுள்ளார், இந்த அமைப்பில் அவரால் நியமிக்கப்பட்ட மூன்று பேரும் (Kavanaugh, Gorsuch, Coney Barrett), ஜனவரி 6 இல் அவர் சேர்ந்து செயல்பட்ட இரண்டு நபர்களும் (Alito, Thomas) உள்ளனர்.

நீதிமன்றம், அதுவே கூட, கட்டுப்பாடற்ற அரசியல் பிற்போக்குத்தனத்தை வேகமாக முன்நகர்த்தும் அமைப்பாக மாறி வருகிறது, அதன் தீர்ப்புகள் நாட்டையே சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் தள்ளுகிறது. பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை நீக்கும் அடிப்படையில் நீதிமன்ற வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் வகையில் பரவலாக மக்கள் விரும்பாத ஒரு தீர்ப்பாக அந்த நீதிமன்றம் ஜூன் 24 இல் கருக்கலைப்புக்குத் தடை விதித்தது. சுற்றுச்சூழல் நெறிமுறை, துப்பாக்கி வன்முறை மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் சம்பந்தமாகவும் சமீபத்திய வாரங்களில் நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியது, இவை உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே இது மிகவும் பிற்போக்குத்தனமான காலமாக இருக்கும் என்பதை முன்னணி சட்ட வல்லுனர்களே ஒப்புக் கொள்ள வழிவகுத்துள்ளது.

ஆனால் ட்ரம்பின் தற்போதைய சதித் திட்டத்திற்கு உடந்தையாக இருப்பதற்கான நீதிமன்றத்தின் மிகவும் அப்பட்டமாக ஒப்புதல் வியாழக்கிழமை அறிவிப்பாக வந்தது, குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கரோலினா மாநில சட்டமன்றம் போலி-சட்டமாக விளங்கும் 'சுதந்திரமான மாநில சட்டமன்ற தத்துவம்' என்பதை ஏற்குமாறு நீதிமன்றத்தைக் கோரும் ஒரு சட்ட வழக்கை விசாரிக்க, குடியரசுக் கட்சியைச் சேர்ந்து மொத்தம் உள்ள ஆறு நீதிபதிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த அறிவிக்கை அறிவித்தது.

இந்த தத்துவம், மக்கள் வாக்குகளை மீறுவதற்கான ஓர் அடிப்படையற்ற நியாயப்படுத்தலுக்குக் குறைவானது ஒன்றுமில்லை. ட்ரம்ப் வழக்கறிஞர்களும் சதிகாரர்களும், 2020 இல் இந்தத் தத்துவத்தின் கீழ்ச் செயல்பட்டுத் தான், மாநிலங்களின் வாக்குகளை மீறி தேர்வான மாற்று வேட்பாளர்களை நியமிக்குமாறு குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களைக் கோரினார்கள். அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நியூ மெக்சிகோ, நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சினில் ட்ரம்ப் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் குழுக்கள் இத்தகைய மாற்று வேட்பாளர் பட்டியலை முன்வைத்தன. வடக்குக் கரோலினா சட்டமன்றத்துக்கான ஒரு தீர்ப்பு, ட்ரம்பின் 2020 பதவிக் கவிழ்ப்புச் சதியை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சட்டபூர்வமாக்கும் என்பதோடு, இரண்டாவது முயற்சிக்கும் வழி வகுக்கும். 2024 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் போதிய அவகாசத்துடன், 2023 வசந்த காலத்தில் இந்தத் தீர்ப்பு வெளியிடப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகளுக்கு ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பு, நடத்தப்பட்டு வரும் சதித் திட்டத்தை தடுக்க அடுத்த அவர்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாப்பதில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்க அவர் தயாராகி வருவதாகக் கடந்த வாரம் ஜோ பைடென் மிகவும் உரக்க ஆவேசமாக அறிவித்தார், சொல்லப் போனால் அவ்வாறு நடக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பதைத் தெரிந்தே அவர் இந்த அறிக்கையை வழங்கியதாகத் தனிப்பட்ட ஒரு சில செனட்டர்கள் குழுவிடம் அவர் தெரிவித்தார். நீதிமன்றங்களைத் தடுக்க ஜனநாயகக் கட்சியினர் ஏன் எதுவும் செய்யவில்லை என்று ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்குத் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் பதிலளிக்கையில், “இப்போது அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார். அவர்கள் ஆதரவைக் கலைத்து விட்டு, இந்த இடைக்காலத் தேர்தல்களில் திரும்பவும் காங்கிரஸ் சபை மீதான கட்டுப்பாட்டை ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரிடம் வழங்கத் தயாராகி வருகிறார்கள்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு இப்போது நடந்து வரும் இந்த அபாயத்தைக் குறித்து எச்சரித்து, அதைத் தடுக்க அதை உரிய நேரத்தில் அணித் திரட்ட வேண்டும். இந்த அணித்திரள்வுக்கு, பணவீக்கத்தின் கடுமையான பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராகவும் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் போராடும் நடவடிக்கைக் குழுக்களின் ஒரு வலையமைப்பில் தொழிலாளர்களை இணைத்து, வர்க்கப் போராட்டத்தில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை வேரூன்றச் செய்வது அவசியமாகிறது. இதன் அர்த்தம், செல்வந்தத் தன்னலக் குழுக்களை முறித்து, அதன் செல்வ வளத்தைப் பறிமுதல் செய்து, அதன் பெருநிறுவனங்களைப் பொதுவுடைமையின் கீழ் நிறுத்தி, உலகப் பொருளாதாரத்தைச் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மறுஒழுங்கு செய்து, இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகப் போராடுவதில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை அமைப்பதாகும்.

Loading