முன்னோக்கு

நியூ யோர்க் நகரம் அணு ஆயுதப் போர் எச்சரிக்கை விடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை, நியூ யோர்க் நகரின் அவசர மேலாண்மை அலுவலகம் (OEM) அமெரிக்காவின் அந்த மிகப் பெரிய நகரின் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று நகரவாசிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி, 90 வினாடி பொதுச் சேவை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

“ஆகவே ஓர் அணுகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. ஏன், எப்படி என்று என்னிடம் கேட்காதீர்கள், ஒரு மிகப் பெரிய குண்டு வீசபட்டுள்ளது என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்,” என்ற விவரிப்புடன் அந்தக் காணொளி தொடங்குகிறது.

சேதமடையாத சொகுசு அடுக்கு மாடி குடியிருப்பில் நின்று, அதை விவரித்துக் கொண்டிருப்பவர், பின்வரும் பரிந்துரைகளை வழங்குகிறார்: “உள்ளே செல்லுங்கள்,” “வெளியே வராதீர்கள்,” மேற்கொண்டு அறிவுறுத்தல்கள் வரும் வரைக் காத்திருங்கள் என்கிறார்.

நியூயார்க் நகர அணுசக்தி தயாரிப்பு PSA (தலைப்புகளுடன்)

நகரவாசிகளுக்கு வழங்கப்படும் அறிவுரையில் 'சோப்பு அல்லது ஷாம்பு தேய்த்துக் குளிக்கவும்' இணையவழி தொலைபேசி ஆப் 'NYC இன் தகவல் அறிவிப்பை' பயன்படுத்தி 'தொடர்பில் இருங்கள்' என்பவையும் உள்ளடங்கி உள்ளன. அதை விவரித்துக் கொண்டிருப்பவர் காட்சியிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், “சரியா? உங்களுக்குப் புரிந்திருக்கும்,” என்று கூறியதும் காணொளி முடிவடைகிறது.

அந்தக் காணொளியின் மென்மையான வருணனையில் இருந்து அதன் அற்பத்தனமான அறிவுரை வரை, அதில் இருந்த ஒவ்வொன்றும் முற்றிலும் அபத்தமாக உள்ளது.

நியூ யோர்க் நகரில் ஓர் அணு ஆயுதத் தாக்குதல் நடந்தால், அங்கே தங்குவதற்கு எந்தக் கட்டிடங்களும் இருக்காது, குளிக்கத் தண்ணீர் இருக்காது, தொலைபேசி தகவல் அறிவிப்புகளைப் பெற இணைய வசதி இருக்காது.

முதலில் பார்க்கையில், அந்தக் காணொளியைத் தயாரித்து வெளியிட்டவர்கள் யோசனையின்றிப் பேசிக் கொண்டிருப்பதாகத் தான் தோன்றும்.

ஆனால் முக்கிய உள்நாட்டு மக்கள் பிரச்சினைகளைக் கையாளும் அத்தகைய ஒரு காணொளியை, பென்டகன் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மட்டுமே தயாரித்திருக்க முடியும். அதன் அபத்தம் அறியாமையின் விளைவல்ல, மாறாக ஏமாற்றுத்தனத்தில் இருந்து வருகிறது. அணு ஆயுதப் போரின் பயங்கரமான யதார்த்தத்தை மறைத்து, அந்தக் கருத்தைப் பொது மக்களிடையே புழக்கத்தில் விடுவதே அதன் நோக்கமாகும்.

நியூ யோர்க் நகரம் மீதான ஓர் அணு ஆயுதத் தாக்குதல் முழு அளவிலான அணு-வெப்பாற்றல் (thermonuclear) பரிவர்த்தனையின் பாகமாக இருக்கும், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ஆயிரக் கணக்கான போர்த் தளவாடங்களை ஏவுவது அதில் உள்ளடங்கி இருக்கும்.

அத்தகைய ஒரு நிகழ்வு, ஒப்பீட்டளவில், 9/11 சம்பவத்தை மிக மிகச் சிறிய ஒன்றாக ஆக்கி விடும். அந்த நகரமும் அதன் சுற்றுப்புறங்களும் பல அணு-வெப்பாற்றல் குண்டுகளால் தாக்கப்பட்டிருக்கும், அவை ஒவ்வொன்றும் ஹிரோஷிமாவை நாசமாக்கிய 'ஃபேட் மேன்' (“Fat Man”) அணுக் குண்டை விட நூறு மடங்கு அதிக அழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.

அத்தகைய ஒரு சூழலில், ஒட்டுமொத்த நியூ யோர்க் நகர வான்வெளியும் சாம்பலால் நிறைந்திருக்கும் என்பதோடு, அந்தப் பெருநகரின் வானளாவியக் கட்டிடங்களில் தஞ்சம் புகுந்தக் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் கொல்லப்பட்டிருப்பார். நிலத்தடியில் தஞ்சம் புகுந்தவர்களில் எப்படியோ உயிர் பிழைத்தவர்கள் விவசாயம் மற்றும் வர்த்தகத்தின் பொறிவை மட்டுமல்ல, மாறாக ஆண்டாண்டுக்கும் தொடர்ந்து அவர்களைக் கொல்லும் மற்றும் ஊனமாக்கும் அணுக் கதிர்வீச்சின் நிரந்தரப் பாதிப்புகளையும் முகங்கொடுப்பார்கள்.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஓர் அணு ஆயுதப் பரிமாற்றம், 'உலகம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாதவாறு சூரியனையே இருட்டாக்கும் அளவுக்கு வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் புகையையும் சாம்பலையும் வெளியிடும்' என்று கடந்த மாதம் லூசியானா மாநிலப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் ஆய்வு குறிப்பிட்டது.

இத்தகைய ஒரு பரிமாற்றம், உலக வெப்பநிலையைத் தோராயமாக 13 டிகிரி குறைக்கும், அது சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்னர் முடிந்த கடைசி பனி யுகத்தை விட அதிகமாக இருக்கும் என்று அந்த ஆய்வுக் கண்டறிந்தது.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஓர் அணு ஆயுதப் போர் தூண்டிவிடும் உலகளாவிய பனியுகம், மிகவும் தொலைதூரப் பசிபிக் தீவுகளுக்கு உள்ளேயோ அல்லது அடர்ந்த அமேசன் மழைக் காடுகளுக்கு வெகு உள்ளேயோ வாழ்பவர்களாக இருந்தாலும் கூட, இப்புவியின் ஒவ்வொரு பாகத்தின் மக்களையும் அழித்து விடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், PSA இல் சித்தரிக்கப்பட்ட சூழல் மனிதகுல நாகரீகத்தின் முடிவாக இருக்கும்.

'ஏன், எப்படி என்று என்னிடம் கேட்காதீர்கள்,” என்று குறிப்பிட்டு PSA தொடங்குகிறது. ஆனால், இந்தப் பயங்கர சாத்தியக்கூறை எதிர்கொண்டுள்ள மக்கள்—இன்னும் தாமதமாகி விடும் முன்னர்—'ஏன்' “எப்படி' என்று தெளிவாகக் கேட்க வேண்டும்.

அமெரிக்காவின் அந்த மிகப் பெரிய நகரின் OEM, பல தசாப்தங்களாக இல்லாமல் அணு ஆயுதப் போர் குறித்து முதல் முறையாகப் பொதுச் சேவை அறிவிப்பை வெளியிட இப்போது தான் சரியான நேரம் என்று முடிவு செய்தது ஏன் என்பதை சிறிதும் விளங்கப்படுத்தவில்லை.

'அச்சுறுத்தல் பரப்பெல்லைத் தொடர்ந்து பரிணமித்து வருவதால், எந்தவொரு உடனடி அச்சுறுத்தலுக்கும் நாம் தயாராகி வருகிறோம் என்பதையும், அவர்கள் தகவல் அறிந்து பாதுகாப்புடன் இருக்கத் தேவையான ஆதார வளங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம் என்பதையும் நியூ யோர்க் நகரவாசிகள் அறிந்திருப்பது முக்கியம்,” என்று நியூ யோர்க் நகர அவசர மேலாண்மை ஆணையர் சாக் இஸ்கோல் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நேரம் குறித்து கேள்வி எழுப்பும் விதமாக, “நாங்கள் தெரிந்து கொள்ள ஏதாவது' உண்டா என்று கேட்டதற்கு, நியூ யோர்க் நகர நகர சபைத் தலைவர் எரிக் ஆடம்ஸ், “உக்ரேன் தாக்குதல்களுக்கு' பின்னர் PSA அறிவிக்கப்பட்டதாகப் பதில் கூறியதுடன், “உக்ரேனில் நடந்த சம்பவங்களுக்குப் பின்னர் உண்மையிலேயே தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது' என்று அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பின்னர் தொடர்ந்து கூறினார்.

ஆனால் இந்த மழுப்பலான அறிக்கைகள் இன்னும் கேள்விகளை மட்டுமே எழுப்புகின்றன. இந்த அறிவிப்பை உருவாக்குவதற்கான அறிவுறுத்தல்கள் பெடரல் அரசாங்கத்தில் இருந்து வந்ததா? மற்ற நகரங்களுக்கும் இதே போன்ற அறிவிப்புகள் விடுக்கப்படுமா? இந்தக் காணொளியை வெளியிடுமாறு யார் முன்மொழிந்தார்கள்?

எந்த அளவுகோலின்படி பார்த்தாலும், இப்படியொரு காணொளி வெளியிடப்படுவது ஒரு முக்கிய செய்தியாகும். வாஷிங்டனிடம் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் செயல்பட்டுள்ள, நியூ யோர்க் நகர அதிகாரிகள், அணு ஆயுதப் போரை இப்போது தெளிவாகத் தென்படும் ஓர் உடனடி ஆபத்தாகப் பார்க்கிறார்கள் என்பதை மட்டுமே இந்த அறிவிப்பின் வெளியீடு அர்த்தப்படுத்த முடியும்.

யதார்த்தம் என்னவென்றால், இந்தக் காணொளி, அணு ஆயுதப் போருக்கான அமெரிக்க அரசாங்கத்தின் திட்டங்களுக்குப் பொது மக்களைப் பழக்கப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியின் பாகமாகும்.

நேட்டோ உச்சி மாநாட்டுக்கு வெறும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்கா, மற்ற நேட்டோ நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யா மற்றும் சீனா உட்பட, 'அணு ஆயுதமேந்திய சகப் போட்டியாளர்களுக்கு எதிராக அதிதீவிரம் … போர்ச் சண்டைக்கான' திட்டங்களை அறிவித்திருந்தது.

பல ஆண்டுகளாக அமெரிக்க அணு ஆயுதப் படைகளைக் கட்டமைத்து, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது மற்றும் நிலைநிறுத்துவதில் எஞ்சியிருந்த எல்லா சர்வதேசக் கட்டுப்பாடுகளையும் முறையாக அகற்றியதைத் தொடர்ந்து அணு ஆயுதப் போர்த் திட்டங்கள் குறித்த இந்தப் பகிரங்கமான அறிவிப்பு வருகிறது.

2018 இல், ட்ரம்ப் நிர்வாகம் மத்திய தூர அணு ஆயுதங்கள் தடை உடன்படிக்கையில் இருந்து வெளியேறியதன் மூலம், ஒரு சில நிமிட நேரங்களில் முக்கிய நகரங்களைத் தாக்கத் தகைமைக் கொண்ட குறுகிய தூர அணு ஆயுதங்களுடன் ரஷ்யா மற்றும் சீனாவை வளைப்பதற்கு அமெரிக்காவைச் சுதந்திரமாக்கிக் கொண்டது. இது பாரியளவில் அமெரிக்காவின் அணு ஆயுத நவீனமாக்கல் திட்டத்தின் விரிவாக்கத்துடன் சேர்ந்திருந்தது, இதன் செலவு அடுத்தடுத்து அண்மித்து 12 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரிக்கப்பட்டது.

பைடென் நிர்வாகம் அதற்கு முந்தைய நிர்வாகங்களின் அணு ஆயுதத் தயாரிப்புகளை இரட்டிப்பாக்கி உள்ளது. பைடென் முன்மொழிந்துள்ள 2023 வரவு-செலவுத் திட்டக்கணக்கு அமெரிக்க அணு ஆயுத 'முப்படையின்' ஒவ்வொரு ஆயுத அமைப்பிலும் புதிய ரகங்களை உருவாக்குவதற்கு அழைப்பு விடுக்கிறது.

அதன் அணு ஆயுதப் படைகளை முறையாகக் கட்டமைப்பதன் மூலமும், சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கைகளை முறிப்பதன் மூலமும், அணு ஆயுதமேந்திய அரசுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் பொறுப்பற்ற முறையில் மோதல்களைத் தூண்டுவதன் மூலமும், அமெரிக்கா அதன் சொந்த மக்களையும், உலக மக்களையும், மிகப் பெரும் ஆபத்தில் ஆழ்த்தி வருகிறது.

கிரிமியாவை தாக்க நடைமுறையளவில் உக்ரேனுக்குப் பகிரங்கமான ஒரு பச்சை விளக்குக் காட்டும் வகையில் கடந்த வாரம் பென்டகன் ஒரு நடவடிக்கை எடுத்தது, இது ரஷ்யாவுடன் அணு ஆயுதப் பதிலடியைத் தூண்டக்கூடும் என்று பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யாவுடன் அமெரிக்கா அதன் போரைத் தீவிரப்படுத்துகின்ற அதேவேளையில், அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அமெரிக்காவின் தளபதிகள் பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர்.

'நம்மை முழுமையாக அதைரியப்படுத்த நாம் அனுமதித்துள்ள அணு ஆயுதங்கள் மற்றும் மூன்றாம் உலகப் போர்க் குறித்து நாங்கள் மிகவும் கவலைக் கொண்டுள்ளோம்,” என்று ஐரோப்பாவின் முன்னாள் உயர்மட்ட அமெரிக்க இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பிரெட்ரிக் பி. ஹோட்ஜஸ் ஏப்ரலில் கூறினார். “என்ன நடக்குமோ என்ற மிகைப்பட்ட பயத்தால் நாம் தைரியம் இழந்துள்ளோம்,” என்று அவர் குறைபட்டுக் கொண்டார்.

வாஷிங்டனின் அணு ஆயுதப் போட்டியும் ரஷ்யா உடனான அதன் போரை அது தீவிரப்படுத்துவதும் மற்றும் சீனா உடனான அதன் மோதலும், போர் மூலமாக உலகளாவிய மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பல தசாப்த கால முனைவின் விளைவாகும், இது ஏற்கனவே ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவின் சீரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இப்போது, ஒரு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து வெளி வர எந்தப் பாதையும் தெரியாமல் அதை எதிர்கொண்டுள்ள ஆளும் வர்க்கம் பொறுப்பற்ற முறையில் அணு ஆயுதப் போருக்கு இட்டுச் செல்ல அச்சுறுத்தும் மோதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தப் பெருந்தொற்றுக்கு அமெரிக்க முதலாளித்துவத்தின் கொலைபாதக விடையிறுப்பில் எடுத்துக் காட்டப்பட்டதைப் போல, அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் நோக்கங்களைப் பின்தொடர்வதில் நூறு ஆயிரக் கணக்கான அமெரிக்கர்களின் உயிர்களைத் தியாகம் செய்யவும் கூடும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தப் பொறுப்பற்ற கொலைபாதகப் போர் நோக்கங்களை நிறுத்த தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் தலையீடு தேவைப்படுகிறது. நாடு முழுவதும், தொழிலாளர்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி வருகிறார்கள். உலகம் முழுவதும், தொழிலாளர்கள் இந்தப் போருக்கு எதிரான போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். இந்த முன்னோக்குடன் உடன்படும் நம் வாசகர்கள் இன்றே எம்மைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading