ரஷ்யாவிற்கு எதிரான பைடெனின் போர்விரிவாக்கம் அணுவாயுத போரை அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

[AP Photo/Vadim Ghirda]

அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், எந்த வெளிப்படையான விவாதமும் இல்லாமல் பைடென் நிர்வாகம் அமெரிக்காவை ரஷ்யாவுடனான அணுவாயுத மோதலை நோக்கி இட்டுச்செல்கிறது.

இந்த வாரம், முன்பு பைடென் பதவிவகித்திருந்த டெலவேர் காங்கிரஸ் பதவியை தற்போது வைத்திருக்கும் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் கூன்ஸ், உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போராட அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவது பற்றி ஒரு 'உரையாடலுக்கு' அழைப்பு விடுத்தார்.

'நாங்கள் மிகவும் ஆபத்தான தருணத்தில் இருக்கிறோம்,' என்று கூன்ஸ் கூறினார். 'இருகட்சி மற்றும் பொருத்தமான வழியில், காங்கிரஸிலும் நிர்வாகத்திலும் உள்ள நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்பது பற்றியும் உக்ரைனின் பாதுகாப்பிற்கு ஆயுதங்களை மட்டும் அனுப்பாமல் துருப்புக்களை அனுப்புவதற்கும் ஒரு பொதுவான நிலைப்பாட்டிற்கு வருவது முக்கியம்” என்றார்.

பைடெனின் 'நெருக்கமான செனட் கூட்டாளி' மற்றும் 'அரசின் நிழல் செயலாளர்' என்று Politico அழைத்த கூன்ஸ், ரஷ்யாவுடன் நேரடிப் போருக்கு அழைப்பு விடுத்தார்: அமெரிக்கத் துருப்புக்கள் ரஷ்யர்களை சுட்டுக் கொல்லவும் உக்ரேனுக்கு அனுப்பப்பட வேண்டும். மற்றும் தவிர்க்க முடியாமல் அவர்கள் ரஷ்யர்களால் சுட்டும் மற்றும் கொல்லப்படுவர்.

பைடெனின் நெருங்கிய செனட் பிரமுகர், வெள்ளை மாளிகையின் உத்தரவின் பேரில், நன்கு அறியப்பட்ட அரசியல் சூழ்ச்சியில், ஒரு மூன்றாம் தரப்பினரின் மூலம் நிர்வாகம் விரும்பும் கொள்கை மாற்றத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த அறிக்கையை தெளிவாகக் கூறினார்.

கூன்ஸின் அறிக்கைக்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, 'ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் ரஷ்யாவுடன் போருக்குப் படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை' என்றார். ஒரு தகவல்துறைச் செயலர் ஒரு நிர்வாகத்திற்கு ஏதாவது செய்ய 'திட்டம் எதுவுவில்லை' என்று கூறினால், அந்தத் திட்டங்கள் ஜனாதிபதியின் மேசையில் கையெழுத்திடத் தயாராக உள்ளன என்று அர்த்தப்படுகின்றது.

கூன்ஸின் அறிக்கை இன்னும் திகைப்பூட்டுவதாக உள்ளது. ஏனென்றால் உக்ரேனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்படுவது 'மூன்றாம் உலகப் போருக்கு' சமம் என்று கடந்த மாதம் பைடென் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பனிப்போர் நான்கரை தசாப்தங்களாக நீடித்தது. அந்த நேரத்தில், சோவியத் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ மோதல் கூட இருக்கவில்லை. ஏனென்றால், நேரடி இராணுவ மோதல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும், மேலும் இது பெரும்பாலும் உலகத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது பொதுவான அறியப்பட்டிருந்தது.

'பரஸ்பர உறுதியளிக்கப்பட்ட அழிப்பு' கோட்பாடு என்பது அணுவாயுத போரில் வெற்றிபெற வழியும் இல்லை என்ற விளக்கத்தையும், மேலும் எந்தவொரு பொதுவான போரும் அணுவாயுதசக்தி போரை அச்சுறுத்துகின்றது என்பது ஒரு பயனுள்ள 'தடுப்பு' ஆகச் செயல்பட்டது.

ஆனால் இராணுவ அதிகாரிகள் இப்போது அமெரிக்கா 'தடுக்கப்படக்கூடாது' என்று வலியுறுத்துகின்றனர். நியூ யோர்க் டைம்ஸிடம் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் பிரடெரிக் பி. ஹோட்ஜஸ், ஐரோப்பாவின் முன்னாள் அமெரிக்க இராணுவத் தளபதி, “ஏழு வாரங்களுக்கு முன்பு, அவர்கள் ஸ்டிங்கர் ஏவுகணைகளை வழங்கலாமா என்று விவாதிட்டனர் — அது இப்போது எவ்வளவு முட்டாள்தனமாகத் தெரிகிறது?... என்ன நடக்கக்கூடும் என்ற மிகைப்படுத்தப்பட்ட பயத்தினால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்' என்றார்.

இது இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் நேட்டோவின் முன்னாள் நேசநாடுகளின் மேல்மட்டதளபதியான பிலிப் ப்ரீட்லோவின் கருத்துக்களை எதிரொலித்தது. அவர் Voice of America இடம் பின்வருமாறு கூறினார்: 'நாங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு, நாங்கள் எங்களை முழுமையாகத் தடுக்க அனுமதித்துள்ளோம். மேலும் புட்டின் வெளிப்படையாக, முற்றிலும் தடுக்கப்படவில்லை”.

இரண்டு வெவ்வேறு உயர்மட்ட தளபதிகளால் ஒரே மாதிரியான வரையறையைப் பயன்படுத்துவது அமெரிக்க இராணுவக் கோட்பாட்டில் ஒரு அடிப்படை மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.

பெரும்பாலான அமெரிக்க மக்களின் மரணத்தை அச்சுறுத்தும் மூலோபாய அணு ஆயுதங்களின் சாத்தியமான பயன்பாடு, ஒரு 'தடுப்பு' என்று கருத முடியாது. இது கணக்கிடப்பட்ட அபாயமாக மாற வேண்டும். அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா ரஷ்யாவுடன் அணுவாயுத போரின் சாத்தியப்பாட்டை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான ரஷ்ய படையினரின் இழப்புக்கு வழிவகுக்க இட்டுச்செல்லும் அமெரிக்க ஆயுதங்களை உக்ரேனுக்குள் இறைக்கப்படுவதால், கிரெம்ளின் ஒன்றும் செய்யாது என்ற அதிர்ச்சியூட்டும் பொறுப்பற்ற அறிவிப்புடன் இது இணைந்துள்ளது.

'புட்டின் அணு ஆயுதங்களை நீண்டகாலத்ன் பின்னரும் பயன்படுத்துவதை சிந்திப்பதாக நான் நினைக்கவில்லை' என்று பைடென் பெப்ரவரியில் கூறினார்.

பைடெனை அவ்வாறு மிகவும் உறுதியாக கூறவைப்பது எது?

ஏறக்குறைய 6,000 மைல்களுக்கு அப்பால் உள்ள உக்ரேனில் நடக்கும் மோதலை அணு ஆயுதப் போரின் ஆபத்தில் ஆழ்த்துவது பிரயோசமானது என்று அமெரிக்கா அறிவித்தால், உக்ரேனுடன் 1,400 மைல் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ரஷ்யாவின் அரசாங்கம் ஏன் அப்படி உணரவில்லை?

உக்ரேன் போர் ஏற்கனவே, வார்த்தையளவில் கூறப்படாவிட்டாலும், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளின் போர் ஆகும். பைடென் நிர்வாகத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா $3.2 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவியை செய்துள்ளது. இதில் போர் தொடங்கியதில் இருந்து வழங்கப்பட்ட 2.6$ பில்லியன் உள்ளடங்கும். அதன் நேட்டோ நட்பு நாடுகளுடன் சேர்ந்து, அமெரிக்கா உக்ரேனை விமான எதிர்ப்பு மற்றும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், துப்பாக்கிகள், இராணுவ உபகரணங்கள் மற்றும் மில்லியன் கணக்கான தோட்டாக்களின் வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த வாரம், பைடென் நிர்வாகம் மற்றொரு 1 $ பில்லியன் மேம்பட்ட ஆயுதங்களுக்கான திட்டங்களை அறிவித்தது.

இவையெல்லாம் அமெரிக்கா பகிரங்கமாக ஒப்புக்கொண்டது மட்டுமே. அமெரிக்க துருப்புக்கள் ஏற்கனவே உக்ரேனில் இரகசியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், Le Figaro இன் மூத்த சர்வதேச நிருபர் ஜோர்ஜஸ் மல்புனோ இன் வார்த்தைகளில், 'அமெரிக்கர்கள் தான் பொறுப்பில் உள்ளனர்' என்றும் ஊடக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமெரிக்கர்கள்தான் இராணுவ திட்டமிடுபவர்கள் என்றால், அசோவ் படைப்பிரிவினரின் பாசிஸ்டுகள் கீழ்மட்ட அதிகாரிகளாக இருப்பதுடன் மற்றும் கட்டாயமாக அணிதிரட்டப்பட்ட உக்ரேனின் உழைக்கும் மக்கள் பீரங்கிகளுக்கு தீனியாகின்றனர். உக்ரேனிய மக்களைப் பற்றிய போலியான அக்கறையை காட்டுகையில், அமெரிக்கா ஆத்திரமூட்டி உக்ரேன் மக்களுக்கு ஒரு முழுமையான பேரழிவை உருவாக்கும் ஒரு போரைத் தூண்டிவிட்டுள்ளது.

இவற்றின் நோக்கம் என்ன? ரஷ்ய அரசாங்கத்தை தூக்கி எறிய அமெரிக்கா முயல்கிறது என்பதை பைடென் அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார். இது சதாம் ஹுசைன் மற்றும் முயம்மர் கடாபி போன்று புட்டினையும் கொண்டு சென்றுவிடும். போரை தோற்பது என்றால், அது புட்டினுக்கு அவரது தலையை இழப்பது என்று அர்த்தப்படுமானால், ரஷ்ய அரசாங்கம் ஏமாற்றுகின்றது என்பதில் அமெரிக்காவை உறுதியாக இருக்கவைப்பது என்ன?

கடந்த வாரம், உக்ரேனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்க மற்றும் பிற நேட்டோ அரசாங்கங்களுக்கு ரஷ்யா ஒரு முறையான கடிதத்தை அனுப்பியது. அதில் “மிகவும் பாதிப்பை” ஏற்படுத்துக்கூடிய ஆயுதங்களை நாட்டிற்குள் தொகையாக வழங்குவதின் விளைவுகளைப்பற்றி எச்சரித்தது.

புதன்கிழமை, ரஷ்யா ஒரு புதிய அணுவாயுத திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது. இது ஒலியைவிட வேகமான ஆயுதங்களை ஹைப்பர்சோனிக் பயன்படுத்தவும் மற்றும் தென் துருவத்தின் மீதாக பறந்து அமெரிக்க ஏவுகணை பாதுகாப்புகளை புறக்கணிக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது. இந்த பரிசோதனையைப் பற்றி அறிவிக்கையில், புட்டின் இந்த ஆயுதம் 'வெறித்தனமான ஆக்ரோஷமான வார்த்தையாடல்களின் வெப்பத்தில் நம்மை அச்சுறுத்த முயற்சிப்பவர்களை சிந்திக்க வைக்கும்' என்று கூறினார்.

அது தனது இருப்பிற்கான மோதலில் போராடுகிறது என்று பெருகிய முறையில் நம்பிக்கை கொண்ட கிரெம்ளின் அதன் அபாய சகிப்புத்தன்மையின் மட்டத்தையும் அதிகரித்து வருகிறது.

பல்லாயிரக்கணக்கான ரஷ்ய படையினர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளையும் மற்றும் பதிலடி இல்லாமல் ரஷ்ய பிரதேசத்தில் சாத்தியமான தாக்குதல்களை அமெரிக்க இராணுவம் மேற்கொள்ள முடியும் என்று அமெரிக்க அதிகாரிகளின் வெளிப்படையான நம்பிக்கை கொரியப் போரில் டக்ளஸ் மக்ஆர்தர் யாலு நதிக்கு முன்னேறியதற்கு பின்னரான மிகப்பெரிய தவறான கணக்கீடு ஆகும். இது போரில் சீனத் தலையீட்டைத் தூண்டி மற்றும் சோசின் நீர்த்தேக்கப் போரில் அமெரிக்கப் படைகளின் தோல்விக்கு வழிநடத்தியது.

உலகின் தொழிலாள வர்க்கம் இந்த நிகழ்வுகளில் இருந்து மிக முக்கிமான முடிவுகளை எடுக்க வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஏப்ரல் 18 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பின்வருமாறு விளக்கினார்:

உக்ரேனில் நடக்கும் போர் என்பது விரைவில் தீர்க்கப்பட்டு 'இயல்பு நிலைக்கு' திரும்பும் ஒரு அத்தியாயம் அல்ல. இது இரண்டு வழிகளில் ஒன்றில் மட்டுமே தீர்க்கப்படக்கூடிய உலகளாவிய நெருக்கடியின் வன்முறை வெடிப்பின் தொடக்கமாகும். அதற்கான முதலாளித்துவ தீர்வு அணுவாயுத யுத்தத்திற்கு இட்டுச் செல்கிறது. எவ்வாறாயினும் 'தீர்வு' என்ற வார்த்தையை பூமியின் தற்கொலைக்கு இட்டுச்செல்லும்போது பகுத்தறிவுடன் பயன்படுத்த முடியாது. எனவே, மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாட்டில் இருந்து, உலக சோசலிசப் புரட்சி மட்டுமே சாத்தியமான பதிலாகும்.

அமெரிக்க-நேட்டோ போர் உந்துதல் ஒவ்வொரு நாட்டிலும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது மற்றும் ஏற்கனவே உலகம் முழுவதும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை உருவாக்கியுள்ளது. இந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்கை நனவான புரட்சிகர மற்றும் சோசலிச வேலைத்திட்டம் மற்றும் தலைமையுடன் ஆயுதபாணியாக்குவதுதான் அவசரமான பணியாகும்.

மே 1 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் வருடாந்த மே தினப் பேரணியை நடத்தும். இந்த நிகழ்வு போருக்கு எதிரான உலகளாவிய தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். இந்த முக்கியமான நிகழ்வில் கலந்துகொண்டு அதனை கட்டியமைக்குமாறு எங்கள் வாசகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.