முன்னோக்கு

ஏகாதிபத்திய போரும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் விரிவாக்கமும், கருக்கலைப்பு உரிமையை நீக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எடுத்துக்காட்டப்பட்டவாறு ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதலும் ஒரே நிகழ்ச்சிப்போக்கின் இரண்டு பக்கங்களாகும்.

ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் (Imperialism and the Split in Socialism) என்ற அவரின் 1916 அரிய படைப்பில், விளாடிமிர் லெனின் ஏகாதிபத்தியத்தை 'அனைத்து நிலையிலும் பிற்போக்குத்தனம்' என்று வரையறுத்தார். போர் மற்றும் உள்நாட்டுக் கொள்கை இரண்டிலுமே, “நிதி மூலதனம், சுதந்திரத்திற்காக அல்ல, ஆதிக்கத்திற்காகப் போராடுகிறது.” லெனின் எழுதினார், “ஜனநாயகக் குடியரசுக்கும் பிற்போக்குத்தனமான முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும் இடையிலான வேறுபாடு துல்லியமாக அழிக்கப்பட்டுள்ளது ஏனென்றால் இவை இரண்டுமே உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன.”

லெனினின் வார்த்தைகள் உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் தற்போதைய நெருக்கடியைப் பொருத்தமாகக் குணாம்சப்படுத்துகின்றன.

இந்த வார இறுதியில் G7 உச்சி மாநாட்டில், பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் போரின் அடுத்த கட்டத்தைக் குறித்து திட்டமிட பவேரியன் ஆல்ப்ஸில் ஒன்று கூடினார்கள். மக்களின் முதுகுக்குப் பின்னால், பொது விவாதமோ மற்றும் முறையான அறிவிப்போ எதுவுமின்றி, இந்த மோதல் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு நடைமுறைப் போராக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

நேட்டோ எந்தளவுக்கு ஈடுபட்டுள்ளது என்பதை நியூ யோர்க் டைம்ஸ் 'உக்ரேனில் ஆயுதப் பாய்ச்சலைக் கமாண்டோ வலையமைப்பு ஒருங்கிணைக்கிறது, அதிகாரிகள் கூறுகிறார்கள்,” என்று தலைப்பிட்ட கட்டுரையில் சனிக்கிழமை வெளிப்படுத்தியது. அமெரிக்காவும் நேட்டோவும் “ஆயுதங்கள், உளவுத் தகவல்கள் மற்றும் பயிற்சியை வழங்க விரைந்துள்ள” “கமாண்டோக்கள் மற்றும் உளவாளிகளின் ஓர் இரகசிய வலையமைப்பை” ஏற்பாடு செய்திருப்பதாக அக்கட்டுரை விளக்குகிறது.

நேட்டோ சக்திகள் உக்ரேனிய சிப்பாய்களுக்குப் பயிற்சி அளிக்க உக்ரேனுக்குள் ஆலோசகர்களை நிலைநிறுத்தி இருப்பதையும், அதேவேளையில் அமெரிக்க இராணுவம் ஜேர்மனி இராணுவத் தளங்களில் நேரடியாகச் சிப்பாய்களுக்குப் பயிற்சி அளிப்பதையும் உறுதிப்படுத்திய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை அக்கட்டுரை மேற்கோளிடுகிறது. இது, உக்ரேனை ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போர்க் களமாக மாற்ற, 2014 உக்ரேனிய தேர்தல்கள் மற்றும் மைதான் பதவிக் கவிழ்ப்புச் சதி நடந்த அப்போதிலிருந்து, ஆண்டுக் கணக்கில் நீண்ட ஒரு திட்டத்தின் விளைபொருளாகும். “2015 இல் இருந்து இந்தாண்டு ஆரம்பம் வரையில், அமெரிக்கச் சிறப்புப் படைகளும் தேசிய பாதுகாப்புப் படையின் பயிற்சியாளர்களும் லிவிவ் நகருக்கு அருகே மேற்கு உக்ரேனில் யாவொரிவ் போர்ப் பயிற்சி மையத்தில் 27,000 க்கும் அதிகமான உக்ரேனிய சிப்பாய்களுக்குப் பயிற்சி அளித்ததாகப் பென்டகன் அதிகாரிகள் கூறினார்கள்,” என்று அந்த டைம்ஸ் கட்டுரைக் குறிப்பிடுகிறது.

திட்டமிடுவதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள இடமும் அத்துடன் அவர்களின் போர் நோக்கங்களும் இரண்டிலேயுமே, தங்களைத் தாங்களே உலகின் 'ஜனநாயகங்களாக' பிரகடனப்படுத்திக் கொள்ளும் அந்தத் தலைவர்கள் இராணுவ வழிவகைகள் மூலமாக ரஷ்யாவைக் காலனித்துவப்படுத்த முயன்ற கடைசி முதலாளித்துவ அரசியல்வாதியான ஹிட்லரை முன்மாதிரியாகக் கொண்டிருந்தனர். பவேரிய நகரமான Schloss Elmau இல் சந்தித்த ஜி7 நாட்டு தலைவர்களின் அந்தக் கோட்டையே கூட இரண்டாம் உலகப் போரின் போது நாஜி இராணுவ விடுமுறை முகாமாக இருந்ததாகும்.

Schloss Elmau நகரின் கூட்டத்திற்குப் பின்னர் ஜி7 குழு வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கை, இந்தப் போர் 'எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ அது வரை அதை முன்னெடுக்க' தயாராக இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இந்த அரசாங்கங்கள் அவற்றின் நோக்கங்களை நிறைவேற்ற எத்தனை உயிர்களைப் பலி கொடுக்க விரும்புகின்றன என்பதற்கு அங்கே எந்த வரம்பும் இல்லை என்பது தான் இதன் அர்த்தமாகிறது.

வாழ்க்கைச் செலவுகள் மற்றும் உணவு நெருக்கடி சம்பந்தமாக, ஜி7 உச்சி மாநாட்டுத் திட்டநிரலின் முதல் புள்ளியானது, இந்தப் போர் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மிகப் பெரிய மோதலுக்கு வழி வகுத்து வருவதை ஆளும் வர்க்கம் அறிந்திருப்பதைத் தெளிவு படுத்துகிறது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியின் ஆளும் வர்க்கமும் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளைக் கூட அதன் போர் நோக்கங்களைப் பின்தொடர்வதில் தடைகளாகக் கருதுகிறது. பெருநிறுவன ஊடகங்களின் போர்ப் பிரச்சாரகர்கள் புட்டின் ஒரு 'பாசிசவாதி' என்ற அடித்தளத்தில் போரை நியாயப்படுத்தினாலும் கூட, ஏகாதிபத்திய நாடுகளின் போர் அபிவிருத்தி தர்க்கம் 'அனைத்து நிலையிலும் பிற்போக்குத்தனத்தை' அவசியப்படுத்துகிறது.

நூறு மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் கருக்கலைப்பு உரிமையைப் பறிப்பதென, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளின் அந்த முடிவை, இந்தப் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும்.

அந்த நீதிமன்றம் அதன் தீர்ப்பை வெளியிட்டு அறிவிக்கையில், எல்லா அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதலை அது தொடங்குவதாக அறிவித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி கிளாரன்ஸ் தோமஸ், கருத்தடைகள் மற்றும் ஓரினத் திருமணம் ஆகியவை அதன் அடுத்த இலக்குகள் என்பதை வெளிப்படையாகக் குறிப்பிட்ட அதேவேளையில், சிறப்பு விசாரணையில் சம்பந்தப்பட்ட எல்லா வழக்குகளும் இப்போது மறுபரிசீலனைச் செய்யப்படும் என்பதைத் தெளிவுபடுத்தினார். தேடுதல்கள் மற்றும் பறிமுதல்கள், பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், தொழிலாளர் நெறிமுறைகள் மற்றும் பிற பொது உரிமைகள் சம்பந்தமான அடிப்படை உரிமைகள் இதில் உள்ளடங்கும்.

ஜனநாயகக் கட்சியும் பைடென் நிர்வாகமும் அதிவலதுக்கு முறையீடு செய்வது மற்றும் சமாதானப்படுத்துவது ஆகிய நிலையான முயற்சிகளோடு ஜனநாயக உரிமைகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தாக்குதலுக்கு ஒத்துழைத்துள்ளனர். பைடென் அவரின் 'குடியரசுக் கட்சி நண்பர்களுக்காக' உரையாற்றுகையில், ரஷ்யாவுக்கு எதிரான ஏகாதிபத்திய போரைப் பின்தொடர்வதில் இருகட்சிகளின் ஏகமனதான நல்லிணக்கத்திற்கு முறையிட்டு வருகிறார். இந்த ஒருமனதான இருகட்சி முறைத் தீவிர வலதைச் சட்டபூர்வமாக்குவதுடன், அதிகரித்தளவில் பாசிச கட்சியான குடியரசுக் கட்சியைப் பலப்படுத்துகிறது, இது தான் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர் பைடென் பதவி ஏற்பதைத் தடுக்க முயன்றது.

போரைத் தீவிரப்படுத்துவதும் மற்றும் கருக்கலைப்புக்குத் தடை விதிப்பதும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளன என்பதோடு, ஜனநாயகம் ஏகாதிபத்தியத்துடன் பொருந்தாது என்ற அடிப்படை உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க அரசியல் பாரம்பரியம் என்ற அவரின் 1948 நூலில், வரலாற்றாளர் Richard Hofstadter முதலாம் உலகப் போரில் நுழைவதென 1917 இல் வில்சன் முடிவெடுப்பதற்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி உட்ரோ வில்சனுடன் பதிப்பாசிரியர் பிராங்க் கோப் நடத்திய ஒரு விவாதத்தின் நினைவுகளை மேற்கோளிடுகிறார்.

கோப் கருத்துப்படி, வில்சன் 'கூறினார், ஒரு போர் நடக்கும் போது அது போர் தான், அதைக் குறித்து இரண்டு கருத்துகள் இல்லை. ஆட்களை முன்களத்தில் மீளநிலைநிறுத்த அதற்கு உள்நாட்டில் தாராளமாக இல்லாமல் இருப்பது அவசியமாகிறது. சிந்தனைப்பூர்வ எல்லா மனிதர்களும் சமம் என்ற அரசின் கருத்துக்களைப் பேணியவாறு நம்மால் ஜேர்மனியுடன் சண்டையிட முடியாது.” “சண்டையிட வேண்டுமானால் மூர்க்கமாக ஈவிரக்கமின்றி இருக்க வேண்டும், ஈவிரக்கமற்ற மூர்க்கத்தனத்தின் உத்வேகம், காங்கிரஸ் சபை, நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ்காரர்களின் இதய ஒலியில் தொற்றி…, நம் தேசிய வாழ்வின் ஒவ்வொரு நூலிழையிலும் நுழையும்,” என்று வில்சன் கூறியதாகக் கோப் மேற்கோளிட்டிருந்தார்.

இது தான் ஒவ்வொரு ஏகாதிபத்திய மையத்தின் நிலையாக உள்ளது, மூன்று தசாப்த கால இடைவிடாத ஏகாதிபத்தியப் போர் அங்கே ஜனநாயகத்தை மூச்சுத் திணறடித்து, பிற்போக்குத்தனமான தீவிர அரசியல் சக்திகளை வளர்த்தெடுத்துள்ளது. பிரிட்டனில், போரிஸ் ஜோன்சன் அனேகமாக அவரின் அப்பட்டமான மோசடிக்காகவும் மற்றும் இழிவுகரமாக இலண்டன் வங்கிகளுக்கு அடிபணிந்ததற்காகவும் வரலாற்றிலேயே மிகவும் வெறுக்கப்படும் பிரதம மந்திரியாக உள்ளார். ஏகாதிபத்திய போரால் நாசமாக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கோரி வருபவர்களை ரவாண்டாவுக்கு நாடு கடத்துவது சட்டவிரோதமானது என்று மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் பட்டவர்த்தனமாகத் தீர்ப்பளித்தும் கூட அந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஜோன்சன் அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

பிரான்சில், இமானுவல் மக்ரோன் 'பணக்காரர்களின் ஜனாதிபதியாக' கடிந்து கொள்ளப்படுகிறார், பாசிச அதிவலது முந்தைய எந்தவொரு ஜனாதிபதி தேர்தலை விடவும் அதிக வாக்குகளை வென்றுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நிர்வாக நீதிமன்றம் அந்நாட்டின் மிகப் பெரும் புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக ஒரு அப்பட்டமான குரூர பாரபட்ச நடவடிக்கையில் அவர்களின் மத நம்பிக்கைகளுடன் இணைந்த வகையில் குளியல் உடை அணிவதிலிருந்து முஸ்லீம் பெண்களுக்குச் சமீபத்தில் தடை விதித்தது.

ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் மீது பாரியளவில் தாக்குதல் நடத்துவதன் அடிப்படையில் இந்தப் போர் நடத்தப்படும். ஓர் அரசாங்கம் மாற்றி ஓர் அரசாங்கம் மக்களிடம் கேட்காமல் உக்ரேனை ஆயுதமயப்படுத்துவதற்காகப் பில்லியன் கணக்கில் டாலர்களைப் பாய்ச்சி வருகின்றன. எதிர்கால இராணுவச் செலவுகளுக்கு வழி வகுக்கும் வகையில் வரவு செலவுத் திட்டக்கணக்கை சமப்படுத்துமாறு கோரும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பெருந்தொற்றுப் பரவி வருகின்ற போதும் கூட, வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கவும் மற்றும் கூலிகளைக் குறைக்கவும் நோக்கம் கொண்ட நிதிக் கொள்கைகளை அரசாங்கங்கள் செயல்படுத்துகின்ற போதும் கூட, போருக்கு நிதியளிப்பதற்காக, சுகாதார மற்றும் நலவாழ்வு திட்டங்கள் வெட்டப்படும்.

போரானது வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் கூடுதலாகத் தீவிரப்படுத்தி வருகிறது, இது பில்லியன் கணக்கான தொழிலாளர்களை முன்னோடியில்லாத மட்டத்திற்குப் பொருளாதாரக் கடினங்களை எதிர்கொள்ளத் தள்ளியுள்ளது. ஏகாதிபத்திய அரசாங்கங்கள், உலகப் பொருளாதாரத்துடன் ரஷ்ய அரசாங்கத்தின் உறவுகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில், பல விதத்தில் பட்டினிகளை எதிர் கொண்டு வரும் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் தியாகம் செய்து வருகின்றன. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில், போரின் காரணமாக உணவு, எரிவாயு, எரிபொருள், வாடகை மற்றும் அடிப்படைச் சேவைகளின் விலை உயர்ந்து வருகிறது, அதே நேரத்தில் பெருநிறுவனத் தொழிற்சங்க அதிகாரத்துவங்களோ கூலிகளை நசுக்குகின்றன.

உலகம் முழுவதும் ஒரு புரட்சிகர வெடிப்புக்கான நிலைமைகள் உருவாகி வருகின்றன. பெரு, இலங்கை, ஈக்வடார் மற்றும் பிற நாடுகளில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் பயங்கர மூர்க்கத்தனத்துடன் ஒடுக்கப்படுகின்றன.

ஐரோப்பாவில், பிரிட்டிஷ் இரயில் தொழிலாளர்கள், ஜேர்மனி மற்றும் கிரீஸில் கப்பல்துறை தொழிலாளர்கள், பிரான்ஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்தில் விமான நிலையத் தொழிலாளர்கள் உட்பட போக்குவரத்துத் தொழில்துறைகள் எங்கிலும் வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருகின்றன மற்றும் Easy Jet, Ryan Air, British Airways மற்றும் SAS இல் கண்டம் முழுவதும் விமானச் சிப்பந்திகள் மற்றும் விமானிகள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். பத்து ஆயிரக் கணக்கான கப்பல்துறை மற்றும் இரயில் தொழிலாளர்களால் வேலைநிறுத்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்காவில் கனரக தொழிற்துறையில் தொடர்ச்சியான சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன.

ஆளும் வர்க்கம் வேலைநிறுத்தங்களுக்குத் தடை விதிப்பதன் மூலமும், போர் முயற்சிக்குக் குழிபறிப்பதாக தொழிலாளர்கள் மீது பழி சுமத்துவதன் மூலமும் விடையிறுத்துள்ளது. பிரிட்டனில், டோரிகள் வேலைநிறுத்தம் செய்யும் இரயில் தொழிலாளர்களை 'புட்டினின் முகவர்கள்' என்று கண்டனம் செய்கின்றனர், அதே நேரத்தில் அமெரிக்க நீதிமன்றங்கள் தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கூறி வேலைநிறுத்தம் செய்வதிலிருந்து ரயில் தொழிலாளர்களுக்குத் தடை செய்துள்ளன. இது ஹிட்லரின் 'முதுகில் குத்தும்' சொல்லாடலின் நவீன பதிப்பாகும், அது முதலாம் உலகப் போரில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் தோல்விக்கு ஜேர்மன் தொழிலாளர்கள் மீதும் 1918 புரட்சி மீதும் பழி சுமத்தியது. ஸ்பெயினில், PSOE மற்றும் பொடேமோஸ் இன் 'ஜனநாயக' அரசாங்கம் இதே போன்ற காரணங்களுக்காக ஐரோப்பா தழுவிய வேலைநிறுத்தத்தில் இணைவதிலிருந்து விமான நிலைய தொழிலாளர்களுக்குத் தடை விதித்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்தி வாய்ந்த இயக்கத்தை அபிவிருத்தி செய்ய அழைப்பு விடுக்கின்றன. போருக்கு எதிரான போராட்டம், இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் போராட்டங்களில் வேரூன்றிய, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading