முன்னோக்கு

ஜோன்சனின் இராஜினாமாவின் பின்னர்: முதலாளித்துவத்திற்கும் போருக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜோன்சன் இராஜினாமா செய்தது ஒரு உலக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

இதுவரைக்கும் ஜோன்சன் பிரதம மந்திரியாக இருப்பதுடன் மற்றும் தனது இராஜினாமாவை இராணியிடம் ஒப்படைக்கவில்லை. டோரி கட்சியினுள் கசப்பான மோதல்கள் தொடர்கிறது. ஒரு காபந்து பிரதமருக்கு உடனடியாக வழிவகுக்குமாறு கேட்கப்பட்டபோது, ஒரு புதிய கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தான் பதவியில் இருக்கப்போவதாக ஜோன்சன் வலியுறுத்துகிறார்.

ஆனால் அடுத்து என்ன நடந்தாலும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போரின் போது அதிகாரத்தில் இருந்து வீழ்ந்த ஒரு பெரிய ஏகாதிபத்திய சக்தியின் முதல் தலைவராக ஜோன்சன் ஆகிறார். அவரது பொய்கள், 'ஒருமைப்பாடு' இல்லாமை மற்றும் டோரி கட்சியை இழிவுபடுத்துதல் பற்றிய முடிவில்லாத நல்லொழுக்கம் பற்றிய குறிப்புகளால் மறைக்கப்பட்ட அவரது வீழ்ச்சிக்கான உண்மையான காரணம், பிரிட்டனின் ஆளும் உயரடுக்கு உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதும் போரை தொடுக்கும் மற்றும் மூன்றாம் உலகப் போராகத் தீவிரமடைய அச்சுறுத்தும் ரஷ்யாவிற்கு எதிரான போரையும் நடத்தும் அவரது திறனில் நம்பிக்கை இழந்து விட்டது என்பதே.

அமெரிக்க ஜனாதிபதி பைடென் தனது செய்தியில் இந்த அடிப்படைக் கவலைகளை சுட்டிக்காட்டி, 'இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள எங்கள் நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் எங்கள் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடருவோம்' என்று உறுதியளித்தார். 'உக்ரேன் மக்கள் தங்கள் ஜனநாயகத்தின் மீதான புட்டினின் மிருகத்தனமான போருக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ளும்போதும், அதன் நடவடிக்கைகளுக்கு ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதியான மற்றும் ஐக்கியப்பட்ட அணுகுமுறையைப் பேண வேண்டியதன்' அவசியத்தை குறிப்பாக பைடென் சுட்டிக்காட்டினார்.

ஒரு கோபமான இராஜினாமா உரையில், ஜோன்சன் 'பிரெக்ஸிட்டை நடைமுறைப்படுத்தல்' 'பூட்டுதலில் இருந்து மிக வேகமாக வெளியேறுதல்' மற்றும் 'கடந்த சில மாதங்களில் உக்ரேனில் புட்டினின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கு நாடுகளை வழிநடத்தியது' என்று கூறப்படும் தனது சாதனைகள் எனப்படுபவற்றை மேற்கோள் காட்டினார்.

'மோசமான உள்ளுணர்வுகளுக்காக' தனது சொந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக தாக்கும் முன், அவர் பின்வருமாறு கூறினார், 'இப்போது உக்ரேன் மக்களிடம் நான் கூறுகிறேன், இங்கிலாந்தில் உள்ள நாங்கள் உங்கள் சுதந்திரத்திற்கான உங்கள் போராட்டத்தை தொடர்ந்து ஆதரிப்போம். அது எனக்குத் தெரியும்.' உக்ரேனை ஆயுதபாணியாக்குவதில் இங்கிலாந்து வகித்த முக்கிய பங்கு குறித்து ஜோன்சன் பலமுறை பெருமையாகக் கூறிக்கொண்டார். கடந்த வாரம்தான் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்த உறுதியளித்தார்.

அவரது அடுத்த செயல் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு தனிப்பட்ட தொலைபேசி அழைப்பாக இருந்தது. அதில் அவர் உக்ரேனுக்கு 'தேவைப்படும் வரை' 'இங்கிலாந்து தொடர்ந்து முக்கிய பாதுகாப்பு உதவிகளை வழங்கும்' என்று உறுதியளித்தார். செலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் ஜோன்சனுக்கு 'உக்ரேன் தொடர்பான அவரது தீர்க்கரமான நடவடிக்கைக்கு' நன்றி தெரிவித்தார். அவர் முடித்தார்: 'கிரேட் பிரிட்டனின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களின் தனிப்பட்ட தலைமையும் கவர்ச்சியும் அதை சிறப்பானதாக செய்துள்ளன'.

முன்னோடியில்லாத வகையில் 58 இராஜினாமாக்களுடன் ஜோன்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கிளர்ச்சியால் பதவியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் அவர் 'சட்டவிரோத' தாட்சர்வாத பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை சுமத்துவதற்கான அவரது வாக்குறுதிகள் மற்றும் போர்க்காலத்தில் அவர் பதவிவிலக்கப்படக்கூடாது என்ற அவரது வலியுறுத்தல் இருந்தபோதிலும், அவரது இந்த வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற முடியாதிருக்கும் அவர்கள் கருதினர்.

பின்தங்கிய தொழிலாள வர்க்க பிராந்தியங்களில் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு உணர்வு மற்றும் சமூக துன்பங்களை இழிந்த முறையில் கையாளுவதன் மூலமும், பிரெக்ஸிட் உருவாக்கிய அரசியல் குழப்பத்தை சுரண்டுவதன் மூலமும் அவர் ஆட்சிக்கு வந்தார். ஐக்கிய இராச்சியத்தின் டோரி வலதின் தாட்சர்வாத கனவுகளான உலக சந்தைகளை கைப்பற்ற ஒரு சுதந்திரமான பிரித்தானியா மற்றும் முற்றுமுழுதான மறுஒழுங்குபடுத்தல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான மிருகத்தனமான சுரண்டல் கொள்கையின் மூலம் சர்வதேச ஊக முதலீடுகளைப் பாதுகாப்பதற்கு ஒரு ஜனரஞ்சக மூடுதிரையை வழங்க அவர் முயன்றார்.

அந்த நிகழ்ச்சி நிரலை அவர் பின்பற்றியமை ஜோன்சனை பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் மிகவும் வெறுக்கத்தக்க மற்றும் இழிவுபடுத்தப்பட்ட நபராக ஆக்கியுள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு அவர் என்றென்றும், பூட்டுதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 'சமூக நோயெதிர்ப்பு சக்தி' திட்டத்திற்காக கிட்டத்தட்ட 200,000 இறப்புகளுக்கு வழிவகுத்து மற்றும் மில்லியன் கணக்கானவர்களை துன்பத்திற்கு இட்டுச் சென்றது அல்லது நீண்டகால நோயால் பாதிக்கப்பட செய்த ஒரு அரசியல் குற்றவாளியாகவே இருப்பார்.

'சமநிலைப்படுத்தப்படுத்துவதற்கு' அர்ப்பணித்துக்கொண்டதாக கூறும் நபர், தொற்றுநோய்களின் போது பெரும் பெருநிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் சமூக செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கு தலைமை தாங்கியதுடன், 1930 களின் பெரும் மந்தநிலைக்கு பின்னர் மில்லியன் கணக்கானோர் எதிர்நோக்கும் துன்பங்களுக்கும் கடுமையான நிலைமைகளுக்கும் காரணமான முன்னோடியில்லாத ஒரு வாழ்க்கை செலவு நெருக்கடியை ஆழப்படுத்தியவராவார்.

பூட்டுதல்களின் போது அரசியல்ரீதியான இழிவான அவரது மதுபான குடி களியாட்டங்களை பற்றி தூண்டிவிடப்பட்ட விமர்சனங்களை தவிர, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோன்சன் செய்த எந்தக் குற்றத்தையும் நாடாளுமன்றத்தில் நடந்த மோசமான அதிகாரப் போட்டியில் பங்கேற்பவர்கள் நிராகரிக்கவில்லை. ஏனெனில் இது அவர்களின் கொள்கைகளுமாகும்.

ஜோன்சனின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்திய இரண்டு அமைச்சரவை உறுப்பினர்களான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகிய இருவரும் பல மில்லியன் முதலீட்டு வங்கியாளர்களும், அவர்கள் ஊதிய உயர்வு மற்றும் அரசாங்கம் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தமது தலைமைக்கான போட்டியில் மையமாகக் கொண்டிருந்தனர்.

அவர்கள் முன்னாள் இராணுவ பிரமுகர்களின் ஆதிக்கத்தில் ஒரு தலைமைப் போட்டியை கட்டவிழ்த்து விட்டார்கள். ஜோன்சனை மாற்றுவதற்கு இடம் பிடித்தவர்களில் Scots Guard இன் முன்னாள் கேப்டனும் பாதுகாப்புச் செயலருமான பென் வாலஸ்; ராயல் நேவி ரிசர்ஸ்ட் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பென்னி மோர்டான்ட்; ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் முன்னாள் இராணுவத்தினரும் மற்றும் நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவரான லெப்டினன்ட் கேர்னல் டாம் துகென்தாட் ஆகியோர் உட்பட வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் போன்ற பல்வேறு வெறித்தனமான போர்வெறியர்களும் இதில் அடங்குவர்.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் அடுத்த கட்டத் தாக்குதலையோ அல்லது ஐரோப்பாவில் நேட்டோவின் போரை நடத்துவதையோ நம்பிவிட முடியாத அளவுக்கு, பிளவுபடுத்தும் மற்றும் மதிப்பிழந்த நபராக ஜோன்சன் இருக்கிறார் என்பதுதான் கிட்டத்தட்ட அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்ற தலைமைத்துவத்திற்கு எதிரான சவாலை தூண்டுவதிலிருந்த அரசியல் பயமாகும்.

பிரிட்டிஷ் முதலாளித்துவம் ஒரு உலகளாவிய முதலாளித்துவ நிலைமுறிவு, இன்னும் பொங்கி வரும் தொற்றுநோய், உலகளாவிய பணவீக்க சுழல், வர்த்தகப் போர், போரின் வெடிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு கடுமையான அரசியல் நெருக்கடியில் உள்ளது.

தேசிய இரயில் வேலைநிறுத்தங்களுக்கு பின்னர் பதினைந்து நாட்களுக்குள் டோரி தலைமைத்துவ நெருக்கடி வெடித்துள்ளது. இதன் போது ஜோன்சனின் அமைச்சர்கள் கருங்காலிகளை அணிதிரட்டும் அடக்குமுறைச் சட்டங்களுக்கான திட்டங்களுடன் பதிலளித்து, அத்தியாவசிய சேவைகளில் வேலைநிறுத்தங்களை தடைசெய்ததுடன் மற்றும் இரயில்வே ஊழியர்களை 'புட்டினின் கைக்கூலிகள்' என்று கண்டனம் செய்தனர். இது இன்னமும் மிகவும் மோசமாக அச்சுறுத்தப்படுகிறது.

1995 க்குப் பின்னர் முதல் தேசிய இரயில் வேலைநிறுத்தத்தை அச்சுறுத்தும் வகையில் இரயில் ஓட்டுநர்கள் மற்றும் நிர்வாகத்துறை இரயில் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வேலைநிறுத்த வாக்கெடுப்பு நடந்து வருகின்றன. 1,000 க்கும் மேற்பட்ட அஞ்சல் விநியோக அலுவலகங்களில் உள்ள 2,400 மேலாளர்கள் உள்ளடங்கலாக முப்பதாயிரம் பிரித்தானிய தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்துள்ளனர். 115,000 தபால் ஊழியர்களுக்கு வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

நூறாயிரக்கணக்கான ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கை மற்றும் தேசிய சுகாதார சேவை முழுவதும் வேலைநிறுத்த அச்சுறுத்தல்களுடன் மூன்று மில்லியன் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் நடைபெறலாம். பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் 'அதிருப்தியின் கோடைக்காலம்' ஒரு சூடான இலையுதிர்காலமாகவும், சீற்றத்தின் குளிர்காலமாகவும் மாறும் என்று அஞ்சுகிறது. சுனக்கின் ஆலோசகராக இருக்கும் தனிப்பட்ட நிதிய தலைவர் மார்ட்டின் லூயிஸ், Newsnight இல் “நான் முன்பு கூறியது போல், பொதுக் கீழ்ப்படியாமையின் நிலைக்கு நாங்கள் நெருங்கி வருகிறோம் … 10 மில்லியன் மக்களை கடுமையான வறுமை நிலைக்கு நகர்த்தக்கூடிய ஒரு உண்மையான பேரழிவான நெருக்கடி எங்களிடம் உள்ளது. … நீங்கள், குளிர்காலம் வருவதற்கு முன்பு இதற்கு ஒரு வழி கண்டு ஒழுங்குபடுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.

டோரி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஒரு பொது வேலைநிறுத்தம் தோன்றுவதற்கான நிலைமைகள் உள்ளன. அதற்குப் பதிலாக, ஜோன்சன் 10வது இலக்கத்தில் தொடர்ந்து அமர்கிறார். அதே நேரத்தில், முடிவில்லாத ஊதிய வெட்டுக்கள் மற்றும் ஆழமான சமூக சமத்துவமின்மையை தொடர, ஒரு புதிய தலைவருக்கான விரைவான மாற்றத்தை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்று அவரது கட்சி விவாதிக்கிறது.

உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் ஆழ்ந்த மதிப்பிழந்த அரசாங்கங்களின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரான்சில் உள்ள மக்ரோன் போன்றவர்கள் சரிவின் விளிம்பில் தள்ளாடி வருவதுடன் மற்றும் அதிகரித்துவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக அமைதியின்மையை எதிர்கொள்கின்றனர். ஆயினும்கூட, வலதுசாரிக் கொள்கைகள் நீடிப்பதுடன் மேலும் பாரிய எதிர்ப்புகள் இப்போக்கில் சிறிதளவு மாற்றத்தையும் ஏற்படுத்தாதுள்ளது.

இதற்கான அரசியல் பொறுப்பு தொழிற்சங்க அதிகாரத்துவம், பழைய சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் அவற்றின் போலி-இடது சுற்றுவட்டங்களிடமே உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு தொழிற்சங்கமும் இப்போது செயலில் வேலைநிறுத்த வாக்கெடுப்பு தொடர்பாக ஈடுபட்டுள்ளன அல்லது அவை நடத்தப்படுவதை தாமதப்படுத்துகின்றன. ஹீத்ரோ விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் நேற்று அறிவித்தது. வீழ்ச்சியடைந்து வரும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பலனற்ற பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதால் இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தால் (RMT) கூடுதல் வேலைநிறுத்தத்திற்கான எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை.

பாராளுமன்றத்தில் தொழிற் கட்சியானது அனைத்து முக்கிய பிரச்சினைகளிலும் டோரிகளிடமிருந்து பிரித்தறிய முடியாததாக உள்ளது, சேர் கெய்ர் ஸ்டார்மர் இரயில் தொழிலாளர்களின் மறியல்களை பார்வையிட்ட ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஒழுங்கு நடவடிக்கையால் அச்சுறுத்தினார். தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்யாவிற்கு எதிராக போர் தொடுப்பது உட்பட 'தேசிய நலன்களை' பாதுகாக்க காத்திருக்கும் ஒரு அரசாங்கமாக தொழிற்கட்சி தனது சேவைகளை வழங்கியுள்ளது.

ஸ்டார்மர், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைப்பதாக அச்சுறுத்தினார், அது நிறைவேறாது. மேலும் டோரிகள் தாமாகவே ஜோன்சனை நீக்கினாலும் இது நிறைவேறாது. மேலும் ஸ்டார்மர் தொழிற்கட்சிக்கு மட்டுமே தலைமை தாங்குகிறார், ஏனெனில் ஐந்து ஆண்டுகளாக ஜெரமி கோர்பின் தனது சொந்த தலைமையை பயன்படுத்தி டோரிகளுக்கும் மற்றும் பிளேயர்வாதிகளுக்கும் எதிரான எதிர்ப்பை அணிதிரட்டினார்.

ஆயினும் மீண்டும் ஒருமுறை போலி-இடது குழுக்கள் தொழிலாளர்களை அதிகாரத்துவத்தின் கைகளில் தங்கள் தலைவிதியை ஒப்படைக்குமாறு வலியுறுத்துகின்றன. சோசலிச தொழிலாளர் கட்சி 'RMT இரயில் தொழிற்சங்கத் தலைமைக்கு' 'வேலைநிறுத்த வேலைத்திட்டத்திற்கு அழைப்பு விடுக்கவும்' மற்றும் 'ஏனைய தொழிற்சங்கத் தலைவர்கள்' 'ஊதியம் தொடர்பாக பாரிய போராட்டத்தை நடத்த' அழைப்பு விடுக்கிறது. சோசலிஸ்ட் கட்சி 'பெருகிவரும் மோதல்களை ஒன்றிணைக்க' செப்டம்பரில் தொழிற்சங்க காங்கிரஸின் கூட்டிற்கு அழைப்பு விடுக்கிறது. மேலும் 'தொழிற்சங்க தலைவர்கள் அல்லது ஜெரமி கோர்பின் சுதந்திரமாக நின்றால்' தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதித்துவம்' தீர்க்கப்பட்டுவிடும் என்கின்றது.

அனைத்தும் தொழிலாள வர்க்கம் அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமாக தலையிடுவதிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சியின் பிடியிலிருந்து விடுபட்டு, டோரிகளை வீழ்த்துவதற்கு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கையை எழுப்புவதிலுமே தங்கியுள்ளது. இதற்கு சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை பணியிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் உருவாக்கி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வலைப்பின்னலை உருவாக்க வேண்டும்.

தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தப்படும் இந்தக் குழுக்கள், இரயில், சுகாதாரப் பாதுகாப்பு, தபால், தொலைத்தொடர்பு, கல்வி, அரசு ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களின் போராட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கொள்கைகளுக்காக ஒருங்கிணைக்க முடியும்.

சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணி (IWA-RFC) மூலம், பிரித்தானியாவில் உள்ள தொழிலாளர்கள், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் போராட்டத்தில் வரும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். பெல்ஜியம், கிரீஸ் மற்றும் இத்தாலியில் சமீபத்திய பொது வேலைநிறுத்தங்கள், ஐரோப்பா முழுவதும் விமானத் தொழிலாளர்கள் மற்றும் பிரான்சில் உள்ள இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் ஆகியவை ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலுக்கான நிலைமைகள் இப்போது இருப்பதைக்காட்டுகின்றன. இது ஒரு தடுத்து நிறுத்த முடியாத சக்தியாகவும், அரசின் தாக்குதல்களைத் தோற்கடிக்கவும், அரசாங்கங்களை பதவி நீக்கவும், சிக்கன நடவடிக்கை மற்றும் போர் பற்றிய அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு முடிவு கட்டவும், மற்றும் அனைவருக்கும் தரமான வேலைகள், ஊதியங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் சோசலிச கொள்கைகளை செயல்படுத்தவும் உத்தரவாதமளிக்கும்.

Loading