மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பொய்கள், பிரச்சாரம் மற்றும் தந்திரங்களின் அடிப்படையில், அமெரிக்காவும் ஐரோப்பாவில் உள்ள அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் ரஷ்யாவுடன் ஒரு போரைத் தொடங்கி, அதை விரிவாக்கி வருகின்றன, அது ஓர் அணு ஆயுத மூன்றாம் உலகப் போரைத் தூண்டி விட அச்சுறுத்துகிறது.
பத்து ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். உலகெங்கிலும் அதிகரித்து வரும் பணவீக்கமும், எரிபொருள் மற்றும் உணவுப் பற்றாக்குறையும் உட்பட, இந்தப் போரின் பொருளாதார விளைவுகள் உழைக்கும் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கத் தலைமையிலான இந்தப் போர், உலக மக்களுக்கு எதிரான ஒரு மிகப் பெரும் சதியாகக் கட்டவிழ்ந்து வருகிறது. மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இது, இதைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகச் சித்தரிக்கப்படுகிறது.
பைடென், ஜோன்சன், ஷோல்ஸ் அல்லது மக்ரோன் யாராக இருந்தாலும், நெருக்கடியால்-சூழப்பட்ட மற்றும் மக்களால் வெறுக்கப்படும் இந்த அரசாங்கங்கள், இந்தப் போர் முயற்சிக்குத் தலைமைத் தாங்கும் இவற்றில் ஒன்று கூட, ஒரு புதிய உலகப் போரை ஆரம்பிக்கும் அடிப்படையில் பிரச்சாரம் செய்யவில்லை. ரஷ்யாவைப் பூதாகரமாகக் காட்டும் விதமான பிரச்சார மழையில், போரின் காரணங்கள், நோக்கங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து மக்களுக்கு ஒருபோதும் ஓர் ஆழமான விளக்கம் வழங்கப்படவில்லை.
இந்தப் போர் பொய்களால் நியாயப்படுத்தப்படுகிறது, ஏனென்றால் இதன் நோக்கங்கள் பாதுகாக்க முடியாதவையாக உள்ளன. அமெரிக்க ஈடுபாட்டை விளக்கிப் பைடென் ஒரு நேர்மையான உரையை வழங்கினால், அவர் இவ்வாறு கூற வேண்டி இருக்கலாம்:
என் சக அமெரிக்கர்களே,
“எவ்வளவு காலம் எடுக்குமோ அதுவரை” உக்ரேன் போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டைத் தொடர அமெரிக்கா தீர்மானமாக உள்ளது என்று நான் கூறிய போது, நான் என்ன அர்த்தப்படுத்தினேன் என்பதற்கு ஒரு நேர்மையான விளக்கத்தை உங்களுக்கு வழங்குவது, அமெரிக்காவின் ஜனாதிபதியாக, என் பொறுப்பாகிறது என்று நினைக்கிறேன்.”
முதலில், இந்த முடிவின் பின்புலத்தை விவரித்து விடுகிறேன்.
2014 இல், ஒபாமா நிர்வாகம், இதில் நான் துணை ஜனாதிபதியாகவும் உக்ரேன் விவகாரங்களுக்கான முக்கிய அதிகாரியாகவும் இருந்த நிலையில், உக்ரேனில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு நிதியளித்து ஏற்பாடு செய்தது. ரஷ்யாவுக்கு மிகவும் நட்பாகக் கருதப்பட்ட ஓர் அரசாங்கத்தை அகற்றுவதே எங்கள் நோக்கமாக இருந்தது. அதிவலது படைப் பிரிவுகளுடன் சேர்ந்து அவற்றுக்கு நிதியுதவிகள் வழங்கி அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நாங்கள் நடத்தினோம்.
அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு விடையிறுத்து, கிரிமியா உக்ரேனில் இருந்து விலகி ரஷ்யாவுடன் இணைய வாக்களித்தது. கிழக்கு டொன்பாஸ் பிரதேசத்தில் ரஷ்ய மொழி பேசும் குடியேற்றப் பகுதிகளில் இருந்த பிரிவினைவாதிகள் கியேவ் அரசாங்கத்தில் இருந்து பிரிய முயன்றனர்.
டொன்பாஸ் போரில் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் நோக்கில் மின்ஸ்க் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக நாங்கள் கூறினாலும், இராணுவ வழிவகைகளைக் கொண்டு டொம்பாஸ் மற்றும் கிரிமியாவை மீளப் பெற முயற்சிக்க உக்ரேனை ஊக்குவித்து வந்த அதேவேளையில், பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான ஆயுதங்களைக் கொண்டு உக்ரேனை ஆயுதமயப்படுத்த நாங்கள் திரைக்குப் பின்னால் செயல்பட்டு வந்தோம்.
மார்ச் 2021 இல், இந்தப் பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதைக் குறித்து முறையாக அறிவிக்குமாறு நாங்கள் உக்ரேனை வலியுறுத்தினோம், மூன்று மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்கா 'ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான உக்ரேனின் முயற்சிக்கு உதவ' சூளுரைத்து, நாங்கள் ஒரு மூலோபாயப் பங்காண்மை ஆவணத்தில் கையெழுத்திட்டோம்.”
கடந்த எட்டு ஆண்டுகளில், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு போரைத் தூண்டும் நோக்கில், பாசிசச் சக்திகளை அதன் முதுகெலும்பாகப் பயன்படுத்தி, உக்ரேனிய இராணுவத்திற்கு நாங்கள் பாரியளவில் ஆயுதம் வழங்கியதுடன் பயிற்சியும் அளித்துள்ளோம். பெப்ரவரி 2022 இல் எங்கள் முயற்சி வெற்றிப் பெற்றது.
இந்தப் போரைத் தூண்டுவதில் எங்கள் நோக்கம் கீழே கொடுக்கப்படுகின்றன:
1. சோவியத் ஒன்றியத்தின் முடிவு உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தின் ஒரு 'புதிய உலக ஒழுங்கிற்கு' முன்னறிவிப்பாக இருக்கும் என்று 1991 இல் அமெரிக்கா பிரகடனப்படுத்தியது. இந்த மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கு நாங்கள் முக்கியமாகக் கருதும் யுரேஷிய பெருநிலத்தின் மேலாதிக்கத்திற்கு ரஷ்யாவை நாங்கள் ஒரு முட்டுக்கட்டையாகப் பார்க்கிறோம்.
2. இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அமெரிக்கப் பொருளாதார அளவை விஞ்சிவிடும் பாதையில் சீனா உள்ளது. நாங்கள் பொருளாதார ரீதியாகவும் இறுதியாக இராணுவ வழிவகைகளைக் கொண்டும் சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம், ஆனால் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவேச் சீனாவுக்கு எதிரான போரில் முதல் படியாகும்.
3. ஹைட்ரோகார்பன்கள், பூமியின் அரிய கனிமங்கள், உலோகங்கள் மற்றும் பிற முக்கிய தாதுக்கள் என உலகிலேயே மிகப் பெரிய கனிம வளங்களை ரஷ்யா கொண்டுள்ளது, 75 ட்ரில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது, உலகச் சந்தையில் மேலாதிக்கம் செலுத்த அமெரிக்கப் பெருவணிகங்கள் அவற்றைக் கைவரப் பெற விரும்புகின்றன.
4. இறுதியாக, 'தேசிய நலன்' என்ற பெயரில் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக எதிர்ப்புகளைக் குற்றமாக்கி, போர் முயற்சி என்ற பெயரில், உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை நசுக்க விரும்புகிறோம்.
உலகின் இரண்டாவது பெரிய அணு ஆயுதங்களை வைத்துள்ள நாட்டுக்கு எதிரான ஒரு போர் ஒரு மூலோபாய அணு ஆயுதப் பரிமாற்றத்தைத் தூண்டலாம், அதில் உங்களில் பலர் இறக்க நேரிடும் என்று உங்களில் பலர் கவலைப்படுவது எனக்குத் தெரிகிறது. இது உண்மை தான். டாக்டர். ஸ்ட்ரேஞ்சலோவின் (Dr. Strangelove) பழைய சொற்றொடரைப் பயன்படுத்திக் கூறினால், 'நம் தலைமுடிக்குப் பங்கம் வராது என்று நான் கூற மாட்டேன்.” ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களை எட்டுவது நிச்சயமாக உங்களில் 50-100 மில்லியன் பேரின் வாழ்க்கைக்கு மதிப்புடையதாகும்.
அமெரிக்கா மற்றும் நேட்டோவின் இத்தகைய போர் நோக்கங்களின் ஒரு பிரகடனம் வீதிகளில் உடனடியாகப் பாரிய வெகுஜனப் போராட்டங்களைத் தூண்டும்.
இந்தக் காரணத்திற்காகத் தான், போரைப் பற்றிய எல்லாப் பொது விவாதமும் முற்றிலும் போருக்கு ஆதரவான பிரச்சாரத்தை உள்ளடக்கி உள்ளது. போருக்கு மக்கள் ஆதரவை உருவாக்கும் பெரும் பிரயத்தன முயற்சியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் பல மாதங்களாக அவற்றின் மக்கள் ரஷ்யாவை வெறுக்கும் வகையில் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்தி உள்ளன. போருக்கு ஆதரவான சொல்லாடலுக்கு முரணான எந்த உண்மைகளும் கருத்துகளும் ரஷ்யப் பிரச்சாரமாக முத்திரை குத்தப்படுகின்றன, போரைக் கேள்வி கேட்பவர்கள் தேசத் துரோகிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.
ரஷ்யா உடனான இந்த நேட்டோ போர் வெடிப்பானது, ஒவ்வொரு அவசரச் சமூகத் தேவையும் பணம் இல்லை என்ற அறிவிப்பைச் சந்திக்கும் நிலையில், ஓர் அளப்பரிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் பின்னணியில் நடக்கிறது. இந்தப் பெருந்தொற்றுக்கு அதிகரித்து வருவதற்கு மத்தியில், தடுப்பூசிகள் மற்றும் கோவிட்-19 சிகிச்சைகளுக்கான நிதி தீர்ந்து வருகிறது, அதேவேளையில் மாநிலங்களும் நகராட்சிகளும் கல்விக்கான வரவு செலவுத் திட்டங்களைக் குறைத்து வருகின்றன.
ஆனால் போர் முயற்சிக்கு வரம்பின்றிப் பணம் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், அமெரிக்கா மட்டுமே போருக்காக 420 மில்லியன் டாலர்களையும், ஒட்டுமொத்தமாக இராணுவத்திற்காக 2 பில்லியன் டாலர்களையும் செலவிடுகிறது.
உக்ரேனில் வெகுஜனங்களின் மரணத்தையும் மற்றும் மனிதாபிமான பேரழிவையும் நிறுத்த அந்நாட்டுக்கு அவசரமாக ஆதார வளங்களைப் பாய்ச்சுவது அவசியம் என்ற அறிவிப்புடன், இந்தப் போரில் நேட்டோவின் தலையீடு பொதுமக்களிடம் விற்கப்பட்டது.
ஆனால் அவர்கள் உருவாக்கி உள்ள பேரழிவுக்கு இந்தப் போரை வடிவமைத்தவர்களின் விடையிறுப்பு என்ன? ரஷ்யா அந்நாட்டின் கணிசமான பகுதிகளை 'கைப்பற்றி விட்டதா' என்று கடந்த வாரம் கேட்கப்பட்ட போது, “தந்திரோபாயத்தை மூலோபாயத்துடன் குழப்ப வேண்டாம்' என்று வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “உண்மையில் முக்கியமானது என்னவென்றால், புட்டின் எதை அடைய முயல்கிறாரோ அதில் அவர் ஜெயிக்கப் போவதில்லை என்ற மூலோபாயக் கருத்தாகும்… அவர் நேட்டோவைப் பிளவுபடுத்தவும் முயன்றார். நாங்கள் நேட்டோ உச்சி மாநாட்டுக்குச் செல்ல உள்ளோம், அங்கே அந்தக் கூட்டணி என் நினைவில் உள்ளதை விட மிகப் பெரும் நல்லிணக்கத்தையும், மிகப் பெரும் பலத்தையும் காட்ட போகிறது,” என்றார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உக்ரேனிய மக்களின் நிஜமான தலைவிதியும், இந்தப் போரின் பெயரளவிலான காரணமும், அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளைப் பொறுத்த வரையில் முற்றிலும் அலட்சியத்திற்குரிய ஒரு விஷயமாக உள்ளது.
போரின் பெயரில், தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சியும் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட உள்ளது. நோர்வேயில், இந்த வாரம் எரிவாயுத் துறைத் தொழிலாளர்களின் ஒரு சக்தி வாய்ந்த வேலைநிறுத்தம் வெடித்த போது, அந்த அரசாங்கம் 'ஐரோப்பாவில் நாம் போரை முகங்கொடுக்கும் புவிசார் அரசியல் நிலைமை' இருப்பதாகக் கூறி, தொழிலாளர்கள் மீது 'கட்டாய மத்தியஸ்தத்தை' திணித்தது.
ஒரு புதிய உலகப் போர் என்பது தொழிலாள வர்க்கத்தின் அனைத்துச் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் கல்லறையாக இருக்கும். சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு வெளியே அத்தகைய ஒரு போரை நடத்த முடியாது.
அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கன்னைகளுக்கு உள்ளேயும் போருக்கான ஒருமித்த ஆதரவு இருந்தாலும், கருத்துக் கணிப்புகளோ தொடர்ந்து பரந்த மக்கள் எதிர்ப்பைக் காட்டுகின்றன. ஆனால் இந்த எதிர்ப்பு நீருபூத்த நெருப்பாக வெளிப்படாமல் உள்ளார்ந்து கனன்று கொண்டிருக்கிறது.
போருக்கு எதிரான ஒரு பாரிய வெகுஜன இயக்கத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய அவசரத் தேவை உள்ளது. மனிதகுலத்தை அணு ஆயுத மூன்றாம் உலகப் போருக்கு இழுத்துச் செல்வதற்கான ஆளும் வர்க்கங்களின் வெறித்தனமாக உறுதி, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்புவதன் மூலம் எதிர்க்கப் பட வேண்டும்.
