ஜேர்மனியின் கூட்டாட்சி தேர்தலின் சர்வதேச முக்கியத்துவமும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் ஜேர்மனியின் செப்டம்பர் 26 கூட்டாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இத்தொற்றுநோய் உலகளாவிய வர்க்கப் போராட்டம் மற்றும் பெரும் வல்லரசுகளுக்கிடையேயான சர்வதேச பதட்டங்களை பெரிதும் அதிகரித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரம், உலகம் முழுவதும் எழும் அதே பிரச்சினைகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் தேர்தல் முடிவுகளை பொருட்படுத்தாமல், வெகுஜன தொற்று மற்றும் பாரிய சமூக துருவமுனைப்பு மற்றும் தொழிலாளர்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பு ஆகியவற்றின் மத்தியில் ஒரு இராணுவவாதத்திற்கான அரசாங்கத்தை தயார்படுத்துகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, SGP) இந்த எதிர்ப்பிற்கு ஆதரவையும் மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கையும் வழங்குகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் [Credit: WSWS]

கடந்த நான்கு தசாப்தங்களில் ஜேர்மனியில் ஹெல்முட் கோல், ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் அங்கேலா மேர்க்கெல் ஆகிய மூன்று அதிபர்கள் மட்டுமே பதவியில் இருந்துள்ளனர். ஆழத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் இந்த அமைப்பின் மேற்பரப்பின் கீழ் வெடிக்கும் முரண்பாடுகள் உருவாகியுள்ளன. இதற்கு ஸ்தாபகமயப்படுத்தப்பட்ட கட்சிகள் எதனிடமும் பதில் இல்லை.

தேர்தலின் சிறப்பியல்பு என்னவென்றால், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளிடமிருந்து மக்கள் பிரிவினரை பிரிக்கும் ஆழமான பிளவு ஆகும். மில்லியன் கணக்கான வாக்காளர்களின் கவனத்தில் உள்ள கவலைகள் மற்றும் தேவைகளுக்கு ஒரு பதிலை வழங்க முடியாமல் இருப்பது மட்டுமல்லாது, அதைப்பற்றி கதைப்பதற்கு கூட ஆவர்களால் முடியாதுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அனைத்து முன்னணி வேட்பாளர்களின் வியாழக்கிழமை இறுதி விவாதத்தின் போது அது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. 90 நிமிட ஒளிபரப்பில், ஜேர்மனியில் 93,000 க்கும் அதிகமானவர்கள் உட்பட ஐரோப்பாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற கோவிட்-19 தொற்றுநோய் பற்றி ஒரு அரசியல்வாதியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அனைத்து தரப்பினரும் பணியிடங்களையும் மற்றும் பள்ளிகளையும் திறக்கும் கொள்கையை ஆதரிக்கின்றனர். இக்கொள்கை பெருநிறுவன இலாபத்திற்காக ஒவ்வொரு நாளும் மனித உயிர்களை தியாகம் செய்கிறது.

அதிகரித்து வரும் வறுமை, நிச்சயமற்ற வேலைவாய்ப்பு, பாழடைந்த பள்ளிகள், பணியாளர்கள் குறைபாடுள்ள மருத்துவமனைகள், தொழில்துறையில் பெருமளவிலான பணிநீக்கங்கள், மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற மற்ற அனைத்து எரியும் சமூகப் பிரச்சினைகளை பற்றி அவர்கள் சிறிதளவுகூட கவனத்தை வழங்கவில்லை. ஏனென்றால், தொற்றுநோய்களின் போது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களிடம் ஒப்படைத்த நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை உழைக்கும் மக்களிடமிருந்து எதிர்வரும் பதவிக்காலத்தில் பிடுங்குவதற்கு அனைத்து தரப்பினரும் தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜேர்மன் ஐக்கியமானது, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் ஒரு வெற்றியாக கொண்டாடப்பட்டது. ஆனால் அது என்ன ஆனது? நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்காக, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர், நூறாயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்படுகின்றன மற்றும் கடைசியாக மீதமுள்ள சமூக உரிமைகள் இல்லாதொழிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான மக்களை பொறுத்தவரை, வாக்களிப்பதன் மூலம் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியாதுள்ளது.

தேர்தல் கருத்துக்கணிப்புகளும் அவற்றின் கூர்மையான ஏற்ற இறக்கங்களும் மக்களிடமிருந்து உத்தியோகபூர்வ அரசியலின் ஆழமான அந்நியப்படுதலை பிரதிபலிக்கின்றன. எந்த கட்சியும் 25 சதவிகிதத்திற்கு மேல் ஆதரவை பெறவில்லை. வாக்காளர்களை ஊக்கப்படுத்தவோ அல்லது அவர்களின் விசுவாசத்தை தக்கவைக்கவோ யாராலும் முடியவில்லை. தேர்தலுக்கு முன்னதாக கூட மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி முடிவு செய்யாமல் இருக்கிறார்கள்.

ஜேர்மனியில், கடந்த நூற்றாண்டில் போர் மற்றும் பாசிசத்தின் மூலம் ஆளும் வர்க்கம் தீர்க்க முயன்ற உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மீண்டும் வெடிக்கும் வடிவத்தில் கிளர்ந்தெழுகின்றன. அதிகரித்து வரும் வர்த்தகப் போர்கள் மற்றும் பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் ஜேர்மனியின் ஏற்றுமதித் துறையை பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சி பழைய பகைகளை மீண்டும் உருவாக்குகிறது.

ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகள் ஒன்றாக நெருக்கமாக நகர்ந்து, ஒருவருக்கொருவர் அதிக சக்தி கற்பனைகள் மற்றும் இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கான கோரிக்கைகளுடன் விடையிறுக்கின்றன. இதற்கு மக்கள் ஆதரவு முற்றிலும் இல்லை.

வெள்ளிக்கிழமை நியூ யோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தனது உரையில், ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் அடுத்த கூட்டாட்சி அரசாங்கம் ஜேர்மனியின் ஒரு ஆக்கிரமிப்பான வெளிநாட்டு மற்றும் பெரும் அதிகாரக் கொள்கைக்கு திரும்புவதை துரிதப்படுத்தி அதிகரிக்கும் என்று அறிவித்தார். 'என் நாட்டில் இந்த அரசியல் மாற்றத்தின் இந்த நேரத்தில், இந்த தேர்தலுக்கு பின்னரும் அதன் சர்வதேச பொறுப்புகளை அறிந்த மற்றும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நாடாக ஜேர்மனி இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்' என்று நாட்டின் தலைவர் கூறினார். ஜேர்மனியும் ஐரோப்பாவும் இராணுவ அடிப்படையில் 'வலுவானதாக' மாற வேண்டும். அதனால்தான் பேர்லின் 'இந்த நிலையற்ற காலங்களில் அதன் பாதுகாப்பு திறன்களில் அதிக முதலீடு செய்கிறது' என்று ஸ்ரைன்மையர் தொடர்ந்தார்.

போருக்கான உந்துதல் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படுகிறது. உதாரணமாக, கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆர்மின் லாஷெட், வியாழக்கிழமை விவாதத்தின் போது ஜேர்மன் இராணுவத்திற்கு அதிக பணம் வழங்குவதாக உறுதியளித்தார். 'சர்வதேச நிலைமைக்கு ஜேர்மனி பொருத்தமாக இருக்க', அதற்கு எல்லா வகையிலும் ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் மற்றும் 'சிறந்த தொழில்நுட்பம்' வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். சமூக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஓலாவ் ஷொல்ஸ், இராணுவச் செலவில் பாரிய அதிகரிப்புக்கு தனது ஆதரவை அறிவித்து, 'வலுவான, இறையாண்மை கொண்ட ஐரோப்பாவுக்கு' அழைப்பு விடுத்தார்.

பசுமைக் கட்சியின் அன்னலேனா பேர்பொக் 'எங்கள் சொந்த மூலோபாய இறையாண்மைக்கு' வேண்டுகோள் விடுத்து மற்றும் மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்களுக்கான அழைப்பில் இணைந்துகொண்டார். ஜேர்மனி மிகவும் 'நட்பாகவும் அமைதியாகவும்' இருந்ததால், ரஷ்யாவும் சீனாவும் இப்போது நிரப்பும் வெளியுறவுக் கொள்கை வெற்றிடத்தை ஐரோப்பா விட்டுவிட்டது என்று பசுமை கட்சி வேட்பாளர் புகார் கூறினார்.

இடது கட்சியின் ஜெனீன் விஸ்லர் தன்னை சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை கட்சிகளுக்கு ஒரு கூட்டணி பங்காளியாக காட்டிக்கொண்டார். அவருடைய கட்சி அவ்வப்போது நேட்டோவை விமர்சிப்பதை அது கலைக்கப்படுவதை ஆதரிப்பதாகவோ அல்லது உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டணியில் இருந்து ஜேர்மனி விலகுவதற்கு ஆதரவளிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

நிதிசார் தன்னலக்குழுவின் நலன்களுக்கான ஆக்கிரோசமான உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான தாக்குதல்களுடன் சேர்ந்துள்ளன. 1930களில் இருந்ததைப் போலவே, அதிகார வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடிக்கு சர்வாதிகார மற்றும் இறுதியில் பாசிச ஆட்சி வடிவங்களுடன் தனது பிரதிபலிப்பை காட்டுகின்றது. உத்தியோகபூர்வ கொள்கை பெருகிய முறையில் மக்களுக்கு எதிரான சதியின் வடிவத்தை எடுக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் கூட்டணி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது கூட, கட்சிகள் வெறுக்கப்பட்ட அரசாங்க கூட்டணியினை தொடர்வதற்காக மூடி கதவுகளுக்கு பின்னால் நான்கு மாதங்கள் பேச்சுவார்த்தைக்காக செலவிட்டன. அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் பாசிச ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) இனை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியாக ஆக்கி, தீவிர வலதுசாரிகளை அரசியல் அமைப்பில் ஒருங்கிணைத்து, அதன் நிகழ்ச்சி நிரலை தாமும் முறையாக பின்பற்றினர்.

இராணுவம், காவல்துறை மற்றும் உளவுத்துறையில் உள்ள வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்கள் தடையின்றி செயல்பட முடிந்தது. ஜேர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனமான அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான அலுவலகத்திற்கு ஜேர்மனிக்கான மாற்றீட்டின் அனுதாபியான ஹான்ஸ்-ஜோர்க் மாஸன் தலைமை வகித்தார். சோசலிச சமத்துவக் கட்சி உளவுத்துறையின் கண்காணிப்பு பட்டியலில் பெயரிடப்பட்டது. ஜோர்க் பாபெரோவ்ஸ்கி போன்ற வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்களும், வரலாற்றாசிரியர்களும் அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களால் பதவி உயர்வு பெற்று பாதுகாக்கப்பட்டனர்.

ஆனால் இந்த வலதுபுற திருப்பத்திற்கு பாரிய எதிர்ப்பு உள்ளது. 20ஆம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்குப் பின்னர், பாசிசத்தையும் மற்றும் போரையும் நிராகரிப்பது மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இது, வலதுசாரி கொள்கைகளை தொடரவும் தீவிரப்படுத்தவும் அனைத்துக் கட்சிகளின் திட்டங்களையும் மேலும் வெடிப்புள்ளதாகும். 2017 ஆம் ஆண்டு போலவே, அரசாங்கத்தை அமைப்பதற்கான சூழ்ச்சியும் பல மாதங்கள் நீடிக்கும் என்பது ஏற்கனவே தெளிவாகி வருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (SGP) இந்த வலதுசாரி சதியை எதிர்ப்பதுடன், பாரிய தொற்று மற்றும் சமத்துவமின்மையை உருவாக்கும் கொள்கையை எதிர்ப்பதற்கு ஆதரவையும் ஒரு சோசலிச முன்னோக்கையும் வழங்குகின்றது.

ஆறு தேர்தல் ஒளிபரப்புகள் மற்றும் எண்ணற்ற அறிக்கைகள் மற்றும் துண்டு பிரசுரங்களில், நாங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, துருக்கி மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த எங்கள் தோழர்களுடன் இணைந்து அனைத்து முக்கிய அரசியல் பிரச்சினைகளிலும் ஒரு நிலைப்பாட்டை எடுத்து, தெளிவான முன்னோக்கை வெளிப்படுத்தினோம்.

எங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் 'உயிரை விட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொள்கையை எதிர்த்தோம். நான்காம் அகிலத்தில் உள்ள எங்கள் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து, கோவிட்-19 ஐ ஒழிக்க உலகளாவிய ஒருங்கிணைந்த மூலோபாயத்திற்காக நாங்கள் போராடுகிறோம். தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்படும் வரை விரிவான பூட்டுதல்கள் மற்றும் பள்ளி மூடல்கள், ஒரு பரந்த சர்வதேச தடுப்பூசி திட்டம் மற்றும் இழந்த அனைத்து வருவாய்க்காக தொழிலாளர்களுக்கு இழப்பீடு ஆகியவை இதில் அடங்கும்.

காலநிலை மாற்றம் தொடர்பான கேள்விக்கு சர்வதேச சோசலிச பதிலை முன்வைக்க நாங்கள் போராடுகிறோம். விஞ்ஞான அறிவை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய திட்டத்தால் மட்டுமே காலநிலை மாற்றத்தை நிறுத்த முடியும். பொருளாதாரம், இலாப நலன்களுக்காக அல்லாது மக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் தேவைகளுக்கு சேவை செய்ய மறுசீரமைக்கப்பட வேண்டும்.

ஜேர்மன் இராணுவவாதத்தை சமரசமின்றி எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள் மட்டுமே. வெளிநாடுகளில் இருந்து அனைத்து துருப்புக்களையும் உடனடியாக திரும்பப் பெறவும், ஜேர்மன் இராணுவத்தை கலைக்கவும் நாங்கள் கோருகிறோம். ஆயுதங்கள் மற்றும் போருக்குப் பதிலாக, சுகாதாரத்துறை மற்றும் கல்விக்கு பில்லியன் கணக்கான நிதி முதலீடு செய்யப்பட வேண்டும். மேலும் வலதுசாரி தீவிரவாதிகளை நாங்கள் எதிர்க்கிறோம். பாசிச மண்ணிற கழிவுகள் வடிகட்டி அகற்றப்பட வேண்டும், மற்றும் உளவுத்துறைகள் கலைக்கப்பட வேண்டும்.

முக்கியமான நிறுவனங்களில் பாதுகாப்பான பணியிடங்களுக்கான நடவடிக்கை குழுக்களை தொடங்கியுள்ளோம் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் உலகளாவிய ரீதியில் அவர்களை இணைப்பதற்கு நமது சர்வதேச தோழர்களுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளோம்.

உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. ஊதிய திருட்டு மற்றும் பணிநீக்கங்களை எதிர்த்த WISAG விமான நிலைய தொழிலாளர்கள், குறைந்த ஊதியம் மற்றும் தாங்க முடியாத பணி அழுத்தத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்த பேர்லின் செவிலியர்கள் மற்றும் இரயில் ஓட்டுநர்கள் மற்றும் IKEA மற்றும் கட்டுமானத் தொழிலில் வேலைநிறுத்தம் செய்தவர்கள் இந்த சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இப்போராட்டங்கள் வெற்றிகரமாக இருக்க, இவை முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான சர்வதேச தாக்குதலின் தொடக்கப் புள்ளியாக மாற வேண்டும். காட்டுமிராண்டித்தனத்தினை நோக்கி மீண்டும் வழுகிச்செல்வதைத் தடுப்பதற்கான ஒரே வழி இதுதான்.

இந்த சோசலிச முன்னோக்கிற்கான போராட்டம், செப்டம்பர் 26 ஆம் தேதியுடன் முடிவடையாது. நாங்கள் ஒவ்வொரு வாக்களுக்கும் போராடுகிறோம். ஏனென்றால் சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒரு வலுவான ஆதரவு பாரிய தொற்று, சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான வளர்ந்து வரும் எதிர்ப்பின் முக்கிய அறிகுறியாகும். ஆனால் முக்கியமான பணி என்னவெனில் எதிர்வரும் வர்க்கப் போராட்டங்களுக்கு தொழிலாளர்களை தயார்படுத்துவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் புதிய சோசலிச தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியையும் மற்றும் நான்காம் அகிலத்தையும் கட்டியெழுப்புவதாகும்.

Loading