மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செவ்வாய்கிழமை வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் கசிடி ஹட்சின்சன் அளித்த இரண்டு மணி நேர சாட்சியம், ஜனவரி 6, 2021 இல் ஓர் அரசியல் ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை நடத்தவும், தனது தேர்தல் தோல்வியைக் காங்கிரஸ் அங்கீகரிப்பதைத் தடுத்து, ஒரு பாசிச சர்வாதிகார ஜனாதிபதியாகப் பதவியில் நீடிப்பதற்கும், டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சியின் மறுக்கவியலாத சித்திரத்தை வழங்கியது.
வெள்ளை மாளிகைக்கு வெளியே ட்ரம்ப் ஒரு பேரணியில் உரையாற்றி, நூற்றுக் கணக்கான ஆயுதமேந்திய பாசிசவாதிகள் உட்பட ஆதரவாளர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தை நோக்கி அணிவகுக்குமாறு கூறிய பின்னர், அவரின் தனிப்பட்ட வழக்கறிஞர் ரூடி கிலானி மற்றும் அவரின் பாதுகாப்புத் துறை தலைமை தளபதி மார்க் மெடொஸ் போன்ற முக்கிய உதவியாளர்களுடன் சேர்ந்து, ட்ரம்ப் அந்த கும்பலுடன், அந்தக் கும்பலின் தலைவராகத் தன்னை நிலைநிறுத்தி, தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த பிரதிநிதிகள் சபை வளாகத்திற்குள் நுழைந்துக் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற எதிர்பார்த்தார்.
துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் கூடியிருந்த சட்ட வல்லுனர்களுக்கு இரண்டு வாய்ப்புகளே இருந்தன: ஒன்று ட்ரம்ப் 2020 தேர்தல் முடிவுகளை மாற்ற அனுமதித்து அவர் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதாக இருந்தது. ட்ரம்ப் அவரே கூறியது போல, அவர் ஆதரவாளர்கள் 'மைக் பென்ஸைத் தூக்கில் தொங்க விடுங்கள்' என்று கோஷமிட்டதைக் கேட்டு, “அவர் அதற்குத் தகுதியானவரே,” என்றார்.
காங்கிரஸ் சபையின் ஜனநாயகக் கட்சியினர் என்ன செய்திருப்பார்கள் என்பதில் ஏதும் சந்தேகமில்லை. ட்ரம்ப் வெற்றியை உத்தரவாதப்படுத்தும் வகையில், ஒட்டுமொத்த மாநில பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு என்ற நடமுறைக்கு ஏற்ப, 'சர்ச்சைக்குரிய' தேர்தல் மீது பிரதிநிதிகள் சபையில் ஒரு வாக்கெடுப்பு நடத்த பரிந்துரைப்பது போன்ற, மீசையில் மண் ஒட்டாதவாறு சில நடவடிக்கைகள் கோரி, அவர்கள் சரண் அடைந்திருப்பார்கள்.
அதன் பின்னர், ஜனநாயகக் கட்சியினரும் பெருநிறுவன ஊடகங்களும் அந்த முடிவை அரசியலமைப்புக்கு இணங்கி இருப்பதாக சித்தரித்திருப்பார்கள், உச்ச நீதிமன்றத்தில் எந்தவொரு சட்டரீதியான சவாலும் ட்ரம்பின் கைக்கூலிகளால் நிராகரிக்கப்பட்டிருக்கும்.
அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பால் தோல்வி அடையவில்லை, நிச்சயமாக ஜனநாயகக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடெனாலும் இல்லை, அவர் சர்வாதிகாரியாக ஆக இருந்தவரிடம் தேசிய தொலைக்காட்சியில் சென்று தனது சொந்த சதியை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பெரும் பகுதியினர் அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியைக் குறித்து அறிந்திருந்ததுடன், அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர் ஆனால் யார் ஜெயிப்பார்கள் என்று தெளிவாகும் வரையில் அதில் இணையாமல் காத்திருந்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. தலைமைச் செயலகத்தை ட்ரம்ப் வந்தடையாத சூழல்கள் தெளிவு படுத்தப்பட வேண்டியனவாக உள்ளன, ட்ரம்பின் அந்தத் தோல்வியால் அந்தக் கும்பலுக்கு அந்த இடத்தில் தலைமை இல்லாமல் போனது, நீண்ட தாமதங்களுக்குப் பின்னர், அக்கட்டிடத்தைச் சீராக்க மீளபலப்படுத்தப்பட்ட பொலிஸ் வந்தடைவதற்குள் அந்தக் கும்பலின் ஆற்றலை அது சிதறடித்தது.
ஜனவரி 6 தாக்குதல் தொடர்பாகப் பிரதிநிதிகள் சபையின் தேர்வுக் குழு இதுவரை நடத்திய, தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட இந்த ஆறு விசாரணைகளும் முன் கொண்டு வந்துள்ள எல்லா தகவல்களும் மற்றும் சமீபத்திய வெளிப்பாடுகளும் முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன.
ட்ரம்பின் கூட்டாளிகள் மற்றும் சக-சதிகாரர்கள் யார்?
அமெரிக்காவில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி போன்ற நீண்ட தாக்கமுடைய ஒரு நடவடிக்கை, ஒரு ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, ஒரு தனிநபரின் வேலையாக இருக்க முடியாது. நூறு அல்லது ஆயிரக் கணக்கான சக-சதிகாரர்கள் இல்லையென்றாலும், ட்ரம்புக்குச் சட்டத்தை உடைத்து அரசியலமைப்பை நசுக்க விரும்பும் டஜன் கணக்கானவர்களாவது தேவைப்பட்டனர். அவர்களின் ஜனவரி 6 நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியின் பொது மன்னிப்பு குறித்து விசாரித்த அல்லது தீவிரமாக அதைக் கோரியவர்களாக ஹட்சின்சனின் வாக்குமூலம் மெடொஸ், கிலானி மற்றும் இன்னும் ஏழு குடியரசுக் கட்சியினரை அடையாளம் காட்டியது, இதுவே கூட குற்ற உணர்வின் தெளிவான அறிகுறியாகும். ஆனால் இதில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.
இராணுவ-உளவுத் துறை எந்திரம் வகித்த பாத்திரம் என்ன?
ஆயுதப் படைகளின் நேரடி ஆதரவோ அல்லது பின்புல ஒப்புதலோ இல்லாமல் எந்த ஒரு சதியும் வெற்றி பெற முடியாது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, தலைமைச் செயலகத்தைப் பாதுகாக்கப் பென்டகன் தேசிய பாதுகாப்புப் படைகளை அனுப்புவதற்கு ஒப்பதல் வழங்குவதைத் தாமதப்படுத்தியது. இந்தத் தாமதத்திற்கு நம்பகமான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. இடைக்கால பாதுகாப்புத் துறைச் செயலர் கிறிஸ்தோபர் மில்லரோ அல்லது வேறெந்த உயர்மட்ட இராணுவ அதிகாரியோ ஜனவரி 6இல் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து பொது வாக்குமூலம் வழங்கவில்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? என்ன விவாதங்கள் நடத்தப்பட்டன?
அந்த தாக்குதல் கட்டவிழ்ந்த போது ஓவெல் அலுவலகத்தில் ட்ரம்ப் என்ன செய்து கொண்டிருந்தார்?
ஹட்சின்சனின் கூற்றுப்படி பார்த்தால், ட்ரம்ப் அவர் அலுவலகத்தில் தனியாக இருக்க விரும்பியதாக அந்த நேரத்தில் பாதுகாப்புத் துறைத் தலைமைத் தளபதி மெடொஸ் அப்பெண்மணிக்குப் பல முறைக் கூறியிருந்தார். அவர் யாரை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார், அவர்கள் என்ன விவாதித்தார்கள்? நிச்சயமாக அவர் தலைமைச் செயலகத்திற்குள் சிக்கி இருந்த காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் தான் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் என்ன விவாதித்தார்கள்? அந்தக் கட்டிடத்தைத் தாக்கிய கூட்டத்தில் இருந்தவர்களுடன் நேரடியாக அவர் தொடர்பில் இருந்தாரா? இராணுவ-உளவுத் துறை எந்திரத்தின் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருந்தாரா? அவர்கள் என்ன விவாதித்தார்கள்?
தலைமைச் செயலகத்திற்கு ஏன் பாதுகாப்புக் குறைவாக இருந்தது, ஒதுங்கி நிற்க யார் உத்தரவிட்டது?
ஜனவரி 6 வன்முறை அச்சுறுத்தல்கள் இரகசியமாக இருக்கவில்லை மாறாக இணையத்திலும் பெருநிறுவன ஊடகங்களிலும் கூட பரவலாக வெளியாகி இருந்தன. மாநிலத் தலைமைச் செயலகங்களில் ஒத்திகைகள் மற்றும் மிச்சிகனில் ஜனநாயகக் கட்சி ஆளுநரைக் கடத்தி கொலைச் செய்வதற்கான பாசிசச் சதித்திட்டம் உட்பட அங்கே முன்னதாக வன்முறைச் சம்பவங்கள் நடந்திருந்தன. இருப்பினும் தலைமைச் செயலகப் பொலிஸ் எந்த அசாதாரண எச்சரிக்கையின் கீழும் இல்லை, ட்ரம்ப் ஜெயித்திருந்தால் அங்கே அவர் வெற்றியை அங்கீகரிப்பதற்கு எதிராக ஓர் இடதுசாரி போராட்ட அச்சுறுத்தல்கள் இருக்கும் என்றால் எப்படி நிச்சயமாகப் பொலிஸ் மற்றும் இராணுவ அணித்திரள்வு இருக்குமோ அவ்வாறு எந்த விதமான முன்கூட்டிய அணிதிரள்வும் அங்கே செய்யப்படவில்லை.
அந்த தாக்குதலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சி என்ன செய்து கொண்டிருந்தது?
ட்ரம்பின் நோக்கம் என்ன என்பது ஜனநாயகக் கட்சியினருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. தேர்தல் முடிவுகளை அவர் எதிர்ப்பார் என்பதில் எந்த ஒளிவுமறைவும் இருக்கவில்லை, தேர்தல் முடிவை ட்ரம்ப் நிராகரிக்கலாம் என்பதே தனது மிகப் பெரிய கவலை என்று அந்தத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் பைடெனே கூறி இருந்தார். ஆனால் ட்ரம்பால் உளவியல் ரீதியில் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதைத் தவிர அவர் விட்டுக் கொடுக்க மறுப்பதில் வேறெந்த சாராம்சமும் இல்லை என்று, தேர்தலுக்குப் பின்னர், பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் சுயதிருப்தியைப் பரப்பினர். காங்கிரஸ் சபையின் உயர்மட்ட அதிகாரியான பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தாக்குதல் நடத்த ட்ரம்ப் பகிரங்கமாக இலக்கு வைத்திருந்த தலைமைச் செயலகத்தின் பாதுகாப்பை வாக்கு அங்கீகரிப்புக்கு முன்னர் வலுப்படுத்தி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனவரி 6 இல் பைடென் என்ன செய்து கொண்டிருந்தார்?
தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாகப் பைடென் நவம்பர் 30 இல் இருந்தே (தோல்வியை ட்ரம்ப் ஒப்புக் கொள்ள மறுத்ததால் ஆரம்ப தாமதத்திற்குப் பின்னர்) தேசியப் பாதுகாப்பு விபரங்களைப் பெறத் தொடங்கி இருந்தார். ஜனவரி 6 இல் அச்சுறுத்தப்பட்டிருந்த வன்முறைக் குறித்து உளவுத் துறை எந்திரத்திற்குக் கிடைத்த எல்லா தகவல்களும் பைடெனுக்குப் பிரத்யேகமாகக் கிடைத்திருந்தன, ஆகவே ஜனவரி 6 அவருக்கு ஓர் ஆச்சரியமாக இருந்திருக்க முடியாது. ஆனாலும் பல மணி நேரங்களுக்கு அவர் எதுவும் கூறவில்லை. ஏன் கூறவில்லை? அந்த தாக்குதலின் பரிமாணங்கள் வெளிப்படையாகத் தெரிந்த உடனே ஏன் அவர் தொலைக்காட்சியில் தோன்றி அதைக் கண்டிக்கவில்லை? அவர்களைப் போலவே, இவரும் இராணுவ-உளவுத் துறைத் தலைமையுடன் தொடர்பில் இருந்தாரா, அவர் நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தாரா? இறுதியில் அவர் பகிரங்கமாகப் பேசிய போது, அது ஏன் அமெரிக்க மக்களுக்கு முறையிடுவதற்குப் பதிலாக ட்ரம்புக்கு முறையிடும் வடிவில் இருந்தது?
விசாரணைக்குப் பின்னர் பிரதிநிதிகள் சபைத் தேர்வுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களும் பத்திரிகைச் செய்திகளும் ஒவ்வொன்றையும் ட்ரம்பின் தனிப்பட்ட நடத்தையில் இருந்த சிறிய மாற்றம் என்று குறைத்து, இத்தகைய முக்கிய அரசியல் கேள்விகளை மூடிமறைக்க முயன்றன — அவரின் பாதுகாப்பு வாகனத்தை நிறுத்த முயன்றாரா, அல்லது அவர் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கினாரா, அல்லது சாப்பாட்டுத் தட்டைச் சுவரில் தூக்கி எறிந்தாரா? என்று கேள்வி எழுப்பின.
முன்னணி பத்திரிகைகளின் குரல்கள் இந்த விசாரணையைக் குறைத்துக் காட்டுகின்றன, “டொனால்ட் ட்ரம்ப் பைத்தியக்காரத்தனமாக இருந்தார் என்பதை ஜனவரி 6 வாக்குமூலம் எடுத்துக்காட்டுகிறது. வாக்காளர்கள் கவனிக்க வேண்டும்,” என்று வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் எழுதியது. ஒரு செய்தி பகுப்பாய்வுடன் ஒரு தலையங்கம் கூட எழுதாத நியூ யோர்க் டைம்ஸ், “ஒரு கடிவாளம் இல்லாத ஜனாதிபதி: இறுதியில், அவர் நிர்வாகத்தின் வெறித்தனமான நாட்களில், டொனால்ட் ஜெ. ட்ரம்ப் சாப்பாட்டுத் தட்டைத் தூக்கியெறிந்து, அவரின் சொந்தப் பாதுகாப்புச் சேவை அதிகாரியின் குரல்வளையை நெறித்த நிலையில், அவரின் நடவடிக்கை அதிகரித்தளவில் கொந்தளிப்பாகத் திரும்பி இருந்தது,” என்று தலைப்பிட்டு இருந்தது.
அந்த கருத்துரை, அதிகபட்சமாக, ட்ரம்பின் நடவடிக்கைகளுக்காக அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா அல்லது செய்யப்படுமா என்பதைச் சுற்றியும், அல்லது வரவிருக்கும் இடைக்கால தேர்தல்களில் இந்த வெளிப்பாடுகளின் தாக்கத்தைச் சுற்றியுமே சுழல்கிறது.
ட்ரம்ப் அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் ஜெயித்திருந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருந்திருக்கும் என்பதைப் பற்றி விவாதிக்க ஊடகங்களோ அல்லது ஜனநாயகக் கட்சியினரோ அக்கறை காட்டவில்லை. ஜனவரி 7, 2021 இல் அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அல்லது ஜனவரி 20, 2021 இல் 'அமைதியான அதிகார மாற்றம்' தடுக்கப்பட்டு இருக்குமா? அல்லது இன்று எப்படி இருந்திருக்கும்?
எவ்வாறிருப்பினும், ஜனவரி 6 பற்றிய வெளிப்பாடுகளை மீண்டும் அடைத்து வைத்து விட முடியாது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி, இப்போது பெரும்பாலான அமெரிக்கர்கள், ட்ரம்ப் மீது குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்து அவர் நடவடிக்கைகளுக்காக வழக்கில் இழுக்கப்பட வேண்டுமென நம்புகிறார்கள். சோசலிச சமத்துவக் கட்சி இந்த உணர்வை முழுமையாக ஆமோதிக்கிறது.
ட்ரம்ப் மீதான ஒரு விசாரணை நிகழ்வில், பைடென் யாரை அவரின் 'சகாக்கள்' மற்றும் 'நண்பர்கள்' என்று கூறுகிறாரோ, குடியரசுக் கட்சியின் அந்தப் பெரும் பிரிவுகள் உட்பட, பரந்தளவில் இந்தச் சதியின் ஆதாரங்கள் வெளி வருமோ என்று ஜனநாயகக் கட்சி அஞ்சுகிறது. அதனால் தான் ஜனவரி 6 மீதான விசாரணையை 18 மாதங்களாக இழுத்தடித்தது, மிகவும் வெடிப்பார்ந்த வெளிப்பாடுகள் இது வரையில் தாமதப்படுத்தப்பட்டன. இந்தச் சமீபத்திய அம்பலப்படுத்தல்களும் கூட, அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அதிகரித்து வரும் அபாயம் குறித்து அவர்களை எச்சரிப்பதற்காக அல்ல, நவம்பர் தேர்தல்களில் ட்ரம்பையும் அவர் அரசியல் கன்னையையும் பலவீனப்படுத்துவதற்காக மட்டுமே ஆகும்.
ஆனால் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பலமான ஆயுதங்களைக் கொண்ட அமெரிக்கா ஓர் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு ஒரு சில நிமிட நேர நெருக்கத்திற்கு வந்திருந்தது என்பதும், அது சதித் திட்டம் தீட்டியவர்களின் தரப்பில் இருந்த திறமையின்மை மற்றும் துரதிருஷ்டத்தால் மட்டுமே தடைபட்டது — அந்தச் சதித் திட்டம் தீட்டியவர்கள் மீண்டும் அதை முயலச் சுதந்திரமாக விடப்பட்டிருக்கிறார்கள் என்பதும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு தலைநகரின் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் நன்கு தெரியும்.
இந்த சமீபத்திய வெளிப்பாடுகள், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட சமகால எச்சரிக்கைகளுக்கு ஒரு சக்தி வாய்ந்த நிரூபணமாக உள்ளன. தேர்தலுக்கு முந்தைய மாதங்களில், அதற்குப் பின்னரும் பெரும் பலத்துடன், எதேச்சதிகார ஆட்சிக்காக ட்ரம்ப் பகிரங்கமாக செய்து வந்த தயாரிப்புகளில் இருந்து ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தல் வரையில் நாங்கள் தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்க முயன்றோம். அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி நடந்து ஒரு சில மணி நேரங்களில், உலக சோசலிச வலைத் தளத்தின் தலைமை ஆசிரியரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் தலைவருமான டேவிட் நோர்த் பின்வருமாறு எழுதினார்:
நேற்று என்ன நடந்ததோ அது கவனமாக திட்டமிடப்பட்ட ஒரு சதியின் விளைவாகும். அது, வெள்ளை மாளிகைக்கு உள்ளும் அரசின் ஏனைய முக்கிய அமைப்புகள், துறைகள் மற்றும் ஆணையங்களுக்கு உள்ளும் மூலோபாயரீதியில் நிலைநிறுத்தப்பட்ட பாசிச சதிகாரர்களின் ஒரு கும்பலுடன் செயல்பட்டு வந்துள்ள டொனால்ட் ட்ரம்பால் தூண்டிவிடப்பட்டது.
இந்தச் சதித்திட்டம் நன்கறியப்பட்ட நவீன ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளின் உத்திகளைப் பயன்படுத்தியது. பைடெனின் தேர்வுக் குழு பெரும்பான்மையைச் செல்லுபடியானதாக அறிவிப்பதற்காக கூட்டிய காங்கிரஸ் சபையின் கூட்டத்தை அந்த நடவடிக்கைக்கான சரியான நேரமாக சதிகாரர்கள் அடையாளம் கண்டிருந்தார்கள். 2020 தேர்தல்கள் திருடப்பட்டுள்ளதாக ட்ரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் வாரக் கணக்கில் கூறிய பொய்யான கூற்றுகளுடன் இந்த தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்யப்பட்டது.
தலைமைச் செயலகம் பலவீனமாக பாதுகாக்கப்பட்டிருந்ததை, இராணுவம் விடையிறுக்காமல் இருந்ததை, பரிதாபகரமாக ஜனநாயகக் கட்சியின் முதுகெலும்பற்ற தன்மையை மற்றும் குறிப்பிடத்தக்க வகையில் கிளர்ச்சியைக் கைவிடுமாறு ட்ரம்புக்கு பைடென் அழைப்பு விடுத்ததை நோர்த் குறிப்பிட்டிருந்தார், “ஹிட்லர், சரியாகச் செய்யுங்கள்' என்ற பைடெனின் உரையாக நோர்த் அதைப் பொருத்தமாகக் குணாம்சப்படுத்தி இருந்தார்.
'அமெரிக்க அரசாங்கத்தைக் கவிழ்த்து, ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க முன்னொருபோதும் இல்லாத ஒரு ஜனாதிபதியின் முயற்சியாக, ஜனவரி 6, 2021 சம்பவங்களின் அனைத்து அம்சங்கள் மீதும் பகிரங்கமாக, பொதுவில், தொலைக்காட்சியில், நேரடி ஒளிபரப்பில் ஒரு விசாரணை' கோரி, அதற்கடுத்த நாள், சோசலிச சமத்துவக் கட்சி ஓர் அறிக்கையை வெளியிட்டது. பதினெட்டு மாதங்களுக்குப் பின்னர், இந்த அரசியல் கோரிக்கை இரண்டு மடங்கு பலத்துடன் எழுப்ப வேண்டி உள்ளது.
