முன்னோக்கு

மொராக்கோவில் படுகொலை: ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அழுக்கு முகம்

மொராக்கோவில் படுகொலை: ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அசிங்க முகம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மொராக்கோவிற்கும் ஸ்பெயினின் மெலில்லாவிற்கும் இடையிலான எல்லையில் குறைந்தபட்சம் 37 அகதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டமை, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பரவியுள்ள மிருகத்தனத்தையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் புறக்கணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போர், உலகளவிலான மோதலாக வேகமாகப் பெருகும் நிலையில், கண்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு மற்றும் ஆளும் உயரடுக்கின் கொலைகார தொற்றுநோய்க் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதான ஐரோப்பிய சக்திகள் 1930 களில் சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சிகளுக்குப் பின்னர் ஐரோப்பாவின் ஆதிக்கத்தில் காணப்படாத அரசு-ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் வடிவங்களை உயிர்த்தெழுப்புகின்றன.

இந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலை வெள்ளிக்கிழமை ஸ்பெயின் சிவில் காவலர் மற்றும் மொராக்கோ காவல்துறையின் கூட்டு முயற்சிகளால் நடத்தப்பட்டது. UNHCR (ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர்) புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் சாட், நைஜர், தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகிய ஏழ்மையான ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் புகலிடக் கோரிக்கையாளர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 37 இறப்புகளுக்கு மேலதிகமாக, 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்கள் மற்றும் வேட்டையாடல்களின் போது அல்லது மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் துண்டுப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் 6-10 மீட்டர் உயர வேலிகளில் இருந்து விழுந்தபோது காயமடைந்தனர்.

இந்தப் படுகொலை இரு நாடுகளாலும் தெளிவாக ஒருங்கிணைக்கப்பட்டது, எல்லையை கடக்க முடிந்த அகதிகளை சட்டவிரோதமாக மொராக்கோவிற்கு நாடு கடத்துவதற்காக மெலில்லாவிற்குள் நுழைய மொராக்கோ பாதுகாப்பு படைகளுக்கு சிவில் காவலர் அங்கீகாரம் அளித்துள்ளனர். ஸ்பெயின் மீதான 'வன்முறை ஆக்கிரமிப்பு' மற்றும் 'பிராந்திய ஒருமைப்பாடு மீதான தாக்குதலை' அவர்கள் முறியடித்ததாகக் கூறி, எல்லைக் காவலர்களின் நடவடிக்கைகளை முழுவதுமாக ஆதரிப்பதாக, சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான ஸ்பானிய பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் ஒரு பாசிச வாய்வீச்சு பாணியில் அறிவித்தார்.

சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான மற்றும் போலி-இடது பொடேமோஸை உள்ளடக்கிய மாட்ரிட் அரசாங்கத்திற்கு மிகவும் பொருத்தமான நேரத்தில் இந்த படுகொலை நடந்திருக்கும் என நம்புவது கடினமானது. ஸ்பெயினின் தலைநகரில் இன்று தொடங்கும் நேட்டோ உச்சிமாநாட்டில், ஆக்கிரமிப்பு இராணுவக் கூட்டணியின் புதிய மூலோபாய கருத்தில் பயங்கரவாதம் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையுடன் அகதிகள் எல்லையை கடத்தல் ஒரு 'கலப்பின அச்சுறுத்தலாக' குறிப்பிட வேண்டுமென ஸ்பானிய அரசாங்கம் வலியுறுத்தும், இது ஆபிரிக்காவில் அதன் இராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை நியாயப்படுத்தும் என மாட்ரிட் நம்புகிறது.

அடுத்த தசாப்தத்திற்கான நேட்டோவின் மூலோபாய பாதை வரைபடத்தில் ரஷ்யாவுக்கும் சீனாவிற்கும் எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் எவ்வாறு போர் நடத்தப்படும் என்பதற்கான திட்டங்களை உள்ளடக்கும். இந்த உண்மையைப் பற்றி எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் திங்களன்று பால்டிக் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் விரைவான எதிர்வினை படை 40,000 இலிருந்து 300,000 துருப்புகளாக எட்டு மடங்கு அதிகரிக்கும் என அறிவித்தார்.

இராணுவ வன்முறையின் இத்தகைய பரந்த விரிவாக்கம் ஜனநாயக உரிமைகளுடன் பொருந்தாது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்கு எல்லையில் ஏதுமற்ற புலம்பெயர்ந்தோரின் இரத்தக்களரி படுகொலைகள் எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களால் ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஸ்பானிய அரசாங்கம் பாசிச எல்லைக் காவலர்களின் நிபந்தனையற்ற பாதுகாப்பு, அவர்கள் கிழக்கில் போரை நடத்துகையில், ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகள் ஏகாதிபத்திய வெற்றியின் பொறுப்பற்ற திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் எவருக்கும் எதிராக மிகக் கொடூரமான அடக்குமுறைகளை நிலைநிறுத்துகின்றன என்பதை நிரூபிக்கிறது.

இன்று ஜேர்மனியில் Schloss Elmau இல் நிறைவடையும் G7 உச்சிமாநாட்டில் படுகொலைகள் பற்றிய காது கேளாத மௌனத்தால் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், 'நமது ஜனநாயக நாடுகளின் பின்னடைவை வலுப்படுத்த' மற்றும் 'விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு' அர்ப்பணிப்புடன் உறுதியளிக்கும் ஒரு புனிதமான அறிக்கைக்கு உடன்பட்டாலும், ஐரோப்பாவின் வாசலில் நடந்த இரத்தக்களரி படுகொலை பற்றி எவரும் மூச்சுக்கூட விடவில்லை.

நேற்று மாலை, டெக்சாஸின் சான் அன்டோனியோவில், ஆவணமற்ற மத்திய அமெரிக்க குடியேற்றவாசிகளின் டஜன் கணக்கான இறந்த உடல்கள் நிரப்பப்பட்ட லாரி வண்டி கண்டுபிடிக்கப்பட்டது. லாரி, மத்திய அமெரிக்காவின் மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகளை ஏற்றிச் சென்றது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலின் பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு, பைடென் நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கட்டுப்பாடுகளால், அவர்கள் அமைதியான முறையில் நாட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டது. உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 46 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இதில் குழந்தைகளும் அடங்கும்.

அனைத்து அனைத்து பெரும் வல்லரசுகளின் ஆளும் உயரடுக்குகளும் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையின் மீது ஒரு மோசமான அலட்சியத்தைக் காட்டுகின்றன. இது இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக ஏகாதிபத்திய சக்திகளால் பின்பற்றப்பட்ட இழிவான அணுகுமுறையை நினைவுபடுத்துகிறது. இது குறிப்பாக நாஜி ஆட்சியிலிருந்து வெளியேறும் ஐரோப்பிய யூதர்கள் மற்றும் பிற துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரின் அவல நிலையை பிரதிபலிக்கிறது. 1938 ஆம் ஆண்டு நடந்த இழிவான எவியோன் (Evian) மாநாட்டில், புதிய அகதிகளை உள்வாங்க எந்த பெரும் வல்லரசுகளும் ஒப்புக்கொள்ளவில்லை. இது மூன்றாம் ரைஹ் உனான உறவுகளை சேதப்படுத்தும் என்ற அச்சத்தில் இருந்தது, ஏனெனில் அந்த நேரத்தில் பெரும்பாலான ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தால் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான கூட்டாளியாக அது இன்னும் பார்க்கப்பட்டது.

ஸ்பெயினின் வட ஆபிரிக்க பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை படுகொலை நடந்தது என்பது வெறும் வரலாற்று தற்செயல் நிகழ்வு அல்ல. இங்குதான் ஜூலை 1936 இல் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோ தலைமையிலான பாசிச அதிகாரிகளின் கிளர்ச்சி ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் இருந்து வெற்றிபெற்ற பாசிச இயக்கத்திற்கு அடிப்படையாக செயல்பட்டது. அதன்பின்னர், பாசிஸ்டுகள் நான்கு தசாப்தங்களாக ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தை இரக்கமின்றி ஒடுக்கினர். வெள்ளியன்று நடந்த படுகொலைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அனுமதியானது கண்டம் முழுவதிலும் உள்ள இன்றைய பாசிச இயக்கங்களை ஊக்குவித்து வலுப்படுத்தும். இவை ஆளும் வர்க்கத்தால் தங்கள் செல்வாக்கற்ற கொள்கைகளுக்கு தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு வளர்க்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும், தீவிர வலதுசாரி அரசியல் சக்திகளை ஊக்குவித்தல் மற்றும் முழு கண்டத்தையும் இராணுவமயமாக்குவதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட அடுக்குகளுக்கு எதிரான பாசிச வன்முறைக்கான நிலைமைகளை முறையாக உருவாக்கியுள்ளன. அனைத்து முக்கிய ஐரோப்பிய சக்திகளின் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையில் தீவிர வலது மற்றும் பாசிசக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அதே நேரத்தில் அவற்றின் இராணுவங்களிலும் பாதுகாப்புப் படைகளிலும் தீவிர வலதுசாரி வலைப்பின்னல்கள் நிறைந்துள்ளன. ஜேர்மனியில், இந்தக் குழுக்கள் அரசியல் எதிர்ப்பாளர்களின் கொலைப் பட்டியலை 'நாள் X' அன்று தூக்கிலிட வேண்டும், அதே நேரத்தில் பிரான்சிலும் ஸ்பெயினிலும் உள்ள உயர்மட்ட இராணுவப் பணியாளர்கள் ஆட்சிக் கவிழ்ப்புகளில் அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டங்களை வெளிப்படையாக விவாதிக்கின்றனர். ஜேர்மனியில், இந்த குழுக்கள் 'நாள் X' அன்று செயல்படுத்தப்பட வேண்டிய அரசியல் எதிர்ப்பாளர்களின் கொலைப் பட்டியல்களை வரைந்துள்ளன, அதே நேரத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் சதித்திட்டங்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டங்களை வெளிப்படையாக விவாதித்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 'ஐரோப்பா கோட்டை' கொள்கையானது பல்லாயிரக்கணக்கான அகதிகளின் உயிரை பறித்துள்ளது. இடைவிடாத ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் காலனி ஆதிக்கத்தின் மரபு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சமூகப் பேரழிவிலிருந்து அவர்கள் தப்பிக்க முயலும்போது கடந்த மூன்று தசாப்தங்களாக மத்தியதரைக் கடலில் மூழ்கி இறப்பதைக் காண்கிறார்கள். சட்டவிரோத 'பின்நோக்கி தள்ளல்', அங்கு ஐரோப்பாவின் பாசிச ஃபுரன்டெக்ஸ் (Frontex) எல்லைக் காவலர்களும் அவர்களது தேசிய பாதுகாப்புப் படைப் பங்காளிகளும், அவர்கள் தஞ்சம் கோருவதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பயன்படுத்துவதற்கு முன்பே, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் புலம்பெயர்ந்தோரை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புகின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின் ஒரு பகுதியாகும்.

உத்தியோகபூர்வ அரசியல் அமைப்பு முழுவதிலும் உள்ள ஐரோப்பிய அரசாங்கங்கள் அகதிகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டன. 2015 இல் சிரியாவில் ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்ட போரில் இருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் வெளியேறினர். ஆனால் போலி-இடது கிரேக்க அரசாங்கம், சிரிசா, புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்க ஏஜியன் கடலில் உள்ள தீவுகளில் வதை முகாம் பாணி முகாங்களை உருவாக்கியது.

தீவிர வலதுசாரி இத்தாலிய துணைப் பிரதம மந்திரி மத்தேயோ சல்வீனியின் முன்முயற்சியின் பேரில், ஐரோப்பிய ஒன்றியம் 2019 இல் மத்தியதரைக் கடலில் அனைத்து கடற்படை மீட்பு நடவடிக்கைகளையும் நிறுத்தியது. அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை முழுவதுமாக நீரில் மூழ்கடித்தனர் .ஃபின்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கம் 2019 இல் ஆட்சிக்கு வந்ததும் 'முற்போக்கான' புதிய காற்றின் சுவாசமாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அதன் 1,300-கிலோமீட்டர் எல்லையில் தடைகளை உருவாக்கத் தொடங்குவதற்கான தனது விருப்பத்தை அறிவித்ததன் மூலம் நேட்டோவில் சேருவதற்கான அதன் விண்ணப்பத்தைத் தொடர்ந்தது. அகதிகள் மாஸ்கோவால் 'கலப்பினப் போராக' பயன்படுத்தப்படும் அபாயத்திலிருந்து காக்க விரும்புவதாக அது விளக்கியது. கடந்த குளிர்காலத்தில் பெலாருஸின் எல்லையைத் தாண்டி அகதிகள் நுளைவதை சட்டவிரோதமாகத் தடுத்த போலந்தின் வலதுசாரி PIS அரசாங்கத்தின் அடிச்சுவடுகளை ஹெல்சின்கி பின்பற்றி வருகிறார், இதனால் பல அகதிகள் காட்டில் உறைந்துபோககும் நிலை ஏற்பட்டது.

மிகவும் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை இரத்து செய்வதில் ஈடுபட்டுள்ள அதே அரசாங்கங்கள்தான் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய போரின் முன் வரிசையில் உள்ளன. வறுமையில் வாடும் ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்ப எண்ணும் பிரிட்டனின் டோரி அரசாங்கம், உக்ரேனிய ஆட்சிக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதில் ஐரோப்பிய சக்திகளுக்கு மத்தியில் முன்னணியில் உள்ளது. ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கம், பாசிச ஜேர்மனிக்கான மாற்று (Alternative for Germany) அமைப்பில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள்-விரோதக் கொள்கைகளைப் பராமரிக்கிறது, ஹிட்லருக்குப் பின்னர் மிகப்பெரிய மறுஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டுக்கான நாட்டின் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அவரது அரசாங்கம் கலே மற்றும் பாரிஸில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களை கொடூரமாக தாக்கியதோடு கணிசமான முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மக்ரோன் திட்டமிட்ட வகையில் பாகுபாட்டை நடைமுறைப்படுத்துகிறார். மக்கள் 'போர் பொருளாதாரத்தில்' மக்கள் வாழப் பழக வேண்டும் என அவர் சமீபத்தில் அறிவித்தார். வெள்ளிக்கிழமை படுகொலையைச் செய்த ஸ்பானிய அரசாங்கம், 800 துருப்புக்கள், யூரோஃபைட்டர் ஜெட் மற்றும் போர்க்கப்பல்களை கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது. மேலும் நேட்டோ உச்சிமாநாட்டைப் பயன்படுத்தி ஸ்பெயினின் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை 24 பில்லியன் யூரோக்களாக இரட்டிப்பாக்குவதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இவர்களின் அமெரிக்க கூட்டாளி, அகதி குழந்தைகளை சிறை போன்ற சூழ்நிலைகளில் வைத்திருப்பதிலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாத போரின் போது முழு சமூகங்களையும் அழிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால், ஊடகப் பிரச்சாரகர்களின் கூற்றுப்படி, 'ரஷ்ய ஆக்கிரமிப்பு' மற்றும் 'பாசிச' புட்டினுக்கு எதிராக உக்ரேனின் 'ஜனநாயகம்' மற்றும் 'சுதந்திரம்' ஆகியவற்றிற்காகப் போரை நடத்தும் அரசாங்கங்கள் இவைதான்.

உண்மையில், இப்போது நன்றாக நடந்து கொண்டிருக்கும் உலகின் ஏகாதிபத்திய மறுபகிர்வு பற்றியதில் 'ஜனநாயக' தன்மை எதுவும் இல்லை. முன்னணி ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவை அடிபணிய வைப்பதற்கும், அதன் இலாபகரமான இயற்கை வளங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கும், தங்கள் ஏகாதிபத்திய போட்டியாளர்களிடமிருந்து வரும் போட்டியைத் தடுப்பதற்கும் தங்கள் போர் எந்திரங்களுக்காக செலவழிக்கத் திட்டமிடும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை, கடுமையான சிக்கன நடவடிக்கைகள், மோசமான ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்கள் மூலம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிழிந்தெடுக்க வேண்டும்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினரான டோபியாஸ் எல்வூட், கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 50,000 இரயில்வே தொழிலாளர்களைக் கண்டித்தார். அவர்கள் வேலைப் பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தம் செய்கிறார்கள், பணவீக்கம் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆனால் எல்வூட் அவர்களை 'புட்டினின் நண்பர்கள்' என்று கண்டித்தார். ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி/பொடேமோஸ் அரசாங்கம் வார இறுதியில் ரையானேர் விமானிகள் மற்றும் விமானப் பணிக் குழுவினரின் வேலைநிறுத்தத்தை தடை செய்துள்ளது. ஜேர்மனியில், ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், 100 பில்லியன் யூரோக்கள் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்வைத்த சில வாரங்களில், போருக்காக மக்கள் 'தியாகங்களை' செய்ய வேண்டும் எனக் கூறினார்.

உழைக்கும் மக்கள் தாம் விரும்பும் நாட்டில் வாழும் உரிமை உட்பட அனைத்து ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் பாதுகாப்பு, ஏகாதிபத்திய போருக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது. உள்நாட்டில் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை அச்சுறுத்தலுக்கும், வெளிநாடுகளில் போர் விரிவாக்கத்திற்கும் எதிராக, உலக சோசலிச வலைத் தளம், சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலம் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கிறது.

Loading