தன்னை சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்துவதற்கான ட்ரம்பின் திட்டத்தைச் சாட்சியம் அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 6, 2021 சம்பவங்களை விசாரிக்கும் பிரதிநிதிகள் சபைத் தேர்வுக் குழுவுக்குச் செவ்வாய்கிழமை வழங்கப்பட்ட வெடிப்பார்ந்த சாட்சியம், தலைமைச் செயலகத்தை நொறுக்குவதைத் தனிப்பட்டரீதியில் அவரே வழிநடத்தவும், அவர் எதிர்ப்பாளர்களைப் படுகொலைச் செய்யவும் மற்றும் தன்னை ஒரு சர்வாதிகாரியாக நிறுவவும் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளின் விபரங்களை வழங்கியது.

இந்தச் சாட்சியத்தை, ட்ரம்பின் பாதுகாப்புத் துறைத் தலைமைத் தளபதி மார்க் மெடொஸின் முன்னாள் உயர்மட்ட உதவியாளர் காஸ்ஸிடி ஹட்சின்சன் (Cassidy Hutchinson) வழங்கினார். முந்தைய வாக்குமூலங்களின் காணொளி காட்சிகளுடன் சேர்ந்து, அவரே நேரில் சாட்சியம் வழங்கிய போது, ஜனவரி 6 இல் ட்ரம்ப் தலைமையிலேயே தலைமைச் செயலகத்தின் மீது ஒரு வன்முறைத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டங்கள் அந்தச் சம்பவத்திற்கு வெகு முன்னரே உருவாக்கப்பட்டு இருந்ததை ஹட்சிசன் தெளிவுபடுத்தினார்.

ஜனவரி 2 இல் மெடொஸை வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர், ஜனவரி 6 இல் என்ன நடக்கும் என்று அறிய ஆவலாக இருக்கிறீர்களா என்று ட்ரம்ப் வழக்கறிஞர் ரூடி கிலானி வினவியதாக ஹட்சின்சன் கூறினார். அவர் அப்பெண்மணிக்குக் கூறினார், “நாங்கள் தலைமைச் செயலகத்திற்குச் செல்கிறோம். ஜனாதிபதி அங்கே இருப்பார். அவர் சக்தி வாய்ந்தவராக இருக்கப் போகிறார்.” Proud Boys மற்றும் Oath Keepers போன்ற ஆயுதமேந்திய படைத்துறை அமைப்புகள் ஜனவரி 6 இல் பெடரல் கட்டிடத்தை ஆக்கிரமிக்கவும், காங்கிரஸ் சபையை இலக்கு வைக்கவும் திட்டமிட்டு வருவதாக இரகசிய சேவை, தலைமைச் செயலகப் பொலிஸ் மற்றும் பெடரல் உளவுத்துறை அமைப்பிடம் இருந்து வந்த விரிவான உளவுத் தகவல்கள் குறித்தும் அவர் பேசினார்.

ஆனால் அப்பெண்மணியின் சாட்சியத்தின் மிகவும் முக்கியமான அம்சம் ஜனவரி 6 சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தது. எலிப்ஸில் ட்ரம்ப் உரை வழங்குவதற்கு முன்னர், உளவுத்துறை காந்தமானிகளை (magnetometers) அமைத்து, அந்தப் பேரணியில் இணைய விரும்பிய ட்ரம்ப் ஆதரவாளர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்திருந்ததைக் கேட்டு ட்ரம்ப் கோபமடைந்திருந்ததாக ஹட்சிசன் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் இருந்த அதிவலது படைப் பிரிவினர் கனரக ஆயுதமேந்தி இருந்தனர் என்பதும், ஜோ பைடெனின் வெற்றி அங்கீகரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக அப்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் முன்னணி ஜனநாயகக் கட்சியினரைப் பிடித்து கொல்லத் தயாராக இருந்தனர் என்பதும், ட்ரம்புக்கும் மற்றும் மெடொஸ், ரூடி கிலானி மற்றும் குடியரசுக் கட்சியின் சட்ட வல்லுனர்களில் கணிசமான பிரிவினர் உட்பட அவரது சக-சதிகாரர்களுக்கும் தெரிந்திருந்தது.

“அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர்கள் என்னைக் காயப்படுத்த வரவில்லை. அந்தக் கேவலமான உளறுவாயர்களை அகற்றுங்கள்,” என்று ட்ரம்ப் கூறியதாக அப்பெண்மணி சாட்சியம் அளித்தார்.

கிளர்ச்சியாளர்கள் 'மைக் பென்ஸைத் தூக்கிலிட' கோஷங்கள் எழுப்பியது சம்பந்தமாகவும், தலைமைச் செயலகத்திற்கு வெளியே தூக்குக் கயிறுகள் அமைக்கப்பட்டது குறித்தும் மெடொஸ் கூறியது அவர் காதில் விழுந்ததாக ஹட்சின்சன் தெரிவித்தார், “மைக் இதற்குத் தகுதி உடையவர் தான் என்று அவர் [ட்ரம்ப்] நினைக்கிறார். அவர்கள் தவறு செய்வதாக அவர் நினைக்கவில்லை.”

ட்ரம்ப் எலிப்ஸில் உரையாற்றிய பின்னர், அவர் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்த்து, அவரின் ஜனாதிபதி வாகனத்தில் ஏறினார். அவரின் உளவுத் துறைத் தலைவர் எதையும் விவரிக்க மறுத்து அவரை வெள்ளை மாளிகைக்குத் திரும்புமாறு வலியுறுத்திய போது, ட்ரம்ப் வாகனத்தை நிறுத்த முயன்றதுடன், பின்னர் அந்த உளவுத் துறை முகவரின் குரல்வளையைப் பிடித்ததாக ஹட்சிசன் கூடுதலாகத் தெரியப்படுத்தினார்.

மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்றதும், ட்ரம்ப் மிகவும் சீற்றமாக இருந்தார், பொருட்களை எடுத்து எறிந்ததுடன், அவரின் சக-சதிகாரர்களுடன் தொலைபேசியில் பேசுகையில், அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியைத் தொடரப் பெரும்பிரயத்தனத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அவரின் அடிவருடி சிப்பாய்கள் தலைமைச் செயலகத்தைச் சூறையாடிய அதேவேளையில், ட்ரம்ப் பிரதிநிதிகள் சபையின் சட்டமன்ற வளாகத்திற்குள் அழைப்பின்றி அணிவகுத்துச் சென்று உரை நிகழ்த்த திட்டமிட்டார், இதுவே கூட அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு மீறலாகும். அவர் காங்கிரஸ் சபையை ஒத்தி வைக்கவும், தலைமைச் செயலகத்தைக் கைப்பற்றவும், ஓர் அவசரகால நிலைப் பிரகடனப்படுத்தவும், தேர்தல் முடிவை மாற்றித் தன்னை ஒரு சர்வாதிகாரியாக நிறுவ களம் அமைக்கவும் திட்டமிட்டார்.

ஜனவரி 7 இல், ட்ரம்ப் மற்றும் மெடொஸ் கலகக்காரர்களை மன்னிப்பது குறித்து விவாதித்ததாக ஹட்சிசன் இறுதியாகச் சாட்சியம் அளித்தார். முன்னர் வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட சாட்சியத்தில், அவர் காங்கிரஸ் சபையில் உறுப்பினர்களாக உள்ள ஆறு குடியரசுக் கட்சியினரைப் பட்டியலிட்டு இருந்தார் — மோ புரூக்ஸ், ஜிம் ஜோர்டான், ஸ்காட் பெர்ரி, ஆண்டி பிக்ஸ், லூயி கோமெர்ட் மற்றும் மாட் கேட்ஸ் — இவர்கள் அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி தோல்வியுற்ற பின்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக் கோரி இருந்தனர் அல்லது அது குறித்து விசாரித்திருந்தனர். கிலானி மற்றும் மெடொஸூம் அதே போல பொது மன்னிப்புகள் கோரியதாகச் செவ்வாய்கிழமை அவர் தெரியப்படுத்தினார்.

ஹட்சின்சனால் கோடிட்டுக் காட்டப்பட்ட அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதித் திட்டம், நவம்பர் 9, 1923 இல் அடோல்ப் ஹிட்லரால் ஏற்பாடு செய்யப்பட்ட பீர் ஹால் பதவிக் கவிழ்ப்புச் சதியை முன்மாதிரியாகக் கொண்டிருந்தது, அந்தச் சதியின் போது ஹிட்லர் முனீச்சில் ஃபெல்டர்ன்ஹாலில் (Feldherrnhalle) அணி வகுத்துச் செல்ல திட்டமிட்டார். ஆனால், வித்தியாசம் என்னவென்றால், ட்ரம்பின் சதி இன்னும் மிகப் பெரியளவில் இருந்தது, அதிகமாக அறியப்படாத ஓர் ஆரம்ப நிலை பாசிச அரசியல்வாதியின் வழிகாட்டுதலின் கீழ் இருக்கவில்லை, மாறாக அமெரிக்க ஜனாதிபதியின் வழிகாட்டுதலில் இருந்தது.

இந்த விசாரணையே கூட அசாதாரண சூழ்நிலையில் நடத்தப்பட்டது. மிசிசிப்பி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பென்னி தோம்சன் மற்றும் வியோமிங் குடியரசுக் கட்சியின் லிஸ் செனி தலைமையிலான அந்தக் குழு, ஜூலை நடுப்பகுதி வரைக் கூடுதல் விசாரணை எதுவும் அது நடத்தாது என்று முன்னர் கூறிய பின்னர், திடீரெனத் திங்கட்கிழமை இந்த விசாரணையை அறிவித்தது. அது விசாரணையின் விஷயங்களை இரகசியமாக வைத்திருந்ததுடன், சாட்சியம் அளித்த ஹட்சின்சனைக் குறித்தும் புதன்கிழமை காலை வரை விபரங்களை வெளியிடாமல் வைத்திருந்தது.

அந்தக் குழு தீவிர முன்னெச்சரிக்கைகளுடன் விரைவாக இந்த விசாரணையை ஒன்று கூட்டியது ஏனென்றால் அதன் முக்கிய சாட்சியத்தின் உயிரைக் குறித்து அது அஞ்சியது. ஹிட்லர் போன்ற ஒரு சர்வாதிகாரியாக ஆக இருந்தவரால் தூண்டிவிடப்பட்டு, அக்குழுவின் முந்தைய விசாரணைகளில் சாட்சி அளித்த சாட்சியங்களுக்கு ட்ரம்ப் ஆதரவாளர்களிடம் இருந்து பல்வேறு மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளன, ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இந்தக் குழுவை ஒரு கட்டப் பஞ்சாயத்து நீதிமன்றம் என்பதாகக் குறைக் கூறி வருகிறார்.

அமெரிக்க வரலாற்றிலோ, அல்லது வேறெந்தப் பிரதான தொழில்துறைமயப்பட்ட நாட்டிலோ இதுபோன்றவொரு ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு எந்த முன்னுதாரணமும் இல்லை. ஜனவரி 6 இன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்ட முயன்ற அனைவரும் முற்றிலுமாக அம்பலப்பட்டு நிற்கின்றனர்.

இந்த வெடிப்பு சாட்சியம் இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது. ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகாரர்களின் தயாரிப்பு அளவை வைத்து பார்த்தால், தலைமைச் செயலகம் ஏன் பாதுகாக்காமல் விடப்பட்டது? தலைமைச் செயலகப் பொலிஸ் மற்றும் இராணுவம் ஏன் நடைமுறையளவில் ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டிருந்தது, அதற்கு யார் உத்தரவிட்டார்கள்?

இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன: ஜனவரி 6 இல் ட்ரம்ப் வெற்றிப் பெற்றிருந்தால், ஜனவரி 7 இல் அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அவர் அரசியல் எதிர்ப்பாளர்களைப் பாரியளவில் கைது செய்து படுகொலைச் செய்யத் தொடங்கி இருப்பார் என்று நம்புவதற்கு நிறைய காரணம் உள்ளது.

இறுதியாக ஒரு கேள்வி உள்ளது: இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது ஜனநாயகக் கட்சி என்ன செய்து கொண்டிருந்தது? ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு முன்னரும், அதன் போதும், அதற்குப் பின்னரும் பைடென் நடைமுறையளவில் மவுனமாக இருந்தார். ட்ரம்பின் பாசிசவாதிகள் தலைமைச் செயலகத்தை நொறுக்கிய போதும், ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் அலுவலகங்களிலும் அவசரப் பாதுகாப்பு இடங்களிலும் முடங்கிய போதும், அந்த மணி நேரங்களில் பைடென் எதுவும் கூறவில்லை. இறுதியில் எப்போது அவர் பேசினார், அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை ஒழுங்கமைத்த ட்ரம்ப் அவர் குண்டர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென அவருக்கு முறையிடுவதற்காகப் பேசினார்.

ட்ரம்ப் மற்றும் அவர் கூட்டாளிகளின் நோக்கங்கள் குறித்து வெள்ளை மாளிகைக்கு என்ன உளவுத் தகவல்கள் கிடைத்ததோ அவை ஜனநாயகக் கட்சியினருக்கும் கிடைத்திருந்தது. ஆனால் என்ன நடந்து கொண்டிருந்ததோ அதை நிறுத்த அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அதை மக்களுக்குத் தெரிவித்து எச்சரிக்கவும் கூட இல்லை. இப்போதும் கூட, பைடென் சமீபத்திய வெளியீடுகளைக் குறித்து பேச மறுக்கிறார், ஜனநாயகக் கட்சியினரோ ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்து வழக்கு தொடுக்க அழைப்பு விடுக்க மறுக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சி அதன் 'சகாக்கள்' மற்றும் 'நண்பர்களுடன்' “நல்லிணக்கத்திற்கு' மன்றாடி, குடியரசுக் கட்சிக்கு மறுவாழ்வு அளிக்க முயல்கின்றனர். ரஷ்யாவுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போரையும் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளையும் முன்நகர்த்துவதற்காக ஏதேனும் விதத்தில் குடியரசுக் கட்சியினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருகட்சி அமைப்புமுறையைப் பேணுவதே அதன் மேலோங்கிய அக்கறையாக உள்ளது.

இதன் விளைவாக, ஜனநாயக உரிமைகளை அழித்து ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அவர்களின் சதித் திட்டத்தைத் தொடர ட்ரம்பும் அவரின் சக-சதிகாரர்களும் சுதந்திரமாக விடப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டு, ஒரு பாசிச ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை முயற்சித்ததற்காக அவர் விசாரணைக்குக் கொண்டு வர வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. அதுபோன்றவொரு வழக்கு வெறுமனே ட்ரம்ப் வகித்தப் பாத்திரத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சதியையும் அம்பலப்படுத்த வேண்டும். குடியரசுக் கட்சி, உச்ச நீதிமன்றம், இராணுவம், பொலிஸ், உளவுத்துறை முகமைகள் மற்றும் மாநில அரசாங்கங்களில் இருந்து இன்னும் யார் யார் சம்பந்தப்பட்டு இருந்தார்கள்?

அதுபோன்றவொரு வழக்கு குண்டர் ட்ரம்ப் மற்றும் அவரின் சக கையாட்களை மட்டும் சிறையில் அடைக்காது, மாறாக உடந்தையாய் இருந்த ஜனநாயகக் கட்சியினரையும், உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வியையே அம்பலப்படுத்தும்.

Loading